அசுரன் படத்தில் அபசகுன வார்த்தையுடன் பாடல் எழுதிய கவிஞர் யுகபாரதி... வெற்றி மாறன் கேள்விக்கு கூறிய பதில் என்ன?

அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு சோகப் பாடல் எழுதிய அனுபவம் குறித்து கவிஞர் யுகபாரதி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அந்த பாடல் ‘எள்ளு வய பூக்கலையே’ என்று தொடங்கியிருப்பார். ஆனால், அசுரன் படத்தில் அந்த காட்சிக்கு முதலில் இந்தப் பாடல் எழுதவில்லை. கடைசி நேரத்தில்தான் இந்த பாடல் எழுதப்பட்டது.

அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு சோகப் பாடல் எழுதிய அனுபவம் குறித்து கவிஞர் யுகபாரதி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அந்த பாடல் ‘எள்ளு வய பூக்கலையே’ என்று தொடங்கியிருப்பார். ஆனால், அசுரன் படத்தில் அந்த காட்சிக்கு முதலில் இந்தப் பாடல் எழுதவில்லை. கடைசி நேரத்தில்தான் இந்த பாடல் எழுதப்பட்டது.

author-image
WebDesk
New Update
yugabharathi vetri maaran 2

கவிஞர் யுகபாரதி, இயக்குனர் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் தனுஷ் கூட்டணி எப்போதுமே ஒரு வெற்றி கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வெற்றிப் படங்கள் அமைந்துள்ளன. அதில் அசுரன் படம் பெரிய அளவில் வசூலைக் குவித்தது மட்டுமில்லாமல் தனுஷுக்கு 2வது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. 

Advertisment

அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு சோகப் பாடல் எழுதிய அனுபவம் குறித்து கவிஞர் யுகபாரதி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அந்த பாடல் ‘எள்ளு வய பூக்கலையே’ என்று தொடங்கியிருப்பார். ஆனால், அசுரன் படத்தில் அந்த காட்சிக்கு முதலில் இந்தப் பாடல் எழுதவில்லை. கடைசி நேரத்தில்தான் இந்த பாடல் எழுதப்பட்டது  என்றும், இந்த பாடலை ஏன் ‘எள்ளு வய பூக்கலையே’ என்று தொடங்கினீர்கள் என்று வெற்றிமாறன் கேட்டதற்கு கவிஞர் யுகபாரதி கூறியதையும், எள் என்பதை அபசகுன வார்த்தையாக தமிழ்ச் சமூகமும் கம்பரும் எப்படி கருதுகிறார்கள் என்பதை ரொம்ப சுவாரசியமாக கூறியிருக்கிறார். அதை அப்படியே இங்கே தருகிறோம். 

“வெற்றிமாறனுடைய எல்லா திரைப்படங்களுக்கும் நான் பாட்டு எழுதி இருக்கிறேன். குறிப்பாக அசுரன் திரைப்படத்திற்கு எழுதும்போது ஒரு பாட்டு எழுதியிருக்கிறோம், ‘பொல்லாத பூமியிலே பொலி போடும் சாமி’ என்ற ஒரு பாட்டு இருக்கிறது. அது யூடியூபில் இருக்கிறது, படத்தில் இருக்காது. 

Advertisment
Advertisements

அந்த பாட்டுடன் தான் படம் வெளி வருவதாக இருந்தது, படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு பத்து நாளைக்கு முன்னால், படத்தின் எடிட்டிங் எல்லாம் முடித்து படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது இந்த குறிப்பிட்ட பாட்டு 'பொல்லாத பூமியிலே பொலி போடும் சாமி’ என்ற பாட்டு அவ்வளவு சிறப்பாக இல்லை. 

அது அந்த படத்தினுடைய கதாநாயகன் தனுஷுக்கு நியாயம் செய்வதாக இல்லை, அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வதாக இல்லை. அப்படி என்றால் அந்தப் பாட்டை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்கிறோம். அந்த பாட்டை எடுத்து விடலாம் என்று முடிவு செய்தால் அந்த இடத்துக்கு இன்னொரு பாட்டு வேண்டும். அந்த படத்தில் தனுஷுடைய பையன் இறந்து போய் தலை இல்லாமல் கிடப்பான். அந்த காட்சியானது, அந்த பாட்டு எடுத்து விட்ட பிறகு, மனமே ரொம்ப கனத்துப் போகிற அளவுக்கு, அந்தக் காட்சி இருக்கிறது.

நானும் வெற்றிமாறன், அவருடைய உதவியாளர்கள் எல்லோரும் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படியே ஒரு மாதிரி கண்கள் எல்லாம் கலங்குகிறது, அந்த படத்தை பலமுறை பார்த்து விட்டோம், ஆனாலும், இப்போது முதல் முறையாக பார்க்கும் போது கை கால்கள் எல்லாம் நடுக்கம் ஆகிவிட்டது. அந்தத் துக்கத்தை எதிர்கொள்ளவே முடியவில்லை. அதுவும் படத்தோடு சேர்ந்து பார்க்கும் போது ரொம்பவும் கடுமையாக இருந்தது. எனக்கு ஒரு மாதிரியாக தொந்தரவாக இருந்தது. வெற்றி நான் கிளம்புகிறேன் என்று  சொன்னேன். அதற்கு அவர் இல்லை, இந்த இடத்துக்கு பாட்டு தேவை என்று சொன்னார். இதற்கு என்ன பண்ணலாம் என்ற போது, இந்த இடத்தில் யாருடைய பார்வையில் இருந்து பாட்டு எழுத வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் நான் யோசித்து சொல்கிறேன். நீங்கள் போய் வாருங்கள் என்றார். வீட்டுக்கு வரும்போது அவர் சொன்னார் எப்படியும் இரவுக்குள் இந்த பாட்டை முடிக்க வேண்டும் என்றார்.

அந்த படத்தில் அம்மா நினைக்கிறார், எனது பையன் சாகவே இல்லை, எல்லா அம்மாவும் இறந்து போன மகனை தனது மகன் சாகவில்லை என்றுதான் நினைப்பார்கள். தன்னுடைய தலைவன் சாகவில்லை என்று நினைக்கிற தமிழினத்தை போல எல்லா அம்மாவும் தன்னுடைய மகன் சாகவில்லை என்று தான் நினைப்பார்கள், இது ஒரு குறியீடாக மனசுக்குள் நினைத்துக் கொண்ட ஒரு விஷயம். வெற்றி பாடல் வேண்டும் என்பதை சொல்லிவிட்டார், அந்த டியூனையும் கொடுத்துவிட்டார்.

டியூனை கொடுத்தவுடன் நான் ஒரு 20 நிமிடம் இருக்கும் எழுதிய  ‘எள்ளு வய பூக்களையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால உன் சிரிப்பு குத்துதடா அச்சறுந்த ராட்டினம் போல் சுத்துதடா' என்று எழுதிவிட்டேன்.

ஏனென்றால் இந்த படம் பார்த்த ஒரு கணம் இருக்கிறது இல்லையா, இதை நான் மொத்தமாக எழுதி விட்டேன் எழுதிய உடனே அனுப்பினேன். டிராக் போடுவதற்காக சைந்தவி பாடினார்கள், அதுவே ரொம்ப சிறப்பாக அமைந்து விட்டது.

பாட்டை கேட்டு விட்டு வெற்றிமாறன் சொன்னார் ‘கொட்டடியில் கோழிக்குஞ்சு கொல்லையில வாழை மரம்’ என்று இருக்கிறது. ஏன் கொட்டடியில் என்று ஆரம்பிக்காமல் எள்ளுவய பூக்கலயே என்று ஆரம்பித்தீர்கள் என்று கேட்டார்.

அவர் கேட்டதற்கு பிறகு தான் நானே யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் அந்த பாட்டு எள்ளு வயர என்று ஆரம்பிக்க வேண்டும், நெல்லு வய என்று ஆரம்பித்திருக்கலாம், ஏன் ஒரு புல்லு வய என்று கூட ஆரம்பித்திருக்கலாம் என்று யோசித்த உடனே, அப்போதுதான் அதில் தெரிகிறது எள்ளு என்கிற சொல் பற்றி நம்முடைய ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் தாவரங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தில் எள்ளை வீட்டுக்கு வெளியே காட்டில் மட்டுமே விதைக்க கூடிய ஒரு செடியாக சொல்கிறார். அது ஒரு தீட்டு செடியாக அபசகுன சொல்லாக இருக்கிறது.

கடலையில் இருந்து வருவது கடலை எண்ணெய் என்கிறோம், தேங்காயிலிருந்து வருவது தேங்காய் எண்ணெய் என்கிறோம், எள்ளில் இருந்து வருவதை எள் எண்ணெய் என்று தானே சொல்ல வேண்டும், ஆனால் ஏன் நாம் நல்லெண்ணெய் என்று சொல்கிறோம். ஏனென்றால் எள் என்பதை நாம் சாதாரண வழக்குச் சொற்களில் சொல்லக்கூடாது என்று இருக்கிறது. எள் என்பது கெட்டதற்கான சொல்லாக பயன்பாட்டில் இருக்கிறது அது ஒரு நம்பிக்கை. இதை நான் அவரிடம் சொல்லி விட்டேன்.

எள்ளு என்பது இறந்தவர்களுக்கு எள்ளு தெளிப்பது என்று சொல்வார்கள் அதனால் நான் பயன்படுத்தி விட்டேன் என்று சொன்னேன். சரி என்று சொல்லிவிட்டு அது பதிவு செய்யப்பட்டு பாடல் வெளிவந்துவிட்டது. ஆனாலும், அந்த கேள்வியால் வந்த எண்ணம் குறைவே இல்லை. திரும்ப நான் யோசித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாம் அப்படி ஒரு வார்த்தை போட்டது சரிதான். ஏனென்றால், இசைஞானி அவர்களுக்கு பாட்டு எழுதுகிற போது, ரஹ்மானுக்கு பாட்டு எழுதுகிற போது பாட்டில் முதல் சொல்லை இப்படி பயன்படுத்துவதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அரைச் சொற்களாக இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், நான் பிசாசு, செத்துப்போன என்று எல்லாம் எழுதி இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் அப்படியான வார்த்தைகளை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், ஜி.வி பிரகாஷ் அனுமதித்து விட்டார், பாட்டு வந்துவிட்டது.

இதற்குப் பிறகு யோசித்துப் பார்த்தால் கம்பராமாயணத்தில் ஒரு காட்சி வருகிறது. சீதையைப் பார்க்க ராமன் கிளம்பி வருகிறார் சீதையை திருமணம் செய்து கொண்டு போவதற்காக ஊர்வலமாக வருகிறார். அப்பொழுது அதை வர்ணிக்க கூடிய கம்பன், ‘இடமில்லை உளுந்து இட’ என்று ஒரு வரி எழுதி இருக்கிறார்.

ஆனால்,  ‘எள்ளு போட்டால் எள்ளு எடுக்க முடியவில்லை’ என்றுதானே சொல்ல வேண்டும், அது என்ன உளுந்து என்று சொல்கிறார் என்று அப்போதே நான் யோசித்து இருக்கிறேன். அதில் ரொம்ப நுட்பமாக ஒரு விஷயம் இருக்கிறது. ராமர் போவது மங்கள காரியத்திற்கு அதனால் எள் சொல்லக்கூடாது. அதனால், கம்பர் இடமில்லை உளுந்திட என்று எழுதியிருக்கிறார். சரி கம்பர் இந்த இடத்தில் இப்படி சொல்லிவிட்டார், காவியத்தின் முடிவில் ராமன் ராவணனை கொல்வார் இல்லையா அந்த இடத்தில் உண்மையிலேயே அவர் எள்ளை எழுதியிருக்கிறார். 

கம்பர் அந்த இடத்தில் ராமன் அனுப்பிய அம்பு இராவணனுடைய இதயத்தை துளைத்து உள்ளே சென்று சீதையைப் பற்றிய எண்ணம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தேடித்தேடி துளைத்து விட்டு வெளியே வந்ததாம், அது எப்படி வந்தது என்றால் ‘எள்ளு போட்டால் எள்ளு எடுக்க முடியாது’ என்ற அளவுக்கு துளைத்தது என்று சொல்லி இருப்பார்.

‘எள்ளு வய’ என்பது ஒரு சாதாரண சொல்தான். ஆனால், அந்த சாதாரண சொல்லுக்கு நம்ம ஆள் எவ்வளவு சுற்றி வந்து ஒரு அர்த்தத்தை, ஒரு உணர்வை சொல்ல முடியும் என்பது ரொம்ப முக்கியமான விஷயம்.

இன்றைக்கு ஒரு பாட்டு வெற்றியடைகிறது என்றால் நான் எப்போதுமே ஒன்று நினைப்பேன், இது நான் எழுதியதால் வெற்றி அடையவில்லை, நாங்கள் பாடியதால் வெற்றி அடையவில்லை, இந்த நடிகர்கள் நடிப்பதால் வெற்றியடையவில்லை, உங்களுடைய மனங்களில் இருக்கக்கூடிய தொன்ம எண்ணங்கள்தான் அந்த பாடல்களை வெற்றியடைய வைக்கிறது என்று நான் யோசிப்பேன். அப்படி நிறைய பாடல்களை சொல்லலாம்.” என்று கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார்.

Vetrimaaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: