“என் தொண்டைக்குள் எப்படி சோறு இறங்கும்?”: காசா குழந்தைகளுக்காக குரல்கொடுத்த எழுத்தாளர்; ட்ரோல் செய்தவர்களுக்கு சி.பி.எம் பதிலடி!

மலையாள எழுத்தாளர் லீலாவதி, தனது 98-வது பிறந்தநாளை ஆரவாரமில்லாமல் கொண்டாட முடிவெடுத்தார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.

மலையாள எழுத்தாளர் லீலாவதி, தனது 98-வது பிறந்தநாளை ஆரவாரமில்லாமல் கொண்டாட முடிவெடுத்தார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Leelavathy Malayalam writer 2

‘காசாவின் குழந்தைகளைப் பார்க்கும்போது, என் தொண்டைக்குள் எப்படி சோறு இறங்கும்?’ என்று பிரபல மலையாள எழுத்தாளர் லீலாவதி தனது 98-வது பிறந்தநாளில் நிலைப்பாட்டை அறிவித்தார். இது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.

பிரபல மலையாள எழுத்தாளரும் விமர்சகருமான எம். லீலாவதி, காசாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது 98-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்ததற்கு சமூக வலைத்தளங்களில் வந்த கேலி, கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

செவ்வாய்க்கிழமை தனது 98-வது பிறந்தநாளைக் கொண்டாடிய லீலாவதி, காசாவுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது பிறந்தநாளை ஆரவாரமில்லாமல் கொண்டாட முடிவெடுத்தார்.

“காசாவின் குழந்தைகளைப் பார்க்கும்போது, என் தொண்டைக்குள் எப்படி சோறு இறங்கும்?” என்று அவர் எழுதியிருந்தார்.

இந்த கருத்து, சமூக வலைத்தளங்களில் கடுமையான கேலியை சந்தித்தது. “டீச்சர், உங்களுக்கு சோறு போதும். மாண்டி (யேமனி உணவு) தொண்டைக்குள் இறங்குதான்னு பாருங்க. அப்போ, உங்க வயசான காலத்துல சந்தோஷமா இருப்பீங்க” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.

Advertisment
Advertisements

இந்த கேலிகளைக் கண்டு சற்றும் கலங்காத, முன்னாள் கல்லூரிப் பேராசிரியரான லீலாவதி, “உலகில் உள்ள எல்லா குழந்தைகளும் எனக்கு சமம். நான் அவர்களை ஒரு தாயின் கண்கொண்டு பார்க்கிறேன். இந்த எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் நான் பயப்படவில்லை. அவர்களுடன் எனக்கு எந்தவித பகையும் இல்லை. குழந்தைகளுக்கு சாதி, மதம் அல்லது நிறம் இல்லை. அவர்கள் பசியோடு இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்களின் பெற்றோர் யார் என்று நான் பார்க்கவில்லை” என்று கூறினார்.

கேரளாவின் அரசியல் மற்றும் கலாச்சார உலகம் பேராசிரியருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், தொழில்துறை அமைச்சருமான பி. ராஜீவ், “லீலாவதி டீச்சரை சைபர் தாக்குதல் செய்ய சிலர் முற்பட்டது கவலைக்குரிய விஷயம். இதுபோன்றவர்கள் (கேலி செய்தவர்கள்) உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட கேரள மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய மாட்டார்கள். மேலும், சமூகத்தை பின்னோக்கி இழுக்க முயற்சி செய்கிறார்கள். நான் காசா மற்றும் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்” என்றார்.

எழுத்தாளர் சி. ராதாகிருஷ்ணன், “உலகில் பசியால் வாடும் குழந்தைகளைப் பற்றிப் பேசுவதில் என்ன தவறு? ஒருவர் அவரது கருத்தை ஏற்கவில்லை என்றால், வசைபாடுவது சரியான வழி அல்ல” என்று கூறினார்.

மலையாள இலக்கிய விமர்சனத்தில் 'அன்னையின் குரல்' என்று அழைக்கப்படும் லீலாவதி, 1940-களில் கவிஞர் ஜி. சங்கர குருப்பை விமர்சித்த பிரபல விமர்சகர் குட்டி கிருஷ்ண மாரரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியதன் மூலம் தனது விமர்சன வாழ்க்கையைத் தொடங்கினார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற லீலாவதி, 1952-ல் பாலக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு மகாராஜா கல்லூரியில் பணியாற்றினார். 1983-ல், தலசேரி அரசு ப்ரென்னன் கல்லூரியின் முதல்வராகப் ஓய்வு பெற்றார்.

மலையாள இலக்கிய விமர்சனத்தில் ஒரு பெண் குரலாக, அவர் ஒரு முன்னோடியாக அறியப்படுகிறார். ஜி. சங்கர குருப், சங்கம்பழா, வயலோப்பிள்ளி, என்.வி. கிருஷ்ண வாரியர் மற்றும் இடசேரி போன்ற மலையாள இலக்கிய ஜாம்பவான்களின் படைப்புகள் குறித்த அவரது விமர்சனப் பகுப்பாய்வுகள், பல படைப்புகளை மீண்டும் வாசிக்க வழி வகுத்ததுடன், பெண்ணிய கண்ணோட்டத்தையும் அளித்தன.

இலக்கியம் மற்றும் கல்விக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக 2008-ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும், சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது மற்றும் எழுத்தாச்சன் புரஸ்காரம் போன்ற குறிப்பிடத்தக்க இலக்கிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு, தனது சுயசரிதையான 'த்வனி பிரயாணம்' என்பதை வெளியிட்டார்.

Literature

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: