ஹைக்கோர்ட் மகாராஜா

தூத்துக்குடி மாவட்டத்தில் ‘ஹைகோர்ட் மகாராஜா’ என்ற கோயில் உள்ளது. சுடலை மாடசாமிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்பதை விவரிக்கிறார், கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

By: August 16, 2017, 7:15:05 PM

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

சமீபத்தில் ஸ்ரீ வைகுண்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில், நண்பர் கல்கி ப்ரியனோடு பயணித்தேன். எப்போதும் அந்த சாலையில் பயணிக்கும் போது, செய்துங்கநல்லூரில் ஒரு டீ கடையில், இன்றைக்கு கிண்டலாக அழைக்கப்படும் மிக்சர் சுவையாக கிடைக்கும். அந்த கடையின் விளம்பர பலகையில் ஹைகோர்ட் மகாராஜா துணை என்ற வரிகள் இருந்தது. உடனே அதைப் பார்த்த ப்ரியன் ஹைகோர்ட் நீதிபதியாக இருந்த மகாராஜனை இது குறிக்கின்றதா என்றார். நீதிபதி மகாராஜன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர். ரசிகமணியின் நண்பர். வட்டத்தொட்டியில் இலக்கிய பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கிய ஆய்வு நூல்களை படைத்தவர். சேக்ஸ்பியரின் கிங் லியரை தமிழாக்கம் செய்தவர். சிறந்த உயர்நீதிமன்ற நீதிபதி என்று கீர்த்திப் பெற்றவர்.

இதை குறித்து அறிய ரசிகமணியின் பேரனான தீப நடராஜன், தென்காசிக்கு தொடர்பு கொண்டு கேட்டதற்கு இல்லை இது ஒரு நாட்டுப்புற தெய்வத்தை குறிப்பதாகும் என்று சொன்னார். மேலும் அறிய மறைந்த நண்பர் கழனியூரனை பயணிக்கும் போது தொடர்பு கொண்டு கேட்டறிய முடிந்தது. இதை குறித்தும் அவர் ஆய்வும் செய்துள்ளார்.

அவர் மூலம் அறிந்த தரவுகள் ஆச்சரியத்தை தந்தது. அப்போது ஒன்றுப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், இப்போது தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகில் ஆறுமுக மங்கலம் உள்ளது. இது மாதவய்யா, பெ.நா. அப்புசாமி ஆகிய ஆளுமைகளின் சொந்த ஊரான பெருங்குளம் அருகில் இந்த கிராமம் உள்ளது. இந்த ஊரில் உள்ள குறுஞ்சாமியின் பெயர் தான் ஹைக்கோர்ட் மகாராஜா. நாட்டுப்புற தெய்வகளிலே தமிழ் நாட்டில் உயரமான பீடம். இந்த சாமிக்கு பூஜை செய்ய வேண்டும் என்றால் ஏணியில் ஏறிதான் செய்ய வேண்டும். ஏன் இந்த பெயர் வந்தது என்று கேட்டதற்கு கோர்ட் வரை சென்று சாட்சி சொன்னதால் இந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் தான் ஹைக்கோர்ட் மகாராஜா என்று அழைக்கப்பட்டார்.

அந்த கதை என்னவென்றால், ஆறுமுக மங்கலத்தில் சின்னான் என்ற ஒரு அனாதை இருந்தார். அவர் வசதியானவர்கள் வீட்டில் மாடு கன்னுகளை மேய்த்துவிட்டு, கிடைப்பதை உண்டுவிட்டு, காலத்தை கழித்துக் கொண்டாராம். ஒரு நாள் மதிய பொழுதில் மாடு கன்னுகளை மரத்தில் கட்டிப்போட்டு சின்னானும், மரத்தின் கீழ் இருந்த போது, மெலிந்த தாடியும், மீசையும் வைத்துக் கொண்ட ஒரு அப்பிராணியை இரண்டு பேர் வீச்சருவாளைக் கொண்டு விரட்டிக் கொண்டு வந்தனர். அந்த மெலிய திரேகம் கொண்டவர் கை எடுத்து கும்பிட்டுக் கொண்டு என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லியும் அந்த இரு முரடர்கள் விடவில்லை. இதைப் பார்த்த சின்னான் தடுக்க நினைத்தும் தனக்கு தைரியமும், வல்லமையும் இல்லையே என்று வேதனைப் பட்டுக்கொண்டு இருந்தார். வேறு அந்த மதிய பொழுதில் அங்கு அவனை காப்பாற்ற அந்த காட்டில் யாரும் இல்லை. ஆனால், அந்த இரு முரடர்களும், பக்கத்து ஊரைச் சார்ந்தவர்கள் என்று சின்னானுக்கு தெரியும். தடுக்க முடியாத நிலையில், அந்த அப்பாவியை இந்த முரடர்கள் அறுவாளை வீசி குதிகாலில் வெட்டப்பட்டு, சுடலை சாமியே என்று தரையில் சாய்ந்தார்.

வெட்டப்பட்ட தரையில் விழுந்த அந்த அப்பாவி திரும்பவும் தன்னை வெட்ட வந்த போது அய்யா என்னை கொல்லாதிங்க எய்த்தாப்புல கோவில் இருக்கு, சாமி சுடலை பார்க்குறாரு, சும்மா விட மாட்டாரு என்றான். அந்த அறுவாள் ஓங்கிய முரடனோ ஏமேல, சுடலை வந்து சாட்சி சொல்லபோகுது உன்னை வெட்டினால் என்று முரட்டு குரலில் கத்தினான். எங்களை எதிர்த்து எவன்டா சாட்சி சொல்லுவான் என்று சொல்லி, தலையை வெட்டி, தலை வேறு, முண்டம் வேறாக அந்த அப்பாவியின் உடல் சின்னாபின்னமாகியது.

இந்த கோரக்காட்சியை சின்னான் மரத்தடியில் இருந்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான். உடனே கொலைகாரர்கள் போன பின்பு கொலையுண்டவன் பொண்டாட்டி காரியிடம் கொலை செய்தவர்கள் யார் என்று விவரமாக சொல்லியும் விட்டான். கொலையுண்டவர் பொண்டாட்டி காரி உடனே ஓடி வந்து கொலை உண்ட இடத்திற்கு வந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் சென்றது. காவல்நிலையத்திற்கு புகாரும் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்திற்கு சென்று வழக்கும் நடந்தது.

சின்னான் கோர்ட்டில் சாட்சி சொல்ல சம்மதித்தான். கொலைக்கார முரடர்கள் கொன்றதை யாரும் பார்க்கவில்லை நமக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்தார்கள். இப்போது சின்னான் சாட்சி சொன்னால் தங்களுடைய வழக்கு பலப்பட்டு தண்டித்துவிடுவோம் என்று அஞ்சி அந்த முரடர்கள் சின்னானை எங்கேயாவது அடைத்து வைக்க நினைத்தார்கள்.

அதற்கு முன் காசுக் கொடுத்து ஏதாவது பெண் மூலமாக லாபகமாக பேசி மடக்கலாம் என்ற திட்டமும் இருந்தது. ஆனால் சின்னான் இதற்கெல்லாம் மயங்கவில்லை. பின் மிரட்டியும் பார்த்தார்கள். அதற்கும் சின்னான் மசியவில்லை.

இறுதியாக சின்னான் மாடு மேய்த்து கொண்டு காட்டில் இருக்கும்போது வாயில் துணியைத்திணித்து வில் வண்டிக்குள் உள்ளே தள்ளி சின்னானை கடத்தி விட்டார்கள். கொலையாளிகளின் சொந்தக்காரர்கள்.
சின்னானை பாழடைந்த வீட்டில் யாருக்கும் தெரியாதவாறு அடைத்து வைத்துவிட்டனர். திருநெல்வேலி கோட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சின்னானை அடைத்து வைத்ததால், இனி யாரும் சாட்சி சொல்ல வரமாட்டார்கள் என்று தைரியமாக இந்த இரண்டு முரட்டு கொலையாளிகள் கோர்ட்டிற்கு சென்றார்கள்.
கொலையுண்ட அப்பிராணியின் மனைவியும் இந்த நிலையை பார்த்து சாட்சி சொல்ல வேண்டிய சின்னான் இல்லையே என்ன செய்வது என்று தெரியாமல் துடித்தாள்.

நீதிமன்றம் துவங்கி விட்டது. நீதிபதி இருக்கையில் அமர்ந்துவிட்டார். சாட்சிக்கு சின்னானை மூன்று தடவை அழைத்த பின் சின்னான் வந்து கூண்டில் ஏறினான். அந்த முரடர்கள் அடைத்த வைத்த சின்னான் இங்கு எப்படி வந்தான் என்று புரியவில்லை. என்னடா இப்படியொரு அதிசயமா என்று அப்பொழுது அவங்க நினைச்சாங்க.
சின்னான் வடிவத்தில் சுடலை என்ற நாட்டுபுறச் சாமிதான் வந்தார். சாட்சியை தெளிவாக சொன்னார். கொலையாளி ஒருவனுக்கு தூக்கு தண்டனையும், துணையாக வந்தவனுக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கிடைத்தது.

கொலையாளிகளின் சொந்தக்காரர்கள் சின்னான் எப்படி வந்தான் என்று தாங்கள் அடைத்து வைத்த இடத்தில் சின்னானை பார்க்க சென்றார்கள். ஆனால் சின்னானோ அதே இடத்தில் மயக்க நிலையில் அதே இடத்தில் கட்டிப்போட்டு கிடந்தான். கொலையாளிகளின் சொந்தக்காரர்கள் இதில் ஏதோ தெய்வக்காரியம் இருக்கின்றது என்று நம்பிக்கையோடு கட்டிப்போட்ட சின்னானை அவிழ்த்துவிட்டு விரட்டிவிட்டார்கள். கொலையுண்டவன் சாமி சுடலை பார்த்துவிட்டது. சாட்சி சொல்லும் என்ற விருப்பத்தை நிறைவேற்றும் படியில் சுடலை கோர்ட் வாசலில் ஏறி தெளிவாக சாட்சி சொன்னத்தால் ஆறுமுகமங்கல சுடலைக்கு ஹைக்கோர்ட் மகாராஜா என்று அன்றையிலிருந்து நம்பிக்கையில் சுடலை ஹைக்கோர்ட் மகாராஜா கும்பிட்டு வருகின்றனர் என்பது காலகாலமாக சொல்லிவருகின்ற செய்தி என்று கழனியூரான் முடித்தார்.

இந்த செய்தியைக் கேட்டவுடன் துலாக்கோல் நிலையில் தன் பணியை ஆற்றி வந்த உயர்நீதிமன்றம் முன்னால் நீதிபதி நெல்லையின் மைந்தர் ஜஸ்டிஸ் மகாராஜன் நினைவுக்கு வந்து சென்றார். அவரோடு பழகி அவர் பேசுகின்ற கருத்துக்கள் அனைத்தும் புதிதாக தெரியும். இன்றைக்கும் சென்னை தி.நகர் ஆந்திரா கிளப் பக்கம் சென்றால், அவர் வாழ்ந்த வீட்டை அவர் நினைகளோடு பார்த்து கொண்டு செல்வதுண்டு.

பொருணைநதிக்கரையை சீராட்டி பேசும் நீதிபதி மகாராஜன் பெயரில் ஒரு குறுஞ்சாமியும் பொருணைகரையில் இருப்பது பொறுத்தமே.

(கட்டுரையாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர், திமுக செய்தித்தொடர்பாளர், கதை சொல்லி இதழின் இணையாசிரியர், நூலாசிரியர்.)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:High court magaraja

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X