எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி ஐகோர்ட் தீர்ப்பு

கண்மாய் போன்ற நீர் நிலைகளை ஏலம் விடும் விவகாரம் தொடர்பான ஒரு பொதுநல வழக்கில், உயர் நீதிமன்றம் எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்துள்ளது.

By: September 20, 2020, 9:41:15 PM

கண்மாய், ஏரி போன்ற நீர் நிலைகளை ஏலம் விடும் விவகாரத்தில், பொதுமக்களுக்கு உள்ள மீன் பிடிக்கும் உரிமை தொடர்பான ஒரு பொதுநல வழக்கில், உயர் நீதிமன்றம் எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்துள்ளது.

எழுத்தாளர் சோ.தர்மன் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். இவருடைய கூகை நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. சூல், தூர்வை, பதிமூனாவது மையவாடி ஆகிய 3 நாவல்களையும் ஈரம், சோகவனம், அன்பின் சிப்பி, நீர்ப்பழி, வனக்குமாரன் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார்.

எழுத்தாளர் சோ.தர்மன் சமீப காலமாக ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவுகளை எழுதி வருகிறார். அவருடைய சில பதிவுகள் வாசகர்கள் மத்தியில் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான லஜபதிராய் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், போடி அருகே அம்மாபட்டி கிராமத்தில் உள்ள போடி மீனாட்சி அம்மன் கண்மாயில் மீன் பிடிக்க ஏலம் எடுத்தது குறித்தும் நீர் நிலையில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு உள்ள மீன் பிடிக்கும் உரிமை மற்றும் கண்மாய் தண்ணீர் பயன்படுத்துவது குறித்தும் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி தீர்ப்பளித்துள்ளார். அதில், கண்மாய் போன்ற நீர் நிலைகளை ஏலம் விடும் நடைமுறைகளை மாற்றுங்கள் நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை உறுதிப்படுத்துங்கள்‌ என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், சாகித்திய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, எழுத்தாளர் சோ.தர்மன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தனது பதிவை உயர் நீதிமன்ற நீதிபதி அப்படியே மேற்கோள் காட்டி தீர்ப்பளித்துள்ளதாகவும் அதைக் குறிப்பிட்டு வழக்கறிஞர்கள் தனக்கு வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


எழுத்தாளர் சோ.தர்மன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து குறிப்பிடுகையில், “இன்று காலையிலேயே இரண்டு மூன்று வக்கீல்களிட மிருந்து ஃபோன் அழைப்புக்கள்.வாழ்த்து தெரிவித்தார்கள். ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அதாவது மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்கிற நீதியரசர் என்னுடைய முகநூல் பதிவை மேற்கோள் காட்டி ஒரு தீர்ப்பு வழங்கியிருப்பதாகச் சொல்லி தீர்ப்பின் நகலை எனக்கு அனுப்பினார்கள்.

பதினோரு பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில் என்முகநூல் பதிவை அப்படியே எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.அதோடு இல்லாமல் அரசுக்கு சில ஆலோசனைகளை‌ வழங்குகிறார்கள்.

“கண்மாய் போன்ற நீர் நிலைகளை ஏலம் விடும் நடைமுறைகளை மாற்றுங்கள் நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை உறுதிப்படுத்துங்கள்‌ என்று அறிவுறுத்துகிறார்கள்.சாகித்திய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் பதிவை பாருங்கள் என்று எடுத்துக் காட்டுகிறார்கள்.
சாதாரணமான ஒரு முகநூல் பதிவு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்று இதைப் பின்பற்றும்படி அரசின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கிறது.ஒரு உயர்நீதிமன்ற தீர்ப்பு என்பது‌ இந்திய அரசின் ஆவணம். காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும்.பல்வேறு சட்டநிபுணர்கள் வழக்கறிஞர்களால் வாசிக்கப்படும்.
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ஒரு படைப்பாளி என்ற முறையில் புளகாங்கிதமடைகிறேன்.என்னுடைய முகநூல் நண்பர்கள் சார்பாகவும் தமிழ்நாட்டின் அனைத்து படைப்பாளிகளின் சார்பாகவும் உயர்நீதிமன்ற நீதியரசர் மதிப்பிற்குரிய ஐயா.ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு நீர்நிலைகளில் நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டி ஏலம் விடும் நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.

பதிவு

நேற்றுஉச்சி மதியம் .சுட்டெரிக்கும் வெய்யில்.கண்மாய்க் கரை மரத்தடியில் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன்.அந்த கண்மாயின் குத்தகைதாரர் என்னை மட்டுமே தூண்டில் போட அனுமதித்திருப்பதால் நான் மட்டுமே எப்போதும் தனித்திருப்பேன்.சில நேரம் பயமாகக் கூட இருக்கும்.இந்த தனிமை தவத்திற்காகவே நான் விரும்பி போய் தூண்டில் போடுகிறேன்.

திடீரென்று ஆளரவம் கேட்கவும் ஏறிட்டுப் பார்த்தால் நேராக என் தலைக்கு மேல் கரையில் திடகாத்திரமான ஒரு ஆறடி மனுஷர்.கையில் நீண்ட கம்பு.கழுத்தில் தொங்கும் நீண்ட துண்டு.மிகவும் பவ்யமாக வணக்கம் வைத்து பணிந்து கும்பிட்டார்.தூண்டிலை வாகரையில் ஊன்றி விட்டு கரையேறினேன்.

“ஐயா என் பேர் காளியப்பக்கோனார்.கிடை மாடுகள் மேய்ப்பவர்கள் ”
என்று சொல்லி விட்டு தூரத்தில் மேயும் மாடுகளைக் காட்டினார்.
“சரிய்யா இப்ப உங்களுக்கு என்ன வேணும்”

“இந்த மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க நீங்க அனுமதிக்கணும் ஐயா”என்றார்.
அவர் இப்படிக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம்.அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன்.அவர் சொன்னார்.

“ஐயா நாங்க கமுதியிலிருந்து வர்ரோம்.அப்பிடியே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் வரைப் போய் திரும்ப ஊர் போக ஆறு மாசமாகும்.எல்லாக் கண்மாய்களையும் அரசு குத்தகைக்கு விட்ருச்சு.குத்தகைதாரர்கள் மாடுகளை தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை.எங்களை அடித்து விரட்டுகிறார்கள்.மாடுகளை கற்களால் எறிந்து விரட்டுகிறார்கள்”
என்று அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. இந்த குத்தகைதாரர் மிகவும் நல்லவர் தாராளமாக தண்ணீர் காட்டுங்கள் என்று சொன்னவுடன் கரையிலிருந்த படியே ஒரு விசில் கொடுத்தார். எல்லா மாடுகளும் எங்களைச் பார்த்து வேகமாக வந்தன. கூடவே இன்னொருவரும் வந்தார். மொத்தம் 270மாடுகள்.காளை பசு கன்றுக்குட்டிகள். ஆனந்தமாக தண்ணீர் குடித்து நீச்சலும் அடித்தன. பல் வேறு தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் கோனார். சம்சாரிகளின் பம்புசெட் கிணறுகளில் வாய்க்காலில் மாடுகள் தண்ணீர் குடிப்பதை இதுவரை எந்த சம்சாரியும் தடுத்ததில்லை என்றார். பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் இல்லை என்றவர் குளங்களில் கண்மாய்களில் குடிப்பதுமாதிரி வாய்க்காலில் குடிப்பது நிறைவாக இருக்காது என்றார்.

நிறையக் கண்மாய்களில் பறவைகளை மீன்பிடிக்க விடாமல் கூடுகட்ட விடாமல் குத்தகைதாரர்கள் வெடிவெடித்து விரட்டுகிறார்கள் என்று அவர் சொன்ன போது நான் மௌனித்துப் போனேன். அரசு கண்மாய்களை குத்தகை என்ற பேரில் பாக்டரிகளாக மாற்றி விட்டது. லாபநோக்கில் வியாபாரியாக செயல்படுகிறார்கள் குத்தகைதாரர்கள்.
ஏற்கனவே வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, கனிமவளத்துறை போன்றவற்றால் கண்காணிப்பு என்ற பேரில் ஊர் மக்களுக்கும் கண்மாய்க்கு மான உறவை நாசப்படுத்தி விட்டது அரசு. இப்போது குத்தகைதாரர்கள் பறவைகளுக்கும் கால் நடைகளுக்குமான தொடர்பை துண்டித்து விட்டார்கள். அப்படியானால் இந்தக் கண்மாய்களை ஏரிகளை ஊருணிகளை தெப்பங்களை நீராவிகளை நம் முன்னோர்கள் யாருக்காக உருவாக்கினார்கள்.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மாடுகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் ஒரு குறுநாவல் எழுதப் போகிறேன்.

சைபீரியாவிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பறந்து வந்து தமிழ்நாட்டுக்கு வருகிற ஒரு கொக்கை இங்கே கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய விடாமலும் மீன் பிடித்து பசியாற விடாமலும் நாம் விரட்டினால் அது நம்மைப்பற்றி என்ன நினைக்கும்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்று உலகுக்கே பொதுமறை சொன்ன கனியன் பூங்குன்றன் வாழ்ந்த பூமியா இது?”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்”என்றாரே வள்ளலார் அவர் காலடிபட்ட மண்ணா இது?”காக்கை குருவி எங்கள் ஜாதி”என்றானே எட்டயபுரத்து மகாகவி பாரதி அவர் வாழ்ந்த பூமியா இது?

என்று நினைக்குமா இல்லையா. பட்சி தோஷமும் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காத வாயில்லா ஜீவன்களின் வயிற்றெரிச்சலும் இந்த ஆட்சியாளர்களை சுட்டெரிக்கும்.

தயவு செய்து கண்மாய்களை குத்தகைக்கு விட்டு கம்பெனியாக்குவதை நிறுத்துங்கள்.கண்மாய்களும் நீர் நிலைகளும் ஒரு நாட்டின் இரத்த நாளங்கள் என்பதை பகுத்தறிவு உங்களுக்கு சொல்லவில்லையா. அப்படியானால் நீங்கள் பேசுகின்ற பகுத்தறிவுக்கு என்ன அர்த்தம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு எழுத்தாளரின் ஃபேஸ்புக் பதிவு உயர் நீதிமன்றத் தீர்ப்பில் இடம் பெறுவது என்பது அந்த எழுத்தாளனுக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக கருதப்படுகிறது.

இதே போல, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு பணியில் இருந்தபோது எழுத்தாளர்களின் வரிகளையும் சினிமாவில் இடம்பெற்ற தத்துவப் பாடல்களையும் மேற்கோள் காட்டி திருப்புமுனை தீர்ப்புகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Literature News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madras high court mentioned its order writer so dharman facebook status

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X