Advertisment

கடல் தேவதையின் மக்கள்: ஆர். என். ஜோ டி குருஸ்

R N Joe D Cruz: பேரழிவுதான் ஒரு பெரும் இனக் குழுவை அடையாளம் காட்டுமென்றால், அது ஜனநாயகத்தின் பெரும் இழுக்கு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Writer R N Joe D Cruz, Children of the Sea Goddess, Fishermen, எழுத்தாளர் ஜோ டி குருஸ், கடல் தேவதையின் மக்கள், மீனவர்கள்

Writer R N Joe D Cruz, Children of the Sea Goddess, Fishermen, எழுத்தாளர் ஜோ டி குருஸ், கடல் தேவதையின் மக்கள், மீனவர்கள்

எழுத்தாளராக ஆகியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடோ, விருதுகளை நோக்கிய கனவுகளோடோ எழுத வந்தவன் அல்ல நான். அறிய ஆரம்பித்ததிலிருந்தே நான் அறிந்திருந்த கடலோரச் சமூகங்களின் வாழ்வு ஏற்படுத்தியிருந்த வலி, திகைப்பு, ஆதங்கம் எல்லாம் என் அடிமனதில் ஆழமாய் வேரூன்றியிருந்தது.

Advertisment

சமவெளிப் பகுதியில், தொடர்ந்த கல்விப் பயணத்தில் எதிர்கொண்ட ஏனைய திணைசார் வாழ்வுகளை, நெய்தலின் வாழ்வோடு தொடர் ஒப்பீடு செய்ததால் ஏற்பட்ட புரிதல், என்னுள் ஏற்படுத்தியிருந்த பெரும் தாக்கத்தைதையும் மறுப்பதற்கில்லை. கற்றதும், கேட்டதும் எனது வாழ்வுசார் அனுபவத்தோடு திறந்துவிட்ட பார்வைகள், நான் சார்ந்த இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டுமென என்னை நிர்பந்தித்தபடியே இருந்தன. அதன் காரணமாகவே எழுத வந்தேன்.

யார் இந்தக் கடலின் மக்கள்? “கடல் தேவதையின் குழந்தைகள், எல்லையற்ற செல்வத்தின் உரிமையாளர்கள்’’ என்று தகழி அழகாய்ச் சொன்னார். ஆனால், இன்றைய நிலையில் யதார்த்தம் வேறாய் இருக்கிறதே! இவர்களின் வாழ்வு மட்டும் ஏன் மற்ற சமவெளி வாழ்விலிருந்து இவ்வளவு வேறுபட்டு நிற்கிறது?

சுயசார்புப் பொருளாதாரமாக இயங்கியபடி, காலகாலமாக தேசத்தின் கடலோர எல்லைகளையும், தங்கள் வாழ்வின் மூலமாகவே காக்கும் இந்த மக்கள் பற்றிய புரிதல் சமவெளிச் சமூகத்துக்கு இல்லையே ஏன்? இவை என்னுள் இயல்பாய் எழுந்த கேள்விகள்.

காலனியத்துக்கு முன்னான காலத்திலிருந்து இன்றுவரை தேசத்தின் பாதுகாப்பிலும், கடலுணவு உற்பத்தியிலும், கடல்வழி வாணிபத்திலும் பெரும் பங்களிப்பைச் செய்யும் பாரம்பரிய கடலோரச் சமூகங்கள் தொடர்ச்சியாய் சமவெளிசார் ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ளப்படவே இல்லை. காரணம், பதிவு செய்யப்படாத வாழ்க்கை, இல்லாத வாழ்க்கை.

நிலையில்லாத கடலில், தங்கள் ஆளுமையை, வீரத்தை நிரூபித்த இந்த மக்களால், அதே ஆளுமையை, அதனால் ஏற்படும் பொருளாதார உயர்வை, அரசியல் அதிகாரத்தை நிலத்தில் எட்டவே முடியவில்லை. தாங்கள் அன்றாடம் பாடுபடும் கடல் இவர்களுக்கு தொழில்வெளி, ஆனால் நிலமோ கொண்டாட்டவெளி. நிலத்தில் நடக்கும் வாழ்வில், இறப்போ, பிறப்போ, திருமணமோ எல்லாமே இவர்களுக்குக் கொண்டாட்டம்.

தங்களின் தியாக உழைப்பு, நிலத்தில் எப்படியெல்லாம் சூறையாடப்படுகிறது என்பது பற்றிய சிந்தனையே இல்லாத வாழ்க்கை. அன்றைய பொழுதின் அப்போதைய கணத்தில் வாழும் இந்த மக்கள், அரசியல் பிரதிநிதித்துவத்தையோ, ஆட்சியதிகாரத்தையோ நோக்கி நகரவேயில்லை. என்னுள் பாதிப்பை ஏற்படுத்திய பெரும் உண்மை இது.

சுனாமி, பெரும்புயல் போன்ற பேரழிவுகளின் உச்சத்திலும், தன் கையைத் தானே ஊன்றி எழும்புவதோடு மட்டுமல்லாது, இதரச் சமூகங்களின் இடர்பாடுகளிலும் அனிச்சையாய் கைகொடுக்கும் இந்தச் சமூகங்கள் பற்றிப் பதிவு செய்ய விரும்பினேன். இலக்கியம் என்பதே குரலற்றவர்களின் குரலாய் இருக்கவேண்டும் என்பது என்னளவிலான புரிதல்.

இந்தியத் தீபகற்பத்தில் தொடரும் கடலோரச் சமூகங்களுக்கான பிரச்சனை என்பது, அவர்கள் வாழ்வு பற்றிய அடிப்படைப் புரிதல் ஆட்சியாளர்களுக்கு இல்லாததும், பிரச்சினையின் அடிநாதமாக இருக்கும் உண்மையின் அருகில் சென்று பார்த்து அதற்கான தீர்வை ஆட்சி அதிகாரம் ஆராயாததும்தான். கடலோரச் சமூகங்கள் பழங்குடிகள், இயற்கையின் இடர்பாடுகளைக் கடந்து வாழ்வது அவர்களுக்குச் சாதாரணம்.

ஆனால், ஆதிக்க சக்திகளால் வளர்ச்சியின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டங்களால், செயற்கையாய் ஏற்படும் இடர்பாடுகள் அவர்கள் அறிந்திராதது. அதனாலேயே எதிர்கொள்ள முடியாதது.

‘ஆழி சூழ் உலகு’ வெளியான சூழலில், கதை நடந்த பகுதியை பார்க்க வேண்டுமென நாவலின் பதிப்பாளர் தமிழினி திரு. வசந்தகுமார் ஆசைப்பட, எனது சொந்த ஊரான உவரிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். இரால் மீன்கள் பிடிபட ஆரம்பிக்கும் ஆடி மாதத்தின் இறுதிக்கட்ட நாள்களில் ஒருநாள் அன்று.

நண்பகல் கடந்த வேளை, பெரிய அளவில் மீன்பாடு இல்லாததால் கட்டுமரங்கள் அனைத்தும் கரைபிடித்து ஓய்ந்திருந்த வேளை. ஒரே ஒரு கட்டுமரம் மட்டும் ஆழிக்கு வெலெங்கே* பாய் புடைக்க கரை நோக்கி வந்தபடியிருந்தது. ஆழியில் அலைகள் பனையளவு உயர்ந்து மடிந்து பேயாட்டம் போட்டபடி இருந்தன. கூடவே கடுமையான வாடைக் கச்சான்* காற்று.

அந்தக் கட்டுமரம் கரைபிடிக்க வேண்டுமானால் ஆழியைக் கடந்தே ஆகவேண்டும். பதட்டமான சூழல் புரிந்ததால், அருகில் நின்றிருந்த வசந்தகுமார் அண்ணனைத் தட்டி அங்கே பாருங்கள் என்றேன். பார்த்தவர், அனிச்சையாய் இரு கைகளையும் கன்னத்தில் வைத்தபடியே சொன்னார், ‘’அய்யோ, மக்களே…’’

காற்றும், கடலலையும் வீறுகொண்டு நிற்பதால் கட்டுமரத்தின் பாயைத் தட்டிய அவர்கள் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்குள் நுழைகிறார்கள், அடுத்த நொடியில் கட்டுமரத்தை பாயோடு தலைகீழாகத் தூக்கி வைத்துக் குத்துகிறது. எங்கும் நுரைத்து கிடக்கிறது.

பதறிப்போய் நின்றவரைத் திரும்பிக் கரையை பாருங்கள் என்றேன். அங்கங்கே கரையிலிருந்தவர்கள், வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் கடலில் பாய்ந்து ஆழிநோக்கி அவர்களைக் காப்பாற்ற நீந்துகிறார்கள். கண்களில் நீர்மல்க வசந்தகுமார் சொன்னார், “பழங்குடி மக்கள், இது அவர்கள் இயல்பு.”

சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த மெரினாப் புரட்சியின் இறுதிக் கட்டம், காவலர்கள் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த, உணவு குடிநீர் செல்வதை தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். தடையை மீறி அவர்களுக்கு உணவும், குடிநீரும் அளித்தது அப்பகுதியின் கடலோர மக்கள்.

போராட்டத்தின் உக்கிரத்தைக் காட்டப் போராட்டக்காரர்கள் கடலில் இறங்க, அவர்களுக்கு பாதுகாப்பாய் இவர்களும் கடலில் இறங்கி அதனாலேயே பாதிப்புக்கும் உள்ளானார்கள். காரணம், தம் கண்ணெதிரில் பாதிக்கப்படுபவர்களைக் காக்கும் இயல்பான குணம்.

சமீபத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட கேரளத்தில் முதல் ஆளாய் களத்தில் நின்றது கடலோரச் சமூகம். மீனவர்கள், எங்கள் முதல் ராணுவம் என்ற முதல்வர் திரு.பினராய் விஜயனின் பாராட்டும், காப்பாற்றப்பட்ட மக்களின் தொடர் நன்றி தெரிவித்தலும் அவர்களின் தியாகத்துக்கு கிடைத்த பரிசு.

ஆனால் பேரழிவுதான் ஒரு பெரும் இனக் குழுவை அடையாளம் காட்டுமென்றால், அது ஜனநாயகத்தின் பெரும் இழுக்கு.

சமூகத்தின் ஒவ்வொரு புற அசைவிற்கும் வலுவான அகக் காரணிகள் காரணமாய் இருக்கின்றன. இது என்னுடைய ஆய்வுகளில் நான் கண்கூடாக கண்ட உண்மை.

சமீபத்தில் மண்டபத்துக் கடற்கரையில் விடிகாலைப் பொழுதொன்றில் அமர்ந்திருந்தேன், நல்ல குன்ன வாடைக் குளிர், பாதுகாப்பாய் காதுகளை மறைத்து மப்ளர் கட்டியிருந்தோம். எங்கும் சாம்பல் பூச்சாய்க் கிடந்தது. என்னை அங்கு வரவழைத்திருந்த கிராமவங்கி அதிகாரி ஒருவர், கூப்பிடு தூரத்தில் நாலைந்து பேர் அமர்ந்து அந்த அதிகாலை பொழுதிலேயே மது அருந்துவதை காட்டிப் பரிகசித்தார்.

பொழுது விடிவதற்கு முன்னாலேயே இப்படிக் குடிக்கிறார்கள், பின் குடும்பம் எப்புடி உருப்படும், வங்கிக் கடனை எப்படி அடைப்பார்கள் என ஆதங்கப்பட்டார். நண்பரை அழைத்தபடி நெருங்கிச் சென்று பார்த்தால், அவர்கள் அணிந்திருந்த உடைகளில் ஈரம் சொட்டியபடியிருந்தது. அருகில் சென்று, ஏன் இப்படி விடியப் பொறுக்காமல் குடிக்கிறீர்கள் என்று கேட்டேன்.

“நாலு நாளா தங்குகடல் தொழில், குன்னவாட குளிருக்குள்ள கையி, காலு எல்லாம் வெறைச்சிப் போயி இப்பதாம் வந்தோம், ஒரு கண்ணுக்குத் தூங்குனாத்தாம் ராத்திரி உடன்கடல் தொழில் பாக்க முடியும்.” இவர்கள் உழைப்பின் களைப்பை மறப்பதற்காக குடிப்பவர்கள், உடல் சோர்வு நீக்கி திரும்பவும் உழைக்கக் காத்திருப்பவர்கள். கிராம வங்கி அதிகாரியும் நானும் வாயடைத்துத் திரும்பினோம்.

ஓக்கிப் புயலில் 600க்கு மேற்பட்ட ஆழ்கடல் மீனவர்களைக் காணவில்லை. இக்கட்டான அந்தச் சூழலில் அந்த மக்கள் அரசிடம் கேட்டதெல்லாம், சகல சக்தியையும் பயன்படுத்தி, கடலில் தூக்கி எறியப்பட்டவர்கள் தங்கள் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய அந்த அரிதான தருணத்தில் காப்பாற்றுங்கள் என்பதுதான்.

“இருப்பதிலேயே பெரிய கப்பலை அனுப்பித் தேடினோம்” என்று கபடமாய்ச் சொன்னார் பொறுப்பிலிருக்கும் அமைச்சர். அக்கறையோடு தேடியிருந்தால் பலரது உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்பது கடல் மக்களின் வாதம். நிலம் சார்ந்த இழப்பைத் தாராளமான நிவாரண உதவியால் ஈடு செய்துவிட முடியும். ஆனால் கடலில் பறிபோன உயிர்களை எப்படி ஈடுசெய்வது? இறந்தவர்களோ வலுவான ஆண்கள்! அவர்களை இழந்த பெற்றோர், மனைவி, குழந்தைகளின் வருங்காலம் என்னவாகும்?

திரும்பத் திரும்ப எவ்வளவோ இழப்பைச் சந்தித்த பிறகும் பேரிடர் மேலாண்மை என்பது வருமுன் காப்பதாக இல்லை. காரணம், அக்கறையின்மை. வானிலையைத் துல்லியமாய் கணிக்கத் தவறியதும், இக்கட்டான சூழலில் அக்கறையான துரிதம் காட்டாததுமே பெரும் உயிரிழப்புக்கான காரணம்.

பேரிடரில் அக்கறையோடு துணை நிற்காத அதிகார வர்க்கமோ, அதன் பின்னான காலங்களில் இல்லாத வானிலையைக் காரணங்காட்டி, தொழிலை நிறுத்திப் பெரும் பொருளாதார இழப்பிற்கும் வழிசெய்கிறது.

ஒரு காலத்தில் நீரில் விழுந்து மிதந்த ஒரு மரத்துண்டின் துணைகொண்டு கடலில் பயணித்தவர்கள் தமது படைப்பூக்கச் சக்தியால், தேவை கருதி படகில் பல்வேறு வடிவம் கண்டார்கள். உணவு உற்பத்தியில் விவசாயத்துக்கு இணையாய் பங்களிப்புச் செய்து கரைக்கடல், அண்மைக் கடல், ஆழ்கடல் வேட்டம் நடத்திச் சுயசார்புப் பொருளாதாரம் காத்தார்கள்.

கடலைத், தங்களது தாயாய் மதித்துப் போற்றினார்கள். கட்டுமரமாய், வள்ளமாய், சரக்குகளைச் சுமந்து செல்லும் தோணியாய், பாய்மரக் கப்பலாய் பல்வேறு தொழில்சார் வடிவம் கண்டார்கள். இந்தக் கடல் தேவதையின் மக்கள் வகுத்த வழியில்தான் இன்றைய வணிகக் கப்பல்கள் பயணிக்கின்றன.

இவர்கள், தங்கள் படைப்பூக்கத்தை இழந்து தவித்ததன் காரணம் என்ன? காலனியச் சுரண்டல் ஒருபுறமென்றால், சுதந்திரத்துக்குப் பின்னான ஆட்சியதிகாரத்தின் தொடர்ச்சியான புறக்கணித்தலும், இந்தப் படைப்பூக்கச் சமூகங்களின் தொடர் வீழ்ச்சிக்குக் காரணமாய் இருக்கிறதே.

கடலோரச் சமூகங்களின் இன்றைய தலைமுறைக்கும் மாற்றத்தின் தேவை புரியவேயில்லை. கடலோரமெங்கும் இருக்கும் தேக்கநிலையால், அடுத்தகட்ட நகர்வே அரிதாய் இருக்கிறது. காலத்துக்கு ஏற்றார் போல் வாழ்க்கையில், மனநிலையில், தொழில் முறையில், பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படாததன் விளைவு வீழ்ச்சி என்பதை கொற்கை நாவல் படம் பிடித்துக் காட்டியது. இறக்குமதியான தொழில்நுட்பங்களால் தீபகற்பத்தில் பெருகிய மீன் உற்பத்தி, கடலோரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கியது. ஆனால் கூடவே பாரம்பரிய மீனவர், தொழில்முறை மீனவர், வணிக மீனவர் என்ற பாகுபாட்டுக்கும் வித்திட்டுவிட்டது. தீபகற்பமெங்கும் வணிக மீனவரின் அட்டகாசம், கண்காணிப்பற்ற அரசு நிர்வாகத்தால் குறைந்து வருகிறது மீன்வளம்.

பெரும் அரசியல் விளம்பரங்களோடு கடற்கரையில் கட்டமைக்கப்படும் எந்தத் திட்டமும், கடலோரச் சமூகங்களுக்கானதாய் இல்லை. இயற்கைக்கு இடையூறு செய்யும் திட்டங்களால், தொடரும் மணற் கொள்ளையால் ஏற்படும் கடலரிப்புகளிலிருந்து பாதுகாப்பு வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தால், தடுப்புச் சுவர் அமைக்கிறோம் என்ற பெயரில் பாறாங்கற்களை அள்ளி அவர்கள் முகங்களில் வீசாத குறைதான்.

ஒற்றுமையான செயல்பாட்டால்தான் அரசை நிர்பந்தித்து ஆக்கபூர்வமான திட்டங்களைக் கடற்கரையில் செயல்படுத்த முடியும் என்ற புரிதல் கடலோர மக்களுக்கு வந்தே ஆகவேண்டும்.

தென் தமிழகக் கடற்கரையில் ஆழமாய் வேரூன்றி, இன்று ஆலவிருட்சமாய் வியாபித்து நிற்கும் கத்தோலிக்க கிறிஸ்தவமும், மக்களுக்கான பெரும் பிரச்சனைகளின் உச்சத்திலும்கூட, தங்களைச் சார்ந்து செபிக்கச் சொல்லிக் கொடுத்ததே அல்லாது, சாதுர்யமாய் அதை எதிர்கொள்ளக் கற்றுத் தரவில்லை.

கல்விக் கண் திறந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், தரமான தலைமைகள் சமூகங்களிலிருந்தே ஏற்பட்டு அரசியல் பிரதிநிதித்துவம் பெற்று விட்டால், தங்களுக்கான முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சுகிறது கத்தோலிக்கம். மக்களுக்கான சுகாதார, கல்வி மற்றும் பொருளாதார அடிப்படைத் தேவைகள் காத்துக்கிடக்க, மதத்தின் பெயரால் அப்பாவிச் சனங்களை சிந்திக்க விடாமல் செய்வதோடு மட்டுமல்லாமல், திருவிழாக்கள் என்ற பெயரில் அவர்கள் உழைப்பையும் கரைத்துக் கோடிகளாய்க் கொட்ட வைத்து, நாளும் கடற்கரை ஊர்களில் தொடர்கிறது தேவாலயக் கட்டுமானம். தென் தமிழகக் கடலோர மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய யதார்த்தம் இது.

கடலோரப் பிரதேசங்களை, பெரும் பொருளாதார மண்டலங்களாக, வேலைவாய்ப்புக் கேந்திரங்களாக அரசால் உருவாக்க முடியும். எதிர்காலத் திட்டத்தோடு தேசமெங்கும் உள்நாட்டு மீன்பிடிப்பு, கரைக்கடல், அண்மைக் கடல், ஆழ்கடல் மீன்பிடிப்புகளை அக்கறையோடு கண்காணித்து மீன்பிடி துறைமுகங்களில் சேமிப்பு, பதனிடுதல், சந்தைப் படுத்துதல் போன்ற உள்கட்ட அமைப்புகளை உருவாக்கி முன்னேற்ற முடியும்.

தீபகற்பத்தைச் சுற்றியுள்ள ஆளில்லாத் தீவுகளை மீன் உற்பத்திப் பண்ணைகளாகவும், சுற்றுலாத் தளங்களாகவும் மாற்றிப் பெரும் வேலை வாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பெற முடியும்.

இந்தியத் தீபகற்பமெங்கும் பாரம்பரியமாய் பாய்மரக் கப்பலோட்டிய சமூகமும் அவர்களது விலைமதிக்க முடியாத அனுபவ ஞானமும் இருக்கிறது. அவர்களை இன்றைய தொழில்நுட்ப வசதியோடு அடுத்த கட்டமான கரையோர நடைசெய்யும் சிறு சரக்கு சேகர கப்பல்களின் உரிமையாளர்களாய் மாற்றி, சிறிய துறைமுகங்களிலிருந்து பிரதான துறைமுகங்களுக்கு சரக்குகளைக் கொண்டு செல்ல வழிவகை செய்யமுடியும்.

இதன் மூலம்தான் தற்போது வெகு விமரிசையாக முன்னெடுக்கப்படும் சாகர்மாலா திட்டம், தீபகற்பத்தின் பிராந்திய மலர்களாய் மேற்குக் கடற்கரையிலும், கிழக்குக் கடற்கரையிலும் அமைந்திருக்கும் துறைமுகங்களை கடலோரச் சமூகங்கள் என்ற சமூகநார் கொண்டு இணைத்த கடல் மாலையாக உருவாக முடியும்.

தீபகற்பமெங்கும் வாழும் பாரம்பரிய பங்களிப்புச் சமூகமான நீர் தேவதையின் மக்கள் குறித்த பெருங் கவலையும் அக்கறையும் எனக்கு இருக்கிறது. கடலோரச் சமூகங்களின் வாழ்வு குறித்த புரிதல் ஏனைய நிலம்சார் சமூகங்களுக்கு இல்லை எனக் குறை கூறுவதை விடுத்து, அந்தப் புரிதலை ஏற்படுத்த நான் என்ன செய்தேன் என்பதே, என்னையே நான் இன்று கேட்கும் கேள்வி.

அதிகார மையங்களைக் குறை கூறும் அதே வேளையில், சமூகம்சார் பிரச்சனைகளையும், நம்பிக்கைசார் குறைகளையும் களைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என உறுதியாய் நம்புகிறேன். அதற்கு என் போன்றோரின் தொடர் இலக்கியச் செயல்பாடுகள் கண்டிப்பாய்த் துணை நிற்கும்.

இந்தச் செயல்பாடுகள் மூலம் ஏனைய நிலப்பரப்பின் மக்களோடு உரையாடல் நடந்து, பரஸ்பர புரிதல் சாத்தியமாகி மண்சார், மக்கள்சார் திட்டங்கள் உருவாகும், சட்டங்கள் இயற்றப்படும், ஜனநாயக மணி ஓசை கடலோரத்திலும் கேட்கும்.

(ஆர். என். ஜோ டி குருஸ், தமிழ்ச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்ட கடற்கரை ஊரான உவரியை சேர்ந்தவர்! கடல்சார் மக்களின் வாழ்வியலை, தேவைகளை, உரிமைகளை, கடமைகளை தன் படைப்புகளில் உணர்த்தி வருபவர்! இவரது கொற்கை புதினத்திற்காக 2013-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார். இவர் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.)

குறிப்புகள்:

ஆழி– கடலில் தொடர்ச்சியாக பாறைகள் அமைந்திருக்கும் இடம்! இங்கிருந்து அலைகள் உருவாகி, கரை நோக்கி வரும்! பெரும்பாலும் எப்போதுமே கடந்து செல்ல கடினமான பகுதி இது. கிராமத்து மீனவர்கள் தினசரி மீன்பிடித் தொழிலுக்காக இந்த எல்லையை கடந்து சென்றாக வேண்டும்.

வெலெங்கே – கடலில் நீண்ட தூரத்தை குறிப்பிட கடல்சார் மக்கள் உபயோகிக்கும் உள்ளூர் மொழிச் சொல்.

ஆழிக்கு வெலெங்கே - ஆழ் கடலில் ஆழி பகுதிக்கும் அப்பால்!

வாடைக் கச்சான் – வட மேற்கில் இருந்து தென் கிழக்கு நோக்கி வீசும் காற்று

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment