தமிழ் மற்றும் தமிழரின் தொன்மையை பறைசாற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வு முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து திரைப் பாடலாசிரியர் ஏ.இரமணிகாந்தன் வடித்த கவிதை இது:
கீழடி... கீழடி... கீழடி...
தமிழர் வாழ்வின்
பேரொளி...
வாழ்வாங்கு வாழ்ந்த
பேரினம்...
வரலாறே உலகின்
பிறப்பிடம்...
ஆதியின் தோற்றமே
தமிழினம்...
ஆதாரம் காட்டிட
ஆத்திரப்பாக்கம்...
சங்க இலக்கியமே
சான்று...
சரித்திரம் போற்றிடும்
புகழ்ந்து...
பெருமைகளைக் கொண்ட
பேரினம்...
பெற்றிடவே மீண்டும்
விழிக்கணும்...
ஆய்வுகள் அள்ளி
கொடுத்திடும்...
அறிவை அகிலம் வியந்திடும்...
( கீழடி... கீழடி... கீழடி...)
சரணம் : 1
"தமிழி"யே தொல்லுலகின்
முதலெழுத்தாகும்...
தமிழரே தொல்குடியின்
முதல்வழியாகும்...
முதலெழுத்தை கீறல் வடிவாய் தமிழில் எழுதினான்...
கீழடியில் கீர்த்தி ஓங்கி தமிழன்
விளங்கினான்...
நகரிய நாகரீகம் தமிழர் வாழ்வியலன்றோ...
நாற்திசையும் நல்வணிகம் தந்தவனன்றோ...
யாதும் ஊரே யாவரும் கேளீர் தமிழர் பண்பாடு...
யாவருக்கும் சங்க இலக்கியம் வாழ்வியல் கூறு...
சிந்துவெளியும் கீழடியும் சமகாலம் பாரு...
சிந்தனையில் உயர்ந்து நிற்பது
தமிழர் மேம்பாடு...
( கீழடி...கீழடி...கீழடி...)
சரணம் : 2
மனித இனத்தின் மாண்பைச் சுமக்கும்
சங்க இலக்கியம்...
மண்பாண்ட புழக்கம் காட்டும் அறிவின் ஆரம்பம்...
அரிக்கமேடு அழகன்குளம் கொடுமணல் எல்லாம்...
ஆதி இன அடையாளத்தின்
இருப்பிடம் அன்றோ...
வைகையாத்து நாகரீகம்
கீழடியாகும்...
வாழ்வியலோ தொழிற்புரட்சியின்
பிறப்பிடமாகும்...
ஆதிச்சநல்லூர் அகழாய்வு அரங்கேற்றம்
எப்போ...
ஆளும்வர்க்கம்
செய்யும் சூழ்ச்சி தெரிந்திடும்அப்போ...
மீள்நினைவு மீட்டெடுக்கும் மேன்மைப் பாதையே...
மீண்டெழுமே தமிழராட்சி பூமி பந்திலே...
( கீழடி...கீழடி...கீழடி...)