சென்னையில் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், மக்கள் புத்தகங்களை வாங்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தகங்களை சர்வதேச அங்கீகாரத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சி மட்டுமே என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை நந்தனம் ஓஎம்சிஏ மைதானத்தில், சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சுமார் 30 நாடுகள் பங்கேற்ற நிலையில் வெளிநாட்டு மொழியில் வெளியான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.6 கோடி இந்த புத்தக கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியின் முதல் நாளில், அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், "தமிழ்நாட்டில் சர்வதேச புத்தக கண்காட்சி முதல்முறையாக தொடங்கியுள்ளது. 3 நாட்கள் நடக்க உள்ள கண்காட்சியில், 30க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பதிப்பகத்தினர் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு அரங்கிற்கு முன்பும் எந்த நாடு என்பதை குறிக்கும் வகையில் கொடியும், நாட்டின் பெயரும் எழுதப்பட்டிருக்கும். அதேபோல் அந்த நாட்டில் என்ன புத்தகம் பிரபலமாக இருக்கிறதோ, அதனை அரங்கில் வைத்துள்ளோம்.
சர்வதேச புத்தக கண்காட்சி என்பது புத்தக விற்பனைக்கானது அல்ல. பபாசி அமைப்பு சார்பாக 45க்கும் மேலான ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடக்கிறது. ஆனால் இது, புத்தக விற்பனை அல்லாமல், ஒவ்வொரு நாட்டிலும் பிரபலமான புத்தகத்தை அறிமுகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட முயற்சி மட்டுமே.
நமது தமிழ் மொழியில் இருந்து குறைந்தது 30 புத்தகங்களை மொழி பெயர்த்து விற்பனை செய்ய முயற்சிக்கிறோம். அதேபோல் வெளிநாட்டில் இருந்து 50 புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க முயற்சிக்கிறோம்.
இங்கு பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு மாலை நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிகழ்வில் இலக்கியம் சார்ந்த புத்தகங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது", என்று கூறியுள்ளார்.