‘பேய்ச்சி’ தமிழ் நாவலுக்கு மலேசியாவில் தடை: எழுத்தாளர்கள் கண்டனம்

Malaysia government bans Tamil novel ‘Peichi’ : எழுத்தாளர் ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை மலேசிய உள்துறை அமைச்சகம் தடை செய்வதாக அறிவித்தது

எழுத்தாளர் ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை மலேசிய உள்துறை அமைச்சகம் தடை செய்வதாக அறிவித்தது. இந்நாவல், ஆபாசமானது, ஒழுக்கக்கேடை ஆதரிக்கிறது என்ற காரணத்தினால் அந்நாட்டு அமைச்சகம் தடை செய்திருக்கிறது.

 

 

இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை – அதன் முழுமையால் மதிப்பீடு செய்ய வேண்டும். மொழியும் சித்தரிப்பும்தான் புனைவுக்கு வலுவையும் நம்பகத்தையும் வழங்குகின்றன. எனில், தனது கதைக்குத் தேவையெனக் கருதி நாவலாசிரியர் பயன்படுத்தியுள்ள சில சொற்களையும், சித்தரிப்புகளையும் அவற்றின் சூழமைவுக்குள் பொருத்திவைத்துப் பார்க்காமல் தனியே துண்டித்துப் பார்த்து அந்நாவல் ஆபாசமானது, ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிறது என்று ஒருதலைப்பட்சமாக தீர்ப்பிட்டு தடை செய்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. குறிப்பிட்ட சொற்களோ சித்தரிப்போ நாவலின் நோக்கத்திற்கு இழையாமல் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கும்பட்சத்திலும்கூட அதை விமர்சித்துக் கடப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

நிலைநிறுத்தப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் உலகியல் கண்ணோட்டங்களையும் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குவது இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றாக இருப்பதை மலேசிய அரசு கவனத்தில் கொண்டிருந்தால் இத்தடையுத்தரவை பிறப்பித்திருக்காது என தமுஎகச கருதுகிறது. இத்தடையின் தன்மைக்கான விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் அபராதமானது, கலை இலக்கிய ஆக்கவாதிகளின் சுதந்திரமான சிந்தனையையும் கற்பனாசக்தியையும் கட்டுப்படுத்தி சுயதணிக்கைக்குள் வீழ்த்துவதோடு மட்டுமன்றி வாசகர்களின் கருத்தறியும் உரிமையையும் பறிக்கிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதும் வரையறைக்கு உட்பட்டதுதான் என்கிற வாதம் அந்த வரையறையை எவ்வாறு யார் உருவாக்குவது என்பதோடு தொடர்புடையது. ஜனநாயக வழிமுறைகளின் ஊடான வரையறை என்பது நிச்சயமாக இத்தகு தடையாக இருக்கமுடியாது என்பதால் பேய்ச்சி நாவலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக்கொள்ள வேண்டுமென மலேசிய அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.  Gay is Ok! A Christian Perspective என்ற நூலின் மீதான தடைக்கும் இது பொருந்தும்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Malaysia government bans tamil novel peichi m navins peichi book ban

Next Story
ஒரு வட்டத்திற்குள் அடங்காத ஆளுமை: தொ.ப.வுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com