அடுத்த படைப்புக் குறித்து மனம் திறந்தார் பெருமாள் முருகன்!

சர்ச்சையை விட படைப்பினால் பிரபலம் ஆகியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

தமிழ் வட்டார நாவலின் முன்னோடி எழுத்தாளராக திகழும் பெருமாள் முருகன் குறித்து அனைவருக்கும் தெரியும். இவரின் அடுத்த படைப்பு என்ன? என்பது தான் இவரின் ரசிகர்களுக்கு தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் வகையில், பெருமாள் முருகன் தனது அடுத்த படைப்பு குறித்து மனம் திறந்துள்ளார்.

இவர் எழுதி பதிப்பித்த ‘மாதொருபாகன்’ நாவல் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த நாவல், திருச்செங்கோடு மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகப் பல்வேறு வரலாற்றறிஞர்களும், அமைப்புகளும் கடுமையான எதிர்புகளை தெரிவித்திருந்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பெருமாள் முருகன், இனி எந்த நாவலையும் கட்டுரையும் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதுவதில்லை எனவும், இனி மாதொருபாகன் மற்றும் அவர் எழுதிய எந்த நாவலையும் வெளியிடவேண்டாம் என்று கூறினார்.

மேலும், விற்காமல் உள்ள நாவல்களைப் பதிப்பகத்தார் தன்னிடம் கொடுத்தால் உரிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், பெருமாள்முருகன் என்பவன் இறந்துவிட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ. முருகன் மட்டும் இருப்பதாகவும் திருச்செங்கோடு வட்டாட்சியரிடம் பொது மன்னிப்புக் கடிதம் அவர் எழுதி தந்தார்.

அதே சமயம் பெருமாள் முருகனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்களும் குவிந்தது. இந்நிலையில்,கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் எழுதிய, `பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை` நாவல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டிற்காக டெல்லி வந்தவர் பல்வேறு கேள்விகளுகு பதில் அளித்துள்ளார்.

அத்துடன், தனது அடுத்த படைப்புக் குறித்து பேசியுள்ளார். ”ஒரு வெள்ளாட்டை சுற்றி நகரும் கதை தான் பூனாச்சி. மனிதர்களை குறித்தோ, கடவுளைக் குறித்தோ எனக்கு எழுதுவதில் மிகுந்த அச்சம், அதனால் தான் நான் விலங்குகளை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். பிரச்சனை தராத பிராணி ஆடு தான். அதே போல் நானே எனக்கு தணிக்கை செய்யவும் தொடங்கிவிட்டேன்.

2017 ஆம் ஆண்டு கதையின் கருவை தேடி அலைந்த எனக்கு எதுவும் புலப்படவில்லை. அதனால் தான் எனது படைப்புகளை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டேன். அதுதான் எனது கதை முழுமையாக தீர்மானிக்கிறது. நான் இப்படி மீண்டும் பேனாவை தொட்டத்திற்கு காரணமே நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தான். தீர்ப்பின் இறுதியில் நீதிபதி கூறியது என்னால் இன்று வர மறக்க முடியவில்லை.

‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ இதைக் கேட்ட பிறகு தான் நான் மீண்டும் பிறந்தேன். மாதொருபாகன் மக்களின் பார்வையை என்மீது அதிகமாக காட்டியது. ஆனால் சர்ச்சையை விட படைப்பினால் பிரபலம் ஆகியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

நான் பூனாச்சியை எழுதி முடித்தவுடன், அதன் கையெழுத்துப் பிரதியை முதலில் என் நண்பருக்குதான் கொடுத்தேன். அதை முழுவதுமாக படித்து விட்டு அவர் என்னைப் பார்த்த கேள்வி என்ன தெரியுமா? இது உங்களைக் குறித்த கதையா? என்று தான். நான் அவனில்லை என்றேன் சிரித்துக் கொண்டே.

என்னுடைய படைப்பு குறித்து பலரும் என்னை முகநூலில், வாட்ஸப்பில் கேட்டு வருகின்றனர். அதற்கான பதில் தான், கழிமுகம். எனது அடுத்த நாவலான கழிமுகம், நகர வாழ்க்கையில் ஒரு மத்தியதர வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறித்து பேசும். முழுமையாக முடிக்கவில்லை இன்னும், முடித்த பின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று கூறினார்.

×Close
×Close