தலித்துகள் விவசாயம் வேலைகள் செய்பவர்களாக இருந்தாலும் அவர்களை அரசும் பொதுச் சமூகமும் விவசாயிகள், விவசாயக் கூலிகளாக கருதுவதில்லை, அவர்கள் இந்து மதத்தில் இருந்தாலும் அவர்கள் இந்துக்களாக கருதப்படாம ஒதுக்கப்படுவது ஏன் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
எழுத்தாளர், அறிவு ஜீவி, தலித் சிந்தனையாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர், அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர் பன்முக ஆளுமை கொண்ட ரவிக்குமார், 60 வயது அடைந்ததையடுத்து அவருடைய படைப்புகள், தமிழ் அறிவுச் சுழலில், அரசியலில் அவருடைய பங்களிப்புகளை மதிப்பீடு செய்து பாராட்டும் நோக்கில் ரவிக்குமார் 60 நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில், ரவிக்குமார் 60, ஐந்தாவது நிகழ்வு இணையவழியில் நடைபெற்றது.
இந்த நிகழ்சியில், முனைவர் பழனிகுமார் வரவேற்புரை ஆற்றினார், பேராசிரியர் அழகரசன், அ.ஜெயகநாதன், ஆய்வாளர் முருகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
ரவிக்குமார் 60 நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் அழகரசன், ரவிக்குமாருக்கும் தனக்குமான தனிப்பட்ட நட்பு குறித்தும் அவருடைய எழுத்துகள், பங்களிப்புகள், மொழிபெயர்ப்புகள் குறித்துப் பேசினார். அ.ஜெகநாதன், ரவிக்குமாரின் தலித்துகளும் நிலங்களும் என்ற புத்தகத்தை முன்வைத்துப் பேசினார். ஆய்வாளர் முருகன், நிறப்பிரிகை பத்திரிகையில் ரவிக்குமாரின் பங்களிப்புகள், அவருடைய படைப்புகள் குறித்துப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியி, ஏற்புரை ஆற்றிய எழுத்தாளர் ரவிக்குமார் கூறியதாவது: ஆய்வாளர் முருகன் நிறப்பிரிகை பற்றி பேசியது பழைய நினைகளை கண்முன்னால் கொண்டுவந்ததாகக் கூறினார். நிறப்பிரிகை முதலில் 4 பேர்தான் பேசி கொண்டுவந்தோம். பொதியவெற்பன், ஆசிரியர் குழுவில் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கூறியதால் முதல் இதழுக்கு பிறகு அவருடைய பெயர் போடப்படவில்லை. எழுத்தாளர் பொ.வேல்சாமி நிறப்பிரிகை பத்திரிகையின் உள்ளடக்கம், என்ன வரவேண்டும் என்பது பற்றிய விவகாரங்களில் ஈடுபடவில்லை. நிறப்பிரிகைக்கு அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். நிறப்பிரிகை அச்சு செலவுக்கு பணம் கொடுத்து உதவினார். நானும் மார்க்ஸும்தான் நிறப்பிரிகையின் உள்ளடக்கம் என்ன வரவேண்டும் என்பது முடிவு செய்தோம்.
நான் அப்போது பாண்டிச்சேரியில் வங்கியில் வேலை செய்தேன். நிறப்பிரிகை அச்சிடுவதற்காக பாண்டிச்சேரியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்தில் வந்து இரவு தங்கி இதழ்க்கான வேலை பார்த்து சென்றது நினைவில் இருக்கிறது. அப்போது எல்லாம் இன்று இருப்பது போல தொழில்நுட்பம், அதையெல்லாம் இப்போது நினைத்தால், சாகசம் போலவும் சிரிப்பாகவும் இருக்கிறது.
அழகரசன், அவருடைய அண்ணன் அருளப்பன் பற்றி பேசியது பழைய நினைவுகளை மீண்டும் மனதுக்குள் கொண்டுவந்தது. அழகரசன் பி.எச்டி படிக்கும்போது ஆய்வுக்கு தேவையான பொருட்களை அவர்தான் தேடிப்பிடித்து ஜெராக்ஸ் போட்டு புத்தகம் மாதிரியே பைண்டிங் செய்து அழகரசனுக்கு ஒன்றும் எனக்கு ஒன்றும் தருவார். அந்த புத்தகங்கள் இன்றும் என்னிடம் இருக்கிறது. அவை இப்போதும் குறிப்பெடுப்பதற்காக படிக்கிற புத்தகங்களாக உள்ளன.
அ.ஜெகநாதன் தலித்துகளும் நிலங்களும் நூல் பற்றி பேசியது குறித்து பேசினார். முதலில் நான் தலித்துகளும் நிலங்களும் புத்தகத்தை முதலில் 400-500 பக்கங்களுக்கு ஒரு பெரிய நூலாகத்தான் திட்டமிட்டிருந்தேன். அத்தியாயங்கள் எல்லாம் பிரித்து திட்டமிட்டிருந்தேன். ஆனால், பல அதிக பக்கங்கள் கொண்ட நூல்கள் படிக்கப்படாமல் போகிறது. அதனால், சிறு நூலாக எழுதினேன்.
தலித்துகளும் நிலமும் பற்றி பேசும்போது, பஞ்சமி நிலம் மீட்பு பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இது தலித்துகளிடம் அந்த காலத்தில் இருந்தே நிலம் இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் வந்துதான் முதலில் நிலம் கொடுத்தார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அப்படி இல்லை. அவர்களிம் நிலம் இருந்தது.
முதலில் விவசாய வேலைகள் செய்பவர்களே நிலங்களை வைத்திருந்த நிலையில், பிற்காலச் சோழர்கள் காலத்தில்தான், நிலங்கள் பிராமணர்களுக்கும் கோயில்களுக்கும் கொடுக்கப்பட்டன. விவசாய வேலைகள் செய்யாதவர்களுக்கு விவசாய நிலங்கள் கொடுக்கப்பட்டன. இதனால், விவசாய வேலை செய்பவர்களை நிலம் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. விவசாயக் கூலிகளாக்கப்பட்டனர். பின்னர், இங்கே உள்ள சாதியம் அவர்களை நிலம் இல்லாதவர்களாகவே வைத்திருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிலம் கொடுக்கப்பட்டதைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். அவர்களும் ஏற்கெனவே இங்கே இருந்த சாதி அமைப்பை பின்பற்றி தலித்துகளுக்கு நிலங்கள் அளிக்கவில்லை என்பதை சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும்.
தலித்துகள் விவசாய வேலைகள் செய்பவர்களாக இருண்தாலும் அவர்கள் விவசாயிகளாக உள்ளடக்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் முதல்முறையாக விவசாயத்திற்கென தனி பட்ஜெட் போடப்பட்டது. நான் மிகவும் எதிர்பார்த்தேன். விவசாய பட்ஜெட்டில் விவசாயக் கூலிகள் பற்றி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். விவசாய பட்ஜெட்டில் விவசாயக் கூலிகள் பற்றி ஒன்றுமே இல்லை. நான்தான் தவறவிட்டுவிட்டோனோ என்று தோழர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்டேன். இது பற்றி அவர்கள் விவசாயப் பிரிவி அணி கவனிப்பதாகக் கூறினார். பிறகு, சிபிஐயிலும் கேட்டேன். அவர்களும் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று கூறினார்கள்.
அதைப் பற்றி, ஒரு பதிவு எழுதினேன். அதை சில இணையதளங்களில் வெளியிட்டனர்.
இப்படி, விவசாயக் கூலிகளாக உழைக்கும் மக்களை விவசாயத்தில் உள்ளடக்குவதில்லை. அதே போல, இவர்கள் இந்துக்களாக இருந்தாலும் இந்துக்களில் உள்ளடக்கப்படுவதில்லை. விவசாயக் கூலிகளாக இருக்கும் மக்கள் விவசாயத்திலும் உள்ளடக்கப்படுவதில்லை, தொழிலாளர்கள் நலத்துறையிலும் உள்ளடக்கப்படுவதில்லை. இந்து மதத்தில் அவர்கள் இந்துக்களாகவும் உள்ளடக்கப்படுவதில்லை. சிறுபான்மையினரிலும் உள்ளடக்கப்படுவதில்லை.
சிற்றிதழ் காலத்தில், தமிழவன், நாகார்ஜுணன், போன்றவர்கள் நவீனத்துவம் பின் நவீனத்துவம் விவாதங்களை நடத்தினார்கள். அப்போது, எதிர் நவீனத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால், அதைப் பற்றி உறுதியான முடிவுகளுக்கு நாங்கள் வரவில்லை. ஆனால், இந்த சிற்றிதழ்களின் அறிவுத் தளத்தில் இருந்த எதிர் நவீனத்துவம்தான் இன்றைக்கு சனாதன ஆதரவாளர்களாக திகழ்கின்றனர். இந்த எதிர் நவீனத்துவம் கருத்துகள் பற்றி விவாதிக்கப்பட வெண்டும்” என்று கூறினார்.
ரவிக்குமார் 60 நிகழ்ச்சியின் முடிவில், பேராசிரியர் ஜெ.பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.