கவிதை : வீடு தங்கு

மகன் பெரியவனாகி வெளியே தங்குவதை தாங்க முடியாத தாய் பாடுவது போன்று எழுதப்பட்ட கவிதை இது. தலைவர்கள் வேண்டுமானால் வெளியே தங்கட்டும். நீ வீடு தங்கு...

க.சந்திரகலா

நேற்றுமாதிரி இருக்கிறது..

தரை விரித்த மெத்தையில்
கை முறுக்கி
கால் உதைத்து
விட்டம் பார்த்து சிரித்த
பூச்செண்டு நீ
முதன் முதலாய்
கவிழ்ந்து படுத்ததைப் பார்த்த
பரவசத்தில்
நான் குழந்தையாகிப்போனது..

நீ
சுவர்பிடித்து
நடக்கத் தொடங்கிய போது
ஓடுவதை பார்க்க ஆசைப்பட்டேன்

ஓடிக்களிக்க ஆரம்பித்தபோது
நீ
பறந்து திரிவதைப்பார்க்க
ஆசைப்பட்டேன்

பிரிய மகனே..
நீ இப்போது
நேரம் காலம் இல்லாமல்
எங்கெங்கோ பறந்து கொண்டிருக்கிறாய்..
அதுதான் பிரச்னையே..

உன்
இளமை வாகனம் முமுக்க
கவலை காணா கூட்டம்;
நீ அதில்
கரைந்து போகிறாய்..

உனக்குப் பிடித்ததை மட்டுமே
சமைத்து வைத்து
காத்திருந்தால்
ஆறிப்போனதை
நாய்க்கு வைத்து
அடுக்களையை பூட்டி
தூங்க சொல்கிறாய்..

விடி காலை வரையிலும்
நீ
வீடு வரவில்லையென்றால்
எங்கள் உயிர்கூடு பதறுவது
அறிவாயா நீ??

வயசுப்பெண்ணை வைத்திருக்கிற தாய்க்கு மாத்திரமல்ல..
வாலிபம் தாண்டுகிற
மகனை வைத்திருக்கும்
பெற்றோருக்கும்
பெருங்கவலை உண்டு

உன்னை ஒரு தட்டிலும்
உலக சந்தோசங்களை வழித்து
இன்னொரு தட்டில் வைத்தாலும்
உனக்கு இணை ஆகாதென்றே
உன் அப்பாவும் நானும்
நம்பிக்கிடக்கிறோம்..

பிப்ரவரியில்
பிறந்தநாள் வரும்போது
உனக்குஇருபத்தோரு வயது;
ஆனாலும்
இன்னும் இன்னமும்
ஒரு பிள்ளை போல
உன்னை
அருகில் பார்க்கவே ஆசைப்படுகிறோம்

காது கொடு மகனே..

தலைவர்கள் வேண்டுமானால்
நாடு தங்காமல்
ஊர் சுற்றட்டும்;
நீ எங்கள் மகன்
தயவு செய்து வீடு தங்கு!

×Close
×Close