த. வளவன், மூத்த பத்திரிகையாளர்
எட்டுத்தொகை நூல்களுள் செறிவும், இனிமையும் மிக்கது குறுந்தொகையே என்றால் அது மிகையில்லை. “புறத்தே தோன்றும் காட்சிகளைச் செய்யுட்களில் புனைந்து காட்டும் ஆற்றலினும் அகத்தே தோன்றும் கருத்துக்களை உணர்ச்சியும், மெய்ப்பாடும் புலப்பட உரைக்கும் ஆற்றல் சிறந்தது” என்று குறுந்தொகையின் சிறப்பினை சொல்லுவார் தமிழ் அறிஞர்கள். அகமனப் புரிதல்களுக்கு இடமளிக்கும் பாடல்கள் பலவற்றைக் கொண்ட குறுந்தொகையில் இருபத்தோரு பெண்பாற் புலவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் எழுதிய குறுந்தொகை பாடல்கள் மொத்தம் எழுபத்தைந்து. இப்பாடல்களைப் பெண்ணிய நோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகை அகம் சார்ந்த பாடல்களின் தொகுப்பு. இவ்வகப்பாடல்களில் செவ்விய நிலையில் காதல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. செவ்விய நிலைக் காதல் என்பது ஒரு வகையில் பெண்களுக்கு தடைப்படுத்தும் நிலையையும் தருகின்றது. மற்றொரு வகையில் அதுவே விடுதலையையும் தருவதாக உள்ளது. பெண்கள் தாங்களாகவே காதல் இன்பத்தில் ஈடுபடுதல், அல்லது ஆடவரால் வீழ்த்தப்படுதல் என்ற நிலைகளில் திருமணம் என்ற எல்லைக்கு சென்று குடும்பம், பிள்ளை, இல்லறம் என்ற பிணைப்பு நிலைக்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் காதலித்ததன் காரணமாக சில வகை உரிமைகளையும் பெண்கள் பெறத் தகுதி உடையவர்களாகின்றனர். தானே தேர்ந்துகொண்ட கணவன் அல்லது காதலன் என்ற அடிப்படையில் ஆண்களிடத்தில் அவர்கள் தனக்கு வேண்டுவனவற்றை, அல்லது தான் விரும்புவனவற்றை பெற்றுக் கொள்ளும் உரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர். இதில் கட்டுண்ட நிலை, அல்லது விடுதலை நிலை என்ற நிலைப்பாட்டில் ஏதேனும் ஒன்றைப் பெண்கள் தங்களுக்கு ஏற்ற நிலையில் அமைத்துக்கொள்ளத் தக்கவர்களாக மாறுகின்றனர்.
விரும்பி மணந்த காதலன் தன்னுடன் உடன் உறைந்து, தன்னையும் வளப்படுத்தி அவனையும் வளப்படுத்தி வாழும் வாழ்க்கை பெற்ற தலைவியர் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற்றவர்களாகின்றனர். இவ்வுரிமை நிலையைப் பெறாதவர்கள் துன்ப வாழ்க்கை வாழ வேண்டியவர்களாகின்றனர்.
செவ்விய நிலைக் காதல் என்பது உரிமைகள் பலவற்றை வழங்குவது என்று பெண்ணியவாதிகள் கருத்துரைத்துள்ளனர்.
“தகர்க்க இயலாத சமுதாயச் சுமைகளை உடைக்கும் தன்மை வல்லமை பெற்றது செவ்விய காதல். பெண்கள் சமத்துவ வாழ்வைப் பெறவும், விடுதலை மிக்க வாழ்வைப் பெறவும், அதிகாரத்தைப் பெறவும் காதல் வழி வகுப்பதாக பெண்ணியத் தத்துவவாதிகளும், சமுதாயவியல் அறிஞர்களும் கருதுகிறார்கள். இதுவே உண்மை.
செவ்விய நிலைக் காதல் என்பது பெண்களுக்கு அவர்களின் உரிமைகளை பெற குறிக்கத்தக்க புள்ளியாகும். இந்நிலையானது பெண்களைப் பேரிழப்பு, நரகம், தியாகம் போன்றவற்றில் இருந்து விடுவிக்கிறது என்கிறார் அமெரிக்க பெண்ணியவாதியும், நாவலாசிரியருமான சுலமித் பையர்ஸ்டோன். இவ்வகையில் செவ்விய காதல் என்பது உரிமையின் வாசல் எனப் பெண்ணியவாதிகள் கருதுவதை ஏற்கமுடிகின்றது.
“காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே குழந்தைகளை பெறுதல், வீடு, தோட்டங்களைப் பேணுதல் என்பதை மட்டும் கருதியது அன்று. அது உயிரியல் தேவைகளை மட்டும் நிறைவேற்றுவது அன்று. அது மனிதர்களுக்கான எதிர்காலத்தை வடிவமைப்பது. மனிதனின் மூளை ஆற்றலை வெளிப்படுத்துவது. அது. பெண்கள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்வதற்கான ஒரு தேடலும் ஆகும்” என்று செவ்விய நிலைக் காதலைப் பெண்களுக்கான சுயதேடலாகக் காண்கின்றனர் இலக்கியவாதிகள்.
இக்கருத்துகளின் அடிப்படையில் குறுந்தொகை பெண்பாற் புலவர்களின் பாடல்களை நோக்கும் போது, உரிமை பெறும் இன்பத்தையும் காணமுடிகிறது. உரிமை மறுக்கப்படும் துன்பத்தையும் காணமுடிகிறது என்பதே உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”