இரா. குமார்
1960களில் மாணவர்களாக இருந்த கா. காளிமுத்துவும் கவிஞர் நா. காமராசனும் மேடைகளில் போட்டிபோட்டுக்கொண்டு அருமையாகப் பேசுவார்கள். இருவரையும் இரட்டையர்கள் என்று சொல்வார்கள். நா. காமராசன் திரைத்துறைக்குப் போய்விட்டார். காளிமுத்து, தீவிர அரசியலில் இருந்தார்.
எம்ஜிஆர் அமைச்சரவையில் காளிமுத்து அமைச்சராக இருந்தார். 1980 களின் தொடக்கத்தில். அதிமுக - காங்கிரஸ் கூட்டணி. காங்கிரஸ் மீது கோபம் வந்தால், காளிமுத்துவை விட்டு பேசச் செய்வார் எம்ஜிஆர். அப்படி ஒரு முறை காங்கிரசை காளிமுத்து விமர்சித்தது இன்றளவும் பிரபலம். காளிமுத்து சொன்னது...
சருகு மலராகாது
கருவாடு மீனாகாது
கறந்த பால் மடி புகாது
காங்கிரஸ் ஆட்சிக்கு வராது....
என்னா அடி. யப்பா...
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்தார் காளிமுத்து. 1991 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கடலாடி தொகுதியில் போட்டியிட்டார். சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. கடலாடி தொகுதியில் காளிமுத்துவை ஆதரித்து பிரச்சாரம் செய்த கருணாநிதி, ,
தம்பி காளிமுத்து...
கடலாடி வா...
காத்திருப்பேன் துறைமுகத்தில்
என்றார். அலையில் அடித்துச் செல்லப்பட்டார் காளிமுத்து. ராஜீவ் கொலையை அடுத்து நடந்த அந்த தேர்தலில் திமுகவுக்கு பேரிடி. துறைமுகத்தில் கருணாநிதி மட்டும்தான் வென்றார். மற்ற எல்லா தொகுதியிலும் திமுக தோற்றது.
பின்னர் அதிமுகவில் சேர்ந்தார் காளிமுத்து.அப்போது நடந்த சுவாரசியத்தை பார்க்கும் முன், திருவிளையாடல் புராணம் கதை ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியல் சுவாரசியத்தைப் புரிந்து ரசிக்க முடியும்.
திருவாசகம் எழுதிய மணிவாசகப் பெருமான், பாண்டிய மண்னனிடம் அமைச்சராக இருந்தார். குதிரை வாங்கி வரும்படி பணம் கொடுத்தனுப்பினான் மன்னன். சென்ற இடத்தில், அந்தப் பணத்தை கோயில் திருப்பணிக்கு செலவிட்டுவிட்டார் மாணிக்கவாசகர். மன்னனுக்கு என்ன பதில் சொல்வதென்று மனம் கலங்கி சிவனை வேண்டினார். சிவன் உடனே நரிகளை பரி(குதிரை) ஆக்கி மாணிக்க வாசகரிடம் கொடுத்தார். அவற்றைக் கொண்டுபோய் மன்னனிடம் ஒப்படைத்தார் மாணிக்கவாசகர். கொட்டடியில் அடைக்கப்பட்ட அந்த பரிகள்(குதிரைகள்) மறுநாள் காலையில் மீண்டும் நரியாகிவிட்டன்.
இதுதான் கதை. இப்ப விஷயத்துக்கு வரேன்.
அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்தார். பிறகு, மதுரையில் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் மீண்டும் சேர்ந்தார். இது பற்றி கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது,
‘நரி பரியாவதும் பரி நரியாவதும் மதுரையில் இயல்புதானே” என்றார் .
கருணாநிதி இப்படிச் சொல்கிறாரே என்று காளிமுத்துவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர்
, ‘ நான் பரியானேனோ நரியானேனோ...இப்போது சரியாகிவிட்டேன்’’
என்றார்.
எப்படி விளையாடுறாங்க பாருங்க தமிழ்ல.