இயக்குனர் பி.ஆர். பந்துலு இயக்கத்தில் சிவாஜி கணேசன், என்.டி.ஆர். முத்துராமன் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் நடித்து 1964ம் ஆண்டு வெளியான கர்ணன் திரைப்படம் இன்றைக்கும் ரசிகர்களின் விருப்பமான படமாக உள்ளது. மகாபாரதத்தில் கர்ணன் கதாபாத்திரத்தின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அந்த காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம்.
கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாமே இன்றைக்கு இசை நிகழ்ச்சிகளிலும் கச்சேரிகளிலும் பாடப்படும் பாடலாக உள்ளது. அதிலும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற பாடல் சீர்காழி கோவிந்தராஜனின் வெங்கலக் குரலில் பாடுவதைக் கேட்கும் யாரும் மகாபாரதத்தில் யுத்தகளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் கர்ணனிடம் கண்ணன் பிராமணர் வேடத்தில் சென்று கர்ணனின் புன்னியங்களை தானமாக பெறும் காட்சியை கண்முன்னாள் கொண்டுவந்து நிறுத்தும். சீர்காழி கோவிந்தராஜனின் அந்த வெங்கலக் குரலில்‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை யாராலும் மறக்க முடியாது.
இந்த சூழலில்தான், தமிழ் சினிமாவின் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், ஒரு இசை நிகழ்ச்சியில் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை சுரத்து இல்லாமல் பாடியிருப்பது இசை ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாடகர் சித் ஸ்ரீராம், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை மிக மோசமாக பாடியிருப்பதாக இசை ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் நவீன எழுத்தாளர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பத்திரிகையாளர் சமஸ், பாடகர் சித் ஸ்ரீராம் கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை பாடியிருக்கும் விதம் குறித்து குறிப்பிடுகையில், “சித் எனக்குப் பிடித்த பாடகர்களில் ஒருவர்… ஆனால், இது கர்ண வதை…” என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் சாரு நிவேதிதா, சித் ஸ்ரீராம் அப்படி பாடியதில் என்ன தவறு, அதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சாரு நிவேதிதா தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சித் ஸ்ரீராம் எனக்குப் பிடிக்காத பாடகர். குரல் பிடிக்கும்தான். ஆனால் அவரது குரலில் மற்றும் வெளிப்பாட்டு முறையில் உள்ள monotonyயின் காரணமாக அவர் எனக்குப் பிடிக்காத பாடகர். ஆனால் சமீபத்தில் அவர் பாடியிருந்த உள்ளத்தில் நல்ல உள்ளம் ரொம்பப் பிரமாதமாகப் பாடியிருக்கிறார். அத்தனை பேருமே அதைத் திட்டி எழுதியிருந்தார்கள். வேடிக்கை என்னவென்றால், அந்த அத்தனை பேருக்கும் சித் பிடித்த பாடகர். இதில் எனக்குப் பிடித்த சமஸும் இருந்ததால்தான் இந்த விஷயமே என் கண்ணில் பட்டது.
நீங்கள் யாவரும் ஆட்டுக்கறி பிரியாணி மாதிரி அக்கார அடிசல் இல்லை என்கிறீர்கள். அக்கார அடிசல் அக்கார அடிசல் மாதிரிதான் இருக்கும். ஆ. பிரியாணி ஆ. பிரியாணி மாதிரிதான் இருக்கும். சீர்காழி மாதிரி சீர்காழி பாடுகிறார். சித் இன்னும் அதை கர்னாடக சங்கீத பாணியில் இழுத்துப் பாடுகிறார். இதில் எங்கே தவறு? என்ன தவறு? கர்னாடக சங்கீத ரசனை இல்லாவிட்டால் சித் பாடுவது பிடிக்காதுதான். அதில் எனக்குப் பிரச்சினையே இல்லை. ஆனால் கர்னாடக சங்கீத ரசனையே இல்லாமல் சித் பாடுவதைக் கிண்டல் செய்வது பிரியாணி சாப்பிடுபவரைப் பார்த்து முகம் சுளிக்கும் மனோபாவம்தான்.” என்று தெரிவித்துள்ளார்.
சாரு நிவேதிதாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள பத்திரிகையாளர் சமஸ், “அன்புள்ள சாரு,
பிரியாணியை பிரியாணியாகவும், அக்காரவடிசலை அக்காரவடிசலாகவுமே சாப்பிடலாம் என்பதே என் கருத்தும். கர்நாடக இசை மேடை ஏறுவதாலேயே பிரியாணியை அக்காரவடிசல் ஆக்க வேண்டியது இல்லை. சித்தின் முயற்சி அதுவே.
சித்தின் முயற்சி கூடி இடையில் ஹலீம் திகைத்திருந்தால்கூட நல்லது; அப்படி இல்லையே!
சாஸ்திரிய இசையை வெகுஜன தளத்துக்குக் கொண்டுசெல்ல தமிழ் சினிமாவில் வெற்றிகரமாகவே முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் கடந்த காலத்தில் கர்நாடக இசை ரசிகர்களால் எப்படி அணுகப்பட்டன, எம்எஸ்வியும், இளையராஜாவும், ஜேசுதாஸும் எஸ்பிபியும் எப்படியெல்லாம் அடித்துத் துவைக்கப்பட்டார்கள் என்பதை நினைவுகூர முடியும் என்றால், சித்துக்குக் கிடைக்கும் விமர்சனங்கள் ஒன்றுமே இல்லை என்று கூறிடலாம். சபாக்களில் ஏற்றப்பட்டுவிட்டது என்பதாலேயே இதை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக அணுக வேண்டுமா, என்ன?
'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல் அதன் வடிவில் ஒரு மகோன்னதம். 'என்னடா செஞ்சுவைச்சிருக்கீங்க என் தங்கத்தை!' என்று மக்கள் பொங்குகிறார்கள் என்றால், அதற்கான நியாயம் இருக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர் அமிர்தம் சூர்யா, சித் ஸ்ரீராம் கர்ணன் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலை பாடிய விதம் குறித்து, தனது முக நூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இலக்கியத்தில் போஸ்ட் மாடர்னிசம் தெரியும் . இது என்ன இசையின் பின் நவீனத்துவமா? எனக்கு இசை அறிவு இல்ல. ஆனா நல்ல ரசனை இருக்கு. MS விஸ்வநாதன் ஆவி உம்மை சும்மா விடாது ஓய்..அந்த கர்ணனே மன்னிக்க மாட்டார்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
நா விச்வநாதன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “சித்ஸ்ரீராம் சங்கீதம். "உள்ளத்தில் நல்ல உள்ளம்…"
இரவுதான் ஓர் அற்புத இசை கேட்டேன். ஒப்பனைகளற்ற இசை. ஒருகுழந்தை, பாட்டியின் மடியில் உட்கார்ந்து ஊஞ் சலில் ஆட அம்மாக்காரி பாடுகிறாள்.
"மாதவ மாமவ தேவ…….க்ருஷ்ணா.." அற்புத நீலாம்பரி.தீர்த்த நாராயணர். வயலின், சுருதி, தாள இம்சையின்றி ஒரு கவிதை மாதிரி. மனசு லயித்தது.
இந்த அழகிய கனவைக் கலைக்கவே வந்தாற்போல கட்டுக்குடுமியோட "உள்ளத்தில் நல்ல உள்ளம்…உறங்கா தென்பது…" கொடுமையே. இசை என்பது பாடுபவரின் உபாசனைமட்டுமல்ல கேட்பவருக்கும் உபாசனைதான் என்பதைப் புரிந்து கொள்ளா சர்க்கஸ்
கோமாளித்தனம். உம் மனநிலை என்ன சத்ஸ்ரீராம்சாரே.? ஏன் இந்த வாதை?
"எடுலோ ப்ரோத்துவோ.." வில் உருக்கியிருப்பார் தியாகராஜர். எல்லோரும் உச்ச ஸ்தாயில் பாடவேண்டும் என்பதற்காகவேஅமைக்கப்பட்டபல்லவி, சரணம் அனுபல்லவி. தியாகராஜரே புழக் கத்தில் விட்ட ராகம் சக்ரவாகம். கொஞ்சம் சிரமப்பட்டுக் பாடவேண்டும். பிரதி
மத்யமமாக மாற்றினால் ராமப்ரியா. ஷட்ஜமமாக வைத்தால் சரசாங்கி. நிஷாதத்தை சட்ஜமமாக்கினால் தர்மவதி என்று போய் உட்கார்ந்துகொள்ளும் நுட்பம்."சுகுணமுலே.." யில் முழுவித்தையும் பண்ணியிருப்பார் சத்குரு. 'தோயவேகவாஹினி என்பதுண்டு.
தீட்சதர் "கஜநரயுதம்.."என்பார். "கேளடி கண்மணி"யில் நீ பாதி நான் பாதி.." என்றொரு அற்புதப்பாடல் உண்டு. பார்த்தார் நம்ம எம்எஸ்வி போட்றா ஆகிர்பைரவி சாயலோட ஒரு சக்கரவாகம் என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆர்மோனியப்பெட்டியில் விரல்வித்தை காட்ட ரகளையாக "உள்ளத்தில் நல்ல உள்ளம்…"உருக்கியது. போட்டமெட்டு ஹிட். சீர்காழியின் வெண்கலக்குரல். என்டிஆர்.காரு தலையைச் சாய்த்து தெலுங்கு அசட்டுச் சிரிப்போடு அடிமேல் அடிவைத்து கம்பீரநடையிட நம்ம சிம்மக்குரலோன் தேர்ச்சக்கரத்தில் சாய்ந்துகொண்டு. அடடா அடடா. வோ…என்ன ரகளை. கர்ணாஆ..ஆ..
சரி இப்ப சித் ஸ்ரீராம் என்ன பண்ணியிருக்கிறார். கட்டுக்குடுமியை ஆட்டு ஆட்டு என்று ஆட்டினால் போதாது? சங்கீதம் வசப்படவேண்டும். இவருக்கும் ஏகமாய் சிஷ்யகோடிகள் உளர் எனத் தெரிகிறது. நம்ம எழுத்துத்திலகில் சாரு'விற்கு இருக்கறது மாதிரி. இருக்கட்டும். இந்த உருட்டுக்கெல்லாம் இசை பயந்து போயிடாது.
சித் ஸ்ரீராம் கொயந்த நன்னாப்பாடனும்.வேறென்ன இருக்கு சொல்ல.? ஏதோ நம்ம பங்குக்கு..” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.