பூக்களின் தலைவி!

பூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார்? அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம்! கவிஞர் சந்திரகலாவின் கற்பனை சிறகில் பறந்து பாருங்கள்!

க.சந்திரகலா
பூக்கள் உலகத்தில் நடக்கிற அழகிப் போட்டி! அத்தனை பூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார்? அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம்! கவிஞர் சந்திரகலாவின் கற்பனை சிறகில் பறந்து பாருங்கள்!

ஆயிரமாயிரம் பூக்களிலே
அழகான பூ எது..?
பூக்களின் தேசத்திலே
ஒரு
போட்டி நடந்தது!

தலைவியாகிற
தலைக்கனத்தோடு
வரிந்து கட்டிக்கொண்டு வந்தன
பூக்களெல்லாம்..

வண்ணத்தை கொண்டு
அழகை நிரணயிப்பதா..
வாசத்தைக் கொண்டு
அழகை தீர்மானிப்பதா..
இதழ் நேர்த்தியைக் கொண்டு
அழகை முடிவு செய்வதா??

என்ன செய்வது?
எப்படித் தேர்வது??

பூக்களெல்லாம்
தீர்க்க முடியாத
குழப்பத்திலிருந்த போது
ஆடி அசைந்தபடி வந்த
ஆர்க்கிட் பூவோ
ஆயுளைக்கொண்டு
அழகை தீர்மானிக்கச்சொல்ல
அடுத்த குழப்பம் வந்தது!!

கண்ணை மிரட்டுகிற வண்ணமில்லை,..
ஆளைத் தூக்குகிற வாசமில்லை..
ஆச்சர்யப்படுத்துகிற இதழ் நேர்த்தியில்லை..
ஆயுளும் அதிகமில்லை..

எனவே-
கழுத்தைப் பிடித்து
தள்ளாத குறையாக
போட்டியிலிருந்து விலக்கப்பட்டதில்
கதறி அழுத
காகித பூ
கனகாம்பரம் வகையறாக்களை
கண்டு கொள்வாரில்லை..

அப்போதுதான்…
அப்போதுதான்…
அந்த வழியாக
வந்த நீ
என்ன குழப்பமென அறிய
எட்டிப்பார்த்தாயாம்..

அழகான
உன்னைப் பார்த்ததில்
ஆச்சரியப்பட்டுப்போன
அத்தனை பூக்களும்
ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தது..

நம்முடைய தலைவி
நம்மிடையே இல்லை..
அதோ..அதோ..என்று!

படம்: ஆகாஷ்

(கவிஞர் க.சந்திரகலா, குமரி மாவட்டம் அதங்கோட்டை சேர்ந்தவர்! தமிழ் இலக்கிய உலகுக்கு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளால் செழுமை சேர்த்துக் கொண்டிருப்பவர்!)

×Close
×Close