/tamil-ie/media/media_files/uploads/2017/09/s.ramakirishnan.jpg)
எஸ்.ராமகிருஷ்ணன்
கி.ராவின் கதைகளை படித்த போதுதான், மண்ணையும் மனிதர்களையும் எழுதுவது எளிதல்ல என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கினேன் என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயிர்மை இதழில் அவர் எழுதிய கட்டுரையின் சுருக்கமான பகுதி.
சிறுகதைகள் என்றால் வடிவ நேர்த்தியும் கவித்துவமான மொழியும் பன்முகத்தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன். அப்படி இல்லாத கதைகளை யார் எழுதியிருந்தாலும் உடனே நிராகரிக்க வேண்டும் என்றும் பழகியிருந்தேன்.
இதனால் கிராவின் சிறுகதைகளைப் படித்தவுடன் ஒரு தபால் அட்டையில் இவை எல்லாம் என்ன கதைகள் என்பது போல கடுமையாக விமர்சனம் செய்து அனுப்பி நீங்கள் காம்யூ, சார்த்தர், ம்யூசில் ஹெஸ்ஸே எல்லாம் படிக்க வேண்டும் என்று நீண்ட பட்டியலை எழுதியிருந்தேன். சில நாட்களில் அவரிடமிருந்து பதில் வந்தது. நீங்கள் நிறைய படிக்கிறீர்கள். இது ஜீரணமாக கொஞ்ச நாள் ஆகும். அப்புறம் என்னைப் படித்துப் பாருங்கள் என்று எளிமையாக எழுதியிருந்தார். அது உண்மை என்று புரிந்தது.
மண்ணையும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல என்பதைப் புரிந்து கொள்ளத் துவங்கிய பிறகு அவரது கதைகளைப் படிக்கத் துவங்கினேன். கதைகளில் சம்பவங்கள் மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள், மனித நம்பிக்கைகள், சடங்குகள், வெயில், மழை, காற்று, மண் என்று நுட்பமாக விரிந்து கொண்டே போனதோடு தனித்துவமான கிராமத்துச் சொற்கள், அசலான கேலி, பாலியல் சார்ந்த பதிவுகள் என்று கதையுலகம் வளர்ந்து கொண்டே போனது.
கிரா ஒரு கதைக்களஞ்சியம் போலிருந்தார். முதன்முறையாக என்னைச் சுற்றிய உலகை நான் பார்த்துக் கொள்ளத் துவங்கினேன். மஞ்சனத்திச் செடியும் தும்பையும் நெருஞ்சியும் அவர் கதைகளில் வந்தது போல ஏன் என் எழுத்திற்குள் வரவேயில்லை என்று கேட்டுக் கொண்டேன். தவிட்டுக் குருவிகள், தைலான், செம்போத்து, நாரை, கௌதாரி போன்ற பறவைகள் ஏன் நவீனக் கதைகளை விட்டு விலகிப் பறந்து போகின்றன. கார்க்கியின் கிழவி இஸர்கீலை ரசிக்கத் தெரிந்த எனக்கு ஏன் கிராவின் பப்பு தாத்தா சாதாரணமாகத் தெரிந்தார் என்று குற்றவுணர்ச்சி கொள்ளத் துவங்கினேன்.
தத்துவமும் மெய்யியலும் மட்டுமே வாழ்வின் தரிசனங்களை உருவாக்குபவை என்று நினைத்துக் கொண்டிருந்தது மாறி வாழ்வின் அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து பெறும் அகதரிசனம் தத்துவம் தரும் உன்னத நிலைகளைவிடவும் வலிமையானது என்று புரிந்தது.
கிராவைத் தேடித் தேடி வாசித்தேன். அவரது படைப்புலகில் எனக்கு மிக விருப்பமானது கோபல்ல கிராமம் நாவல். அது இலக்கியப்பதிவு மட்டுமில்லை. ஒரு சமூகம் எப்படி நம்மண்ணில் வேர் ஊன்றியது என்ற சரித்திர ஆவணம். நாட்டார் மரபு எப்படி நிலம் கடந்து தொடர்கின்றன என்று ஆய்வதற்கான சான்றுப் பொருள். நினைவுகள் எவ்வளவு வலிமையானவை என்பதை நிரூபணம் செய்யும் சாட்சி. மானுடவியல் நோக்கில் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வுப்படைப்பு. இப்படி அது பன்முக நிலைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நாவலது.
கிராவின் சிறுகதைகள் சொல்மரபிலிருந்து உருவானவை. அவை கதைகளின் வழியே மனித வாழ்வின் துயர்களை, சந்தோஷங்களை, அகச்சிக்கல்களைப் பேசுகின்றன. அவர் அலங்காரமாகக் கதை சொல்வதில்லை. ஆனால் உயிரோட்டமாகக் கதை சொல்கிறார். கடலைச் செடியை மண்ணிலிருந்து பிடுங்கினால் எப்படி வேரில் ஒட்டிய மண்ணோடு சேர்ந்து வருமோ அப்படியான படைப்பது. எளிய கிராமத்து மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை அவர் அளவு உன்னிப்பாக எழுதியவர் வேறு எவருமில்லை.
விஞ்ஞானத்தின் வருகை கிராமத்து வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டது என்பதைப் பற்றிய பதிவுகள் தமிழில் அதிகம் இல்லை. கிரா அதைக் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார். டீ தயாரிக்கும் கம்பெனிகள் எப்படி இலவசமாக தேயிலைகளை வீடு வீடாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்பதில் துவங்கி, கடிகாரம் வந்தது ரயில் வந்தது என்று நீண்டு விஞ்ஞானம் கிராமத்தில் நுழையும் போது ஏற்படும் அதிர்ச்சிகளை அசலாகப் பதிவு செய்திருக்கிறார். அது போலவே சுதந்திரப் போராட்ட நாட்களில் தமிழ்க் கிராமங்கள் எப்படியிருந்தன என்பதற்கும் அவரது கதைகளே நேர் சாட்சிகள்.
திருடனை எப்படிக் கழுவேற்றினார்கள் என்பதை அவரது கதையில்தான் முதன்முறையாக வாசித்துத் தெரிந்து கொண்டேன். சமணர்களைக் கழுவேற்றிய சரித்திர உண்மைகளைப் படித்து அறிந்திருந்த போதும் கழுமரம் எப்படியிருக்கும் அது என்னவிதமான தண்டனை என்பதை அவரே முதன்முதலில் விரிவாக விளக்கி எழுதியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.