எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுக்காக பேசுகிறார். 4-ம் பாகம் இது..
புதுமைப் பித்தன், இந்திய மரபுகளை உள்வாங்கி புரட்சிகரமான படைப்புகளை எழுதியிருக்கிறார். அதனால்தான் சிறுகதைகளின் பிதாமகனாக கருதப்படுகிறார். திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் அவர்.
புராண மறு வாசிப்புன்னு ஒண்ணு இருக்கு. மீட்டுருவாக்கம்னு சொல்வாங்க. அவரது, ‘அகலிகை’ கதை அந்த ரகம். அகலிகைன்னா பொதுவா ஒரு கதை இருக்கு. அகலிகை ராமர் கால் பட்டு எந்திரிச்சான்னு புராணத்துல கதை இருக்கு.
அகலிகை மீது இந்திரன் ஆசைப்பட்டார். கவுதம முனிவர் வெளிய போயிருந்த நேரத்துல கவுதம முனிவர் மாதிரி உருமாறி, அவளோட சல்லாபிச்சிட்டார்.
வெளியே போன கவுதம முனிவர் வீட்டுக்கு வந்து பார்க்கிறாரு. மனைவி இப்படி சோரம் போயிட்டாளேன்னு கோவத்துல, ‘கல்லாகப் போகக் கடவாய்’னு சாபம் போட்டார். பல ஆண்டுகள் கழித்து ராமர் கால் பட்டதும் அவ மீண்டு வருவா. இது புராணத்துல உள்ள கதை.
புதுமைப் பித்தன் அந்தக் கதையில் அகலிகை மேல என்ன தப்பு இருக்குன்னு நினைச்சிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி கதை எழுதுறாரு. கவுதம முனிவர் கேட்கிறார். ‘இந்திரன் கடவுள். அவனுக்கே இது தப்புன்னு தெரியலை. பாவம் அபலை இவள் என்ன செய்வாள்?’ என கேட்டுட்டு, ‘ஏம்மா உனக்கு அந்த நேரத்துல கூடவா கடவுள் யாரு, கணவன் யாருன்னு அடையாளம் காண முடியலை’ என கேட்கிறார். பிறகு சரி, கடவுளுக்கே தெரியலை, உனக்கு எங்க தெரியப் போவுதுன்னு சொல்லிட்டு, இந்திரா, ‘உலகத்து பெண்களையெல்லாம் சகோதரியா பார்க்க மாட்டாயா? இப்படித்தான் மோகத்துடன் அலைவாயா? போய் வா இந்திரா’ என அனுப்பி விடுவார். இவளையும் மன்னிச்சு விடுவார்.
Writer R Narumpu Nathan: எழுத்தாளர் இரா.நாறும்பூ நாதன்
அதே அகலிகை பிற்காலத்தில் சீதையைப் பார்த்து கேள்வி கேட்பாள். ராமர் பாதத் துளி பட்டுத்தான் நான் மீண்டு வந்தேன். ஆனா உங்கிட்ட ராமன் தீக்குளிக்க சொன்னானா? எதுக்கு சொன்னான்?’ன்னு கேட்கிறாள். ‘இந்த உலகத்துக்கு என்னை கற்புள்ளவளாக காட்டணும்ணு தீக்குளிக்க சொன்னான்’னு சீதை சொல்கிறாள்.
‘கற்பு என்பது மனசுலதான் இருக்கணும். எனக்கு ஒரு நீதி, உனக்கு ஒரு நீதியா?, அவனா தீக்குளிக்க சொன்னான்’ன்னு ராமனை ஒருமையில் கேட்பாள். சொல்லிட்டு, அகலிகை மீண்டும் கல்லானாள் என முடிச்சிருப்பார்.
இவரு என்ன பெரிய யோக்கியர்? அவர் பெண்டாட்டி யோக்கியம்னு தெரியலையா?. அவர் கொடுத்த விமோசனம் தேவையில்லை. நான் கல்லாவே இருந்துட்டுப் போறேன்னு அகலிகை சொல்றதா வருது. இதெல்லாம் படைப்பாளியின் சொந்தக் கற்பனை. இப்படியான புராணப் பாத்திரங்களையே எடுத்துக்கொண்டு, அவங்க கோணத்துல எழுதுவது படைப்பாளியின் தனித் திறமை.
திருநெல்வேலியில் இப்படியான படைப்பாளிகள் நிறைய இருக்கிறாங்க. மீ.ப.சோமு, பாவூர்சத்திரம் பக்கம் திப்பணம்பட்டியை சேர்ந்த சு.சமுத்திரம், கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஆதவன், வண்ணதாசன், இவங்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது பெற்றவங்க. கிட்டத்தெட்ட நான்கில் ஒரு பங்கு விருதுகளை திருநெல்வேலி படைப்பாளிகள் வாங்கியிருக்காங்க.
கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பூமணி வாங்கியிருக்காரு. ஜோ.டி.குரூஸ் வாங்கியிருக்காரு. அதுக்கு முன்ன மாதவன், அவரு திருவனந்தபுரத்தில் இருந்தாலும்கூட சொந்த ஊரு செங்கோட்டை. அதுக்கு முன்னாடி டி.செல்வராஜ். அவர், திண்டுக்கல்லில் இருக்கிறார். ஆனா, இந்த ஊர்க்காரர். தோப்பில் முகம்மது மீரான். இப்படி பெரும் படைப்பாளிகள் கூட்டம் திருநெல்வேலியில் இருக்குது.
ஆற்றங்கரை நாகரீகத்துல இலக்கியத்திற்கு பங்கு இருக்கு. நதிக் கரையிலதான் இலக்கியம் வளரும். திருநெல்வேலியைப் போலவே தஞ்சாவூரை எடுத்துக்கொண்டால், ஜானகிராமன், மெளனி, க.நா.சு. என பட்டியலிட முடியும். மணிக்கொடி எழுத்தாளர்களின் பெரிய பட்டாளமே ஒண்ணு காவிரிக் கரையா இருப்பாங்க. அல்லது, தாமிரபரணி கரையா இருப்பாங்க.
(பேசுவோம்)