சவுக்கடிகளை காணாது நகர்ந்த படைப்புலகம்: இரா.நாறும்பூநாதன்

Writer R Narumpu Nathan: சின்ன தவறுகளுக்குகூட பெரிய தண்டனைகளை நிலச்சுவான்தார்கள் கொடுத்தார்கள். இது பற்றியெல்லாம் தஞ்சை பகுதி எழுத்தாளர்கள் எழுதவே இல்லை.

தமிழ் இலக்கிய உலகின் போக்கு குறித்து எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் இந்தப் பகுதியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் வாசகர்களுக்காக பேசுகிறார். அதன் தொடர்ச்சி இது…

பாரதியார், புதுமைப் பித்தன் என படைப்பாளிகள் கால ஓட்டத்துடன் இணைந்து படைப்புகளை தந்திருக்காங்க. அதே சமயம், அந்த விழிப்புணர்வு இல்லாமலும் இருந்திருக்காங்க. நமக்கு எதுக்கு அரசியல்னு ஒதுங்கி இருந்தவங்களும் இருந்திருக்காங்க.

தஞ்சாவூருல பண்ணை அடிமைகள் வேலைக்கு லேட்டா வந்தாலோ, சின்ன தவறு செய்தாலோ இத்தனை சவுக்கடிகள்னு கொடுக்கிற வழக்கம் இருந்தது. சாணிப் பாலும் கொடுத்து, சவுக்கடியும் கொடுப்பாங்க. அதெல்லாம் மிகக் கடுமையான அடக்குமுறை. சின்ன தவறுகளுக்குகூட பெரிய தண்டனைகளை நிலச்சுவான்தார்கள் கொடுத்தார்கள்.

இது பற்றியெல்லாம் தஞ்சை பகுதி எழுத்தாளர்கள் எழுதவே இல்லை. அந்தப் பகுதியில தான் சார்ந்த சமூகங்களில் பெண்களின் நிறைவேறாத காதல், வயது பொருந்தாத திருமணம் ஆகியவற்றை எழுதியிருக்காங்க.

+ பண்ணை அடிமைகள் வேலைக்கு லேட்டா வந்தாலோ, சின்ன தவறு செய்தாலோ இத்தனை சவுக்கடிகள்னு கொடுக்கிற வழக்கம் இருந்தது. சாணிப் பாலும் கொடுத்து, சவுக்கடியும் கொடுப்பாங்க.

+ இது பற்றியெல்லாம் தஞ்சை பகுதி எழுத்தாளர்கள் எழுதவே இல்லை. அந்தப் பகுதியில தான் சார்ந்த சமூகங்களில் பெண்களின் நிறைவேறாத காதல், வயது பொருந்தாத திருமணம் ஆகியவற்றை எழுதியிருக்காங்க.

சமூகத்துல நடக்கிற இது போன்ற அநீதிகளை எழுதாமல் ரொம்ப நுட்பமா காதல் சார்ந்து மட்டும் எழுதும் போக்கு சுதந்திரத்திற்கு பிறகு இடைப்பட்ட காலத்தில் இருந்தது. ஆனா அதைத் தாண்டி, புதுமைப் பித்தன் போன்றவங்க துன்பக் கேணி போன்ற கதைகளை எழுதியிருக்காங்க.

இங்கயிருந்து பிழைப்புக்காக இலங்கை தேயிலைத் தோட்டத்திற்கு சென்று கஷ்டப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மருதி மாதிரியான கதாபாத்திரங்களை வச்சு புதுமைப்பித்தன் கதை எழுதியிருக்கிறார். அதேபோல சுய ஜாதி எதிர்ப்பை புதுமைப் பித்தன் கதைகளில் பார்க்கலாம். உதாரணத்திற்கு , ‘நாசகாரக் கும்பல்’ என்கிற கதையை சொல்லலாம்.

இப்போ நிறைய படைப்பாளிகள் எழுதிக்கிட்டிருக்காங்க. நான் சிறுகதை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் பொதுவாக மக்களிடையே வாசிக்கும் பழக்கம் இல்லை. சமூக வலைதளங்கள் வந்த பிறகு பெரும் படைப்புகளாக வர வேண்டியவை எல்லாம், சிறு பதிவுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

புத்தகக் கண்காட்சிகள் தமிழ்நாட்டில் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் ஆர்வம் காட்டுவது உற்சாகம் அளிக்கிறது. புத்தகங்களை வாங்க வைக்கிறது பெரிய விஷயமா இருக்குது. வாங்கினதை படிக்க வைக்கிறது, அதைவிட பெரிய விஷயம். ஏன்னா, புத்தகங்களை வாங்கிய எல்லாரும் படிப்பதில்லை. அதுக்காக அறிமுகக் கூட்டங்களை வெளியீட்டு விழாக்களை பலரும் நடத்துகிறார்கள்.

ஒரு பரந்த வாசிப்பு மூலமாக மட்டுமே சமூகத்தை புரிந்து கொள்ள முடியும். இதுதான் நிறைய ஞானத்தைக் கொடுக்கும். வாசிப்பின் மூலமாக மட்டும்தான் ஒரு சமூகம் பண்பட்ட சமூகமாக மாறும்.

(பேசுவோம்)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Literature News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close