தமிழ் சங்க இலக்கியங்களைத் ‘திராவிடக் களஞ்சியம்’ தமிழக அரசு வெளியிடுவதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறியிருப்பதாவது: “சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு ‘திராவிடக் களஞ்சியம்’ எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும்.
மனு ஸ்மிருதியிலிருத்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான, ‘திராவிடம்’ என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத ‘திராவிடம்’ எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது.
ஆகவே, சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளர்.
அதே போல, தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்கு ‘திராவிடக் களஞ்சியம்’ எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும்.
மனு ஸ்மிருதியிலிருத்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான, ‘திராவிடம்’ என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாத ‘திராவிடம்’ எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது.
ஆகவே, சங்கத்தமிழ் இலக்கியங்களை ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை, ‘தமிழ்க்களஞ்சியம்’ என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ-வும் நடிகருமான கருணாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சங்கத்தமிழ் நூல்களுக்குத் "திராவிடக் களஞ்சியம்" என்று இனமறைப்புத் தலைப்புக் கொடுக்காதே! "தமிழ்க் களஞ்சியம்" என்றே வெளியிடு!” எனத் தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசு சங்க இலக்கியத் தொகுப்புகளை திராவிடக் களஞ்சியம் என்று வெளியிடுவதாகக் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் கருத்து கேட்டது. அவர் கூறியதாவது: “ஒரு காலத்தில் திராவிடம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அன்றைய புரிதல் அதுதான். பிரிட்டிஷார் அந்த சொல்லை பயன்படுத்தினார்கள். நாமும் அதை பயன்படுத்தினோம். நாம் ஒரு வழக்கமான தமிழ்த்தேசியர்களைப் போல, திராவிடம் என்ற அடையாளம் உருவான காலகட்டத்தையே மனதில்கொள்ளாமல், திராவிடம் என்று சொல்லி வசைபாட வேண்டியதில்லை. அதே நேரத்தில், நம்முடைய சம காலத்தில், தமிழ் வேறு தெலுங்கு, மலையாளம், கன்னடம் வேறு என்ற மரபு உருவாகி நிலைத்துவிட்ட விட்ட பின்னால், தமிழ்மொழியை தமிழ் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தேவையற்ற குழப்பத்தையும் தேவையற்ற சிக்கலையும் ஒரு அரசே உருவாக்கக் கூடாது.
அன்றைக்கு திராவிடம் என்ற ஒரு பொது சொல்லால் இவர்கள் எல்லாம் புரிந்துகொண்டிருந்தார்கள் என்று நாம் விளக்கிக்கொள்ளலாம். ஆனால், இவ்வளவு நடந்த பிறகு, சமகாலத்தில் தமிழை தமிழ் என்று சொல்லிவிட்டு போகலாமே அதிலென்ன இருக்கிறது.” என்று கூறினார்.
இல்லாத ஒரு திராவிடம் இன்று குறிப்பிட்டு தமிழ்த் தேசிய கடும்போக்குவாதிகள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று ஸ்டாலின் ராஜாங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது: “பொதுவாக அது அவ்வளவு பொருத்தமான விமர்சனம் அல்ல. திராவிடம் என்பதை வெறும் மொழிக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளையில் திராவிடம் என்பது தமிழைக் குறிப்பதற்கான இன்னொரு பேர்தான். அதை குழப்பியது திராவிட இயக்கம்தான். எனவே திராவிட இயக்கத்தைப் பற்றிய விமர்சனத்தைதான் இந்த வார்த்தையினுடாக அவர்கள் செய்கிறார்கள். மற்றபடி, திராவிடம் என்பது ஒவ்வொருத்தருக்கும் அவர்களுக்கு ஏற்றமாதிரி கடந்த காலத்தில் பொருள்பட்டிருக்கிறது. திராவிடம் என்ற சொல் பெரியாருக்கு ஒரு விதமாக பொருள்பட்டிருக்கிறது. அயோத்திதாசருக்கு ஒருவிதமாக பொருள்பட்டிருக்கிறது. தலித்துகளுக்கு ஒருவிதமாக பொருள்பட்டிருக்கிறது. அதனால், திராவிடம் என்பதை ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரியாக பொருள் கொண்டார்கள். உதாரணத்துக்கு தலித்துகள் ஆதி திராவிடர்கள் என்று பொருள்கொண்டார்கள். இது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு பொது சொல்லாக அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். பெரியார் அதை ஒரு மாதிரி விளக்கினார். அதனால், திராவிடம் என்ற சொல்லையே எதிர்ப்பது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
திராவிடம் இயக்கம் திராவிடம் என்பதை எப்படி விளக்கியது. அதனால், என்னமாதியான பிரச்னைகள் வந்தது என்று அவர்கள் ஒரு விமர்சனத்தை வைக்கிறார்கள் என்றால் அது நியாயமானது. ஆனால், இங்கே என்ன பிரச்னை என்றால், திராவிடத்தை எதிர்க்கிற இடத்தில் இத்தகைய தமிழ்த்தேசியர்கள் வைப்பது எதுவாக இருக்கிறது என்றால், திராவிடத்தைவிட எந்த வகையிலும் முற்போக்காக இல்லாத ஒரு தமிழ் அடையாளத்தை வைக்கிறார்கள். திராவிடத்திடம் ஒரு பிரச்னை இருக்கிறது என்பது உண்மைதான். அதில் ஒரு குழப்பத்தை திராவிட இயக்கம் உண்டுபண்ணியிருக்கிறது. ஆனால், திராவிடம் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு பேசிய திராவிட இயக்கத்திடம் இருந்த ஒரு சமூக அக்கறை இருந்தது இல்லையா. அந்த அக்கறை திராவிட அடையாளத்தை புறக்கணித்துவிட்டு தமிழ்த்தேசியர் முன்வைக்கிற தமிழ் அடையாளத்தில் திராவிட இயக்கத்தினர் கொடுத்த உள்ளடக்கம் இல்லை. என்னைக் கேட்டால், திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஒரு தலித் பார்வையில் ஒரு பெரிய வித்தியாசமும்ம் இல்லை.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.