எழுத்தாளனும் எழுத்தும் முரண்படக் கூடாது: ஞாநியே சான்று

தனது முற்றுப்புள்ளியான பூத உடலை முழுமையாக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக தானம் செய்திருந்தார். இதை கமல்ஹாசனும் பாராட்டியுள்ளார்.

முனைவர் கமல.செல்வராஜ்

ஞாநியைப் பற்றி பேசும் முன்பு, என் சக நண்பர் ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த நண்பரும் நானும் ஒருதாயின் வயிற்றில் பிறவாத அண்ணன் தம்பிகள். இரண்டு பேருமே சமகாலத்தில் எழுத்திலும் பேச்சிலும் ஒன்று போல் சிந்திப்பவர்கள். பட்டிமன்றம்… வாழ்த்தரங்கம்… கவியரங்கம்… என எத்தனை எத்தனயோ மேடைகளை இரண்டு பேரும் பகிர்ந்திருக்கிறோம்.

வழக்கம் போல் அன்றும் ஒரு பட்டிமன்ற மேடை… பட்டிமன்றத்தலைப்பு அறிவியல் வளர்ச்சி சார்ந்ததாக இருந்தது. நானும் எனது நண்பரும் எதிரும் புதிருமாகப் பேசினோம். அறிவியல் வளர்ச்சிக்குச் சாதகமாகப் பேசிய அவர், மக்களின் மூடநம்பிக்கைப் பற்றி பிடிபிடியென ஒரு பிடிபிடித்து விட்டார். நானும், அவரது பேச்சைக் கேட்டு மூக்கில் விரல் விட்டு அப்படியே அமைதியாகிப் போனேன்.

Gnani Sankaran, Writer, Opinion, Kamala.Selvaraj

முனைவர் கமல.செல்வராஜ்

அவரின் பேச்சின் சாராம்சம் இப்படியிருந்தது: “நமது மக்கள் எல்லோரும் மூடநம்பிக்கைகளில் மூழ்கிப் போயுள்ளார்கள். லட்சக்கணக்கானப் பணத்தைச் செலவழித்து ஒரு வீட்டைக் கட்டிவிட்டு அதன் முன்பு மற்றவர்களின் கண்படாமல் இருப்பதற்கு ஒரு கள்ளிச் செடியைக் கட்டித் தொங்க விடுவார்கள். மட்டுமல்ல, அந்த வீட்டில் குடியேறிய பிறகு, அவர்களில் யாருக்காவது ஒரு சிறு நோய் வந்து விட்டால் உடனே, இது வீட்டின் வாஸ்து சாஸ்திரக் கோளாறு என்று அந்த வீட்டிலிருந்து வெளியேறவோ, வீட்டின் சிலப் பகுதிகளை இடித்து மாற்றியமைக்கவோ செய்து விடுவார்கள். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்”. இப்படி பல்வேறு விஷயங்களைத் தீப்பொறி் போல் முழங்கி ஏகப்பட்டக் கைத்தட்டலையும் பெற்றுவிட்டார்.

பட்டிமன்றம் முடிந்து, மேடையை விட்டு கீழிறங்கியதும் என்னிடம் வந்து, “இன்றைக்கு நீங்க எங்க வீட்டுக்கு வந்து, இன்று தங்கிவிட்டு நாளை காலையில் கிளம்பிப் போகலாம்” எனக் கட்டாயப்படுத்தினார். நானும் அவரது அன்புக்கு அடிமைப்பட்டு அப்படியே ஆகட்டும் என மறுபேச்சின்றிக் கூடவே, அவரது வீட்டிற்குச் சென்று விட்டேன்.

இதற்கு முன்பும் ஒன்றிரண்டு முறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்ததினால், அவரது வீடு மற்றும் வீட்டிலுள்ள சொந்தங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பரிச்சயம். அதனால் வீட்டில் சென்றதும் எனது கட்டாயத் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காக அவரது அறையோடு இணைக்கப் பட்டிருந்த, அந்தக் கழிவறைக் கதவைத் திறந்தேன்.

அவ்வளவுதான்! உடனே அவர், “அண்ணே இப்ப நீங்க அங்க போகாதீங்க. கடந்த சில மாதங்களாக வீட்டில கொஞ்சம் பிரச்னையாகவே இருந்தது. அதனால ஒரு ஜோசியருட்டப் போய் விசாரிச்சேன். அப்ப அவரு சொன்னாரு, வீட்டிலக் கொஞ்சம் வாஸ்து பிரச்னை இருக்கு, அதனாலதான் இப்படி கஸ்டங்க வந்து சங்கடப் படுத்திட்டு இருக்கு. அது தீரணுமெண்ணா இந்த பாத்ரூம பயன்படுத்தாம இருக்கணும் அல்லது இத இடிச்சு தள்ளணுமுண்ணாரு. அதனால இப்ப இந்தப் பாத்ரூம பயன்படுத்தாம அடச்சே போட்டிருக்கேன்.” இப்படி மூச்சு விடாம பேசி முடிச்சிட்டாரு.

எனக்கோ அப்படியே மூச்சு நின்று விடும் போல இருந்தது. ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான மக்களுக்கு முன்னால் முட நம்பிக்கைப் பற்றி வீர ஆவேசமாகப் பேசிய இந்த நாக்கு, இப்படி தனது வீட்டிற்குள் வாஸ்து… மண்ணாங்கட்டி… வார்த்தைகள் தடுமாறி… கண்டபடி திட்டத்தீர்க்க வேண்டும் போலவும், ஓங்கிக் கன்னத்தில் ஒரு அறை விடவா… என்றெல்லாம் மனதில் ஆவேசம் பொங்கியது. ஆனால்… என்ன செய்வது எல்லாவற்றையும் அடக்கிவிட்டு அமைதியானேன்.

இப்படித்தான் இன்றைய பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்களின் பேச்சும் எழுத்தும் ஒன்றாக இருக்கும். நிஜ வாழ்க்கையோ அதற்கு நேர் எதிர்மறையாக இருக்கும். தமிழில் ஒரு படைப்பாளி உருவாகிறார் என்றால் அவரது முதல் படைப்பு வரதட்சனைக்கு எதிராகவோ, சாதி சமயத்திற்கு எதிராகவோ இருக்கும். ஆனால் அவர்தான் பின்னாளில் அதிக வரதட்சணை வாங்குபவராகவும் சாதி சமயத்தில் வெறிபிடித்தவராகவும் மாறிவிடுவார்.

இந்நிலையில் தமிழில் விமர்சன இலக்கியத்தில் ஜாம்பவனாக திகழ்ந்த ஞாநி அவர்கள் சமீபத்தில் அனைத்திற்கும் முற்றுப் புள்ளியாகி விட்டார். போராட்ட உணர்வுடன், எதையும் எதிர்கொள்ளும் விதமான ஒரு துணிச்சல் மிக்க எழுத்தாளனின் அடையாளமாகவே அவரது எழுத்துகள் இருக்கும். உணர்ச்சியும் வேகமும் உந்து சக்தியும் மிக்க அவரது படைப்புகள், படிப்போரை பல மணிநேரம் சிந்திக்கத் தூண்டும். அதுபோல் விரைந்து செயலாற்றவும் துரத்தும்.

அப்படிப்பட்ட வித்தகனாகத் திகழ்ந்த அவர், தனது முற்றுப்புள்ளியான பூத உடலை முழுமையாக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக தானம் செய்திருந்தார். அவரின் அவாவிற்கிணங்க அவரின் பிள்ளைகளும் அப்படியே மருத்துவக் கல்லூரியில் அவரை தானமாக்கி அவருக்கு அழியா புகழுக்கு வழிகோலியுள்ளனர். ஞானியின் இந்த அரியச் செயலை நடிகர் கமலஹாசன் மிகவும் பாராட்டியிருந்தார். எனென்றால் “பாம்பறியும் பாம்பின் கால்” என்பதற்கிணங்க, அவரும் தனது மறைவுக்குப் பின்னால், உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக எழுதி வைத்துள்ளார்.

எனவே பேச்சாளர்களும் படைப்பாளர்களும் தங்கள் பேச்சிலிருந்தும் எழுத்திலிருந்தும் முரண்பட்டு நிற்காமல் ஞானியைப் போல் நிஜ வாழ்க்கையிலும் ஞானமிக்கவர்களாக… தானமிக்கவர்களாக… நிஜமானவர்களாக… இருந்தால் வரும் தலைமுறையினரும் அவர்களின் நிழலைப் பின்பற்றி முன்மாதிரிகளாக மாறி வருவார்கள்.

(கட்டுரையாளர் டாக்டர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர்! கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! பேச: 9443559841)

 

×Close
×Close