சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினர் தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம் என்று நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதிவரை பிரம்மாண்டமாக தமிழ்மொழி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ்ச் சமூகத்தினர் சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக விழா நடத்துவது வழக்கம். சிங்கப்பூரில் தமிழ் மக்களிடையே தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் ஊக்குவிக்கும் வகையில், 2007ம் ஆண்டு முதல் வளர் தமிழ் இயக்கம் பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து தமிழ் மொழி விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தமிழ்மொழி விழா கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பாதுகாப்பு கருதி சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தினர் இந்த ஆண்டு தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளை இணையத்தில் நடத்த தீர்மாணித்து அறிவித்தனர்.
அதன்படி வளர் தமிழ் இயக்கம், தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் என்ற முழக்கத்துடன் தமிழ் மொழி விழா 2020 நிகழ்ச்சிகளை இணையத்தில் நடத்து வதாக அறிவித்தது.
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா 2020 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள வளர்தமிழ் இயக்கத்தின் இயக்குனர் தலைவர் மனோகரன் நிகழ்ச்சிகள் பற்றி ஊடகங்களிடம் கூறுகையில், “அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகள் இந்த மெய்நிகர் தமிழ்மொழி விழா 2020ல் அமைந்துள்ளது. அனைத்து பங்கேற்பாளர்களும் பாதுகாப்பாகவும் சுகமாகவும் வீட்டில் இருந்தபடியே இந்த நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கலாம்” என்று கூறினார்.
மேலும், “தமிழ் மொழி விழா இணையத்தில் நடத்துவதற்காக பங்களிக்கும் அமைப்புகள் கடினமாக உழைத்து வருவகின்றனர். இலக்கியம், பேச்சுப்போட்டி, கலைகள், கலாசாரம் என பலதரப்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய மொத்தம் 25 இணைய நிகழ்ச்சிகளை ஜூம், ஃபேஸ்புக் போன்ற தளங்களின் மூலம் பார்வையாளர்கள் கண்டு மகிழலாம். இந்த ஆண்டின் மெய்நிகர் நிகழ்ச்சிகளைப் படைக்கும் முயற்சியில் ஆறு புதிய பங்களிக்கும் அமைப்புகள் கைகோர்த்துள்ளன.” மனோகரன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக கதை சொல்லும் நிகழ்ச்சி தற்போது சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் விருப்பமானதாக இருக்கிறது. அதனால்,‘நூல் மோன்ஸ்டர்ஸ்’ படைக்கும் ‘நூலாபலூஸா’ எனும் மின்னிலக்கக் கதைச் சொல்லும் நிகழ்ச்சி பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது.
‘நன்னெறி தங்கம்’ எனும் கவிதை வாசிப்புடன் மேசை இசை படைப்பு நிகழ்ச்சியை ‘கலாமஞ்சரி’ அமைப்பு சார்பில் டிசம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது.
புகைப்படப் போட்டியை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளனர்.
சிங்கப்பூர் தமிழர்கள் கொண்டாடும் தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம் தமிழ் மொழி விழா 2020 நிகழ்ச்சிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வளர்தமிழ் இயக்கத்தின் ஃபேஸ்புக் பக்கம் facebook.com/tamillanguagecouncilsinsingapore, இன்ஸ்டாகிராம் பக்கம் @TamilLangFestival அல்லது http://www.tamil.org.sg இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
சிங்கப்பூர் தமிழர்கள் இந்த ஆண்டு தமிழ் மொழி விழாவை 25 நிகழ்ச்சிகளுடன் இணையத்தில் கொண்டாடுவதால் உலகத் தமிழர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”