scorecardresearch

தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் பங்காற்றிய கவிதாசரண் இதழ் ஆசிரியர் மரணம்; முதல்வர், எழுத்தாளர்கள் இரங்கல்

“தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் பங்காற்றிய கவிதாசரண் இதழின் ஆசிரியரும்; கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அரும்பாடுபட்டு அதன் உண்மை வடிவில் மீண்டும் வெளிக்கொண்டு வந்தவரும்; தலைசிறந்த தலித்தியச் சிந்தனையாளருமான ஐயா கவிதாசரண் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

little magazine editor Kavithaasaran passed away, Kavithaasaran passed away, cm mk stalin and writers tributes to Kavithaasaran, கவிதாசரண் இதழ் ஆசிரியர் மரணம், கவிதாசரண் மறைவுக்கு முதல்வர் இரங்கல், கவிதாசரண் மறைவுக்கு எழுத்தாளர்கள் இரங்கல், Kavithaasaran, Tamil little magazine Kavithaasaran

தமிழ் சிற்றிதழ்களில் முக்கியமான இதழாக வெளிவந்து தமிழ் அறிவுத் தளத்திலும் தீவிர வாசகர்களின் மத்தியிளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கவிதாசரண் இதழின் ஆசிரியர் கவிதாசரண் உடல்நலக் குறைவால் நேற்று (நவம்பர் 28) திருச்சியில் காலமானார். அவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எழுத்தாளர்கள் அ.மார்க்ஸ், ஆர்.அபிலாஷ், மற்றும் வாசகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் இலக்கியச் சூழலில் சிற்றிதழ்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தமிழ் சிற்றிதழ்கள் வாசகர்கள் மத்தியில், இலக்கியம், அரசியல், சமூகம் குறித்து ஒரு விமர்சன பார்வையை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், தமிழ் தீவிர இலக்கியம், அறிவுத் தளத்தில் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற இதழ் கவிதாசரண். இதழின் பெயராலேயே அறியப்பட்டவர் கவிதாசரண்.

தமிழ்நாடு அரசியலில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்திவரும் கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை கவிதாசரணும் அவருடைய துணைவியார் திருமதி கவிதாசரணும் தமிழில் மொழிபெயர்த்து முழுமையாக பதிப்பித்து வெளியிட்டனர். பெரியாரியம், கம்யூனிஸம், தலித்தியம் தொடர்பாக கவிதாசரணில் வெளியான கட்டுரைகள் இன்றும் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் நினைவுகூரப்படுகிறது.

கவிதாசரண் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் பங்காற்றிய கவிதாசரண் இதழின் ஆசிரியரும்; கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அரும்பாடுபட்டு அதன் உண்மை வடிவில் மீண்டும் வெளிக்கொண்டு வந்தவரும்; தலைசிறந்த தலித்தியச் சிந்தனையாளருமான ஐயா கவிதாசரண் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் அ.மார்க்ஸ், கவிதாசரண் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அ.மார்க்ஸ் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது: “மதிப்பிற்குரிய பெரியவர், எழுத்தாளர், இதழ் ஆசிரியர் கவிதாசரண் அவர்களுக்கு அஞ்சலிகள்…..

கவிதாசரண் அவர்களின் மரணச் செய்தி நேற்றிரவு அறிந்தேன். ஒரு காலகட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருக்கின்றனர். நான் அவரைச் சந்தித்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகின்றன. அவரின் பிரிக்க இயலாத் துணையான அவரது மனைவி திருமதி கவிதாசரண் மறைந்த பிறகு அவர் சில காலத்திற்குப் பின் திருச்சி சென்றுவிட்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக வந்து கொண்டிருந்த அவரது மாத இதழான கவிதாசரணும் நின்று போய் ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன.

ஆமாம். அவரது இதழ் பெயர் கவிதாசரண். அவர் பெயர் திரு கவிதாசரண். அவரது மனைவி திருமதி கவிதாசரண். அவர் அப்படித்தான் சொல்லிக் கொள்வார். அவரது இயற்பெயர், குலம், கோத்திரம், சாதி இவை யாருக்கும் தெரியாது.

ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான இதழ்களில் ஒன்றாக வந்த கவிதாசரண் இதழ் குறித்த ஆய்வு யாரும் செய்ததாகத் தெரியவில்லை. நினைவிலிருந்து மேலோட்டமாகச் சொல்வதென்றால் அதை இரு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதற்பாதியில் அது ஒரு சாதாரண இதழ். எந்தக் குறிப்பிட்ட முக்கிய பங்களிப்புகளையும் செய்ததாக அதைச் சொல்ல இயலாது. ஆனால் சோவியத் வீழ்ச்சிக்குப் பின் உலக அளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டதை அறிவோம்.
பெருங்கதையாடல்களுக்கு இனி காலமில்லை எனச் சொல்லிக் மொண்டிருந்த காலம் அது. தலித் இயக்கம் முதலான அடையாள அரசியல்கள் மேலெழுந்த காலம். நிறப்பிரிகை அந்தக் கால மாற்றத்தின் அடையாளமாக வெளிப்பட்ட ஒன்று. நிறப்பிரிகை நிற்கத்தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் கவிதாசரண் பெரிய மாற்றத்தைக் கண்டது. தனது பழைய அடையாளத்தைக் கைவிட்டுப் புதிய வரவேற்கத்தக்க அடையாளங்களுடன் அது வெளிப்போந்தது. முதலில் சிறிய அளவில் வந்து பின் அகன்ற வடிவில் வந்த காலத்தில் எனது கட்டுரைகள் நிறைய அதில் இடம் பெற்றன. இந்திய அளவில் தலித் எழுச்சியின் அடையாளமாக வந்த ”போபால் பிரகனம்” குறித்த என் விரிவான கட்டுரையும், நான் மொழியாக்கிய அதன் தமிழ் வடிவமும் அதில்தான் முதலில் வெளிவந்தது. (பின் அது குறு நூலாகவும் வெளிவந்தது.) அயோத்திதாசர் குறித்த என் விமர்சன நோக்கிலான முக்கிய கட்டுரை ஒன்றும் அதில்தான் வெளி வந்தது.
கவிதாசரண் இதழை இப்படிக் காலவாரியாகப் பிரிப்பதை அவர் ஒத்துக் கொண்டதில்லை.

எல்லாவற்றிலும் அவர் ஒரு தனித்துவமான கருத்தைக் கொண்டிருப்பார். ஒருமுறை என் கட்டுரை ஒன்றை வெளியிட்டு அது குறித்த விமர்சனம் ஒன்றையும் கூடவே வெளியிட்டிருந்தார். அந்த விமர்சனத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. என் மறுப்பை அவர் அடுத்த இதழில் வெளியிட்டிருந்தார் என நினைவு.

அவரது சாதி போன்ற அடையாளங்கள், அவரது இயற்பெயர் எல்லாம் யாருக்கும் தெரியாது. அவரது வாழ்வின் ஒரு முக்கிய அடையாளமாக இருந்த பத்திரிக்கையின் பெயர் ‘கவிதாசரண்’. அவரது பெயர் ’திரு கவிதாசரண்’. அவரது மனைவின் பெயர் ‘திருமதி கவிதாசரண்’ என மு.வி.நந்தினி பதிவு செய்த நேர்காணலில் குறிப்பிடுவார்.

இந்திய வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய ஒரு ஆகப் பெரிய கண்டுபிடிப்பு சிந்துவெளி ஆய்வு மற்றும் அதனுடன் இணைந்த திராவிட மொழிகளின் தனித்துவம் குறித்த கண்டுபிடிப்பு. அதனுடைய இன்னொரு பக்கம் சமஸ்கிருதம் இந்தியாவின் அடையாளம் இல்லை என்பது. இன்றளவும் சங்கிகளால் சகிக்க இயலாத அறிவியல் கண்டுபிடிப்பு அது. அதனூடாகப் பெரிய அளவில் அரசியல் பயன் அடைந்தவர்கள் நம் திராவிட இயக்கத்தினர்தான். ஆனால் அவர்கள் யாரும் அன்றுவரை கால்டுவெல் எழுதிய திராவிடமொழிகளின் பொதுத்தன்மை குறித்த ஆய்வை முழுமைப்படுத்தித் தமிழில் வெளியிட யாரும் முனையவில்லை. அதை மொழியாக்கி வெளியிட்ட மகத்தான சாதனையை – தனி ஒருமனிதனாக, ஆம் தனி ஒரு மனிதனாக நின்று தகுதியானவர்களின் உதவியோடு அதை வெளியிட்டது அவரது வாழ்வின் உச்சபட்சச் சாதனை. அவரே சொல்லியுள்ளதுபோல சென்னையில் இருந்த தன் வீட்டை அடகு வைத்து அதை வெளியிட்டார். இப்போதுபோல பி.ஓ.டி முறையில் அச்சிடாமல் அதிக அளவில் அச்சிடப்பட்ட அந்த நூல் அவர் எதிர்பார்த்ததுபோல விற்பனையாகவில்லை. நண்பர்கள் பலருக்கும், நான் உட்பட, அதை நன்கொடையாகத்தான் தந்தார்.

அவருக்கு எல்லாமாக இருந்த அவரது மனைவி இறந்தபின் அவருக்கு வாழ்வில் பெரிய அளவில் ஆர்வமில்லாமல் போயிற்று. பத்திரிகையும் நின்றுபோனது. திருச்சியில் அவரது பூர்வீக வீடு ஒன்று இருந்தது. அங்கு இடம் மாறினார். அவரது மனைவி இறந்தபோது சென்னையில் அவரது வீட்டிற்கு நானும் அருள் எழிலனும் சென்றது நினைவுக்கு வருகிறது.

என்னுடைய இரண்டாவது மகள் சென்னையில் ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்தபோது எப்படியோ பழக்கமாகி அவரும், அவரது துணைவியாரும் அவளை அடிக்கடி வந்து சந்திப்பது, வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஏதோ ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது அங்கு அப்போது படித்துக் கொண்டிருந்த என் மகள் அவருக்குப் பழக்கம். அவர் மாமிச உணவு சாப்பிடாதவர் என்பதால் என் மகளை அவரும் அவரது மனைவியும் அசைவ ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவள் விரும்பியதை வாங்கித் தருவார் என அவள் ஒருமுறை என்னிடம் சொன்னதைக் கண்களில் நீர் கசிய நினைத்துப் பார்க்கிறேன். அன்னாருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிதாசரண் மறைவுக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர் சுகுணா திவாகர் எழுதியுள்ள அஞ்சலி குறிப்பில் கூறியிருப்பதாவது: “பெரியார் குறித்த என்னுடைய/ முதல் விரிவான கட்டுரை ‘பெரியார் ஒரு பன்முக வாசிப்பு’ வெளியானது ‘கவிதாசரண்’ இதழில். அப்போதைய “தீம்தரிகிட’ இதழில் சமீபத்தில் படித்த முக்கியமான கட்டுரையாக ஞாநி அக்கட்டுரையைக் குறிப்பிட்டிருந்தார். சிறுபத்திரிகையொன்றில் வெளியான என் முதல் கட்டுரையும் அதுவே. பிறகு பெரியார் குறித்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு என் முதல் விரிவான புத்தகம் வெளியானது. என் எழுத்துகளுக்கான தொடக்கப்புள்ளியை உருவாக்கித்தந்த தோழர் கவிதாசரண் மறைந்துவிட்டார்.

வயதான காலத்திலும் சென்னை திருவொற்றியூரில் இருந்தபடி அவர் தொடர்ந்து இயங்கிவந்தார். இடைவெளிகளுடன் வெளியான கவிதாசரண் பல உரையாடல்களை எழுப்பியது. ஓரளவு தொடர்ச்சியாக கவிதாசரணில் எழுதிவந்தேன். காலச்சுவடின் பார்ப்பனியத்துக்கு எதிராக அப்போது இயங்கிவந்த இதழ்கள் கவிதாசரணும் கேப்பியாரும்.

எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, புத்தமித்திரன், கௌதம சக்திவேல், பாரதி வசந்தன், புதிய மாதவி எனப் பலரும் எழுதினர். கவிதாசரணும் தனக்கே உரிய தனித்துவ நடையுடன் விரிவான கட்டுரைகளை எழுதினார். பல்வேறு முக்கியமான விவாதங்களுக்குக் கவிதாசரண் களம் அமைத்துக்கொடுத்தது. கோ.கேசவனை மறுத்து எஸ்.வி.ஆர் எழுதிய கட்டுரை, அயோத்திதாசருக்கும் பெரியாருக்கும் இடையிலான வித்தியாசங்கள் குறித்த அ.மார்க்சின் கட்டுரை, அருந்ததியர் நோக்கிலிருந்து பௌத்தத்தை அணுகும், அயோத்திதாசரை விமர்சிக்கும் புத்தமித்தரனின் விரிவான நேர்காணல், ஜெயமோகனின் எழுத்துத்திருட்டை அம்பலப்படுத்தி பொ.வேல்சாமி எழுதிய கட்டுரை ஆகியவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன. பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்திரிக்கும் முயற்சிகளுக்கு எதிராக கவிதாசரண் செயற்பட்டது. ஈழ விடுதலைக்காகத் தன்னையே இழந்த முத்துக்குமாரின் கவிதைகளை ‘கவிதாசரண்’ வெளியிட்டது.

இலக்கியத்தையும் அரசியலையும் இணைக்கும் பாலமாக, தலித்தியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகியவற்றை முன்வைத்து இயங்கிய கவிதாசரண் இதழும் தோழர் கவிதாசரணும் வரலாற்றில் நிலைப்பார்கள். புகழ்வணக்கங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் அபிலாஷ், மறைந்த கவிதாசரண் உடனான நினைவுகளைக் குறிப்பிட்டு அஞ்சலி தெரிவித்துள்ளார். “நான் என் பதின்வயதில் சென்னைக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தேன். என்னுடன் தக்கலை மன்றத்தின் நண்பர்களும். என்னுடைய முதல் சென்னை பயணம் (நியாயமாக அவர்களுடைய கையைப் பற்றி நானும் என்றே எழுத வேண்டும்..). ஒன்றுமே புரியாமல் கண்கள் விரிய விரிய உட்கார்ந்திருந்தேன். அப்போது ஒருவர் வந்து கவிதாசரண் இதழ்களை என் கையில் தந்து “படிச்சிட்டு முடிந்தால் பேசுங்க” என்றார். நான் அப்போதிருந்த நிலைமையில் யார் கிடைத்தாலும் என் இலக்கிய கேள்விகளை தொடுக்காமல் விட மாட்டேன். சற்று நேரத்திலே அவருடைய பொறுமை, அக்கறை, பதில்கள் எனக்குப் பிடித்துப் போயின. ஊருக்குத் திரும்பிய பின்னரும் அந்த மனிதர் என் மனத்திலேயே இருந்தார். சிறுபத்திரிகை உலகம் குறித்த என் மனப்பதிவுகளை உருவாக்கியதில் இவ்வாறு கவிதாசரணுக்கும் ஒரு இடமுண்டு. என் “ரசிகன்” நாவலில் நான் படைத்த சிறுபத்திரிகை பாத்திரங்கள் இவரைப் போன்றோரின் சாயலில் உருவானவர்களே. கவிதாசரணுக்கு அஞ்சலி!” என்று எழுத்தாளர் ஆர். அபிலாஷ் அஞ்சலி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Little magazine editor kavithaasaran passed away cm mk stalin and writers tributes