கோவை விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம், எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில் எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா விருது வழங்குகிறது என்று அறிவித்துள்ளது.
தமிழ் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர், ‘கதை சொல்லி’, கி.ரா என்று வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் கொண்டாடப்படும் கி.ராஜநாராயணன் பெயரில் கோவை விஜயா பதிப்பகத்தின், விஜயா வாசகர் வட்டம் சார்பில், எழுத்தாளர் கண்மணி கி.ரா விருதும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருதை எழுத்தாளர் கி.ரா வழங்குகிறார். சக்தி மசாலா குழுமம் இந்த விருதுத்தொகையை வழங்குகிறது.
இந்த விருந்து வழங்கும் நிகழ்வு, வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் புதுச்சேரியில் உள்ள Q-13, லாசுப்பேட்டை அரசுக்குடியிருப்பு,புதுச்சேரி-8 என்ற எழுத்தாளர் கி.ரா.வின் இல்லத்தில் நடைபெறுகிறது.
இந்த விருது வழங்கும் விழாவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்புரையாற்றுகிறார். நடிகர் சிவக்குமார், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், முனைவர் பஞ்சாங்கம், எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம், எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரன், சக்தி மசாலா குழும நிறுவனர் சாந்தி துரைசாமி மற்றும் துரைசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர் கி.ராவும் உரையாற்றுகிறார். எழுத்தாளர் கண்மணி குணசேகரன் ஏற்புரை வழங்குகிறார். இந்த விருந்து வழங்கும் நிகழ்ச்சி ஜூம் செயலி வழியாக நடத்தப்படுகிறது.
இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன். 98 வயதிலும் சிறுகதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடைய எழுத்துப் பணிகளைப் பாராட்டி கி.ரா.வுக்கு இந்திய அரசின் இலக்கியத்துக்கான உயரிய விருதான ஞானபீடம் விருது வழங்க வேண்டும் என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
கரிசல் வட்டார இலக்கியத்தின் முன்னத்தி ஏராக தனது படைப்புலகை விரித்த கி.ராஜநாராயணன், கரிசல் வட்டார அகராதியை உருவாக்கினார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிறப்புப் பேராசிரியராக இருந்தார். தனது கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் ஆகிய நாவல்களின் மூலம் கரிசல் மக்களின் வாழ்வை இலக்கியமாக பதிவு செய்தார். கி.ரா.வுக்கு கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக 1991 இல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். மேலும், கி.ரா. நாட்டுப்புற கதைக் களஞ்சியம், தமிழ் நாடோடி கதைகள், வயது வந்தவர்களுக்கு மட்டும் நாட்டார் கதைகள் தொகுத்துள்ளார்.
கி.ரா. விருது பெறும் எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தென் ஆற்காடு மக்களின் வாழ்க்கையை இலக்கியமாக்கியவர். பத்தாம் வகுப்புக்குப்பின், ஐடிஐ படித்த இவர், விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். விருத்தாசலம் அருகே மணக்கொல்லை கிராமத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.
அஞ்சலை, நெடுஞ்சாலை, கோரை, வந்தாரங்குடி பூரணி, பொற்கலை ஆகிய நாவல்களையும் சிறுகதைகளையும் கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். தென்னாற்காடு வட்டாரத்தில் புழங்கும் நடு நாட்டு சொல் அகராதியையும் தொகுத்துள்ளர்.
எழுத்தாளர் கண்மணி குணசேகரன், 2007ம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவருடைய ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. கலைஞர் பொற்கிழி விருதும் பெற்றுள்ளார்.
கரிசல் இலக்கிய பிதாமகர் எழுத்தாளர் கி.ரா.வின் பெயரில் நடு நாட்டு கி.ரா. எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு விருது அளிக்கப்படுவது தமிழ் இலக்கிய உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.