/indian-express-tamil/media/media_files/2025/09/09/vairmuthu-jayaraj-2025-09-09-09-28-58.jpg)
கவிஞர் வைரமுத்து, கம்ப ராமாயணத்தில் ராமன் குறித்து பேசிய கருத்துகள் சர்சையாகி உள்ளது. வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரித்து இலங்கை ஜெயராஜ் எதிர்வினையாற்றியுள்ளார். Photograph: (YouTube/ Mega Tv)
சென்னை மயிலாப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னை கம்பன் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொகுத்த 'கம்பன் கலைக்களஞ்சியம்' நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளியிட்டார். மேலும், ‘கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருதை கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார்.
மேலும், ‘இயற்றமிழ் அறிஞர்’ விருதுகளை பேராசிரியர் ஞானசுந்தரம், பழனியப்பன், சுகி சிவம், பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன், இலங்கை ஜெயராஜ் ஆகியோருக்கும், ‘கம்பன் கலைநயச் செல்வன்’ விருது திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, கம்ப ராமாயணத்தில் ராமன் குறித்து பேசிய கருத்துகள் சர்சையாகி உள்ளது. வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரித்து இலங்கை ஜெயராஜ் எதிர்வினையாற்றியுள்ளார்.
சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழாவில் கவிஞர் வைரமுத்து அப்படி என்ன பேசினார், அவருடைய கருத்து ஏன் சர்ச்சையானது என்பதைப் பார்ப்போம்.
நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசுகையில், “நான் சமூகத்தில் இன்னும் இயங்கலாம் என்பதற்கான அளவுகோலாக இந்த விருதினைப் பார்க்கிறேன். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் செய்யக் கூடிய மிகப்பெரிய கொடை என்னவென்றால், சமூகம் அவன் மீது சொல்கின்ற பழியை துடைப்பது தான். அவதூறுகளும் இழிவுகளும் புகழின் எச்சங்கள். புகழ் பெறும் பொழுது இழிவு வருகிறது. இந்த இழிவை துடைத்தவன் கம்பன்.
அதாவது ராமனுக்கு நேர்ந்த இழிவை கம்பன் துடைத்தான். வாலியை மறைந்து நின்று கொன்றதால் வந்த களங்கத்தை சுமந்ததால், 'ராமச்சந்திரன்' என்று அழைத்தான் கம்பன். சூரியனுக்கு களங்கமில்லை. சந்திரனுக்கு களங்கம் உண்டு. அதனால் ராமனை, சந்திரனுடன் கம்பன் ஒப்பிடப்பட்டான் என்று வாரியார் சொல்வார். ராமனின் குற்றத்தையும், களங்கத்தையும் வாரியாரும் வால்மீகியும் மன்னிக்கத் தவறிவிட்டனர். ஆனால், கம்பன், ராமனைக் காப்பாற்றினான்.
திகைத்தல் என்றால் பிரமித்தல், அதற்கு இன்னொரு சொல் மயங்குதல். இந்த வார்த்தைதான் அழகு. மயங்குதல் மதி மயங்கி விட்டான். சீதையைப் பிரிந்த ராமன் செய்வதறியாமல் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான். புத்தி சுவாதீனம் இழந்தவன் செய்கிற குற்றம், குற்றமாகாது என்பது இந்திய தண்டனைச் சட்டம். இந்திய தண்டனைச் சட்டத்தின் 84-ம் பிரிவு சொல்லுகிறது. புத்தி மாறாட்டத்தால் மதிமயங்கி ஒருவன் ஆற்றுகிற காரியத்தை குற்றம் என்று அவன் மீது சுமத்த முடியாது என்பது இந்திய தண்டனைச் சட்டம் சொல்லுகிற செய்தி. இது கம்பனுக்கு தெரியுமோ தெரியாதோ, சட்டம் தெரியாது அவனுக்கு சமூகம் தெரியும், உளவியல் தெரியும். இந்த மண்ணைத் தெரியும். ராமன் என்ற ஒரு குற்றவாளி முற்றிலும் விடுவிக்கப்படுகிறான். ராமனை மன்னித்து ராமனை மனிதனாக்குகிறான், ராமன் அந்த இடத்தில் மனிதனாகிறான். கம்பன் கடவுளாகிறான்.” என்று வைரமுத்து பேசினார்.
கம்ப ராமாயணத்தில் வாலியைக் கொலை செய்த குற்றத்தில் இருந்து ராமனை விடுவிப்பதாக நினைத்து, ராமனை புத்தி சுவாதீனம் இல்லாதவன் என்று கம்பன் கூறியதாக வைரமுத்து பேசியதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வைரமுத்துவின் கருத்துக்கு அதே நிகழ்ச்சியிப் பங்கேற்ற இலங்கை ஜெயராஜ், வேறு ஒரு நிகழ்ச்சியில் எதிர்வினையாற்றியுள்ளார்.
இலங்கை ஜெயராஜ் கூறியிருப்பதாவது: “நான் இப்பொழுதும் ஒன்றைக் கேட்கிறேன், ஒரு விழாவெடுத்து, ஒரு சபை அமைத்து, அதிலே ஒரு பேச்சாளனை பேச வைத்து, உயர்ந்து நின்ற ஒரு பாத்திரத்தை தாழ்த்துவதற்காக தான் நாங்கள் இத்தனையும் செய்கிறோம் எனக்கு புரியவில்லை. கம்பன் என்கிற பெரும் புலவன் உயர்த்தி வைத்த ஒரு பாத்திரத்தை நம்முடைய அறிவின் நுட்பம் கொண்டு வியாக்கியானங்கள் செய்து நாங்கள் கீழே தாழ்த்துவதுதான் நம்முடைய நோக்கமா என்று கேட்டால், அப்படியானால் அதற்கு ஒரு விழா எடுக்க வேண்டிய தேவை என்ன என்று படுகிறது. எனக்கு முதல் நாள் விழாவிலே, நான் ரொம்ப ரசிக்கிற கவிஞர் வைரமுத்து, அவர் பெரிய மகாகவிஞர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அன்றைக்கு என்னை ரொம்ப பாராட்டி பேசினார். ஆனால், அவர் அந்த வாலி வதை பற்றி சொல்லுகிற பொழுது ஒரு செய்தி சொன்னது, என் மனதிலே ரொம்ப தைத்தது. என்ன சொன்னார், வாலி வதை வழக்கில் இருந்து ராமனைக் காப்பாற்றுகிறேன் என்று நினைத்துக் கொண்டு அவர் சொன்னது, அவன் குற்றவாளி இல்லை. ஏனென்றால், அவனுக்கு புத்தி சுவாதீனம் இல்லை என்கிறார்.
ராமனைப் பைத்தியக்காரனாக்கிவிட்டால், இந்த குற்றத்திலிருந்து தப்ப வைத்து விடலாம். அதற்காக, அந்த திகைத்தன், திகைத்தனன் என்ற வார்த்தைக்கு அகராதியிலே தேடி, ஒரு பொருள் சொல்லி, ராமன் புத்தி சுவாதீனமற்றவன் என்று சொன்ன அந்த அந்த வார்த்தையை கேட்ட பொழுது நெஞ்சிலே கொஞ்சம் வலித்தது. தாழ்ந்தவர்களை உயர்த்த வேண்டுமே தவிர உயர்ந்தவர்களை நாம் தாழ்த்தக்கூடாது. அது ரொம்ப முக்கியமானது. அதற்காகத்தான் இலக்கியங்கள் பிறக்கின்றன. என்னுடைய ஆசிரியரிடம் திருக்குறள் படிக்கிற போது, அவர் ஒரு பெரிய மேதை, நான் அவரிடம் கேட்டேன் ஏன் உரையாசிரியர் ஊடாக நாங்கள் திருக்குறள் படிக்க வேண்டும், என்ன தேவை, நாங்களாக படிக்க முடியாதா, ஒன்றே முக்கால் வரியில் ஓரளவு விளங்கத் தக்கதாகத் தானே இருக்கிறது. திருக்குறளை நாங்களாக படிக்கக்கூடாதா, ஏன் உரையாசிரியர் வேண்டும் என்று நான் கேட்டேன்.
அவர் கொஞ்சம் யோசித்து விட்டு எனக்கு சொன்ன பதில், நமக்கும் உரையாசிரியர்களுக்கும் இருக்கிற வித்தியாசம் என்னவென்று கேட்டால், நாங்கள் புலவன் தந்த அந்த பாட்டிலே இருக்கிற சொல்லுக்கு ஊடாக பொருளுக்குள்ளே போகிறோம். ஒரு புலவன் ஒரு பாட்டு அமைத்து விட்டான் என்றால் அந்த பாட்டிலே இருக்கிற சொல்லை வைத்துக்கொண்டு பொருளை தேடுக்கிறோம். உரையாசிரியர்கள் அப்படியல்ல அவர்கள் காவியத்தை பாடிய புலவனுடைய அந்த அறிவு நிலையிலேயே நிற்கிறபடியால் அவர்கள் பொருளுக்குள்ளே இருந்து சொல்லுக்குள்ளே இறங்குவார்கள். அதனால், சொற்களுக்கான பொருளை அவர்கள் விளங்குகிற பொழுது அதன் நூலாசிரியர் உடைய எண்ணமாக இருக்கும். அது ரொம்ப முக்கியம் ஒரு புலவனுடைய கருத்தை விளங்காமல் நான் அதற்கு வியாக்கியானம் செய்கிறேன் என்பது மிகப் பெரிய தவறு. அதனால்டான், பாரதி சொன்னார், அணிசெய் காவியம் ஆயிரம் கற்றினும் ஆழ்ந்திருக்கும் கவியுலம் காண்கிலான்.
அதே பாரதி இன்னொரு இடத்தில் சொல்கிறார், “பதியும் சாத்திரத்து உள்ளுறை காணான், பானைத் தேனில் அகப்பையைப் போல்வார்” என்கிறார். இது நான் ரொம்ப ரசித்த இடம். அவர் என்ன சொல்கிறார் என்றால் தேன் பானைக்குள்ளே ஒரு அகப்பையை தேன் எடுப்பதற்காக வைத்திருப்பார்கள். அது அதற்குள்ளேதான் ஆயுள் முழுவதும் கிடக்கும். அள்ளி அள்ளி மற்றவர்களுக்கு கொடுக்கும். வாங்குகிறவர்களுக்கு எல்லாம் தேனுடைய சுவை தெரியும். இந்த அகப்பைக்கு சீவிய காலத்திலே தேனுடைய சுவை தெரியப்போவதில்லை. அப்படித்தான், சில அறிஞர்கள் நன்றாகப் படிக்கிறார்கள். படித்ததை நன்றாகச் சொல்கிறார்கள். ஆனால், அந்த புலவனுடைய நோக்கம் என்ன என்று புரியாமல் பேசுகிறபோது, காவியம் சிதைவுறுகிற ஆபத்து வருகிறது என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.” என்று இலங்கை ஜெயராஜ் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.