தமிழ் சினிமா பாடல்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்பைப் போல பெரிய அளவில் மக்களை ஈர்க்கும்படி அமைந்து புகழ்பெறவில்லை என்ற விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்து வந்துள்ளது. ஆனால், இந்த முறை பல நூறு சினிமா பாடல்களை எழுதிய கவிஞர் வைரமுத்து சினிமா பாடல்கள் கவலைக்கிடமானது ஏன்? அதற்கு கலைஞர்கள் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப்பி அதற்கான காரணங்களை அடுக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படப் பாடலாசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் வைரமுத்து. நூற்றுக்கணக்கான படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 8 முறை வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த கவிஞராக பரிணாமம் அடைந்துள்ள கவிஞர் வைரமுத்து, பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் கலைப்படையோடு வருகிறேன்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், “90 ஆண்டுகளுக்கு முன்னால் பேசும் படம் தோன்றியபோது அது பாடும் படமாகவே பிறந்தது. வசனங்களைவிடப் பாடல்களே வரவேற்கப்பட்டன. பாடகனாகத் திகழ்ந்தவனே நடிகனாகக் கொண்டாடப்பட்டான். இதிகாசம் – புராணம் – இலக்கியம் - வரலாறு – சமூகம் – சீர்திருத்தம் – சமயம் – போராட்டம் எல்லாமே பாடல் வழியேதான் பரிமாறப்பட்டன.
பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம்
கலைப்படையோடு வருகிறேன் : https://t.co/p18QW7YgTN pic.twitter.com/iC0SKvSJzA
— வைரமுத்து (@Vairamuthu) December 24, 2020
தமிழர்களுக்குப் பாட்டு என்பது கலைக்கருவி மட்டுமன்று; கற்பிக்கும் கருவி. தமிழர்களின் காதல், வீரம் – விழுமியம், பண்பாடு - பக்தி – பாரம்பரியம் – பொதுவுடைமை – பகுத்தறிவு – தேசியம் – திராவிடம் - குடும்பம் - தத்துவம், வெற்றி – தோல்வி, நம்பிக்கை – நிலையாமை, இறந்தகாலம் – எதிர்காலம் எல்லாவற்றையும் பள்ளி செல்லாமலே கற்றுக் கொடுக்கும் பாடப் புத்தகமாகப் பாட்டுப் புத்தகம் திகழ்ந்தது. பாடல்களுக்கு மத்தியில் கலைக்களைகளும் முளைத்திருக்கின்றன என்ற போதிலும் தமிழர்களின் ஒரு நூற்றாண்டு வாழ்வின் வழியே திரைப்பாடலும் தடம்பதித்தே வந்திருக்கிறது என்பதைப் பண்டித உலகம்கூட மறுதலிக்க முடியாது. தொல்லிசை அறிந்த பாவாணர்களும், பழந்தமிழ் அறிந்த பாவலர்களும், தங்கள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கித் திரையிசையை உயர்த்தியிருக்கிறார்கள்.
வாழைப்பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். திரைப்பாடலைப் பாமரர்களின் கவிதை என்றே அழைக்கலாம். செவியுடையோர்க் கெல்லாம் செழுந்தமிழை அள்ளித் தந்தது திரைப்பாடல். சங்க இலக்கியத்தையும், சிலப்பதிகாரத்தையும், திருக்குறளையும், நாயன்மார் பதிகத்தையும், ஆழ்வார் பாசுரத்தையும், கம்பர் தமிழையும், குற்றாலக் குறவஞ்சியையும், காவடிச் சிந்தையும், பாரதி - பாரதிதாசனின் புரட்சித் தமிழையும் தமிழர்கள் உலவிய தெருக்களில் கொண்டுவந்து கொட்டியது திரைப்பாடல்தான். ஆகவே தமிழகமே! திரைப்பாடல்களை இடக்கை கொண்டு எள்ளித் தள்ளாதே. அதிலும் குறைகள் உண்டு. குறை களைந்து நிறை காண்பதே நிறைமாந்தர் செய்கை. இப்படித் தமிழர்களுக்குக் காலங்காலமாய்க் கவிதைச் சேவை செய்த திரைப்பாட்டு, இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் பாறையில் விழுந்த கண்ணாடிப் பந்தாய் உடைந்து நொறுங்கிச் சிதறிக் கிடப்பது கண்டு ஒரு கலைஞனாக அல்ல ஒரு கலையன்பனாக வருந்தி நிற்கிறேன்.
அண்மைக் காலங்களில் சிறந்த பாடல்களே வரவில்லை என்று சொல்லமாட்டேன். நல்ல பாடல்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டன என்று எண்ணமுடைகிறேன். திரைப்பாடல்கள் கவலைக்கிடமாய்க் கிடப்பதற்குக் கலைஞர்கள் மட்டுமா காரணம்? இசையமைப்பாளர்கள் யாரும் இளைத்துவிடவில்லை; இயக்குநர்களுக்கும் தேடல் இல்லாமல் இல்லை. பாடலாசிரியர்கள் எண்ணிக்கையும் பல்கித்தான் இருக்கிறது. பிறகு ஏனிந்தப் பின்னடைவு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து, சினிமா பாடல்கள் கவலைக்கிடமானது ஏன்? அதற்கு கலைஞர்கள் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப்பி பல காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.
தமிழ் சினிமா கவலைக்கிடமானதற்கு காரணங்களாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளதாவது:
* கால மாற்றம்
*வாழ்வை உடைத்தெறியும் தொழில்நுட்பம்
*காதல் வெறும் உறுப்புகளின் உறவு என்று வீழ்ந்து கிடக்கும் விழுமியம்
*கூட்டுக் குடும்பங்களின் உடைசல்
*நுகர்வுக் கலாசாரத்தின் சுத்தச் சுயநலம்
*மனிதர்களைத் தீவுகளாக்கிவிடும் சுயசார்புத் தனிமை
*குறைந்துபோன படத்தின் நீளம்
*பாடல்களைத் தாங்கிச் சுமக்கத் தோள்கள் இல்லாத கதைகள்
*பாடல்களைச் சகித்துக் கொள்ளாமல் நொறுங்கிப்போன பொறுமை,
*ரசிகனைக் கட்டிப்போடாமல் நறுங்கிப்போன திறமை, பயிற்சி இல்லாதவர்களின் முயற்சி மற்றும் முயற்சி இல்லாதவர்களின் தளர்ச்சி
*இலக்கிய எண்ணெய் விட்டுத் தாளிக்கத் தெரியாத கலை
*கலை இலக்கியப் பயிற்சியற்ற மக்களின் கந்தல் மனநிலை
*இசை என்ற பெயரில் நிகழும் சப்தங்களின் வன்முறை
*இணக்கமில்லாத இசையோடு மொழியின் வல்லுறவு
*தங்களுக்கு எழுதப்படும் பாடல்களில் என்ன நிகழ்கிறது என்பதைக் கண்டறிய முடியாத கலைஞர்கள்
*நடிகைகளின் பொருளறியாத வாயசைப்பு
*தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தாளங்களுக்கு அசையும் சதைகள்
*சில பாடல்களுக்கு மொழியே தேவையில்லையோ என்று குழப்பமடையும் என்னைப் போன்ற பாடலாசிரியர்கள்
*இந்தக் காரணங்களால் சிகரத்தில் இருந்த திரைப்பாட்டு பள்ளத்தை நோக்கிப் பரபரவென்று சரிந்துகொண்டே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சினிமா பாடல்கள் இப்படி கவலைக்கிடமாக இருப்பதற்கு தீர்வு காணும் முனைப்பில் கவிஞர் வைரமுத்து தனது ஆதங்கத்தையும் அதை சீர் செய்வதற்கான தனது முயற்சியையும் தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து அந்த கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “இந்தக் கவலைக்கிடத்தை எப்படிக் கண்டும் காணாதிருப்பது? திடமெடுத்த தினவும், உள்ளத்தின் தீராத தீயும், தணியாத தமிழ்ச் சினமும், அணையாத அறச் சீற்றமும், இன்னும் சாதிக்க வேண்டும் என்ற தகிப்பும், தமிழர்களின் வாழ்வில் தமிழ் தீர்ந்துவிடக்கூடாது என்ற பச்சைப் படபடப்பும், தமிழர்களின் முற்போக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்ற முனைப்பும், ஏதாவது செய் வைரமுத்து என்று தூங்கவிடாமல் என் இமைகளைத் துண்டித்துக்கொண்டே இருக்கின்றன.
தமிழ் சினிமா மீண்டெழுகிறபோது எல்லாரும் கூடித் தமிழின் உயரத்தை உறுதி செய்ய வேண்டும் அல்லது திரைப்பாட்டுக்கு வெளியே தமிழர்களின் கலைத் தமிழ்த் தேவையை நிறைவு செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தின் 9 மாதங்களும் என்னை உறங்கவிடாத மாதங்கள். அதில் இந்தக் கேள்வியின் பதிலுக்காக என் உயிரை உருக்கி உழைத்திருக்கிறேன்.
பூனைக்கு நான் கட்டப் போகும் சிறு மணி இது. தமிழின் புதிய ராஜபாட்டையை மெல்லத் திறக்கிறேன்; ஒரு தலைமுறையே அதில் பயணம் போகலாம். சற்றுப் பொறுங்கள்! நல்ல செய்தியோடும் நல்ல தமிழோடும் ஒரு கலைப்படையோடும் உங்களைச் சந்திக்க வருகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.