தமிழ் விளையாட்டு - 16 : உட்கார்ந்தால் ஹண்டே, எழுந்தால் சண்டை

எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்த டாக்டர் ஹண்டே, எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது, குடும்ப கட்டுப்பாடு விளம்பரம் குறித்த விவாதம் நடந்தது.

இரா.குமார்

எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே. 1971- 76ல் திமுக ஆட்சியின் போது இவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தார். ராஜாஜியின் சுதந்திரா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ. இவர். சட்டப் பேரவையில் இவர் நடத்திய அறிவுப்பூர்வமான விவாதங்களால், மக்களிடம் இவருக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. நாகரிகம் மிக்க அரசியல்வாதி என்ற நல்ல பெயர் இருந்தது.

ராஜாஜி மறைவுக்குப் பிறகு எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் சேர்ந்தார். அப்போது கடும் விமர்சனத்துக்கு ஆளானார். “என் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சேர்ந்துவிடு” என்று ரஜாஜி என்னிடம் சொன்னார். அதனால்தான் அதிமுகவில் சேர்ந்தேன்” என்று பதிலளித்தார் ஹண்டே. இந்த பதிலும் விமர்சனத்துக்கு ஆளானது.
சட்டப் பேரவையில் நிறைய கேள்விகள் கேட்பார் ஹண்டே. அறிவு பூர்வமாக விவாதம் செய்வார். முதல்வர் கருணாநிதியுடனும் அமைச்சர்களுடனும் மக்கள் நலனுக்காக வாக்குவாதம் செய்வார்.

ஒருமுறை இவரை குறிப்பிட்டு கருணாநிதி பேசுகையில், “உட்கார்ந்தால் ஹண்டே, எழுந்தால் சண்டை” என்றார்.

அப்போது தீவிரமாக குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்காக பல இடங்களில் பெரிய பெரிய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டன. அதில் கருணாநிதி படம் வரைந்து “நாம் இருவர் நமக்கு இருவர்” என்று எழுதியிருந்தனர். இந்த பேனரில் வரையப்பட்டிருந்த கருணாநிதி படம் நம்மைப் பார்ப்பது போல இருக்கும்.
இதுகுறித்து சட்டப் பேரவையில் பேசிய ஹெச்.வி. ஹண்டே, ”குடும்பக் கட்டுப்பாடு விளம்பரப் பலகையை ஒருவர் பார்க்கும்போது, அவரைப் பார்த்து “நாம் இருவர் நமக்கு இருவர்” என்று முதல்வர் கருணாநி கூறுவது போல உள்ளது. இந்த விளம்பரப் பலகையை ஒரு பெண் பார்த்தால் எப்படி இருக்கும்? நாகரிகமாக இல்லையே. இந்த விளம்பரம் சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.

உடனடியாக, விளம்பரப்பலகையில் இருந்த “நாம் இருவர் நமக்கு இருவர்’’ வாசகம் அழிக்கப்பட்டது.

“முத்தென்றும் மணியென்றும்
வைரமென்றும் வைடூரியமென்றும்
கணக்கின்றி பிள்ளைகளை
பெறுதல் விடுத்து,
எள்ளென்றும் கொள்ளென்றும்
நெல்லென்றும் கரும்பென்றும்
கம்பென்றும் வரகென்றும்
உணவைப் பெருக்கிடுவீர்
உற்பத்தி செய்திடுவீர்”
என்ற வாசாகம் எழுதப்பட்டது.

×Close
×Close