தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் சிவசங்கரி. 36 நாவல்கள், 48 குறுநாவல்கள், 150 சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொகுப்பு நூல்கள் என அவர் தமிழுக்குச் செய்த பங்களிப்புகள் ஏராளம்.
சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திர பாரதியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், எழுத்தாளர் சிவசங்கரிக்கு, இந்திய அளவில் வழங்கப்படும் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான விஸ்வம்பரா சி.நாராயண ரெட்டி விருதை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
மேலும் சிவசங்கரி இலக்கியத் துறையில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், நினைவுப் பரிசும், சால்வையும் வழங்கப்பட்டது.
‘சினாரே’ என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இலக்கியவாதி டாக்டர் சி. நாராயண ரெட்டியின் 93வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சுசீலா நாராயண ரெட்டி அறக்கட்டளை, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. விழாவில் மறைந்த நாராயண ரெட்டி எழுதிய ‘சமன்விதம்’ என்ற புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார்.
கலாசாரத் துறை அமைச்சர் ஜூபாலி கிருஷ்ணராவ், வெமுலவாடா எம்எல்ஏ மற்றும் அரசு கொறடா ஆதி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“