எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர் அமிர்தம் சூர்யா தனது கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனலில் இருந்து தமிழ் நவீன இலக்கியத்தின் விமர்சகர் வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளார்.
கவிஞர் அமிர்தம் சூர்யா, சில மாதங்களுக்கு முன்பு கருமாண்டி ஜங்ஷன் என்ற யூ டியூப் சேனலைத் தொடங்கி அதில், சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையில் உள்ள சுவாரஸியமான இலக்கியத் தகவல்களை வழங்கி வருகிறார். தற்போது, அமிர்தம் சூர்யா, தனது கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனலில் இருந்து தமிழ் நவீன இலக்கியத்தின் விமர்சகர் வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளார்.
கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் வழங்கும் வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் மொத்தப் பரிசுத் தொகை ரூ.20,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 மேலும் தகுதி வாய்ந்த 10 சிறுகதைகளுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் வந்து சேரும் கடைசித் தேதி அக்டோபர் 15ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுகதைப் போட்டி முடிவுகள் டிசம்பர் 15ம் தேதி அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் வழங்கும் வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டி ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு சிறுகதைகளை அனுப்ப விரும்பும் படைப்பாளிகளுக்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டிக்கு அனுப்பும் கதைகள் இதுவரை எந்த ஊடகத்திலும் (அச்சு இதழ், இணைய இதழ், பிளாக், முகநூல்) வெளிவந்து இருக்கக் கூடாது. சிறுகதைகள் மைக்ரோசாஃப்ட் வேர்டில் லதா ஃபாண்ட்டில் டைப் செய்து சிறுகதையைத் தனி பைலாக மெயிலில் இணைத்து அனுப்ப வேண்டும். உங்கள் விருப்பப்படி வேறு ஏதாவது ஃபாண்ட்டில் டைப் செய்து அனுப்பினால், அந்தக் கதை போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சிறுகதை குறைந்தபட்சம் 1,200 வார்த்தைகள் முதல் அதிகபட்சம் 2,400 வார்த்தைகளுக்குள் அமைதல் வேண்டும். சிறுகதைகள் karumaandijunction@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். தேர்வாகும் 13 சிறுகதைகள் நூலாகத் தொகுத்து வெளியிடப்படும். மின்னஞ்சல் அனுப்பும்போது.. இந்தச் சிறுகதை என் சொந்தக் கற்பனைப் படைப்பு என்றும் எதனுடைய தழுவலோ மொழிபெயர்ப்போ அல்ல என்றும் இப்போட்டி முஇவு வரும் வரை வேறு எந்த ஊடகத்திற்கு அனுப்ப மாட்டேன் என்றும் உறுதிமொழிக் கடிதம் இணைக்க வேண்டும். உறுதி மொழிக் கடிதம் இணைக்காத படைப்பு ஏற்கப்படமாட்டாது. கடிதத்துடன் உங்கள் பெயர், முகவரி, போன், மெயில், அனைத்தும் குறிப்பிட வேண்டும். எல்லா தகவல் பரமாற்றமும் மெயில் வழி மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகரான வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் எழுத்தாளர் நாராயணி கண்ணகி, எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன், எழுத்தாளர் அமிர்தம் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வெங்கட்சாமிநாதன் நினைவுச் சிறுகதைப் போட்டி அறிவித்திருப்பது குறித்து எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவிடம் பேசினோம். அவர் கூறியதாவது: “இந்த சிறுகதைப் போட்டியை அறிவித்ததன் நோக்கம், முகநூலில் சாதாரணமாக எழுதுபவர்கள், அடுத்த கட்டத்தில் கவிஞராக மாறுவார்கள். அவர்களுடைய கவிதையை பாராட்டும்போது, அவர்கள் கவிதையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு போக வேண்டியது சிறுகதைதான். கவிதை எழுதும் அவர்களிடம் கதைகள் இருக்கும். அந்த கதைகளை எழுதுங்கள் என்று சொல்லி அவர்களை எழுத்தாளராக மாற்றுவது. முகநூலில் பொழுதுபோக்காக எழுத வருபவர்களை எழுத்தாளராக மாற்றுவதற்கான ஒரு உற்சாகமான வழி இது. ஃபேஸ்புக்கில் பதிவு என்று சொல்லி பக்கம் பக்கமாக எழுதுவதை விட்டுவிட்டு ஒரு சிறுகதை எழுதுங்கள் என்று அவர்களை இலக்கியத்தின் பக்கம் மாற்றிவிடும் முயற்சி இது. ஒரு சாதாரண மனிதனை படைப்பாளியாக மாற்றுவதற்கான ஒரு சின்ன வழி.” என்று அமிர்தம் சூர்யா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.