Advertisment

காலத்தின் கண்ணாடி இலக்கியம்

Dr.Kamala Selvaraj : படிக்க படிக்க, சுவைக்க சுவைக்க மனதிற்கு இனிமையும் வாழ்விற்கு மேன்மையும் நல்குவது இலக்கியம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
literature, mirror, Dr.Kamala selvaraj, இலக்கியம், கண்ணாடி, டாக்டர் கமலா செல்வராஜ்

literature, mirror, Dr.Kamala selvaraj, இலக்கியம், கண்ணாடி, டாக்டர் கமலா செல்வராஜ்

கமல செல்வராஜ்

Advertisment

படிக்க படிக்க, சுவைக்க சுவைக்க மனதிற்கு இனிமையும் வாழ்விற்கு மேன்மையும் நல்குவது இலக்கியம்.

இலக்கியத்தின் பாடுபொருள் சமகாலத்ததாக இருந்தாலும், அது முக்காலத்திற்கும் பொருந்தி, வையத்தார் அனைவருக்கும் பொது நிலையினதாக இருந்தால், இவ்வையகம் உள்ளளவும் நிலைத்திருக்கும்; உயிர் பெற்றிருக்கும். அதனால்தான் வள்ளுவமும் சிலம்பும், அகமும் புறமும் இன்றும் நீட்சியும் எழுச்சியும் பெற்றுத் திகழ்கின்றன.

இவ்வையகம் உருப்பெற்று மனித இனம் என்று தோன்றியதோ, அன்றே இலக்கியத்தின் பாடுபொருளும் தோன்றியது என்றே கூறலாம்.

கதைகள் வாயிலாகவும், கவிதைகள் மூலமாகவும் மனிதனின் வாழ்வியல் கூறுகளைப் படைப்பாளியின் அறிவுத் திறத்தால் ஏற்படும் கற்பனைத் நயத்தால், இன்பமுற எடுத்தியம்பி, மனிதனின் வாழ்வியல் கூறுகளை நெறிப்படுத்திக் காட்டுவதே இலக்கியத்தின் தலையாயக் கடமை.

அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் மனித குலத்தின் அடிப்படைக் கூறுகள். அறச்செயல்களைச் செய்து, அதன் வாயிலாக நேர்மையான முறையில் செல்வம் ஈட்டி, அச்செல்வத்தைக் கொண்டு நியாயமான வழியில் இன்பம் துய்த்து, அதன் மூலம் வாழ்வில் அமைதியும் சாந்தியும் பெற்று மறுவுலக வாழ்வைச் சென்றடைவதே மனித பிறவியின் நோக்கமாகும்.

இவ்வளவு பொருள் பொதிந்த ஒரு வாழ்வியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் பொய்யாமொழிப் புலவன் எப்படி புனைந்திருக்கிறான் பாருங்கள்!

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.”

காலங்கள் எத்தனை கடந்தாலும் யுகங்கள் எத்தனை மாறி மாறி வந்தாலும் இந்த வாழ்வியல் உண்மைக்கு ஏதேனும் மாற்றம் உண்டாகுமா? இல்லை… இல்லை… இல்லவேயில்லை… என்பதுதானே விடையாக இருக்கும்.

அக்காலம் முதல் இக்காலம் வரையுள்ள இலக்கியங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பது காதலும் வீரமும் என்னும் இருவேறு குணாதிசயங்கள்.

மனிதனுக்கு இயல்பாக ஏற்படுகின்ற உணர்ச்சியும் செயல்களும் அவற்றின் கருக்களாக உள்ளன. வாழ்க்கையானது ஆண், பெண் இருபாலருக்கும் இடையே உருவாகும் காதலையும் அதன் அடிப்படையில் ஏற்படுத்தும் குடும்ப உறவுகளையும், அவ்வுறவுகளைப் பேணுகின்ற வீரச் செயல்களையும் புகழக் கூடியவை. காதல் தொடர்பான ஒழுக்கங்கள் அக இலக்கியங்களாக மலர்ந்தன. வீரம், புகழ் ஆகியவை புற இலக்கியங்கள் எனப்பட்டன. இவ்விரண்டும் சங்க இலக்கியம் என்றப் பேழையை அலங்கரிக்கின்றன.

சங்ககால மக்கள் வாழ்ந்து வந்த வாழ்வைத் தெளிவாகப் புலப்படுத்தும் காலக்கண்ணாடி சங்க இலக்கியங்களாகும். உள்ளதை உள்ளவாறு உரைத்தல் சங்க இலக்கியங்களின் தலையாயச் சிறப்பாகும். இனம், குலம் என வேற்றுமை இல்லாமல், கவிதைத் தெய்வத்தின் முன்னர் சங்ககாலக் கவிஞர்கள் யாவரும் சமமாக விளங்கி தங்களின் இதயங்களையே, காணிக்கையாக்கியுள்ளனர். அதோடு மட்டும் நின்று விடாமல் இப்பூவுலகிலுள்ள மக்கள் அனைவரும் ஒரு தாயின் மக்களே என்னும் உயரிய சிந்தையையும், ஒவ்வொரு மக்களின் வாழ்வும் வளமும் அவரவர் செயலுக்குள்ளே அடங்கும் என்பதையும் இப்படிப் புலப்படுத்துகிறார்கள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன…”

என்னும் உயரியச் சிந்தனையை எக்காலத்திலும், எவராலும் சிதைத்து விட முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

நம் நாட்டு குடும்ப அமைப்பு முறையில் பெண்களைப் பொறுத்தவரை பிறந்த வீடு, புகுந்த வீடு என்ற இரண்டு உறவு முறைகளோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது வழக்கம். தான் பிறந்த வீடாகிய பெற்றோர் வீட்டில் எவ்வளவுதான் செல்வச் செழிப்பாக வாழ்ந்தாலும், திருமணம் முடிந்து, கணவனின் வீடாகிய புகுந்த வீட்டிற்குச் செல்லும் போது அங்கிருக்கும் சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்வது பெண்களின் இயல்பு. அங்கே, அவர்கள் செல்வச் செழிப்பிற்குக் கொடுக்கும் மரியாதையை விட தன்னைக் கொண்டவனிடம் உள்ள அன்பிற்கும் காதலுக்கும்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால், தங்களின் சுகபோக வாழ்க்கையைத் துறந்து எளிமையிலும் இனிமை காணவே முற்படுகின்றனர்.

ஒரு தலைவி தான் தேர்ந்தெடுத்த தலைவனோடு இல்வாழ்க்கை அமைத்துக் கொள்ளத் தயாராகுகிறாள். தான் பிறந்த வீடோ செல்வமிகுதியால் இன்பப்பெருக்குற்று வாழும் வீடு. ஆனால், அவள் இனி வாழப்போகும் தலைவன் இல்லமோ குடிப்பதற்கு நல்லத் தண்ணீர்கூட இல்லாதது. இதனை தனது தலைவியிடம் ஓர் எச்சரிக்கையாக எடுத்தியம்புகிறாள் தோழி, அதற்கு அந்தத் தலைவி எப்படி பதிலுரைக்கிறாள் பாருங்கள்;

“அன்னாய், வாழி வேண்டு அன்ன நம் படப்பைத்

தேன் மயங்கு பாலினும் இனிய- அவர் நாட்டு

உவலை கூவற் கீழ

மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே”

தோழீ! நீ கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனால், அவர் ஊரில் உள்ள நீரில் இலையும் தழையும் விழுந்து அழுகி கிடக்கின்றன. மான் போன்ற விலங்குகள் உண்டு எஞ்சிய நீர் உள்ளது. அச்சிறுப் பள்ளத்துள் இருக்கும் அந்நீர் நம் தோட்டத்தில் விளைந்த தேனுடன் கலந்த பலினும் இனியது என்று கூறுகிறார்கள்.

இலக்கியங்கள் படிக்க படிக்க இன்பம் தருவன என்பது மட்டுமின்றி, எவ்வளவு பெரிய படிப்பினையைப் படிப்போருக்குப் பகிர்ந்து கொடுக்கின்றன?

ஆகா! இப்படியொரு குடும்ப வாழ்க்கை அமைந்து விட்டால் அந்த வாழ்க்கையை எத்தனை ஆண்டுகள் அனுபவித்தால் ஆசை தீரும். ஆண்டுகள் என்ன, ஜென்மங்கள் எத்தனை எடுத்தாலும்கூட இன்னும் இவரேதான் எனக்குக் கணவராக அமைய வேண்டும் என்ற அவா துணைவிக்கும், இவளேதான் மனைவியாக வர வேண்டும் என்ற மோகம் கணவனுக்கும் எழும்புவது இயல்புதானே? ஆம் அந்த இயல்பை இப்படியொரு புலவர் புலப்படுத்துகிறார்,

“இம்மை மாறி மறுமை ஆயினும்,

நீ ஆகியர் எம் கணவனை

யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.”

எவ்வளவுதான் பசியும் பட்டினியும் வந்தாலும் துயரமும் துன்பமும் நேர்ந்தாலும் மனம் ஒத்த இல்லற வாழ்க்கை அமைந்து விட்டால், இல்லாமையும் இயலாமையும் பஞ்சு போல் பறந்து போகும், இன்பமே எங்கும் பெருக்கெடுக்கும் என்பதற்கு இதுவன்றோ சான்று.

காதல் வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் இப்படி இனிக்கவும் சுவைக்கவும் விருந்தாகின்றன. இதுபோல் வீர வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை அறிவதும் அவசியமன்றோ?

ஒரு நாடு என்றால் அங்கே கலகமும் போரும் ஏற்படுவது இயற்கையானதன்றோ? அப்படிக் கலகமும் போரும் ஏற்படும்போது அந்நாட்டுக் காளையர்கள் போர்முனைப் புகுவதும், வெற்றிவாகைச் சூடுவதும், அதற்காக அவர்களுக்கு நடுகல் நாட்டு, நினைவிடம் அமைத்ததும் இலக்கியங்களில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளன.

“ஈன்றுப் புறந்தருதல் என்தலைக் கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

ஒளிறுவாள் அருஞ்சமம் உருக்கிக்

களிறு எறிந்து பெயர்த்தல் காளைக்குக் கடனே.”

என்னும் கூற்றிலிருந்து பெற்றெடுத்த தாய்தந்தையரிலிருந்து நாடாளும் மன்னன் வரைக்கும் என்னென்ன கடைமையாற்ற வேண்டும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

இதில் கொல்லனின் கடமையாக போருக்கு ஏற்ற வேல் வடித்துக் கொடுப்பதும், காளையாகிய இளைஞனுக்கு, ஒளிவீசும் வாள் மோதும் போர்களத்தில் சென்று வீரப்போர் புரிந்து பகைவர் யானைப் படையை வென்று, வெற்றி வீரனாகத் திரும்புவது என்றும் உரைக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து குழந்தைப் பிறக்கும் போதே அவன் வீரனாக மாற வேண்டும் என்பது நிர்ணையம் செய்யப்படுகிறது.

அப்படி அவன் போர்க் களத்தில் நின்றுப் போரை எதிர்க்கொண்டு வெற்றிவாகைச் சூடவோ, விழுப்புண்ணேற்று வீரமரணமடையவோ செய்தால், அவனின் நினைவாக நடுகல் நட்டு வழிபடும் முறையும் நடைமுறையில் இருந்துள்ளது.

இதோடு மட்டும் நின்று விடாமல், ஒரு தாய் கருவுற்றால், அக்கரு இறந்து பிறந்தாலோ, சதைப்பிண்டமாகப் பிறந்தாலோ அதை அப்படியே எடுத்துப் புதைத்து விடாமல் உடம்பில் கத்தியால் குத்திக்கீறி ஒரு வீரத்தழும்பை உருவாக்கி அதன் பிறகே புதைக்கின்றனர். இதனை,

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளின் தப்பார்.”

என்பதின் மூலம் உணரலாம். காதலும் வீரமும் மக்களின் இரு விழிகள் போன்றே இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.

பண்பட்ட இல்லற வாழ்க்கைக்கு அதிகம் பெருமை சேர்ப்பது விருந்தோம்பல் என்னும் சீரிய பண்பாகும். அதனால்தான் சிலம்பில் இளங்கோவடிகள் மூலப்பொருள்களில் ஒன்றாக விருந்தோம்பலை எடுத்தியம்புகிறார்.

கோவலன் பிரிவுற்றபோது, அவன் பிரிவைவிட தன் இல்லம் நாடி வரும் விருந்தினரை சீரும் சிறப்புமாக ஓம்ப முடியவில்லையே என்ற ஆதங்கம்தான் கண்ணகியை அதிக துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விருந்தோம்பல் நிகழ்வை வெறும் ஒரு சடங்காக மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்குள் ஒரு குடும்ப நல்லுறவு பலப்படும் விந்தையுள்ளது.

ஏதோ ஒரு காரணத்திற்காக தலைவனும் தலைவியும் தங்களுக்குள் ஊடல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் மாறிமாறி பேசிக்கொள்ளாமல் இருக்கின்றனர். அந்த நேரத்தில்தான், அவ்வீட்டில் விருந்தினர்கள் வருகின்றார்கள். உடனே விருந்தினர் முன் தலைவனும் தலைவியும் மனம் விட்டுப்பேசி விருந்தினர்களை மாறிமாறி உபசரிக்கின்றனர். இதனால் இருவருக்கும் இடையே இருந்த நீண்டநாள் ஊடல் நீங்கி இணக்கம் ஏற்படுகிறது.

பின்னர் வீட்டில் இருந்த விருந்தினர் உண்டு எஞ்சிய மிச்சம் மீதியை தலைவனும் தலைவியும் மாறிமாறி உண்டு மகிழ்ந்தனர் என்பதை இலக்கியம் இப்படி இயம்புகிறது,

“விருந்துண் டெஞ்சிய மிச்சல் பெருந்தகை

நின்னோடு உண்டலும் புரைவது”

இதே நிலை இன்றும் எத்தனையோ குடும்பங்களில் தொடர்வதினை நம்மால் கண்டுணர முடியும்.

எனவே இலக்கியங்கள் விருந்தோம்பலை ஒரு சடங்குச் சம்பிரதாயமாகக் கொள்ளாமல் ஓர் உறவு பாலமாக விளங்குவது வியப்பானதாகும்.

இவ்வுலகம் தோன்றியவுடன் எப்படி மனித இனம் தோன்றியதோ, அதுபோல் மனித இனம் தோன்றிய அன்றிலிருந்து சில நம்பிக்கைகளும் தோன்றியுள்ளன. அவ்வாறு தோன்றிய நம்பிக்கைகள் மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த நம்பிக்கைகள் இலக்கியங்களிலும் பிரதிபலிக்கின்றன.

அவ்வாறு பிரதிபலிக்கும் நம்பிக்கைகளில் கண்ணேறு கழித்தல் என்பது ஒரு முக்கியமான நம்பிக்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிறருடைய பார்வையால் ஏற்படுகின்ற துன்பத்தையே கண்ணேறு என்றுக் கூறுவர். அதிகமாக இது குழந்தைகளைத்தான் பாதிக்கின்றது.

மனிதர்களில் சிலரின் கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உண்டு. ஏனவே, அத்தகையோரின் கண்பட்டால் குழந்தைகளுக்கு நோய்நொடிகள் வருமென்று நம்புகின்றனர். அதனால்தான் “கல்லடிபட்டாலும் கண்ணடிப் படக்கூடாது” என்னும் பழமொழி மக்களிடையே கூறப்பட்டு வருகிறது. பிறரின் பார்வையால் குழந்தைகளுக்கு ஏற்பட்டத் தீங்கை மாற்றுவதற்குச் சில வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குழந்தைகளுக்குக் கண்ணேறு கழிப்பதற்கு வெண்சிறு கடுகைப் பயன்படுத்தி உள்ளனர்.

அதுபோலவே வீடுகளுக்குக் கண்ணேறு படாமல் இருப்பதற்கு, வீட்டுக் கதவு நிலைகளில் நெய்யும் வெண்சிறு கடுகும் பூசி வைக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். இதனை தமிழ் இலக்கியங்கள்

“நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரைத்து” என்றும்

“ஐயவி அப்பிய நெய்அனி நெடு நிலை” என்றும் குறிப்பிடுகின்றன.

கண்ணேறு கழிக்கும் முறையை திருஷ்டி கழித்தல் என்றும் கூறுவர். இப்படி இலக்கியங்கள் கூறும் கண்ணேறு கழித்தல் நிகழ்வுகளை இன்றும் நாம் நடைமுறை வாழ்க்கையில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

தாய்மார்கள், குழந்தைகளைக் கொண்டு வெளியே செல்லும்போது குழந்தைகளின் கன்னத்தில் கறுப்பு பொட்டு வைப்பது, புது வீடு கட்டும் போது பூசணிக்காய் மற்றும் மண்கலத்தில் மனித உருவமிட்டு கரும்புள்ளியிடுவது, விளை நிலங்களில் வைகோல், துணி முதலியவற்றால் உருவம் செய்து கரும்புள்ளியிடுவது போன்றவை அனைத்தும் இன்றும் நடைமுறை வாழ்வியலில் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதை அங்கிங்கென்றில்லாமல் எங்கும் காணமுடிகிறது.

இப்படி இலக்கியங்களைப் பொறுத்தவரை அவை குடும்ப வாழ்க்கையாயினும், காதல், வீரம் போன்ற பண்புணர்வாயினும், கணவன், மனைவி அன்பு வாழ்வியல் முறையாயினும், நம்பிக்கைகளாயினும் அனைத்தும் காலத்தின் கண்ணாடியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை படிப்போர் அனைவராலும் எள்ளளவும் ஐயமின்றி உணர்ந்து கொள்ள இயலும் என்பதே நிஜம்.

முனைவர் கமல. செல்வராஜ், அருமனை.

(பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com )

Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment