Advertisment

கவிதை : கடவுள் வந்திருந்தார்...

காதலின் உச்சத்தை கவிதையாக வடித்திருக்கிறார், க.சந்திரகலா. கடவுளே வந்து வரம் தர தயாராக இருந்தபோதும், ‘தள்ளி நில்லும் கடவுளாரே, இது என் காதலியின் தரிசன வேளை!’

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
god had come, poem, k.chandrakala
க.சந்திரகலா

மூர்ச்சையற்றுப் போன மாதிரி

முழு உறக்கத்தில் கிடந்த போது

கடவுள் வந்து

என்

தோள் தொட்டு எழுப்பினார்...

காதல் வயப்பட்டவன்

கண்ணுறங்கிப் பார்ப்பது ஆச்சரியம்...

எங்கே

எப்படி இருக்கிறாள்

உன் காதலி..

கேலியாய் ஒரு

கேள்வியும் வீசினார்..

நானொன்றும்

கண்ணுறங்கவில்லை கடவுளே..

என் காதலியின்

கனவு தரிசனத்துக்காக

கண்மூடி தவம் செய்கிறேன்..

அவள் வருகிற நேரம் பார்த்து

நீங்கள் வந்திருக்கிறீர்கள்...

உலக கடவுளை பார்த்ததில்

உள்ளுக்குள் சந்தோசம்

என்றாலும்-

எனது கடவுளை

தவறவிட்டதில் ஏமாற்றம்

அதுசரி-

அரசியலிலும்

காதலிலும்

போலிகள் அதிகம் புழங்குகிறது

ஆனாலும்

நான் உன்னை நம்புகிறேன்;

கேள்

ஏதேனும் வரம் கேள்

தேவையில்லை கடவுளே..

கேட்காமலே கிடைத்த

அவளின் அன்பு

ஆயிரம் வரத்துக்கு சமம்;

அது மட்டுமல்ல

வரங்களை எதிர்பார்த்து

நான்

தவம் செய்வதில்லை

ஆனாலும்-

அவளின் மேல்

கொஞ்சம்

அதிகம்தான் காதல் உனக்கு..

வரம் தந்த

உன் தெய்வமே

நாளை

சாபம் கொடுத்தால்..???

சிரித்துக்கொள்வேன்..

எஸ்எம்எஸ்

வாட்ஸ் அப் தடயங்கள்

அத்தனையும் அழித்து விட்டு

ஆண்டுகள் நூறு

வாழச்சொல்லி

ஆசீர்வதிப்பேன்

புருவம் உயர்த்திய கடவுள்

புறப்படும் போது சொன்னார்..

கடவுளாகிய நானே

மெல்ல மெல்ல

மனிதனாகிக்கொண்டு வருகிறேன்;

நீயோ

கனவுளாகிக்கொண்டிருக்கிறாய்!!

{க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோட்டைச் சேர்ந்தவர். கவிதைகள், சிறுகதைகள் படைப்பதில் தனிப் பாணியை வகுத்துக் கொண்டு முன்னேறி வரும் இளம் படைப்பாளி)

Advertisment
Poem K Chandrakala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment