Advertisment

"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நானும் ஒரு சாதாரண மனிதன் தான் ” - கார்ல் மார்க்சின் மாசற்ற காவியக் காதல்

Karl Marx and his wife Jenny von Westphalen love story: கார்ல் மார்க்ஸ் தனது மனைவி ஜெனியிடம், "நம் திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் சிறிய முறையில் தேவாலயத்தில் பதிவு செய்தால் போதும்" என்று கூறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Karl Marx - Jenny love story in tamil

த.வளவன்

Advertisment

karl marx and jenny love story in tamil: உலகுக்கு புது புது சித்தாந்தங்களை தம் அறிவின் மூலம் பேசிய ஒரு பொதுவுடைமை அறிஞர். பொருளாதார ரீதியாக நிறைய கண்டுபிடிப்புகளும் கட்டுரைகளும் வெளியிட்டவர். அவர்தான் கார்ல் மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ், உலகுக்கு கம்யூனிச சித்தாந்தங்களை வெளி கொண்டுவந்தவர். அவர் எழுதிய "டாஸ் கேப்பிடல்" இன்றளவும் யாராலுமே புரிந்து கொள்ள முடியாத தத்துவ விதைகளை விதைத்த பெரும் படைப்பு என்பது யாராலும் மறுக்க முடியாது.

இப்படி அனைத்தையும் உலகுக்கு கொண்டு வந்தவருக்கு வாழ்க்கை முழுவதும் யார் உறுதுணையாக இருந்திருப்பார் என்றால் அது அவரது மனைவி ஜெனியாகத்தான் இருக்க முடியும்.

"மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ஒரு மனிதனை இப்படி ஒருவர் காதலிக்க முடியுமா என்று தெரியவில்லை. வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகள் இறக்கும் போது கூட, மார்க்ஸ் மீது எந்த கோபமும் இல்லாமல் நீங்கள் நினைப்பதை செய்யுங்கள் அதற்கு நான் பக்க பலமாக இருக்கிறேன் என்றவர் தான் ஜெனி. இது ஆணாதிக்கத்தால் நடந்ததில்லை. மார்க்ஸ் ஜெனி மீதும், ஜெனி மார்க்ஸ் மீதும் வைத்திருந்த புரிதலினால் அமைந்தது. இவர்கள் கல்யாணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டதில்லை, அவர்கள் சிறுவயதிலிருந்து நண்பர்களாகி பின் வாழ்க்கை துணைவர்களாய் நிச்சயித்து கொண்டது. இது ஒரு புரிதலால் உண்டான இருவரின் கதை.

publive-image

பால்ய வயதில் அடாவடியாக சுற்றித்திரிந்த மார்க்ஸ், ஒரு பக்கம் வீட்டின் வறுமையில் சிக்கித் தவித்துள்ளார். ஆனால் ஜெனியின் வீடோ பணக்கார குடும்பம். கார்ல் மார்க்ஸ் தன் உயர் படிப்பிற்காக படிக்க செல்லும்வரை அவருக்கு சமூகத்தின் மீது எந்த ஒரு அக்கறையும் இருந்ததில்லை. அவருக்கு இருந்த ஒரே அக்கறை ஜெனி மட்டும்தான். கல்லூரிக்கு சென்றவுடன் ஜெனிக்காக நண்பர்களுடன் காதல் பாட்டு, கவிதை, ஜெனிக்கு காதல் கடிதம் என அனைத்தையும் எழுதிவிட்டு ஜெனியின் பதில் கடிதத்திற்கு காத்திருப்பார். இப்படி போய்க்கொண்டிருந்தவர் வாழ்க்கை தான் சமூகத்தின் பக்கம் ஒரு முக்கிய கட்டத்தில் திரும்பியிருக்கிறது. இதுவரை காதலுடன் மட்டும் பயணித்த கார்ல், அதன்பின் சமுகத்தையும் தன்னுடன் சேர்த்து பயணிக்க வைத்தார்.

மார்க்ஸுக்கு படிப்பு முடிந்தது. இங்கு ஊரில் அழகான ஜெனியை திருமணம் செய்ய வரன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் ஜெனி எல்லாவற்றையும் நிராகரிக்கிறார். அதற்கு மார்க்ஸ் மட்டும் தன காரணம். மார்க்ஸை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்கிறார். ஏழை சண்டை எதுவும் இவர்கள் காதல் கதைகளில் இல்லை. ஜெனியின் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான ஒருவர் கார்ல் மார்க்ஸ். ஜெனியின் வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடி தான். ஆனால், மார்க்ஸின் வீட்டில் தான் பிரச்சனையே. மார்க்ஸின் குடும்பம் கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருந்தாலும் பூர்விகமாக யூதர்கள். அதுதான் இங்கு பிரச்சனையே, மார்க்ஸின் அம்மா "ஒரு யூதன் ஜெர்மன் பெண்ணை திருமணம் செய்வதா நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" என சொல்லிவிட்டார்.

இதையடுத்து காரல் மார்க்ஸ் ஜெனியை திருமணம் செய்ய வேண்டுமென்றால் முதலில் ஒரு வேலையம் ஒரு சின்ன சம்பாத்தியமும் வேண்டும் என நினைக்கிறார். ஆதலால், ஜெனியிடம் எனக்காக காத்திரு. நான் உன்னை வேலை கிடைத்தவுடன் அழைத்து செல்கிறேன் என்கிறார். ஜெனியும் காத்துக் கொண்டிருக்கிறார். ஏழு வருடங்கள் நகர்கின்றன. பின்னர் நண்பர்கள் உதவியுடன் பாரிஸில் வேலை கிடைக்க ஜெனியை திருமணம் செய்துகொள்கிறார், சில நிபந்தனைகளுடன். "நம் திருமணம் ஆடம்பரமாக இல்லாமல் சிறிய முறையில் தேவாலயத்தில் பதிவு செய்தால் போதும் என்று கூறுகிறார். வெறும் ஐந்து பேர் கொண்டு நடக்கிறது அவர்கள் திருமணம். பொதுவாக பெண்கள் தனக்கு திருமணம் ஆடம்பரமாக நடக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இங்கு ஜெனியோ "எனக்கு நீ கிடைத்தால் போதும், உன்னுடன் நான் வாழ்ந்தால் போதும்" என்று நினைத்திருப்பார் போல. அதற்கு சரி என்று சொல்லிவிட்டார்.

publive-image

அவர்களின் தேன்நிலவு கதைகளை கேட்டால் கேலிக்கூத்தாக தான் இருக்கும். பத்து பெரிய பெட்டிகள் நிறைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார் மார்க்ஸ். அதற்கு ஜெனியும் நாம் இருவரும் சேர்ந்தே படிப்போம் என்று கூறியுள்ளார். எத்தனை காதல் இருந்தால் இப்படி ஒரு சொல் இங்கே வந்திருக்கும். இயற்கையை ரசிக்க சென்ற மார்க்ஸ் வீட்டை பூட்ட மறந்துவிட திருடன் வீட்டில் இருக்கும் அத்தனை பணத்தையும் திருடி விடுகிறான். இந்த நிகழ்வை ஜெனியிடம் அவர் சொல்ல, ஜெனி விழுந்து விழுந்து சிரிக்கிறார். சிரித்துக்கொண்டே, " நாமும் இனி உழைக்கும் வர்க்கம் ஆகிவிட்டோம் என்கிறார். காரல் மார்க்ஸுக்கு கால வெள்ளத்தில் சமூகத்தின் மீது பற்று அதிகமாகிறது. இவர் செய்யும் வேலைகளுக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்புகள் இருக்க நாட்டை விட்டு வெளியனுப்பப்படுகிறார். உடன் மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள் என்று எந்த யோசனையும் இல்லாதவராக இருக்கிறார் மார்க்ஸ். இவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் எதுவும் சொல்லாமல் ஜெனியும் இருக்கிறார். காதலனை பார்த்து எந்த நேரத்திலும் "வீட்டை மட்டும் கவனித்தால் போதும், நீங்கள் நாட்டுக்கு ஒன்று செய்ய வேண்டாம்" என சொல்லியதே இல்லை. வறுமையினால் இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகள் இறந்திருக்கின்றனர் . சுற்றிலும் கடன். நண்பர்கள் உதவியுடன் தான் வாழ்க்கையை ஒட்டியிருக்கிறார்கள். இதுபோன்று நடக்கும்போது கூட மார்க்ஸ் எதோ ஒரு சமூக யோசனையில் தான் இருந்திருக்கிறார்.

இத்தனை துயரங்களிலும் உடன் இருந்த ஜெனி, மார்க்ஸ் இறக்கும் ஓராண்டுக்கு முன், நோயுற்று கிடக்கிறார். ஒரு அறையில் ஜெனியும், மறு அறையில் மார்க்சும். இருவரும் பார்க்கக் கூட முடியாமல் இருக்கின்றனர். ஜெனி இறந்து கல்லறையில் புதைக்கும் வரை மார்க்ஸை ஜெனியின் உடலை பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை. அவளின் நோய் தொற்றிவிடும் என அஞ்சினர். இறுதி அஞ்சலிக்கு கடிதம் எழுதி அனுப்பினார் மார்க்ஸ். காதல் கடிதங்களில் ஆரம்பித்த அவர்களின் காதல், அதே காதல் கடிதத்தோடு முடிகிறது. . அதில் "அவளைப் போல ஒரு பெண் இல்லை என்றால் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன். அவள் எனக்கு கிடைத்தது ஒரு வரம்" என்று அதில் எழுதியுள்ளார். நான்கு நாட்கள் கழித்து கல்லறையில் பூ வைத்துவிட்டு கண்ணில் நீர் வழிய கதறியிருக்கிறார். அதன் பின்னரும் சமூகத்திற்காக போராட வேண்டும் என சமூக பணிக்கு வந்திருக்கிறார் இருந்தாலும் மார்க்ஸின் நெருங்கிய நண்பரான ஹெங்கல்ஸ் கூறுகிறார்," ஜெனி இறந்த பின்பு, மார்க்ஸ் ஒரு ஆவியாக மட்டும்தான் இருக்கிறார்" என்று. ஒருவேளை தன் பால்ய வயதில் ஜெனியிடம் உரையாடிய ஷேக்ஸ்பியர் காதல் கதைகள் கேட்டுக்கொண்டிருந்திருப்பாரோ? தன்னை விட நான்கு வயது பெரியவரான ஜெனி மார்க்ஸிடம் அடிக்கடி சொல்வாராம், " நான் உன்னை குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே பார்த்து வருகிறேன் மார்க்ஸ்" என்று. மார்க்ஸ் என்ற மாமேதையை உலகறிய செய்த பெருமைக்கு அவரது சித்தாந்தங்கள் எப்படி ஒரு காரணமாக இருந்ததோ, அதேபோல ஜெனியும் ஒரு காரணமே. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்பதற்கு இவர்களின் காவியக் காதலியே ஒரு உதாரணம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment