இரா.குமார்
முதுபெரும் தமிழறிஞர் மா . நன்னன் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 94.
பேராசிரியர் மா. நன்னன் கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்த காவனூர் கிராமத்தில் பிறந்தவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக புலவர் பட்டம் படித்தார். பின்னர் முனைவர் பட்டம் பெற்ற அவர் கல்லூரி பேராசிரியர் ஆனார். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். தீவிர நாத்திகவாதியான நன்னன், மாணவர்களுக்கு திருவாசகம் வகுப்பெடுத்தார்.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பதை மெய்பிக்கும் வகையில் மாணவர்கள் கண்ணீர் விடும் அளவிற்கு உருகி உருகி பக்திச் சுவை சொட்டச்சொட்ட திருவாசகம் நடத்துவார். நாத்தீகரான உங்களால் எப்படி இந்த அளவுக்கு பக்திச்சுவையோடு பாடம் நடத்தமுடிகிறது என்று நன்னனிடம் மாணவர்கள் கேட்டனர். அதற்கு அவர் "என்னுடைய கொள்கை வேறு . ஆனாலும் ஒரு இலக்கியத்தை அதன் சுவை குன்றாத வகையில் மாணவர்களுக்கு சொல்லவேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை. அதைத்தான் செய்கிறேன்" என்றார்.
பேராசிரியர் நன்னன் இறுதியாக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக பணியற்றி ஓய்வு பெற்றார்.
திராவிட இயக்கத்தில் தீவிர பற்று கொண்ட இவர், தன் பணி ஓய்வுக்குப் பின் திமுகவுடனும், அக்கட்சியின் தலைவர் கருணாநிதியுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டு பணியாற்றினார். தமிழ் தேசிய விருதும் பெரியார் விருதும் பெற்றுள்ளார்.
கடந்த 1970களின் இறுதியில் முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் தொலைக்காட்சி மூலம் தமிழ் சொல்லிக்கொடுத்தார். எதிரில் கற்பவர்கள் இருப்பது போலவே பாவித்துக்கொண்டு இவர் தமிழ் சொல்லிக்கொடுத்தது பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது.
தமிழை பிழையின்று எழுதுவது குறித்தும் , தூய தமிழில் பேசுவது , எழுதுவது குறித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். பிழையின்றி தமிழ் எழுதுவது குறித்து இவர் எழுதிய நூல் மிகவும் பிரபலமானது. திமுக தலைவர் கருணாநிதியே ஒருமுறை , "தமிழில் எனக்கு சந்தேகம் வந்தால் பேராசிரியர் நன்னனிடம் தான் கேட்பேன் " என்று கூறியுள்ளார். அந்தளவுக்கு தமிழில் ஆழ்ந்த புலமை பெற்றவர் பேராசிரியர் நன்னன்
வயது முதிர்வு காரணமாக சிலகாலமாக உடல்நலம் குன்றியிருந்த பேராரியர் நன்னன் அவரது சென்னை இல்லத்தில் இன்று காலை மரணமடைந்தார்.