scorecardresearch

ஜெய் பீம்: ‘ஒட்டுத் துணிகள் பொறுக்கி தைத்த பட்டுச்சட்டை’ எழுத்தாளர் சோ. தர்மன் எழுப்பிய புதிய சர்ச்சை

ஜெய் பீம் படத்தின் காட்சியமைப்புகள் தன்னுடைய படைப்புகளில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளை ஒத்திருப்பதாகவும் தமிழ் சினிமா என்பதே ஒட்டுத் துணிகளை பொறுக்கி தைத்த பட்டுச்சட்டைதானே என்று சோ. தர்மன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெய் பீம்: ‘ஒட்டுத் துணிகள் பொறுக்கி தைத்த பட்டுச்சட்டை’ எழுத்தாளர் சோ. தர்மன் எழுப்பிய புதிய சர்ச்சை

இயக்குனர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்த பிறகு, ஜெய் பீம் சர்ச்சை ஓய்ந்துவிட்டது என்று பார்த்தால் ஒவ்வொரு நாளும் ஒரு பரிணாமம் அடைந்து வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை அவதூறாகச் சித்தரிக்கும் வகையில், காலண்டரில் அக்னி கலசம் இடம்பெற்றதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இயக்குனர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்தாலும், ஜெய் பீம் படத்தின் சர்ச்சை முழுமையாக அடங்கவில்லை.

இந்த நிலையில்தான், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன், ஜெய் பீம் படத்தை குறிப்பிட்டு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். ஜெய் பீம் படத்தின் காட்சியமைப்புகள் தன்னுடைய படைப்புகளில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளை ஒத்திருப்பதாகவும் தமிழ் சினிமா என்பதே ஒட்டுத் துணிகளை பொறுக்கி தைத்த பட்டுச்சட்டைதானே என்று சோ. தர்மன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து எழுத்தாளர் சோ.தர்மன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “நான் 2005-ல் எழுதிய நாவல் ‘கூகை.’ அதில், தாயையும் மகனையும் நிர்வாணமாக்கி ஒரே அறையில் போலீஸ்காரர்கள் அடைக்கும் சம்பவத்தை எழுதியிருப்பேன். இன்னொரு இடத்தில் மகன் முன்னால் தாயை நிர்வாணமாக்கும் காட்சியை கண்டதும் ஏட்டையாவை வெட்டிக் கொல்லும் பாத்திரத்தை எழுதியிருப்பேன்.

அப்புறம் தாயின் கண்முண்ணே மகளை பெண்டாள முயலும் ஒருவனிடம் அந்தத் தாய் சொல்வாள்.

“ஐயா இது உங்களுக்குப் பிறந்த கொழந்தை”

“உங்க ரத்தத்தையே நீங்க குடிக்கப் போறீங்களா”

“இவ்வளவு நாளும் என்னை தின்னது காணாதா”

“இந்தாங்கய்யா என்னைய எடுத்துக்கோங்க மகள விட்ருங்க”

இவ்வளவு கொடூரத்தை நான் பதிவு செய்திருப்பேன்.

அடுத்து நானும் நரிக்குறவனும் இரவு முயல் வேட்டைக்குப் போகும்போது, குட்டி முயலைச் சுடாமல் விட்டுவிட்டுப் போவான். நான் கேட்டதுக்கு அவன் சொன்ன பதில்,

“பருவம் இல்லாதது எதையும் கொல்லக் கூடாது சாரே.. கொல்றதுக்கும் ஒரு பருவம் இருக்கு சாரே.”

இச்சம்பவத்தை என்னுடைய ‘இரவின் மரணம்’ சிறுகதையில் சொல்லியிருப்பேன்.இவற்றையெல்லாம் நான் எழுதி 15 வருஷங்கள் ஆச்சு. இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தில் இப்படியான காட்சியெல்லாம் இருக்கிறதாம். படம் இன்னும் பார்க்கவில்லை. பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் ஒட்டுத் துணிகள் பொறுக்கி தைத்த பட்டுச்சட்டைகள்தானே. வாழ்க தமிழ் சினிமா.’ என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

எழுத்தாளர் சோ. தர்மன் எழுதிய வெக்கை நாவலைத் தழுவி புனைந்ததுதான் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படம். அசுரன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. எழுத்தாளர் சோ.தர்மன் அசுரன் படத்தில் தனது நாவல் சிதைக்கப்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஜெய் பீம் திரைப்படத்தில் வட்டார வழக்கில் வசனங்களை அமைத்ததற்காக எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு படக் குழுவினர் அளித்த ரூ.50,000-ஐ திருப்பி அனுப்பினார். மேலும், ஜெய் பீம் படத்தில் தனது சமூகத்தை இழிவுபடுத்திவிட்டதாக கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Jai bhim movie writer s dharman raising new controversy