Journey Of A Civilization: Indus To Vaigai : தமிழக முதல்வர் அரசு முறை பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இந்நாள் வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியையும் சந்தித்து பேசினார். தன்னுடைய மனைவி துர்காவுடன் டெல்லி சென்ற அவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பொன்னாடை மற்றும் புத்தகம் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினார்.
அந்த புத்தகம் என்ன என்று தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் Journey Of A Civilization: Indus To Vaigai என்ற புத்தகம் தான் அது. இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் தொல்லியல் சார்பான மிக முக்கியமான சான்றுகள் கொண்டு தொகுக்கப்பட்ட புத்தகம் அது.
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த புத்தகம் அண்ணா நூற்ராண்டு நூலக அரங்கில் ரோஜா முத்தையா நூலகம் இந்நூலை வெளியிட்டது. நீதிபதி ஆர். மகாதேவன் இந்த புத்தகத்தை வெளியிட பத்திரிக்கையாளர் டோனி ஜோசப் இந்த புத்தகத்தை பெற்றுக் கொண்டார். சென்ற இடம் பலநூறு திசையெல்லாம் உன் பாதை பார்த்துவரத்தானா பணித்துவிட்டாய் என்னை என்று தமிழ் அன்னைக்கு நன்றி கூறி இந்த புத்தகம் குறித்து அன்று உரையாடினார் ஆர். பாலக்கிருஷ்ணன்.
சிந்து சமவெளி வளர்ச்சியும் அவர்களின் நகர வாழ்க்கையும் நம்மை பெரிதும் வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் ஒன்றாகவே உள்ளது. மெசடோமியா மற்றும் எகிப்து நாகரீகங்கள் வளர்ந்த அதே காலத்தில் தனித்து வளர்ந்து உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது இந்து சமவெளி. இங்கு பேசப்பட்ட மொழி, அதே காலத்தில் பேசப்பட்ட மற்ற மொழிகளிடம் இருந்து வேறுபட்டு காணப்பட்டது. அதே நேரத்தில் இங்கு உருவாகிய எழுத்துருக்களும் அதே மண்ணில் அழிந்து போனதாக நம்பப்படுகிறது. இதன் பிறகு சிந்து நதியின் போக்கில் ஏற்பட்ட மாற்றமும், பருவமழை மாற்றமும், ஆரியர்களின் படையெடுப்பும் இந்த நாகரீகம் அழிவதற்கான காரணமாக கூறப்படுகிறது. கி.மு 1900 காலகட்டத்திற்கு பிறகு ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து பாலகிருஷ்னன் தன்னுடைய இந்த நூலில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil