ஜெய் பீம் தலைப்புக்கு நன்றி சொன்னபோதே யோசனைதான்… எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மீது எழும் விமர்சனம்

கண்மணி குணசேகரனின் கருத்தை பொதுவாக அணுகி விமர்சனப்படுத்துவதை விட, அவரின் குறிப்பிட்ட இந்த சூட்சமும் தான் அதிகம் விமர்சிக்கப்பட வேண்டியது, கண்டிக்கப்பட வேண்டியதும் என்று எழுத்தாளர் வாசுகி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Jai Bhim movie controversy, Tamil writers criticise on writer Kanmani Gunasekaran castiest letter, Vasugi Bhaskar, Murugesa Pandian, Yamuna Rajendran, Manushya Puthran, ஜெய் பீம் சர்ச்சை, எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மீது எழுத்தாளர்கள் விமர்சனம், வாசுகி பாஸ்கர், ந முருகேச பாண்டியன், யமுனா ராஜேந்திரன், vinayaga murugan, Lakshmi Saravanakumar

‘ஜெய் பீம்’ படத்தால் எழுந்துள்ள சர்ச்சை ஒவ்வொரு நாளு ஒரு பரிணாமத்தை அடைந்து வருகிறது. ஜெய் பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன் என்றும், யாரையும் அவமதிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை என்றும் இயக்குநர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் த.செ.ஞான்வேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ ரசிகர்களால் வரவேற்கப்பட்டாலும், இந்த படத்தில் வன்னியர்களைத் தவறாக சித்தரித்துவிட்டதாகவும் இழிவுபடுத்திவிட்டதாகவும் வன்னியர் சங்கமும் பாமகவினரும் கடுமையாக எதிர்த்தனர். நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் சுட்டிக்காட்டப்பட்ட அக்னி கலசம் மாற்றப்பட்டுவிட்டது. மற்றபடி யாரையும் இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை என்று தெரிவித்தார். ஆனாலும், சூர்யாவுக்கு மிரட்டல்களு விடுக்கப்பட்டது. இதையடுத்து, அவருடைய வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ‘ஜெய் பீம்’ படத்தில் வசனங்கள் விருத்தாச்சலம் வட்டார வழக்கில் இருக்கும் விதமாக உதவி செய்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன், ஜெய் பீம் படக் குழுவினர் நயவஞ்சகம் செய்துவிட்டார்கள், அவர்கள் ஊதியமாக அளித்த ரூ.50,000-ஐ திருப்பி அனுப்பியதோடு, இதுகுறித்து கண்மணி குணசேகரன் 2டி தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், ‘ஜெய் பீம்’ தலைப்பை மனமுவந்து கொடுத்ததிற்கான கதாநாயகரது நன்றி நவிலல் செய்தியையும் பார்த்தேன். அப்போதே எனக்குக் கொஞ்சம் யோசனைதான் என்றுகுறிப்பிட்டுள்ளார். இது இயக்குநர் பா. ரஞ்சித்தை சீண்டும் விதமாகவும் ஜெய் பீம் என்ற முழக்கத்தின் மீதும் சாதிய உணர்வுடன் அனுகுவதாக எழுத்தாளர், நீலம் ஆசிரியர் வாசுகி பாஸ்கர், மற்றும் எழுத்தாளர்கள் பலரும் கண்மணி குணசேகரனின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தலித் அரசியலைப் பேசி வரும் இயக்குநர் பா.ரஞ்சித் தான் ‘ஜெய் பீம்’ என்ற தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தார் என்றும் சூர்யா தற்போது வெளியாகி இருக்கும் இந்த தலைப்பை கேட்டபோது, அம்பேத்கரும் ஜெய் பீம் முழக்கமும் எல்லோருக்கும் சொந்தமானது. இந்த தலைப்பை மனமுவந்து கொடுத்ததால் நடிகர் சூர்யா இயக்குநருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

கண்மணி குணசேகரன் 2டி தயாரிப்பு நிறுவனத்துக்கும் இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: “விவசாயம், வேலை, எழுத்து என கிராமம் சூழ் வாழ்வியலில் இருப்பவன் நான். எனக்கு வாசகராய் அறிமுகமாயிருந்த செந்தில் என்கிற தம்பி, இயக்குநர் த.செ.ஞானவேலை என் இல்லம் அழைத்துவந்து எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அவர் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதையானது கம்மாபுரம் காவல்நிலையத்தில் வெகுசில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம். நானும் அதை கேள்விப்பட்டிருந்தேன். கதையின் களம் விருத்தாசலம், கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் இங்கத்திய காட்சிகளில் வரும் உரையாடல் நடுநாட்டு வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்குமென்று சொல்லி, பிரதியில் மாற்றி உதவிட வேண்டுமெனவும் சொன்னார்கள்.

எனக்கு திரைக்கதையாடல் பரிச்சயமில்லாத துறையென்பதால் சற்று தயங்கினேன். ஆனபோதும் ஊருக்கே வந்துவிட்டதில் என்னால் தட்ட முடியவில்லை. மேலும் (உண்மை நிகழ்வில் குறவராக இருந்தாலும்) ஆதுபாதற்ற வாயில்லா சமூகமாய் நைந்து கிடக்கும் சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வைச் சொல்கிற படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன்.

எனக்கு காட்டப்பட்ட உரையாடல் பிரதியில் (திரைக்கதைப் பிரதி அல்ல) படத்தின் பெயர் இருளர்களின் தம் வாழ்வியலோடு கூடிய ‘எலி வேட்டை’ என்றே இருந்தது. இப்பகுதி சார்ந்த காட்சிகளின் உரையாடல்களும் சற்றேறக்குறைய இம் மக்களின் மொழிநடையாகவே இருந்ததில் சொற்ப இடங்களில்தான் மாற்றியமைக்குமாறு அமைந்தது. மேலும் ஒட்டுமொத்த திரைக்கதையிலும் ஒன்றிரண்டு பெயர்கள் தவிர வேறெதும் சிக்கலாகத் தெரியவில்லை. அந்தப் பெயர்களையும் சரிசெய்து கொள்வதாகவும் உறுதியளித்தீர்கள். படம் ‘எலி வேட்டை’ என பரிதாபம் கொள்கிற தலைப்பாக இருந்ததால் அதற்குமேலும் அந்த பிரதியில் நான் ஊன்றி கவனம் செலுத்தவில்லை.

வட்டார உரையாடல் மாற்றம் தொடர்பான பணிக்கு தாங்களாகவே ரூ 50000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பணம் எனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கச் செய்தீர்கள்.

இதனிடையில் கம்மாபுரம் பகுதி பச்சைப்பசேலென இருளர் வாழ்வியல் காட்சிக்குப் பொருத்தமாக இராது என விழுப்புரம் பகுதியை தெரிவு செய்து படப்பிடிப்பை முடித்திருந்ததை அறிந்தேன்.

பிறகொருநாள், படம் திடுமென (‘எலி வேட்டை’யிலிருந்து) பெயர்மாற்றம் பெற்று ‘ஜெய்பீம்’ என இதழ்களில் விளம்பரம் கண்டேன். தொடர்ந்து ‘தலைப்பை மனமுவந்து கொடுத்ததிற்கான கதாநாயகரது நன்றி நவிலல்’ செய்தியையும் பார்த்தேன். அப்போதே எனக்குக் கொஞ்சம் யோசனைதான்.

அண்மையில் படத்தைப் பார்த்தவர்கள் எனது பெயர் நன்றி அறிவிப்பில் வந்தது கண்டு மகிழ்வோடு சொன்னார்கள். கூடவே வன்னியர்களின் அக்னிக் கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியையும் வருத்தத்தோடு பதிவு செய்தார்கள். எனக்குப் பேரதிர்ச்சி. என்னிடம் கொடுக்கப்பட்ட பிரதியில் வன்னியர் அக்னிக் கலசம் போன்ற காட்சிக் குறியீடுகளெல்லாம் இல்லை. மீறி இருந்திருந்தால் உண்மை நிகழ்விற்கு முற்றும் புறம்பான, தேவையில்லாத அந்தப் பகுதியை உங்களிடம் நீக்கச் சொல்லியிருப்பேன்; அல்லது நான் வழக்குமொழியாக்க வேண்டுகோளை நிராகரித்திருப்பேன்.

எம் சமூகத்தை வன்முறையாளர்களாகவும் கொலையாளிகளாகவும் வலிந்து திணிக்கப்பட்ட வன்னியர் வெறுப்பரசியலை நீங்கள் கையிலெடுத்து திரைக்கதைப் பிரதியில் சேர்த்துவிட்ட குரூரம் குறித்து நெடும் பதிவொன்றை எனது முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தேன். உடன் ‘பீரியட் படம் என்பதால் ஆர்ட் சைடில் தவறுதலாக வைத்துவிட்டார்களெனவும் அதற்கு உள்நோக்கம் எதுவும் இல்லையென்றும் அப்படியிருந்தால் உங்கள் வீடுதேடி வந்திருக்க மாட்டேன், குறிப்பாக என்மீது வருத்தம் வேண்டாமெனவும் சர்ச்சைக்குரிய அந்த காலண்டர் படத்தை நீக்கச்செய்து விட்டதாகவும்’ சொன்னீர்கள்.

அதுபோலவே காலண்டர் காட்சியில் திருத்தம் செய்திருந்தாலும், வன்னிய சமூகத்தையே கொலையாளிகளாக சித்தரித்தக் கொடூரத்தையும் வன்மத்தையும் என்னாலும் அதைப் பார்த்த எம் மக்களாலும் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

படைப்பாளி, கலைஞன் எனச் சொல்லிக் கொள்வோர்க்கெல்லாம் ஒரு நேர்மை வேண்டும். ‘எலிவேட்டை’ என என்னிடம் காட்டி ‘ஜெய்பீம்’ என நீங்கள் மாற்றுவது உங்களுக்கு சாதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் எலிவேட்டை என்கிற தலைப்பில் இருக்கிற அதே சாதாரண உரையாடல், பெயர்கள், ஜெய்பீம் என அக்னிக் கலச குறியீடுகளோடு வருகிறபோது உக்கிரம் கூடி வேறொரு குரூர ரூபம் கொள்கிறது.

மறைந்த மாவீரன் காடுவெட்டியார் அவர்களையும் ராசாக்கண்ணு கொலைக்கு நீதிகேட்டு நெடுங்காலம் போராடிய என் சமூகத்தாரையும் சிறுமைப்படுத்தி மற்றும் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரை வைத்துத் தாழ்த்தியும் உண்மைக்கு புறம்பான சித்தரிப்புக்கு விளக்கம் கேட்ட அன்புமணியின் கேள்விகளை புறந்தள்ளியுமாய் மௌனம் காக்கும் நீங்களும் உங்கள் நடிகர் சூர்யாவின் செய்கைகளும் என்னைப் பெரும் மனஉளைச்சலாக்குகின்றன.

25 ஆண்டு காலம் எனது எழுத்தில் தவழ்ந்த எம் நடுநாட்டு மொழியை எம் இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்ப செய்துவிட்ட உங்கள் ஏமாற்றுத் துரோகம் இனி எந்த படைப்பாளிக்கும் வரவே கூடாது. உங்களால் எனக்கும் எம் இனத்திற்குமாய் சுமத்தப்பட்ட இத்தனை இழிவுகளையும் தாண்டி உங்கள் இழிசெயலால் சம்பாரிக்கிற வருமானத்திலிருந்து நான் பெற்ற அந்த பாவத்தின் சம்பளத்தை வைத்துக்கொண்டிருக்கிற ஒவ்வொரு கணமும் குற்ற உணர்வில் துடித்துக்கொண்டிருக்கிறேன். எனவே தாங்கள் அனுப்பிவைத்தத் தொகை ரூ 50000/-ஐ (ரூபாய் ஐம்பதாயிரம்) தங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

கண்மணி குணசேகரன், “படம் திடுமென (‘எலி வேட்டை’யிலிருந்து) பெயர்மாற்றம் பெற்று ‘ஜெய்பீம்’ என இதழ்களில் விளம்பரம் கண்டேன். தொடர்ந்து ‘தலைப்பை மனமுவந்து கொடுத்ததிற்கான கதாநாயகரது நன்றி நவிலல்’ செய்தியையும் பார்த்தேன். அப்போதே எனக்குக் கொஞ்சம் யோசனைதான்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எழுத்தாளர், நீலம் இதழ் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஜெய் பீம் திரைப்படம் குறித்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பதிவில் “ஜெய் பீம் தலைப்புக்கு படக்குழு நன்றி சொன்ன போதே சந்தேகித்தேன்” என்று கண்மணி குணசேகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெய் பீம் தலைப்பை பதிவு செய்து வைத்திருந்ததை தவிர ஜெய் பீம் திரைப்படத்திற்கும் பா. இரஞ்சித் அவர்களுக்கும் எந்த நேரடி தொடர்புமில்லை. உரையாடலை தொடர்ந்து ஜனநாயகப்படுத்த வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி வரும் இரஞ்சித் ஜெய் பீம் என்கிற தலைப்பை தான் பயன்படுத்துவதை விடவும், அதை ஆர்வமாக கேட்பவர்களுக்கு கொடுப்பதே முக்கிய மாற்றம் என்கிற அடிப்படையில் ஜெய் பீம் தலைப்பின் உரிமையை மனமுவந்து கொடுத்திருக்கிறார். ஒரு திரைப்படம் உருவாகி வரும் போது அதற்கு வெளியிலிருந்து ஏதோவொரு வகையில் உதவி செய்தவர்கள் பெயர்களை நன்றி கார்டில் போடுவது வழக்கம். அதனடிப்படையில் இயக்குனர் பா. இரஞ்சித்தை நினைவுகூர்ந்து நன்றி சொல்லியிருந்தனர் அதன் இயக்குனரும் நடிகர் சூர்யாவும்.

கண்மணி குணசேகரன் எழுதியது அடிப்படையில் அறமற்ற கருத்து. வட மாவட்டத்தில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேல் பறையர் – வன்னியர் மோதலை ஊக்குவித்தது பாமக என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்த யாவரும் அறிந்ததே. மிக அரிதாக மனசாட்சியோடு சிந்திப்பவர்கள் கூட இதனை மறுக்க முடியாது. அப்படியிருக்கும் போது, சொல்ல வந்த சாரத்திலிருந்து விலகி, இங்கு இயக்குனர் இரஞ்சித்தை உள்ளிழுப்பதின் மூலம் இங்கு ஏற்கனவே இருக்கும் பிரச்சனையை மேலும் கூர் தீட்டுவதைப் போல, இந்தப் பிரச்சனையில் அட்டவணை சமூகத்தாரை உள்ளிழுக்கிறார் கண்மணி குணசேகரன். இதைச் செய்ய ஒரு எழுத்தாளர் தேவையில்லை, சாதி சங்கத்தின் தீவிரமான உறுப்பினரே போதும்.

உண்மைக் கதையை மைப்படுத்தி ஜெய் பீம் திரைப்படம் பேச வந்தது பழங்குடி மக்கள் பற்றிய சமூக பிரச்சனைகளை. அதில் கண்மணி குணசேகரனுக்கு கருத்திருந்தால் தாராளமாக அவர் முன் வைக்கலாம். அவர் விரல்கள் எதை எழுத வேண்டுமென்பதை யாருமிங்கே தீர்மானிக்கப் போவதில்லை. மாறாக, இங்கு அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வட்டார அளவிலான சாதிய முரண்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக அதற்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு மோசமான பின்னணிக் கதையை புனைவது அபத்தமானது.

கண்மணி குணசேகரனின் கருத்தை பொதுவாக அணுகி விமர்சனப்படுத்துவதை விட, அவரின் குறிப்பிட்ட இந்த சூட்சமும் தான் அதிகம் விமர்சிக்கப்பட வேண்டியது, கண்டிக்கப்பட வேண்டியதும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் கடிதம் குறித்து எழுத்தாளர்கள், விமர்சகர்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இது குறித்து விமர்சர் ந.முருகேச பாண்டியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “எழுபதுகளில் மார்க்சியப் பார்வையின் காரணமாக விரைவில் சாதி அழிந்துவிடும் என நம்பினோம். சாதிய வெறிக்கு எதிராகச் செயல்பட்டோம். குறிப்பாக ஆதிக்க சாதியினரின் அதிகாரத்திற்கு எதிராக எண்பதுகளில் போராடினோம். சாதி மறுப்புத் திருமணங்கள் சாதியை ஒழிக்கும் எனத் தோன்றியது. ஆனால் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம்போல சாதி விடாமல் வளர்கிறது.

கண்மணி குணசேகரன் சொந்த சாதியான வன்னியர் பெருமை பேசுகிறார் என எங்கும் ஒரே இரைச்சல். எதன் மீது நம்பிக்கை கொள்வது என்ற தேடலில் எங்கும் பரவிடும் அந்நியமாதல் ஏதாவது ஒன்றின் மீது பற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. யதார்த்தக் கதை சொல்லியான கண்மணி குணசேகரன் ஆக்கமான படைப்பாளி அல்ல; அரசியல்வாதியும் அல்ல. அவர் படையாச்சி அபிமானத்துடன் இருப்பது பெரிய குற்றம் அல்ல. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ தேர்வுகளின் முடிவுகளில் இன்றளவும் மிகவும் பின் தங்கியிருக்கிற மாவட்டங்கள் வன்னியர்கள் அதிகம் வாழ்கிற வட மாவட்டங்கள்தான். இது குறித்து எல்லாம் குணசேகரனுக்கு வருத்தமோ, இப்படி அவர்களைத் தொடர்ந்து வைத்திருக்கிற பா.ம.க., ராம்தாஸ் வகையறா குறித்துக் கோபம் எதுவும் இல்லை. சரி, போகட்டும்.

கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யும் உரிமை பார்ப்பனருக்கு மட்டும் உரியது என்ற நிலை மாறும்போது தான் கண்மணி குணசேகரன் மீது வெறுப்பைக் கக்கிட முடியும். தீபாவளி நாளில் அவர் வடை சுடும் படத்தை முக நூலில் வெளியிடுமளவு வெகுளியானவர்.
என்னமோ போடா மாதவா…” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் அறிக்கை குறித்து எழுத்தாளர், திரைப்பட ஆய்வாளர், விமர்சகர் யமுனா ராஜேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கண்மணி குணசேகரன் கடிதம் வேடிக்கையானது. ஜெய்பீம் கதைக்கே அவர் முழுமையாகச் சொந்தம் கொண்டாடியிருக்கிறார். திரைப்படம் என்பது நூறு நூறு பேர்களின் கூட்டுழைப்பு. இவரைப் போல ஒரு நூறு பேர் அதன் திரைக்கதையில் பங்களித்திருப்பார்கள். திரைக்கதை உருத்திரளும்போது அதன் ஆரம்பக் கட்டத்தில் இவரிடம் பங்களிப்பைக் கோரியிருப்பார்கள். இதன்பொருட்டு திரைக்கதைக்கான அத்தாரிட்டியாக தன்னை அவர் கருதிக்கொள்ள முடியாது. அதற்கு இயக்குனர் மட்டுமே முழுமையான இறுதிவடிவம் தரமுடியும். வசனத்தின் மொழியமைப்பை செம்மைப்படுத்திய ஒருவருக்கு திரைப்படத்திற்கான உரித்துரிமையை ஒருவர் அளிக்கவே முடியாது. ஏதோ தன்னை ஏமாற்றி இயக்குனர் மோசம் செய்துவிட்டதாகக் கண்மணி குணசேகரன் கோரிக்கொள்வது மிகைமதிப்பீடு. கண்மணி குணசேகரன் என்பது எழுத்தாளராக அவர் பெயர். அப்படி ஒரு எழுத்தாளராக ஒரு கதாபாத்திரம் படத்தில் வருகிறதா? பாமக தலைவரின் பெயர் குருநாதன். அப்படி அவரது பெயரின் அடைமொழியோடு அவரது பெயர் கொண்ட பாத்திரம் படத்தில் உண்டா? பெயர் என்பது எந்தச் சமூகத்திலும் நேரடியிலான சுட்டாக இல்லாதபோது படைப்பில் அது அருவமான, பற்பல பொருள்கோடல்களுக்கு உரியதாகவே இருக்கும். ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு இது தெரியாமல் இருப்பது ஆச்சர்யம். கடும் சொற்கள் நிறைந்த அரசியல் விசுவாச அறிக்கை என்பதற்கு அப்பால் படைப்பு சார்ந்த எந்தத் தார்மீகப் பலமும் அற்றது கண்மணி குணசேகரனின் அறிக்கை..” என்று விமர்சித்துள்ளார்.

கவிஞர் பெருந்தேவி ஜெய் பீம் சர்ச்சை குறித்தும் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் குறித்தும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “எழுத்தாளர்கள் தன் வயதொத்த அல்லது இளைய அரசியல்வாதிகளை அண்ணன் என்றழைக்கும் கொடுமையைப் பார்க்கிறோம் (கண்மணி குணசேகரன் அன்புமணி அண்ணன் என்கிறார், இமையம் உதயநிதி அண்ணன் என்றழைத்தார்.)

கண்மணி குணசேகரனின் கடிதம் அதிர்ச்சியைத் தரவில்லை. வருத்தத்தைத் தந்தது. அவர் கடிதத்தை வன்னியர் சாதி அடையாளத்தைப் பிரதிபலிக்கும் குரல்களின் பரப்பில் வைத்துப் பார்ப்பது இயல்பானது. எழுத்தாளர், அறிவுஜீவி என்றால் சாதி கடந்து இருக்க வேண்டும் என்பது ஆதரிசம். பெரும்பாலும் அப்படியில்லை என்பது யதார்த்தம். அதனால்தான் அதிர்ச்சியில்லை என்கிறேன். ஆனால் இந்த யதார்த்தம் மாற வேண்டும் என்பதே என் அவா.

ஜெய் பீம் பட விவகாரத்தைப் பொறுத்தவரை பார்வதி, அந்தோணிசாமி பெயர்களை மாற்றியிருக்கக்கூடாது. பயோபிக் என்பது போல விளம்பரப்படுத்திவிட்டு சில பெயர்களை, சாதி அடையாளங்களை மட்டும் கல்லாப்பெட்டிக்காக மாற்றிக்கொள்வதெல்லாம் தவறு. போலவே, குடிசைகளைக் கொளுத்தச் சொல்லும் பாத்திரத்துக்கு க.குணசேகரன் என்று பெயரைக் காட்டுவதெல்லாம் அசலான வில்லத்தனம்.

ஆனால் இதற்குப் பதிலாக பா.ம.க இப்பிரச்சினையைக் கையிலெடுத்திருப்பது எந்த வகையிலும் சமூக நல்லிணக்கத்துக்கு உதவாது. பிறகு அடையாளக் குழப்படிகளுக்கு எப்படி எதிர்ப்பைக் காட்டமுடியும் எனக் கேள்வி எழலாம். தொடர்ந்து ஊடகத்தில் விமர்சனங்கள் எழுப்பலாம், கேள்வி கேட்கலாம், மாற்றுக் கலை முயற்சிகளைச் செய்யலாம். ஆனால் நடிகர், இயக்குனருக்கு உயிர் அச்சுறுத்தல் தருவதெல்லாம் மோசமானது.

வேறொரு விஷயமும் சொல்லத் தோன்றுகிறது. நம்முடைய சமூகம் அடைந்திருக்கும், அடையக்கூடிய நவீனம் மேற்கத்திய நவீனத்திலிருந்து மிகவும் மாறுபட்டது. இதையெல்லாம் theorize செய்ய ஆரம்பித்திருக்கிறோமா என்றுகூட தெரியவில்லை. நம்முடைய ஆய்வு முறைமைகள் பெரும்பாலும் காப்பி அடிக்கப்பட்டவை. சமூக யதார்த்தத்துக்குள் இருந்து சாதியைக் கேள்விகேட்கும், தாண்டிசெல்லக்கூடிய வகைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். நாராயண குரு, வள்ளலார் போன்ற முன்மாதிரிகள் வேறு பலரும் இருக்கலாம். தமிழ்ச் சமூகமாக பரந்த அளவில் இவர்களைத் தீவிரமாக வாசிக்கவும் முன்னெடுக்கவும் வேண்டும். இங்கே இருப்பதென்னவோ சில கட்டுரைகள், சிறு நூல்கள்.

சமூக வலைதளத்தில் வன்னிய மக்கள் பதியும் கருத்துகளிலிருந்து விக்டிம் பொசிஷனில் அவர்கள் தங்களை வைத்துப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. கொங்கு பெல்ட், தெற்குத் தமிழகம் போலன்றி பொருளாதார நிலையில் வட மாவட்டங்களில் அவர்களுக்கும் பட்டியல் சாதியினருக்கும் பெரிய வித்யாசமில்லை என்றுதான் நண்பர்கள் சொல்லி அறிகிறேன். இது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
பொருளாதாரத்திலும் சரி, பொதுவான வாழ்க்கைச் சூழலிலும் சரி மிகவும் பின்தங்கி இருக்கும் சாதிகளுக்கு இடையில் சாதியடையாள வாத, பிரதிவாதங்களைக் கவனமாக முன்னெடுக்க வேண்டும். ஜெய் பீம் படத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நெய்வாசல் கோயிலில் சீட்டு கட்டி அவர்களை ஒழிப்போம் என்ற வன்னிய முன்னெடுப்புகள் எனக்குக் கவலையைத் தருகின்றன.” என்று பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் கடிதம் குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கண்மணி குணசேகரனின் ஜாதி உணர்வு பற்றிய கடும் விமர்சனங்களைப் பார்த்தேன். கண்மணி குணசேகரன் கூச்சமில்லாமல் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். நவீன தமிழ் இலக்கியவாதிகளின் சாதி உணர்வுகளும் தங்கள் சாதி சார்ந்து அவர்கள் செய்து வந்திருக்கும் ‘ லாபி’யும் தனி வியாசம் எழுதும் பிரமாண்டமானது. திராவிட இயக்கத்தை அரசியல்ரீதியாக நேரடியாக எதிர்கொள்ளமுடியாத உயர்சாதி சக்திகள் நவீன இலக்கிய முகமூடியை அணிந்துகொண்டு திராவிட இயக்க கலை, பண்பாட்டு, அரசியல், சமூக மதிப்பீடுகளை எள்ளி நகையாடினார்கள், எதிர்த்தார்கள். அவர்களது ஸ்தானம் சமூகரீதியாக பிடுங்கப்பட்ட கோபத்தை அவர்கள் தங்கள் படைப்புகளில் தொடர்ந்து காட்டி வந்திருக்கிறார்கள். தமிழின் நவீன இலக்கியத்தின் பிதாமகன் ஒருவர் ஒரு உயர்சாதி சங்கத் தலைவராக இருந்துகொண்டு நவீன தமிழில் நவீனத்துவத்தை எப்படி வளர்த்தார் என்ற தகவலை இந்திரன் ஒரு நேர்ப்பேச்சில் சொன்னபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பின்னர் இடைநிலை சாதிகளைச் சார்ந்த படைப்பாளிகளிடமும் இந்த சாதியரீதியான மூர்க்கம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. விருதுகள், அங்கீகாரங்கள், பிரசுரவாய்ப்புகள், ஊடக வெளிச்சம் எல்லாவற்றிலும் சாதிய லாபி உண்டு. இந்த லாலிக்கு வெளியே இருந்த படைப்பாளிகள் எவ்வளவு சிறப்பாக எழுதினாலும் இந்த ‘ இலக்கிய ஞானஸ்தானம்’ அவர்களுக்கு கிடைக்கவே இல்லை.
வண்ணதாசனின் கவிதை வரி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.
” இவனைபோலத்தானே இருக்கும் இவனது கவிதையும்”.” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் விநாயக முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கண்மணி குணசேகரனைவிட எத்தனையோ பயங்கரமான எழுத்தாளர்களை நான் நேரில் சந்தித்துள்ளேன். பேசியுள்ளேன். அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டுள்ளேன். உரையாடியுள்ளேன். இப்போதெல்லாம் இவர்கள்மீது பெரிய பிரமிப்போ, மரியாதையோ இல்லை. சொல்லப்போனால் வாசிப்பதையே நிறுத்திவிட்டேன். அதான் மன, உடல்நலத்துக்கு நல்லது என்று நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடுகையில், “முன்பொருமுறை காடுவெட்டியார் குறித்து நான் எழுதிய பதிவிற்காக அன்பு அண்ணன் கண்மணி குணசேகரன் என்னை நட்புநீக்கம் செய்தார். அதனால் இன்றைய தினம் அவர் எழுதிய செய்தி என்னை ஆச்சார்யப்படுத்தவில்லை.
என் ஆச்சர்யமெல்லாம் இந்த இலக்கிய ஃபேஸ்புக்கர்ஸைப் பார்த்துதான்.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் குறித்து எழுதியபோது ஒரு இஸ்லாமியரோட மேடையைப் பகிர்ந்து கொள்ளும் போது என் முதுகுத் தண்டு சில்லிடுகிறது என்றும் விகடன் தடம் நேர்காணலில் இந்திய ராணுவம் இலங்கையில் கற்பழிப்புகளோ கொலைகளோ செய்யவில்லை என்றும் இன்னும் இதுபோன்ற ஏராளமான உன்னத இந்துத்துவ கருத்துக்களை எழுதுகிற ஜெயமோகனுக்கு எதிராக இதில் ஒருவர் கூட வாய்திறக்கவில்லையே ஏன்?” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலித்திய பார்வையில் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் அரசியல் விமர்சனங்களை எழுதி வரும் தி ஸ்டாலின், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் கடிதம் குறித்து, ‘இலக்கிய முகத்தில் மறைந்திருக்கும் சாதிய முகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “எளிய மக்களின் இலக்கியவாதி என்று தம்மைக் கூறிக்கொள்ளும் கண்மணி குணசேகரன் ஜெய்பீம் படத்தை எதிர்ப்பதில் எந்த ஆச்சர்யமும், அதிர்ச்சியும் எனக்கில்லை. அவரைப் பொறுத்தமட்டில் எளிய மக்கள் என்பவர்கள் அவருடைய சாதியினரான வன்னியர்கள்தான். வன்னியரில் உள்ள எளியவர்கள் மட்டுமல்ல, குடிசைகள் கொளுத்தும் வன்னியர்களும் கூட அவருக்கு எளியவர்கள் தான். பாமகவின் இலக்கிய பிரிவில் தொடர்ந்து இயங்குபவர் கண்மணி குணசேகரன். தற்போது, ஜெய்பீம் வெறுப்பு, நாடக காதல் என்கிற பழிசுமத்தல், இயக்குனர் பா.ரஞ்சித் மீதான வன்மம் போன்றவற்றின் மூலம் பாமகவின் இலக்கிய பிரிவுக்கும், குச்சுக் கொளுத்தும் பிரிவுக்கும் பெரிய வேறுபாடில்லை என்பதை நிறுவிக்கொண்டிருக்கிறார்.

ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல், தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோருக்கு தமது எதிர்ப்பை வலியுறுத்தி எழுதிய கடிதத்தில், ஜெய்பீம் தலைப்பை இயக்குனர் பா.ரஞ்சித்திடமிருந்து பெற்றதற்காக தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா நன்றி கூறியபோதே ‘யோசனையாக இருந்தது’ என்கிறார் கண்மணி குணசேகரன். அதாவது, இப்போது நடக்கும் அக்னி குண்ட நாட்காட்டி சச்சரவுக்கும் முன்னரே, படத்தலைப்பு ஜெய்பீம் என்று ஆனபோதே படத்தின் மீதான வெறுப்பு இவர்களின் யோசனையில் வந்துவிட்டது என்பது புலனாகிறது. “படைப்பாளி, கலைஞன் எனச்சொல்லிக் கொள்பவர்களுக்கெல்லாம் ஒரு நேர்மை வேண்டும் ” என்கிறார் கண்மணி குணசேகரன். அதே நேர்மை தமக்கிருக்குமானால் சேரிகள் மீது வன்னியர்கள், குறிப்பாக வன்னியர் சங்கமும் பாமகவும் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் வன்முறைகள், படுகொலைகள் பற்றியல்லவா கண்மணி குணசேகரன் பேசியிருக்க வேண்டும். ஆனால், இதேக் கடிதத்தில், வன்னியர் சமூகத்தை வன்முறையாளர்களாகவும், கொலையாளிகளாகவும் வலிந்து திணிக்கப்பட்ட வன்னியர் வெறுப்பரசியலை ஜெய்பீம் திரைப்படம் கையிலெடுத்திருக்கிறது என்று கூறுகிறார். தலித்துகள் மீதான சாதிய பழிசுமத்தலான நாடக காதல் என்பதை திணித்து உருவாக்கப்பட்ட திரௌபதி படத்தை மிகச்சிறந்த படைப்பு என்று புகழ்ந்தவரும் கண்மணி குணசேகரன் தான். இதெல்லாம் எந்த வகையில் படைப்பாளிக்கான நேர்மையாகும்?

தமிழகத்தில் பிராமண இலக்கியவாதிகள் மீதான விமர்சனங்களைப் போன்று பிராமணரல்லாத சாதி இந்து இலக்கியவாதிகள் மீது பெரிதான விமர்சனப்பார்வை இருப்பதில்லை. பல ஆண்டுகளுக்கும் முன் ‘நாஜி காலத்தில் இருந்த யூதர்களைப் போலத்தான் தமிழ்நாட்டில் பிராமணர்கள் இருக்கிறோம்’ என்கிற அர்த்தத்தில எழுத்தாளர் அசோகமித்ரன் கூறியபோது எழுந்தளவுக்கு, ‘வன்னியர்கள் அப்பாவிகள்’ என்று கூறியிருக்கும் கண்மணி குணசேகரன்மீது கண்டனங்கள் எழப்போவதில்லை. ஏனெனில், குடிசைக் கொளுத்தினாலும் பிராமணரல்லாத சாதி இந்துக்கள் நல்லவர்கள் என்கிற அரசியல் இங்கே வலுப்பெற்றுள்ளதோடு, அதிகாரத்திலும் உள்ளது.

2006 அல்லது 2007 ஆம் ஆண்டென்று நினைவு. கவிதாச் சரண் இதழுக்கு வாசகனாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். திருமதி கவிதாச்சரண் அம்மா பேசினார்கள். ஒரு வாசனின் மீதான அன்பில் நலம் விசாரித்த அம்மா, என்னுடைய வசிப்பிடம் பற்றி கேட்ட போது, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் என்று கூறினேன். சட்டென கவிதாச்சரணம்மா, “கண்மணி குணசேகரன் ஊர்ப்பக்கமா நீங்க?” என்று கேட்டார்கள். “அவர் ‘ஊர்ப்பக்கம்’, நான் ‘சேரிப்பக்கம்’ அம்மா” என்றேன். திடுக்கிட்டவராக, அவர் அப்படி தெரியவில்லையே என்றார் அம்மா. நான் நான் சிரித்து விட்டேன். 2013 ஆம் ஆண்டில் கவிதாச்சரணம்மா இயற்கையடைந்துவிட்டார். இப்போது இருந்திருந்தால் அவரும் சிரித்திருப்பார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jai bhim movie controversy tamil writers criticise on writer kanmani gunasekaran castiest letter

Next Story
தமிழ் விளையாட்டு 1 : நரி…பரி…சரி..karu-kali-mgr (2)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com