தமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ?

கம்பனைப் போல வர்ணிப்பதற்கும் உவமை சொல்லவும் யாரும் இல்லை. எந்த இடத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர் எவருமில்லை.

இரா.குமார்

கம்பனைப் போல வர்ணிப்பதற்கும் உவமை சொல்லவும் யாரும் இல்லை. எந்த இடத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து தக்க சொல்லைப் பயன்படுத்துவதில் கம்பனுக்கு இணை கம்பன்தான்.

சொல்லுக சொல்லை அச்சொல்லை பிறிதொருசொல்

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

என்று சொல்வார் வள்ளுவர். ஒரு சொல்லை ஒரு இடத்தில் பயன்படுத்தினால், அதை வெல்லக் கூடிய இன்னொரு சொல் இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு சரியான சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறார் வள்ளுவர். திருவள்ளுவர் வாக்குக்கு இணங்க காவியம் படைத்தவர் கம்பர். கம்பனின் உவமையையும் சொல்லாட்சியையும் காண்போம்.

இராமன் காட்டுக்குச் சென்றுவிடுகிறான். தசரதன் இறந்துபடுகிறான். கேகய நாட்டுக்குச் சென்ற பரதன் அயோத்திக்குத் திரும்புகிறான். நடந்ததை அறிகிறான். இராமன் காட்டுக்குச் சென்றான் என அறிந்து அதிர்கிறான்.

”பரதா நீதான் இனி நாடாள வேண்டும்” என்று வசிஷ்ட முனிவர் சொல்கிறார். அதைக்கேட்டு, பரதன் நடுங்குகிறான். எப்படி தெரியுமா? விஷத்தைக் கொடுத்து, இதை நீ குடித்துதான் ஆக வேண்டும் என்று சொன்னால், ஒருவன் எப்படி நடுங்குவானோ அதனினும் அதிகமாக நடுங்குகிறான். அருவி போல கண்ணீர் விடுகிறான். அழுது அழுது சோர்ந்து போகிறான்.

நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்

அஞ்சினன் அயர்ந்தனன் – அருவிக் கண்ணினான்

அருவிக்கண்ணினாய் ஆகிறான்

என்று சொகிறார் கம்பன்.

தன்னை ஓரளவு தேற்றிக்கொண்ட பரதன், காட்டுக்குச் சென்று ராமனை அழைத்துவர முடிவு செய்கிறான். பரதனின் இந்த முடிவை அறிந்து அயோத்தி மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆரவாரம் செய்கின்றனர். ராமனை பிரிந்ததால் அயோத்தியை சோகம் சூழ்ந்தது. மக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். தங்கள் அன்றாடப் பணிகளையும் மறந்தனர். இதனால், அயோத்தி நகரம் உயிரற்றுக் கிடந்தது. இப்போது உயிர் பெற்றுவிட்டது.”ராமனை அழைத்து வருவோம்” என்ற அமிழ்தச் சொல்கேட்டு அயோத்தி நகருக்கு உயிர் துளிர்த்தது என்று சொல்கிறார் கம்பர்.

பின்னர், ராமனை தேடிச் சென்று, அழைத்து திரும்ப அயோத்திக்கு கூட்டி வரப்போகும் முடிவை அறிவித்தவுடன், அயோத்தி மக்களின் ஆரவார மனநிலை, உயிரில்லாத உடல், ராமனை அழைக்க போகப் போகிறோம் எனும் சொல்லை, அந்த அமிர்த சொல்லைக் கேட்டவுடன் அதுவரை உயிரில்லாத அயோத்தி எனும் உடலில் உயிர் துளிர்த்ததாம். அமிழ்தம் ஆயுளை நீட்டிக்கும். இங்கோ, உயிரையே கொடுக்கிறது. அதனால்தான் அமிழ்தச் சொல் என்று சொல்கிறார் கம்பர். ஆஹா…என்ன அருமையான சொல்லாட்சி.

ஒல்லென இரைத்தலால் – உயிர் இல யாக்கை அச்

சொல்லெனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே

என்கிறார், கம்பர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Literature News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close