தமிழ்ச்சுவை – 14 : இலக்கணமும் சுவையானதுதான்

தமிழில் இக்கியம் மட்டும்தான் அழகல்ல. இல்லக்கணமும் அழகுதான். அதைவிட அது பற்றி விவரிக்கும் உரையாசிரியர்களின் உதாரணங்கள் அதைவிட சிறப்பானது.

tamil suvai 14

இரா.குமார்

தமிழ் இலக்கியம்தான் சுவையாக இருக்கும் என்பதல்ல. இலக்கணமும் சுவையானதுதான். அதிலும் இலக்கணத்துக்கு உரையாசிரியர்கள் சொல்லும் விளக்கம் மிகவும் ரசிக்கத் தக்கவையாக உள்ளன.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர் மெய் எழுத்தாகும்போது அது ஒலிக்கும் நேரத்துக்கு உரையாசிரியர் தரும் விளக்கம் நம்மை வியக்க வைக்கிறது.

தமிழில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் என இரண்டு வகை உண்டு. ஒரு உயிரெழுத்து ஒலிக்கும் நேரத்தை ஒரு மாத்திரை என்று சொல்வார்கள்.

கண் இமைக்கும் நேரம் அல்லது விரல் நொடிக்கும் நேரம் மாத்திரை எனப்படுகிறது.

உயிர் எழுத்து ஒரு மாத்திரை அளவும் மெய் எழுத்து அரை மாத்திரை அளவும் ஒலிக்கும்.

மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாக, ”அதாவது க்+அ= க” என்று ஆகும்போது, உயிர்மெய் எழுத்தான “க” ஒரு மாத்திரை அளவுதான் ஒலிக்கும்.

அது எப்படி? ஒன்றும் அரையும் சேரும்போது ஒன்றரை மாத்திரை அளவல்லவா ஒலிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இதற்கு உரையாசிரியர் விளக்கம் தருகிறார் பாருங்கள்….

“ஒரு படி தண்ணீரில் அரை படி உப்பைச் சேர்த்தால், ஒன்றரைப் படி ஆகாது. ஒரு படி அளவில்தான் இருக்கும். அது போலத்தான் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் உயிரும், அரைமாத்திரை அளவு ஒலிக்கும் மெய்யும் சேரும்போது ஒன்றரை மாத்திரை ஆகாது. ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும்.

ஆஹா…என்ன ஒரு உதாரணம் பாருங்கள். தண்ணீரில் உப்பு கரைவது போல தமிழில் நம்மையும் கரைக்கிறார்.

ஒருவர் சொல்வதை தாம் ஏற்க இயலாவிட்டால், அவர் மனம் கோணாதவாறு மிகவும் மரியாதையாக மென்மையாக மறுக்கின்றனர் சிலர். இதை கார்பரேட் லாங்வேஜ் என்று இப்போது சொல்கின்றனர். இப்படிப்பட்ட கார்பரேட் லாங்வேஜை, அந்தக் காலத்திலேயே பயன்படுத்தியுள்ளார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.

ஓரறிவு உயிர், இரண்டறிவு உயிர் என்று சொல்லிக்கொண்டு வரும் தொல்காப்பியர், நண்டுக்கு மூக்கு உண்டு என்றுசொல்கிறார். நண்டுக்கு மூக்கு இல்லை என்பதை அறிகிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.
மூல நூலாசிரியரை பக்தியோடு அனுகுவது தமிழ் மரபு. எனவே, நண்டுக்கு மூக்கு இல்லை என்று நேரடியாக மூல நூலாசிரியரை மறுக்கக் கூடாது. அதே நேரம், மூக்கு இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். எப்படி சொல்வது?

நச்சினார்க்கினியர் சொல்கிறார் பாருங்கள்……

”நண்டுக்கு மூக்கு உண்டோ எனின், ஆசிரியர் கூறுதலான் உண்டென்க” என்று சொல்கிறார். ஆஹா..எப்படி நயமாக மறுக்கிறார் பாருங்கள். இதுதானே இப்போது சொல்லப்படும் கார்பரேட் லாங்வேஜ்.

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Grammar is also delicious

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express