த.வளவன், மூத்த பத்திரிகையாளர்
காதல் பாடல்களைப் படைக்கின்ற பெண்பாற் புலவர்கள், தன் அனுபவங்களை தன் அனுபவமாகவே படைத்துச் சிறக்கின்றனர். ஆண்பாற் புலவர்கள் மற்றவர் அனுபவத்தைப் பாடும் போக்கினைக் கையாளத் தன் அனுபவத்தைப் பெண் படைப்பாளிகள் வெளிப்படுத்தி நிற்கின்றனர். இதற்கு மிக முக்கியமான அடையாளமாக விளங்குவது பெண்பாற் புலவர்களின் பாடல்களில் காணப்படும் தன்மை சார் விளிகள் ஆகும்.
‘அருவி வேங்கை பெருமலை நாடற்கு
யான் எவன் செய்கோ, என்றி யான் அது
நகை என உணரேன் ஆயின்
என் ஆகுவைகொல் நன்னுதல் நீயே”
என்ற பாடலில் யான், என் ஆகிய தன்மை இடச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. இத்தன்மையிடச் சொற்கள் பெண்பாற்புலவர்களின் அனுபவ வெளிப்பாட்டின் அடையாளங்கள் ஆகும்.
‘‘யானே ஆண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தன் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே”
என்ற பாடலில் தலைவி நான் இவ்விடத்தில் உள்ளேன். என் நலம் கடற்கரை சோலையிடத்தில் உள்ளது. அங்குதான் தலைவனும் தலைவியும் முதன் முதலாகச் சந்திப்பு நிகழ்த்தியது. தலைவன் தன் ஊரில் இருக்கிறான். எம்மிடம் இருந்த நட்பானது பலர் அறியும் பழமொழியாகி அலராகி விட்டது என்கிறாள் தலைவி.
‘‘கூன்முள் முண்டகக் கூர்ம் பனி மாமலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூமணற்சேர்ப்பனை
யானும் காதலெம் யாயும் நனி வெய்யள்
எந்தையும் கொடிஇயர் வேண்டும்
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே”
என்ற பாடலில் யான், யாய், எந்தை ஆகிய சொற்கள் தன்மையிடம் சார்ந்த சொற்கள் ஆகும். இப்பாடல் தன் அனுபவமாக மிளிர்வது என்பதற்கு தன்மையிடப் பெயர்கள் அடையாளமாகின்றன.
‘‘மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்ந்த
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே”
என்ற பாடலில் யான், காணேன் போன்ற சொற்கள் தன்னனுப வெளிப்பாடுகள்.
இவ்வகையில் தனக்கான விடுதலை, உரிமையை நாடி தன்னனுபவ வெளிப்பாடுகளை வெளியிடுவனவாகக் குறுந்தொகையின் பெண்பாற் புலவர் பாடல்கள் அமைந்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"