நவீன தமிழ் சிறுகதைகளின் பிதாமகர் என்று போற்றப்படும் எழுத்தாளர் புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு பதிப்பை வைத்து தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்களிடையே ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது.
புதுமைப்பித்தனின் கதைகள் சமூக விமர்சனமும் நையாண்டியும் நிறைந்தவைகள். புதுமைப்பித்தன் எழுதிய காலத்தில் அவர் அளவுக்கு நையாண்டியுடன் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அவருடைய கிண்டலான எழுத்து எழுத்தாளர்களையும் விட்டுவைத்ததில்லை. புதுமைப்பித்தன் எழுதிய இலக்கிய மம்ம நாயனார் புராணம் என்ற சிறுகதையில் எழுத்தாளர்களை கிண்டல் செய்து எழுதியிருப்பார்.
புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பு பல பதிப்புகள் வெளியாகி உள்ளன. அவற்றில், வரலாற்றாசிரியர் ஆ.இரா.வெங்கடாசலபதி பதிப்பாசிரியராக இருந்து புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியான, புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புகளில் இந்த பதிப்பு மிகவும் மேம்பட்ட செம்பதிப்பு என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது இணையதளத்தில், பதிப்பகங்கள் எழுத்துப் பிழையுடன் நூல் வெளியிடுவதை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பாசிரியராக புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் இலக்கிய மம்ம நாயனார் புராணம் சிறுகதையில் ’காசில் கொற்றத்து’ என்ற வார்த்தைக்கு காசில்லாத அரசாட்சி என்று அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது. காசில் கொற்றத்து என்பது கம்ப ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள். காசில் என்பதற்கு குற்றமற்ற என்பது பொருள். ஆனால், இங்கே காசில்லாத அரசாட்சி என்று தவறாக பொருள் தரப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
காலச்சுவடு வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில் காசில் கொற்றத்து என்ற வார்த்தைக்கு தவறான பொருளில் காசில்லாத அரசாட்சி என்று அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளதை எழுத்தாளர் சாரு நிவேதிதா சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஜெயமோகன், இது போன்ற தவறுகளை சாரு நிவேதிதா சரியாக சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயமோகன் தனது இணையதளத்தில் குறிபிடுகையில், “சாரு நிவேதிதா சுட்டிக்காட்டியிருக்கும் அப்பிழை முக்கியமானது. அது சொற்பிழை அல்ல, இலக்கணப்பிழையும் அல்ல, பொருட்கோள்பிழை. அது மொத்தப் பண்பாட்டையே பிழையாகப் புரிந்துகொள்வது. சாரு எப்போதுமே இவ்வகை பிழைகளை சரியாகவே சுட்டிக்காட்டுகிறார்” என்று ஒரு பதிவை எழுதியுள்ளார்.
மேலும், காசு என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு எல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிடும் ஜெயமோகன், புதுமைப்பித்தன் கதைகள் பதிப்பில் அது எவ்வாறு பொருள்கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கூறுகிறார். “ஆ.இரா.வேங்கடாசலபதி காசு என்றால் பணம் என்று பொருள் அளிக்கையில் கம்பன் எழுதியதையே கையில் பணமில்லாத ஆட்சி என்று <மோடியின் ஆட்சிபோல> பொருள்கொள்கிறார். அதைவிட புதுமைப்பித்தனின் பகடியை புரிந்துகொள்ளாமல் நாசம் செய்கிறார். பகடியைப் புரிந்துகொள்பவனும் ரசிக்கமுடியாமலாக்குகிறார்” என்று ஜெயமோகன் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.
ஆ.இரா.வேங்கடாசலபதியின் புதுமைப்பித்தன் கதைகள் பதிப்பில், காசில் கொற்றத்து என்ற வார்த்தை தவறான பொருளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழின் மூத்த எழுத்தாளர்கள் இருவரும் எழுதிய நிலையில், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இதனை மறுக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியுள்ளார்.
அதில், ஜி.குப்புசாமி குறிப்பிடுகையில், “புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகளில் வரிக்கு வரி அளவுகடந்த பகடி கொப்பளிக்கும் கதை 'இலக்கிய மம்ம நாயனார் புராணம்'. புதுமைப்பித்தன் அவரது சமகால எழுத்தாளர் எவரையோ 'கழுவி ஊற்றுகிறார்' என்று முதல் வாசிப்பில் நமக்குத் தோன்றச்செய்யும் கதை அது.
குனா-சுனா, காண்டாமிருகம், கட்டத் தொடப்பம், கருவாடு, காரிய ஆசான், டப்பி, டமாரம், டுமீல், ஞி, ஙப்போல்.... என்று பலவிதமான புனைபெயர்களில் எழுதும் இலக்கிய எழுத்தாளர் ஒருவரது புராணம் ( அவரது பிறந்த ஊர் அனாமத்துப்பட்டி! ) என்று ஆரம்பித்து பு.பி.யின் சொற்சிலம்பம் ஐந்து பக்கங்களுக்கு விரிகிற பிரமாதமான கதை. அந்த அடிக்குறிப்புகளிலும் அதே பகடி. பல வருட வாசிப்புக்குப் பிறகு அவர் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்கிறாரோ என்றும் இப்போது எனக்குத் தோன்றத் தொடங்கியிருக்கிறது.
அந்தக் கதையை எப்போது படித்தாலும் வயிறு வலிக்கும்படி சிரிப்பு வருவது மட்டும் குறைவதில்லை. ஆனால் அக்கதையை விட அதிகமாக சிரிப்பு மூட்டியது இன்றைய சாரு நிவேதிதா, ஜெயமோகன் ஆகியோரின் பதிவுகள். (இணைப்பு)
சாரு இந்தக் கதையில் பு.பி. எடுத்தாண்டிருக்கும் கம்பனின் வரியான 'காசில் கொற்றத்து' என்பதற்கு (புதுமைப்பித்தன் கதைகள், காலச்சுவடு பதிப்பக வெளியீடு) தொகுப்பாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தனது அடிக்குறிப்பில் 'காசில்லாத அரசாட்சி' என்று குறிப்பிட்டிருப்பதாக எழுதுகிறார். காசு என்பதற்கு பண்டைத் தமிழில் கம்பன் குறிக்கும் பொருள் 'மாசு, குற்றம்' . குற்றமற்ற ராமன் என்று கம்பன் எழுதியதை சலபதி இன்றைய பொருளான காசு, என்று அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார் என குற்றம் சாட்டுகிறார்.
சாருவின் பதிவையொட்டி ஜெயமோகன் தனது வழக்கப்படி மிக நீ........ண்ட பதிவு ஒன்றை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சாரு நிவேதிதா மிகவும் பிரபலமான எழுத்தாளர். ஜெயமோகனும் அவ்வாறே. இவர்கள் இருவரும் தெரிந்துதான் இக்குற்றச்சாட்டை எழுப்புகிறார்களா என்று வியப்பாக இருக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அடிக்குறிப்பு கதையின் ஒரு பகுதி. அதை எழுதியவர் புதுமைப்பித்தன். சலபதி அல்ல. இந்தக் கதையில் இடம்பெறும் இரண்டாவது அடிக்குறிப்பு இது. முதல் அடிக்குறிப்பு கதையின் முதல் பத்தியிலேயே வருகிறது.
ஐயம் இருப்பின் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்ட புதுமைப்பித்தன் சிறுகதைகள் தொகுப்பிலும் இந்த அடிக்குறிப்புகள் இருப்பதைக் காணலாம்.
நண்பர்கள் இக்கதையை வாசித்துப் பார்த்தால் பு.பி. அந்த அடிக்குறிப்பில் மட்டுமல்லாது கதை முழுக்க அள்ளித் தெளித்திருக்கும் நக்கல்கள் புரியும்.
சாருதான் கதையை சரியாக படித்துப் பார்க்காமல், அந்த அடிக்குறிப்பில் உள்ள பகடியை புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு பதிவிடுகிறார் என்றால் , அவரைவிட அதிகப் பதற்றத்தோடு ஜெயமோகனும் களத்தில் குதித்து ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு தமிழ் செய்யுள்களையெல்லாம் ஆதாரம் காட்டி சலபதியையெல்லாம் அறிஞர் என்று இந்த தமிழ்ச் சமூகம் கொண்டாடுகிறதே என்று வருத்தப்படுகிறார்.
இலக்கிய வாசகன் என்பவன் யார், அவன் எவ்வளவு நுட்பமான அறிவு கொண்டவன், இலக்கிய பிரதிக்குள் உட்புகுந்து சூட்சமங்களை இனம் கண்டுகொள்ளக்கூடியவன் என்றெல்லாம் இலக்கிய வாசகனின் சாமுத்ரிகா லட்சணத்தை பற்பல கட்டுரைகளில் விவரித்திருப்பவர் ஜெயமோகன்.
சாருவின் பதிவைப் பார்த்தவுடனே சலபதியை போட்டுத் தாக்குவதற்கு நல்ல சான்ஸ் கிடைத்துவிட்டது என்று இவ்வளவு நீளமாக ஒரு பதிவையிடுவதற்கு முன்பாக புதுமைப்பித்தனின் அந்தக் கதையை ஜெயமோகன் ஒருமுறை எடுத்து வாசித்திருக்கலாம்.
ஆத்திரம் ஆசானின் கண்ணையும் மறைக்கும் போல.” என்று குறிப்பிட்டுள்ளார்.
காலச்சுவடு வெளியீடாக ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்திருக்கும் புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பில், காசில் கொற்றத்து என்ற அடிக்குறிப்பு, தவறான பொருளில் தரப்படவில்லை, சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் தவறாக குறிப்பிட்டுள்ளனர் என்று வாசகர்கள் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, ஜெயமோகன், தான் சாருவை நம்பியே அக்குறிப்பை எழுதினேன். அது கொஞ்சம் அவசர நம்பிக்கை என்று தெரிகிறது என்று கூறி ஆ.இரா.வேங்கடாசலபதியிடன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜெயமோகன் தனது இணையதளத்தில், “நான் சாரு நிவேதிதாவை நம்பியே அக்குறிப்பை எழுதினேன். என்னிடம் வேங்கடாசலபதி பதிப்பித்த நூல் இல்லை.அது கொஞ்சம் அவசர நம்பிக்கை என்று தெரிகிறது. எதற்கும் அ.இரா.வேங்கடாசலபதியிடம் ஒரு மன்னிப்பை கோரிவிடுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அடிக்குறிப்பை புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
புதுமைப் பித்தன் கதைகள் பதிப்பில் காசில் கொற்றத்து என்ற வார்த்தை தவறாகப் பொருள் கொள்ளப்பட்டதாக எழுதிய, ஜெயமோகன் மன்னிப்பு கோரியிருப்பது வரவேற்கப்பட வேண்டியது என்று எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.
மேலும், பெருமாள் முருகன், “அந்த அடிக்குறிப்பைப் புதுமைப்பித்தன் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்னும் கருத்துப்பட மேலும் அவர் எழுதியிருக்கிறார். அந்த விளக்கம் அவசியமானது, அதைப் புதுமைப்பித்தனே கொடுத்திருப்பார் என்பது என் எண்ணம். அவ்விடத்தில் அவர் எண்ணிய பகடிப்பொருள் இயல்பாக அமைவதல்ல. அவர் கொடுக்கும் குறிப்பால் கிடைப்பதுதான். ஆகவேதான் அக்குறிப்பைக் கதை உத்தியோடு இணைத்துக் காண வேண்டும் என்று என் கட்டுரையில் விளக்கியிருந்தேன்.
சரி, இருக்கட்டும்.
ஜெயமோகன் போன்ற ஆழ்ந்த வாசகர்கள் அவர்களே புரிந்துகொள்வார்கள் என்பது புதுமைப்பித்தனுக்குத் தெரிந்திருக்கும். எனினும் என்னைப் போன்ற சாதாரண வாசகர்களைக் கவனத்தில் கொண்டு அக்குறிப்பை அவர் வழங்கியிருப்பார் என்று எண்ணிக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.