2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சி.எஸ்.லட்சுமி எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் அம்பை தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான எழுத்தாளர். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, சக்கர நாற்காலி, பயன்படாத பாதைகள் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 1960களில் இருந்து எழுதி வரும் அம்பையின் “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்படுகிறது.
கோவையில் 1944ம் ஆண்டு பிறந்த சி.எஸ். லட்சுமி, தற்போது மும்பையில் வசித்து வருகிறார். சிறுகதைகள் மற்றும் புனைவுகளை அம்பை எனும் புனை பெயரில் எழுதிவருகிறார். கட்டுரைகளை இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி என்ற பெயரிலேயே எழுதி வருகிறார். தமிழ் இலக்கிய உலகில் அம்பையின் சிறுகதைகள் காத்திரமான பெண்ணிய எழுத்துகளாக வாசிக்கப்படுகின்றன. அம்பை, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் ஆய்வுத் துறையில் சுயாதீன ஆராய்ச்சியாளராக இருந்து வருகிறார்.
எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழ் எழுத்தாளர்கள், வாசகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய சாகித்ய அகாடமி நிறுவனம் சிறார் இலக்கியப் பிரிவில் வழங்கும் பால சாகித்ய புரஸ்கர் விருது எழுத்தாளர் மு. முருகேஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் மு. முருகேஷ் ஹைக்கூ கவிதைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேஷுக்கு 2021ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கபட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”