ஜனனி நாகராஜன்
கதைகள் என்றாலே அனைவரின் ஆர்வத்தை தூண்டும் என்பது இயல்பானது. கதைகளின் மூலமாகத்தான் பண்டைய காலத்து வரலாற்று விவரங்கள் இன்றளவும் தக்கவைக்கப்பட்டது என்று சொன்னால் மிகையாகாது. இப்படி முக்கியத்துவம் நிறைந்த கதை சொல்லும் விதத்தை, நாம் வாழும் ஊரிலே பயன்படுத்துவது மிக சாமர்த்தியமான ஒன்று என்பதை புரிந்துகொண்டு ‘நம் வீடு நம் ஊர் நம் கதை’, தங்களின் பயணத்தை 2013 இல் தொடங்கி தற்போது சென்னையின் முக்கியமான அடையாளமாக மாறியிருக்கிறார்கள்.
திருபுரசுந்தரி செவ்வேள், தனது நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் கட்டிடக்கலை படிப்பை இந்தியா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பயின்று தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். ‘ஸ்டுடியோ கான்க்ளேவ்’ (கட்டிடக்கலை ஆலோசனை) மற்றும் ‘நம் வீடு நம் ஊர் நம் கதை’ ஆகிய அமைப்புகளை தொடங்குவதில் முயற்சிகள் மேற்கொண்டப் பின்பு தான், தனக்கு கதைசொல்லல், பாரம்பரியம், வரலாறு மற்றும் கல்வி ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதை உணர்ந்தார்.
‘நம் வீடு நம் ஊர் நம் கதை’ என்ற முயற்சி தொடங்கியதிலிருந்து, திருபுரசுந்தரி தனது தளத்திற்காக கதைகள், கண்காட்சிகள், சமூகப் பிரச்சினைகள், பாரம்பரியம், தனிப்பட்ட/சமூக வரலாறு போன்றவற்றைப்பற்றி வெளிஉலகிற்கு கற்பிப்பதற்காக பயிலரங்குகளை நடத்துகிறார்.

இந்த அமைப்பின் நோக்கத்தைப் பற்றி கேட்ட பொழுது:
“ஒரு நகரம் என்பது அங்கு வசிக்கும் மக்கள், இடங்கள் மற்றும் தருணங்களின் கூட்டு நினைவகம் ஆகும். நாம் எப்போதும் பாரம்பரியம் என்று கேட்டாலே மிகப்பெரிய ஆடம்பரமான இடத்தை மட்டும் தான் கற்பனையில் தொடர்புப்படுத்திக்கொள்வோம்; ஆனால் பிற வகையான வீடுகள் மற்றும் இடங்களும் பாரம்பரியத்தில் சேரும். அப்படிப்பட்ட வரலாற்றை ஆவணப்படுத்துவது மற்றும் வரைபடமாக்குவது மூலமாக தான் ஒரு நகரத்தின் மகத்துவத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இதுவே எங்களின் ஒன்பது வருட பணியின் முக்கிய நோக்கமும் கருப்பொருள் ஆகும்.
இந்த அமைப்பை உருவாக்கியதால், நம் சமூகத்தில் வாழும் மக்களின் கலைஆர்வத்தை தெரிந்துகொள்ள முடிகிறது; மேலும் இதை பகிருவதால் மெட்ராஸ் மக்களின் திறமைகளையும், மெட்ராஸின் மகத்துவத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கிறது என்று நம்புகிறோம்.”
வருடம்தோறும் நவம்பர் மாதம் நடைபெறும் ‘பாரம்பரிய வாரத்தை’ முன்னீட்டு எதிர்கால மற்றும் இளைய தலைமுறையினர்களுக்கு பாரம்பரியத்தை பற்றியும், சமூக மற்றும் சுற்றுப்புற ஒழுக்கத்தை கற்பிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்; இதைத்தொடர்ந்து 2021-லும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணத்தினால், இந்தமுறை சமூகவலைத்தளங்களில் நடைபெற்றது.

நவம்பர் 19இலிருந்து 25வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ‘இன்ஸ்டாகிராம் லைவ்’ மூலமாக ஆறு சிறப்பு விருந்தினர்களை வைத்து ஆறு தலைப்புகளில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நவம்பர் 19 அன்று, ஆவணப்பட தயாரிப்பாளர் ஷிகா குமாரி, ‘சென்னைக்கு புலம்பெயர்ந்தோர்’ என்ற தலைப்பில் தனது அனுபவங்களையும், புலம்பெயர்ந்தோர்களை சுற்றியுள்ள சிக்கல்களை பற்றியும் கலந்துரையாடினார்.
மேலும், நவம்பர் 20 அன்று பத்திரிகையாளர், எழுத்தாளர், பாரம்பரிய ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலரான சுதா உமாசங்கர், ‘மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் கதை’ என்ற தலைப்பிலும்; நவம்பர் 21 அன்று மூத்த புகைப்படக் கலைஞர், சென்னை தினசரி புகைப்படங்களின் பதிவராக ராமசாமி நல்லபெருமாள், ‘புகைப்படங்கள் மூலம் மெட்ராஸை ஆவணப்படுத்துதல்’ என்ற தலைப்பிலும்; நவம்பர் 22 அன்று போஸ்டஸ்ரரோசரின் ஆக்கபூர்வமான தொழிலதிபரான பீ வீ, ‘தபால் பெட்டிகளின் மந்திரம்’ என்ற தலைப்பிலும்; நவம்பர் 23 ஆம் தேதி , 2006 முதல் பார்கர் பயிற்சிக்கும் பிரபுமணியின் ‘பார்கர் மூலம் நகரத்தை ஆராய்தல்’ மற்றும் நவம்பர் 25 ஆம் தேதி கௌஷிக் ஸ்ரீனிவாசின் ‘தமிழில் கட்டிடக்கலையை ஆராய்தல்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பாரம்பரிய வாரத்தைப்பற்றி திருபுரசுந்தரி செவ்வேள் கூறியதாவது:
“பாரம்பரிய வாரத்தின் நோக்கமே, மக்களுக்கு பாரம்பரியத்தை பற்றியும் அதைச் சுற்றியுள்ள விஷயங்களையும், ஆழமாகப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைத்துக்கொடுப்பதுத்தான்; .நகரத்தை நாம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும், அதுதான் இன்று நமக்குத் தேவை. சமூகப் பிரச்சினைகள் மற்றும் பாரம்பரியம் குறித்த கதைகள், கண்காட்சிகள், பயிலரங்குகள் போன்றவற்றைத் தொகுத்து வழங்கும் தளமாக இருப்பதால், ‘நம் வீடு நம் ஊர் நம் கதை’ உலக பாரம்பரிய வாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு பாரம்பரியம் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறது.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”