சல்மா
எனது நல்ல நாட்கள் எப்போதும்
உன்னிடமிருந்து தான் துவங்கும்
ஒவ்வொரு வருடமும்
என் பிறந்த நாளுக்கு
உன்னை காண வருவேன்
எப்போதும் என்னோடு பயணிக்க மறுக்கும்
என் பதின் பருவத்து மகன்
முரண்டு பிடிக்காமல்
உன்னை காண வருவான்
முதல் முறை
யார் இவர் என கேட்டவனிடம்
தனது நீண்ட வழித்தடங்களில்
ஒடுங்கி
கிடந்தவர்களையும் தன்னோடு
அழைத்துகொண்டவர் என்று சொன்னேன்
ஒவ்வொரு முறையும்
என்ன படிக்கிறாய் எனக்கேட்டு
நல்லா படி என அவனுக்கான வாழ்த்துகளை
சொல்வாய்
உன் விழிகளில் பதுங்கியிருக்கும்
எங்களுக்கான நேசத்தின் புதையலை அவிழ்த்து
எங்களிடம் கையளிப்பாய்
உன் புன்னகையூரும் இதழ்களுக்கு
பின்னிருப்பது வெற்று வார்த்தையல்ல
உனது பிரத்யேகமான நேசத்தோடு
கைகுலுக்காத தொண்டர்கள் யாருமில்லை..
திரும்பும் வழியில்
எப்போபாரு இதே கேள்வி
''சரியான கிழவன்''
என்று சொல்லி பெருமையாய் சிரிப்பான்
மகன்
பெரும் கர்வத்தில் தெறிக்கும்
வார்த்தைகள் அவை
ஆதிக்கத்தை எதிர்க்கும் உன் குரல்
எங்களை ஆதிக்கம் செய்வது
இப்படித்தான்
உன் குரல் ஒலிக்காத செய்திகள்
இன்று
மாபெரும் வெற்றிடத்தை அடைகாக்கின்றன
பனிச்சருகென உதிர்ந்து கொண்டிருக்கிறது
காலத்தின் கண்ணிகள்
இந்த வருடமும் என் பிறந்த நாளுக்கு
உன்னை தேடி வந்தோம்
என்ன படிக்கிறாய்
எனும் கேள்வியை எதிர்கொள்ளாத
மகனின் கண்களில் நீர் கோர்த்திருக்க
உன் மௌனத்தின் வாதையை
கடந்து வர இயலாத துயரத்தோடு
நாங்கள் வெளியேறினோம்..
எங்களுக்கு உள்ளேயும்
வெளியேயும் இருள் கனத்துக்கொண்டிருந்தது
உன் குரல் கேட்டு
சரியான கிழவன் என்று இனி யாரை சொல்லி களிப்பான்?
உன் குரலுக்கான தேடலோடு
எங்களது வாகனம் இருளுக்குள்பயணிக்கிறது
கரகரத்த குரலுக்கென காத்திருப்பு விரைவில் முடியும் எனும் நம்பிக்கையோடு.
தொண்ணூற்று அய்ந்தை நூறாக மாற்றட்டும்
உன் மனபலம்.
(கவிஞர் சல்மா, தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் இவர் எழுதிய கவிதை, நாவல்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 2001 முதல் 2006 வரையில் பொன்னம்பட்டி பஞ்சாயத்து தலைவராக பணியாற்றியுள்ளார். சமூக நல வாரியம் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.)