மணிமண்டப கோரிக்கை: யார் இந்த இளவெயினி?

குறமகள் இளவெயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பெண்பாற் புலவரான இளவெயினி புறநானூறு 157வது பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்க இலக்கிய தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

naam tamilar katchi, seeman, Elaveyini, sangam age woman poet Elaveyini, நாம் தமிழர் கட்சி, சீமான், இளவெயினி, சங்க இலக்கியம், tamil sangam literatue, kuravas, kurinji land

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சங்ககால பெண்பாற் புலவர் இளவெயினிக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து, இளவெயினி யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “குறிஞ்சி நில தமிழ்த் தொல்குடி மரபினைச் சேர்ந்த சங்ககால பெண்பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ் தொண்டினை நினைவுகூரும் வகையில் யாதொரு நினைவு சின்னமும் தமிழ்நாட்டில் இதுவரை அமைக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. தமிழ்த்தொண்டு புரிந்த அயல்நாட்டவருக்கும் சிலை, மணிமண்டபம் உள்ளிட்டவை அமைத்து போற்றும் தமிழ்நாட்டில், தமிழ் வளர்த்த ஆதிப்பழங்குடி மண்ணின் மைந்தர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதும், அவர்களது சிறப்புமிக்க பணிகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் வருவது திராவிட ஆட்சியாளர்களால் நிகழ்த்தபட்ட வரலாற்று பேரவலமாகும். பழந்தமிழ் குடியான குறவர்குடி மக்கள் இன்றைக்கு கல்வி, நிலம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு, மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்தபோதிலும், சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் அவர்கள் எத்தகைய உயர்நிலையில் இருந்தனர் என்பதற்கு இலக்கிய சான்றாக திகழ்பவர் தமிழ்ப்பெரும்பாட்டி இளவெயினி.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும், தமிழ்ப்பழங்குடி மக்களை புறக்கணிக்காமல் அவர்களது அருஞ்செயல்களை அங்கீகரிக்க முன்வர வேண்டும். சங்ககால பெண்பாற்புலவர் இளவெயினிக்கு, மதுரை மண்ணில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இளவெயினி யார்?

குறமகள் இளவெயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பெண்பாற் புலவரான இளவெயினி புறநானூறு 157வது பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்க இலக்கிய தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவரது பெயர் குறமகள் குறியெயினி என்னும் புலவரின் பெயர் அமைப்பைப் போன்றது என்று சங்க இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறவர் சமுதாயத்தில் பிறந்த இவர் போர்க்களத்தில் பிணந்திண்ணும் பேய் மகளிரை வியந்து பாடிய சிறப்பால் “பேய்மகள்” என்கிற சிறப்புப் பெயருடன் பேய்மகள் இளவெயினி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய பிற பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் சங்க கால புலவர் பரணர் காலத்தைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்.

புறநானூறு 157 சொல்லும் செய்தி ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ஏறை ஏறு என்னும் பெயர் கொண்ட இந்த ஊர் இக்காலத்தில் ‘காளையார் கோயில்’ என்னும் பெயருடன் வழங்கப்படுகிறது.

ஏறைக்கோன் படைத்தலைவன், ஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று போர்புரிந்து வெல்வான்.

ஏறைக்கோன், பகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை நிறைந்தவன்.

ஏறைக்கோன் பண்புகள் தன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் தப்பு செய்தால் அதனை ஏறைக்கோன் பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான் நாணுவான். அவர்கள் செய்யும் தவற்றினுக்குத் தானும் ஒரு காரணம் என்று எண்ணும் மனப்பாங்கு உள்ளவன்.

குறவர் பெருமகன் மலைவாழ் குடிகளைக் குறவர் என வழங்குதல் சங்ககால வழக்கம். ஏறைக்கோனைக் குறவர் பெருமகன் என்று புலவர் குறிப்பிடுவதால் இவன் மலைசார் மக்களின் தலைவன் எனத் தெரிகிறது.

சங்க இலக்கியத்தில் தமிழ் நிலம் ஐந்திணைகளாக வகைப்படுத்தப்படுள்ளது. குறிஞ்சிநில மக்கள் எயினர் எனப்படுவர்; அவர்களுல் பெண் மகள் எயினி எனப்படுவாள். அதனாலும், குற மகள் என்றே இவர் அழைக்கப்படுதலாலும், “எம்மோன் எங்கள் தலைவன்-என்று பாராட்டிய ஏறைக்கோனே ‘ குறவர் பெருமகன் ” என்று இவரே அழைப்பதாலும் இவர் குறவர் குடியிற் பிறந்தவர் என்பது தெளிவாகிறது என சங்க இலக்கிய தமிழ்புலவர் வரிசை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறவர் குடியிலே பிறந்த இவர், மிகமிக இளமைக் காலத்திலேயே புலமை பெற்றுப் பாடல் புனையத் தொடங்கி விட்டார். ஆகவே இவர், குறமகள் இளவெயினி என அழைக்கப் பெற்றார்.

குறமகள் இளவெயினி இனப்பற்று மிக்கவர் ; புலவர் பலர் கூடியிருந்த அவையொன்றில், தம்மால் பாராட்டப் பெறும் தங்கள் குலத் தலைவனாகிய ஏறைக்கோன் என்பாரை அப் புலவர்களால் பாராட்டப் பெறும் ஏனேய தலைவர்களுக்கும் உள்ள உயர்வு தாழ்வுகளை எடுத்துக் காட்டி, “எல்லா வகையாலும் எங்கள் தலைவன் ஏறைக் கோனே சிறப்புடையான் என்று காரணம் காட்டி உறுதி செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Seeman demand to set mani mandapam for tamil sangam age woman poet elaveyini

Next Story
தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்புTanzanian Novelist Abdulrazak Gurnah, Writer Abdulrazak Gurnah wins Nobel Prize, Abdulrazak Gurnah wins Nobel Prize for Literature, தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு அறிவிப்பு, தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா, தான்சானியா நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னா, Nobel Prize for Literature, Nobel Prize for 2021
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express