திராவிடம் vs தமிழ்த்தேசியம் எதிர்நிலைகளில் சிக்கிக்கொண்ட தலித் அரசியல்; மூன்றாவது பார்வை என்ன? - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்

இந்த திராவிடர் - தமிழர் தேவையில்லாத ஆணி என்பதே என்னுடைய கருத்து. அதில் விவாதிக்கிறதுக்கு ஒன்றுமில்லை. அதில் எனக்கு கருத்து இருக்கிறது என்பது வேறு. ஆனால், என் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அந்த பைனரியைக் கொண்டுவந்து (இரட்டை எதிர்நிலை) பொருத்திப் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகிறார்.

இந்த திராவிடர் - தமிழர் தேவையில்லாத ஆணி என்பதே என்னுடைய கருத்து. அதில் விவாதிக்கிறதுக்கு ஒன்றுமில்லை. அதில் எனக்கு கருத்து இருக்கிறது என்பது வேறு. ஆனால், என் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அந்த பைனரியைக் கொண்டுவந்து (இரட்டை எதிர்நிலை) பொருத்திப் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
Stalin Rajangam

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழின் மிக முக்கியமான சிந்தனையாளரும் ஆய்வாளருமான எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், தமிழ் மொழி, பண்பாடு, தலித் இலக்கியம், தலித் அரசியல், தமிழ் பௌத்தம் குறித்து மிகவும் நுட்பமான ஆய்வுகளை நிகழ்த்தி எழுதி வருகிறார். அவரிடம் தலித் இலக்கியம், தலித் அரசியல், திரவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவை  குறித்து ஒரு விரிவான உரையாடலை தொலைபேசி வழியாக தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்காக நடத்தினோம். அவற்றை இங்கே 3 பகுதிகளாக தொகுத்து வெளியிடுகிறோம். முதல் பகுதி இங்கே தருகிறோம்.  

Advertisment

கேள்வி: சில ஆண்டுகளாக தலித் வரலாற்று மாதம் கொண்டாடப்படுவதை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. இந்த தலித் வரலாற்று மாதம் எப்போது தொடங்கியது? தமிழ்நாட்டில் எப்போது தொடங்கியது? எப்படி கொண்டாடப்படுகிறது? அதனுடைய முக்கியத்துவம் என்ன?

ஸ்டாலின் ராஜாங்கம்: 2000-களின் ஆரம்பத்தில் இருந்து தமிழ்நாட்டில் தலித் வரலாற்று மாதம் தொடங்குகிறது. இந்திய அளவில் அங்கங்கே தலித்துகளுக்கு ஒரு வரலாற்று மாதம் வேண்டும் என்று ஒரு சின்ன அளவில் இருந்தாலும்கூட, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எழுத்தாளர் ரவிக்குமார்தான் முதலில் தலித் வரலாற்று மாதம் என்று ஒன்று வைக்க வேண்டும் என்று தூண்டியவர்.  அவர் கிட்டத்தட்ட திராவிட இயக்கத்துக்கு மாற்றாக நாம் தலித் வரலாற்று ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டும், அதை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அப்போது தமிழில் தலித் வரலாற்று மாதம் என்ற ஒன்றை சொன்னார்.

அதற்கு அவர் காட்டிய உதாரணம், பிப்ரவரி மாதம் கருப்பின மக்களின் மாதமாக கொண்டாடப்படுகிறது. கருப்பின தலைவர்கள் பலரும் அந்த மாதத்தில் பிறந்தவர்களாக இருப்பதனால் அவர்கள் கொண்டாடுகிறார்கள். நாம் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதம் ஆரம்பித்து அயோத்திதாசர் பிறந்த மே 20 வரைக்கும் நாம் ஒரு வரலாற்று மாதம் என்று அறிவித்து ஒரு வரலாற்று மாதம் கொண்டாடலாம் என்று அவர் நடத்திய பத்திரிகையில் எழுதினார். 

Advertisment
Advertisements

அப்போது அவருடன் தொடர்பில் இருந்த அறிவுஜீவிகள் தனியாகவும் அவருடன் சேர்ந்தும் இந்த தலித் வரலாற்று மாதத்தைக் கொண்டாடினார்கள். எனக்கு தெரிந்து இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை தொடங்கியது மதுரையில் எழுத்துப் பதிப்பகத்தின் சார்பாக அலெக்ஸ் அவர்கள்தான். அவர் ரவிக்குமார் செல்வாக்கில் இருந்து செய்தாரா அவராகவே செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. 

ஆனால், நிகழ்ச்சி என்று ஒன்று நடந்தது என்றால் அது மதுரையில் எழுத்து பதிப்பகம் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடத்தினார்கள். ரவிக்குமார் தனது தலித் இதழை தலித் வரலாற்று சிறப்பிதழாகக் கொண்டு வந்தார். பல இடங்களில் கருத்தரங்குகள் நடந்தது. 

அந்த கருத்தரங்குகளில் தலித் வரலாறு சம்பந்தமான பேச்சு, வரலாறுகள் வேண்டும் என்று பேசப்பட்டது. அதில் கொஞ்சம் ஆட்கள்தான் பேச்சாளர்களாக கலந்துகொண்டார்கள். ஏனென்றால், அது ரவிக்குமார் பேசத் தொடங்கினார் அவர் தொடர்பில் இருந்த கொஞ்சம் பேர்தான் கலந்துகொள்ள முடிந்தது. தமிழில் மற்ற அறிவுஜீவிகளால் கவனிக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் பெரியார் திராவிட இயக்கம் பற்றிய விமர்சனத்தை முன்வைத்துவிட்டு இந்த நிலைக்கு வந்து இருந்ததனால் அவருடன் சேருவதில் நிறைய பேருக்கு தயக்கம் இருந்தது. அவரும் அதை மற்றவர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டும் என்று யோசிக்கவில்லை. அவரோடு இருப்பவர்களை வைத்து இதை செய்தார். இதுதான் தமிழில் தலித் வரலாற்று மாதத்தின் தோற்றம், தொடக்கம். 

இந்த தலித் வரலாற்று மாதம் கொண்டாட்டம் சமூக வலைதளத்தில் மட்டும் கொண்டாடப்படுகிறது. மக்கள் மத்தியில் களத்தில் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஏனென்றால், இது ஒரு அறிவுஜீவிக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று. ரவிக்குமாரே அதை இரண்டு - மூன்று வருடங்களுக்குப் பிறகு நினைவுகூர்வதே கிடையாது. அவரே அதற்காக ஏதாவது நிகழ்ச்சிகள் செய்வதோ, ஏதாவது ஒன்றை செய்வதோ கிடையாது. அவர் என்ன நினைக்கிறார் என்றால் அவரால் இது முன்னெடுக்கப்பட்டது, முன்மொழியப்பட்டது என்ற பெருமை மட்டும் போதும் என்று அவர் நின்றுவிட்டார். இப்போது அவர் மார்ச் மாதம் மகளிர் வரலாற்று மாதம் என்று அறிவித்து சொல்கிற அளவுக்குகூட தலித் வரலாற்று மாதத்துக்கு நிகழ்ச்சிகளோ மற்ற எதையும் அவரே கைவிட்டுவிட்டார். 

முதலில் இந்த தலித் வரலாற்று மாதம் என்பது அடிப்டையில் ஒரு அறிவுஜீவிக் குழுவால் உருவாக்கப்பட்டது, அதை முன்னெடுத்த அறிவுஜீவிகளே அதை பின்தொடர முடியாமல் கைவிட்டுவிட்டார்கள். ஆனால், ரவிக்குமாருக்கு அடுத்து வந்த இளைஞர் தரப்புதான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் சிறிய அளவில் புத்தக வெளியீடு, கருத்தரங்கு, சிறிய கண்காட்சி, என்ற ஒரு வேளையை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்கள், ஆனால் அவர்கள் இயக்கம் கிடையாது.  

இயக்கங்களுடன் அவர்கள் தொடர்பு கிடையாது. இயக்கங்கள் ஏற்கெனவே என்னவாக இருக்கிறது என்றால், இங்கே இருக்கிற இயக்கங்கள் ஏற்கெனவே இங்கு இருக்கிற அடையாளங்களை விட்டுவிட்டு தேர்தல் அரசியலை நோக்கி விரிவாகிற  விரும்புகிற காரணத்தால் அவர்கள் இந்த தலித் என்கிற ஒரு சொல்லாடலை வைத்து இந்த மாதிரி செய்கிற நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. தலித் வரலாற்று மாதம் என்கிற ஓர்மை இயக்கங்களுக்கு கிடையாது.

இந்த அறிவுஜீவிகளும் இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தாலும்கூட இயக்கங்கள் இதை முன்னெடுக்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு இவர்கள் அழுத்தம் கொத்தது கிடையாது.

என்னைப்பொறுத்த அளவில், அவ்வப்போது நான் வெவ்வேறு நண்பர்களுடன் சேர்ந்து, ரவிக்குமார் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இதை செய்துகொண்டு வருகிறேன். மதுரையில் ஜெகநாதன் உடன் இணைந்து அம்பேத்கர் படிப்பு வட்டம் என்ற ஒன்றை நாங்கள் வைத்திருந்தோம். அதன் மூலம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நான்கு நாட்கள் கருத்தரங்கம், பத்திரிகை வெளியீடு, விவாதங்கள் என்று செய்தோம். இதை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் தலித் வரலாற்று மாதத்தை நினைவுகூர்கிற மாதிரி, சென்னையில் புத்தக வெளியீடு, புகைப்படக் கண்காட்சி செய்தோம், சிறு நூல்கள் வெளியிட்டோம்.

அதே போல, எழுத்தாளர் அழகியபெரியவன் தலித் வரலாற்று மாதத்தை நினைவுகூர்ந்து ரொம்ப முக்கியமாக கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ரவிக்குமார் வட்டத்துக்கு வெளியே செய்தார்கள். நாங்களும் ரவிக்குமாரிடம் இருந்து லித் வரலாற்று மாதம் கொண்டாட்ட செயல்பாட்டை தொடங்கினாலும்கூட அவர் தொடர்ந்து செய்யவில்லை. நாங்கள் தனியாகத்தான் இதை செய்தோம். இதுதான் உண்மை. இது ஒரு இயக்கமாக மாறாவிட்டாலும்கூட சமூக வலைதளத்தில் படித்த இளைஞர்களிடம் இது ஒரு செல்வாக்கை செலுத்தி அவர்கள் சமூக வலைதளத்தின் வழியாக அவர்கள் இந்த ஆண்டை நினைவுகூர்வது, அல்லது ஏதோ ஒன்றை செய்வது என்று அவர்கள் லித் வரலாற்று மாதத்தைக் கொண்டாடுகிறார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கிற லித் வரலாற்று மாதம். இதில் ரொம்ப முக்கியமாக, தலையீடாக நான் என்ன நினைக்கிறேன் என்றால், தலித் வரலாற்று மாதத்தை அடுத்த தலைமுறை இளைஞர்கள் இயக்கங்களின் தலையீடு இல்லாவிட்டாலும், இதை முதன்முதலில் யார் முன்னெடுத்தார்கள், முதன்முதலில் யார் சொன்னார்கள் என்ற ஈகோ இல்லாமல், தலித் வரலாற்று மாதத்தை எடுத்து செய்கிறார்கள். அதில் ரொம்ப முக்கியமானது நீலம் பண்பாட்டு மையம்.

நீலம் பண்பாட்டு மையம் வந்த பிறகு, தலித் வரலாற்று மாதத்தை ஏற்றுக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக, இப்போது 4வது ஆண்டாக ஒரு மாதத்தில் 4 அல்லது 5 நிகழ்வுகளை நடத்துகிறார்கள். 

ஒன்று வரலாற்றுக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, நாடக விழா, வேர்ச்சொல் தலித் இலக்கிய கூடுகை நடத்துகிறார்கள். தலித் வரலாற்று மாதம் என்கிற பெயரில் அடுத்த தலைமுறை இளைஞர்கள்தான் அடித்தளத்திற்கு செல்லாவிட்டாலுகூட படித்த இளைஞர்களிடயேயாவது அதனுடைய அறிமுகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதுதான் இங்கு நடந்த செயல்பாடுகள்.  

கேள்வி: தலித் வரலாறு, தலித் இலக்கியம், தலித் அரசியல், தலித் சமூகம் இன்றைக்கு என்னவாக இருக்கிறது?

ஸ்டாலின் ராஜாங்கம்: ஒரு வகையில், அடையாளங்களை முன்வைத்து இயங்கக்கூடிய சொல்லாடல்களுக்கு என்னவெல்லாம் சிக்கல்கள் இருக்கிறதோ அது எல்லா சிக்கல்களும் தலித் சொல்லாடல் அடையாளத்திற்கும் இருக்கிறது. தலித் என்கிற அடையாளம் வந்திருக்கக்கூடிய இடம்,  இது ஏதோ தலித் அடையாளத்துக்கு மட்டும் வருகிற பிரச்னையாக நான் இன்று வரை நினைக்கவில்லை, இது ஒன்று. 

இரண்டாவது, தலித் அடையாளத்தில் தலித் அரசியல் என்ற ஒன்று கடந்த 30 வருடங்களில் ஒரு முக்கியமான எழுச்சி பெற்றிருக்கிறது. தலித் அரசியல் தலித் இலக்கியத்துடன், தலித் சிந்தனைத் தளத்தில் ஏற்படக்கூடிய விவாதத்தில் தொடர்பு இல்லாவிட்டாலும்கூட தலித் அரசியல் என்று ஒன்று இருக்கிறதுக்கு இந்த விவாதங்களும் சொல்லாடல்களும் ஒரு புலப்படாத ஒரு வேராக இருக்கிறது என்றுதான் நான் சொல்வேன். 

அதனால்தான், தலித் இலக்கியம் தலித் அடையாளத்தைப் பற்றி பேசும்போது, தலித் அரசியலையும் நாம் இதனுடன் சேர்த்துதான் பார்க்க வேண்டும். இதனுடன் தொடர்பு இல்லாமல் அது இல்லை. ஆனால், அப்படி ஒரு தொடர்பு இல்லாமல் எல்லாவற்றையும் இயக்கங்களே உருவாக்கிய மாதிரி காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள். அதே மாதிரி இயக்கங்கள் இல்லாமல் இந்த மாதிரி விஷயங்களும் நடக்காது. அது ரொம்ப முக்கியம். 

இலக்கியம், பண்பாடு சம்பந்தப்பட்ட விவாதங்கள் இயக்கங்களுடடைய நிலைப்பாடும் சமூகத்தில் உதவி இருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று அணுசரணையாக இருக்கிறது என்பதுதான் என்னுடைய பார்வை. அரசியலும் இலக்கியமும் வேறுவேறு இல்லை என்பதை நிறுவிய விதத்தில் தலித் இலக்கியம் ஒரு முக்கிய அங்கத்தை வகிக்கிறது.

தலித் இலக்கியம் இன்றைக்கு இலக்கியமாக இல்லை. இலக்கியம் என்ற பெயரில் இல்லை என்றுதான் நான் சொல்வேன். ஏனென்றால், இதில் நிறைய வேலை நடந்திருக்க வேண்டும், நிறைய விவாதம் நடந்திருக்க வேண்டும், அப்படி ஒன்று இங்கே நடக்கவில்லை என்று நான் இங்கே நினைக்கிறேன். 

ஆரம்ப நிலையில், தலித் இலக்கியம் அறிமுகம் நடந்தது இல்லையா, அதில் அது சார்ந்த சொல்லாடல்கள், அது சார்ந்த கவனம் எல்லாம் உருவானதைத் தாண்டி, அடுத்த நிலையில் என்ன நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இங்கே ஒரு தெளிவு கிடையாது. அதைப் பற்றி கவனம் கொள்ளத்தக்க விவாதங்கள் எதுவுமே இங்கு மேற்கொள்ளப்படவில்லை. ஏனென்றால், தமிழில் இருக்கக்கூடிய இலக்கியவாதிகள் பல பேருக்கும், தலித் இலக்கியவாதிகள் உள்பட வெகு சீக்கிரமாகவே ஒரு இடத்தில், ஒரு மையமாக மாறிவிட்டார்கள். அதனால், அவர்கள் என்ன நினைத்தார்களோ அதைத்தான் செய்தார்கள். அவர்கள் இன்னொருத்தருடன் சேர்வதில் பல பிரச்னைகள் இங்கே இருக்கிறது. அடுத்த தலைமுறை இளைஞர்களோடு அவர்களுக்கு ஒரு பெரிய தொடர்பு இல்லை. இளைஞர்களாக படித்து அவர்களாக ஏதாவது ஒன்று உள்வாங்கிக்கொண்டதை சரியாகவோ தவறாகவோ வெளிப்படுத்துகிற சூழ்நிலைதான் இங்கே இருக்கிறது. அதனால், இங்கே என்ன நடந்திருக்கிறது என்றால் இலக்கியத்தைவிட தலித் எழுச்சி தலித் வரலாறு, ஆவணங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது என்று நான் சொல்வேன்.

உதாரணமாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழில் நடந்திருக்கிற முக்கியமான மாற்றமே தலித் வரலாற்றியலில் நடந்திருக்கக்கூடிய மாற்றம் என்றுதான் நான் நினைக்கிறேன். எங்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ரொம்ப பேர் சிறியதாகவோ, இல்லை கொஞ்சம் கூடுதலாகவோ பங்களித்திருக்கிறார்கள், ஜெ. பாலசுப்பிரமணியம் புத்தகங்கள், கோ. ரகுபதியின் புத்தகங்கள். இவைகள் எல்லாம் வரலாற்று தொகுப்புகளாக, ஆவணங்களாக, இதழ்கள் தொகுத்து இருக்கிறார்கள், விவாதங்கள் தொகுத்து இருக்கிறார்கள், பழைய நூல்களைத் திரும்பப் பதிப்பித்திருக்கிறார்கள். இது மாதிரி ஒரு வரலாற்று ஓர்மையை இந்த நூல்களி இன்றைக்கு உருவாக்கி இருக்கிறது. இந்த விதத்தில்தான் தலித் வரலாற்று மாதம் அல்லது தலித் வரலாறு என்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

இப்போது என்ன பிரச்னை வருகிறது என்றால், தலித் இலக்கியம் என்பது எல்லாருமே இலக்கியம்தான் படைக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அல்லது எல்லாருமே வரலாறுதான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. இவ்வாறு மீட்டெடுக்கப்படக்கூடிய வரலாறுக்கும் அல்லது பண்பாடு தொடர்பான பல்வேறு சான்றுகள் கொண்டுவரப்படுவதற்கான இலக்கியத்திற்கு ஒரு தொடர்பு இருக்க வேண்டும். தலித் இலக்கியம் என்றால் என்ன என்று நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் இல்லையா, அதுவே இன்றைக்கு அதற்கு தடையாக மாறிவிட்டது.

சமூகத்தில் அவலங்கள் அல்லது பிரச்னைகள் பற்றி பேசுவதுதான் தலித் இலக்கியம் என்று ஒன்று இருப்பதானால் இது மாதிரி கண்டெடுக்கப்படக்கூடிய விஷயங்களை எப்படி புனைவுகளுடன் தொடர்புபடுத்துவது, பண்பாடு சார்ந்த விஷயங்கள் என்னவாக இருக்கிறது அதை என்ன செய்வது, எப்படி இணைத்துப் பார்ப்பது அது மாதிரி ஒன்று உருவாகவில்லை.

சரி பரவாயில்லை. சமூகத்தின் அன்றாடப் பிரச்னைகளாவது இந்த படைப்புகளில் வந்திருக்கிறதா என்றால் அதுவும் போதுமான அளவுக்கு வரவில்லை. தலித் இலக்கியம் தேங்கிவிட்டது என்று நான் குற்றம் சாட்டுவதைவிட அவற்றைப் பற்றி ஒரு நேர்மையான விசாரணையும் ஒரு பரிசீலனைப் பண்ணிப் பார்க்கிற ஒரு போக்கும் இருக்க வேண்டும். அது இல்லாமல் போய்விட்டது. அதே வேளையில், தலித் வரலாற்றியலில் ஒரு பெரிய பாய்ச்சல் நடந்திருக்கிறது. அது எந்த அளவுக்கு மாற்றத்தை நடத்தியிருக்கிறது என்றால், ஒன்று தலித்துகள் பற்றியான வரலாற்று ரீதியான இதுவரையிலான புரிதலை அது மாற்றி அமைத்திருக்கிறது. அதுதான் உண்மை.

 கடந்த 20 ஆண்டுகளில் மீட்டெடுக்கப்பட்டு வந்திருக்கிற தரவுகளால், எழுத்துகளால், தலித்துகள் என்றால் இப்படிதான் என்கிற ஒன்று இருக்கிறது என்பதை, இல்லை, அவர்களுக்கு வேறு ஒரு வரலாறு இருந்திருக்கிறது. அவர்களுக்கு நிறைய பங்களிப்பு இருந்திருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. 

அப்படி வெளிக்கொண்டு வந்தது என்ன மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்றால் அது வெறும் தலித் வாழ்க்கையைப் பற்றிய ஒரு மறைக்கப்பட்ட பகுதியை வெளிக்கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், சாதி அமைப்பு அல்லது சாதியின் இயங்குமுறையை நாம் வேறவாக பார்க்க வேண்டும், வேறவாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிற புரிதலுக்கு வழிவகுக்கக்கூடிய விதத்தில் இந்த ஆவணங்கள் அமைந்திருக்கிறது. இது நேர்மறையான ஒன்று.

இதே வேளையில், தலித் வரலாற்றியல் என்று ஒன்று வளர்ச்சியடைந்ததனால் நடந்திரு ரொம்ப யான ஒரு விளைவு என்னவென்றால், தலித் வரலாற்றியல் எழுச்சி பெற்றதன் மூலமாக, மற்றத் தரப்பு, அதாவது தலித்தியம் என்கிற ஒரு அரசியல் கோட்பாட்டை தங்களுடைய சவாலாக நினைக்கக்கூடிய சக்திகள், என்ன செய்கிறார்கள் என்றால் தலித்தியத்தை நேரடியாக எதிர்கொள்ளாமல், அதை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் பல வேலைகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

இன்றைக்கு திராவிட இயக்கம் பற்றிய பல விஷயங்கள், வரலாறாக மாற்றப்பட்டது கடந்த 20 ஆண்டுகளில்தான். திராவிட இயக்கத்தில் பெரியாருடைய இத்தனை தொகுப்புகள் முறையாக வந்தது கடந்த 20 ஆண்டுகளில்தான். திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான வரலாற்றுத் தருணங்கள் பற்றிய நூல்கள் வந்ததும் கடந்த 20 ஆண்டுகளில்தான். அது சேரன்மாதேவி பிரச்னையாக இருக்கட்டும், வைக்கம் போராட்டமாக இருக்கட்டும் இது எல்லாமே கடந்த 20 ஆண்டுகளில்தான். 

அவர்கள் தலித் இயக்கத்துக்கு பதிலளிக்கும் விதமாக இதை எழுதாமல் இருக்கலாம். அல்லது நேரடியாக அவர்களைக் குறிப்பிட்டு எழுதாமல் இருக்கலாம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்திருக்கக்கூடிய இவர்கள் எழுதியதை மனதில் வைத்துக்கொண்டு, இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு   நேரடியாக பதிலளிக்காவிட்டாலும்கூட இதற்கு நாம் ஒன்றை சொல்ல வேண்டும் என்ற விதத்தில் எழுதப்பட்ட நூல்கள்தான் இங்கு அதிகம். 

அதே மாதிரி மற்றத் தரப்பில், அவர்களும் இன்றைக்கு இதழ்களைத் தேடித் தொகுக்கிறார்கள். அயோத்திதாசருக்கு முந்தி ஒரு மரபு இருந்தது என்பதை காட்டுவதற்கு இன்றைக்கு தமிழில் இருக்கக்கூடிய அறிவுஜீவிகள் கடுமையாகப் போராடுகிறார்கள். அவர்களுடைய இதழ்களைத் தொகுப்பது, அப்புறம் சிந்தனைமுறை இருந்தது என்பதையெல்லாம் தொகுப்பது, இருந்திருக்கலாம், நான் மறுக்கவில்லை. அயோத்திதாசருக்கும் முந்தி ஒருத்தர் இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் கண்டுபிடிக்கிற ஒருத்தருக்கு முன்னரும் ஒருவர் இருந்திருக்கலாம். அதெல்லாம் பிரச்னை இல்லை. ஆனால், இங்கு என்ன பிரச்னை என்றால், தலித் அரசியல் வரலாறு என்ற ஒன்று தொகுக்கப்பட்டபோது அதன் மூலமாக முன்வைக்கப்படுகிற ஒரு பார்வை, அதனால் உருவாக்கப்படுகிற பதற்றம் இருக்கிறது இல்லையா, அதை நேரடியாக எதிர்கொள்ளாமல், அதை மனதில் வைத்துக்கொண்டு நிறைய வேலைகள் நடந்திருக்கிறது.  

இதை தலித் வரலாற்றியல் ஆட்கள் இதைப் போதுமான அளவு புரிந்துகொண்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் சொல்வேன். தலித் வரலாற்றியல் எழுச்சிப் பெற்றதனால் எதிர்தரப்பு தங்களுடைய வரலாற்றை இவர்களை மனதில் வைத்துக்கொண்டு தயாராகி இருக்கிறது. இதுதான் இன்றைக்கு இங்கு நடந்திருக்கிற விஷயம். 

திரும்ப தலித் இலக்கியம் என்பது இதுவரை வந்திருக்கிற வரலாற்றில் இருந்து நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். கலை இலக்கிய தளத்திலும் பிரதிபலிக்க வேண்டும். திரைப்படத்தில் ஒருத்தர் இரண்டு பேர் வந்திருக்கிறார்கள் என்பது போதாது. இன்னும் நிறைய பேர் இந்த மாதிரி விஷயங்களில் இருந்து உருவாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பொறுத்துப் பார்ப்போம், அதற்குள் சொல்ல முடியாது.

கேள்வி: தமிழ்நாட்டில் தலித் அரசியல் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது?

ஸ்டாலின் ராஜாங்கம்: இன்றைக்கு தமிழ்நாட்டில் தலித் அரசியல் என்பது என்னவாக இருக்கிறது என்றால் 90-களில் எழுச்சி பெற்ற அரசியல் இயக்கங்கள்தான் தமிழ்நாட்டின் தலித் இயக்கங்களால் இருக்கின்றன ஒன்று. 90-களுக்கு முன்னாடி அரசியல் இயக்கங்கள் இல்லை என்று அர்த்தம் இல்லை. இங்கு நிறைய இயக்கங்கள் இருந்தன. ஆனால், அவற்றைக் காட்டிலும் 90-களில் எழுந்த அரசியல் இயக்கங்களுடைய முழக்கங்கள், அவைகள் மக்களை அணி திரட்டிய விதம், அவைகள் மக்களை பிரதிபலித்த விதம் எல்லாம் வேறுபட்டதாக  இருக்கிறது. அது முக்கியமானது, அதை நான் மறுக்கமாட்டேன். 

ஆனால், தலித் அரசியல் காலப்போக்கில் என்னவாக மாறிவிட்டது என்று சொன்னால், தன்னுடைய செயல்பாடுகளை அது முழுக்க முழுக்க தேர்தல் அரசியல் சார்ந்ததாக வைத்துக் கொண்டது. இன்றைக்கு தலித் அரசியல் என்பது தேர்தல் நிலைப்பாடு என்னவோ, அதற்கு உட்பட்டு இருப்பது தான் தலித் அரசியலாக மாற்றப்பட்டுள்ளது. அப்போது தேர்தல் அரசியலுக்கு வெளியே இவர்களுடைய பிரச்சனைகள் பற்றி சிந்திக்கிற விவாதிக்கக்கூடிய ஒரு போக்கு இல்லை. கிட்டத்தட்ட அந்த மாதிரி போக்கை இந்த தலித் அரசியல் எழுச்சி தின்றுவிட்டது. அதை தின்று தான் இது வளர்ந்திருக்கிறது.

இதனுடைய பொருள் என்னவென்றால் ஒரு தேர்தல் அரசியலில் தலித் கட்சிகள் போட்டியிடக் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். கூட்டணி அரசில் அது இருக்க கூடாது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், தேர்தல் அரசியல் வெளிக்கு வெளியில் பல வேலைகள் நடக்க வேண்டும். அந்த வேலைகளில் தேவையான தருணங்களில் தேவையான ஒரு ஆதரவை அது பெற வேண்டும். அது என்ன பண்ணுகிறது என்றால் தங்களுடைய எல்லைகளுக்கு வெளியில் நடக்கக்கூடிய வாதங்களை எல்லாம் இவருடைய ஒரு தேர்தல் நிலைப்பாட்டுக்கு ஒத்து வராத காரணத்தினால், அதை எதிர்மறையாக பார்க்கிறது அல்லது அதை தன்னுடன் இணைத்துக்கொள்ள பார்க்கிறது.

நான் அடிப்படையில், எல்லாரும் ஒரு அமைப்பில் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிற ஆள் இல்லை. ஏனென்றால், நம்முடைய சமூக அமைப்பில், எல்லாரும் ஒரே அமைப்பாக மாறுவதற்கான சூழ்நிலை இல்லை. நாம் எப்படி ஒரு கூட்டணி அரசிசியலில் இருந்தால்தான் வெற்றிபெற முடியும் என்பதோ ஒரு எதார்த்தமோ, நாம் இருக்கிற சிஸ்டத்தில் இருந்துதான் எல்லாவற்றையும் சிந்திக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சொல்வது எப்படி எதார்த்தமோ, அதே போல, ஒரே அமைப்பாகத்தான் எல்லாரும் இருக்க முடியும் என்பதும் யதார்த்தமாக இருக்க முடியாது. ஏனென்றால், இன்றைய அமைப்பில் ஒரே குரலாக எல்லாரும் இருக்கும்போது, அவர்கள் ஏதோ ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். அந்த கூட்டணி லாபிக்கு உட்பட்டு பேச முடியாத விஷயங்களை நாம் சுத்தமாகப் பேச முடியாமல் ஆகிவிடும். வேறுவேறு குரல்கள், வேறுவேறு அமைப்புகள் என பலதும் இந்த சமூக அமைப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அதனால், நான் எப்போதுமே ஒரு குறுங்குழுவாதத்தை நான் எதிர்மறையாக நான் பார்ப்பதில்லை. என்னை நான் ஒரு குறுங்குழுவாதியாக சொல்வதில் எனக்கு எப்போதும் பிரச்னை இல்லை. நான் ஒரு பேரளவு அமைப்பு உருவாவது அவ்வளவு சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். 

குறுங்குழுவாதத்திற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அது பெரிய அமைப்பு சொல்ல முடியாத ஒன்றை சமூக அமைப்பில் ஒரு அழுத்தம் தருகிற ஒன்றாக உலக மெங்கும் குறுங்குழுக்கள் அப்படித்தான் இருந்திருக்கிறது. சின்னக் குழுக்களில் இருந்துதான் மாற்றங்கள் உருவாகியிருக்கிறது, அல்லது இன்றைக்கு பெரிய குழுக்களாக இருக்கிறவர்கள் சின்ன குழுக்களாக இருந்து, ஏற்கெனவே இருந்த பெரிய குழுக்களை எதிர்த்து மறுத்து உருவாகிப் போயிருக்கிறார்கள். எனவே சமூக அமைப்பில் பல குழுக்களுக்கான பல தரப்புகளுக்கான பல குரல்கள் இங்கே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. எனவே, இன்றைய தலித் அரசியலில் அப்படி பிற அமைப்புகளின் குரல்களும் இல்லாமல் போய்விட்டது.  

பிற கட்சி சார்பான அறிவுஜீவிகள் குழுவோ அல்லது மற்றவர்களோ இல்லாமல் போய் இருக்கிறது. அவர்களுக்கும் சின்ன சின்ன அமைப்புகளுக்கும் என்ன இல்லாமல் போய் இருக்கிறது என்றால் இந்த பெரிய அமைப்புகளை கவுண்ட்டர் செய்வதை தாண்டி அவர்களுக்கும் திட்டம் இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கும் ஒரு சுயமான வேலைத் திட்டம் அதன் அடிப்படையில் செயல்படுவதற்கான இங்கே சிறு அமைப்புகளும் இல்லாமல் போய்விட்டது. ஆனால், அந்த மாதிரி அமைப்புகள் உருவாவது தான் இன்றைக்கு இருக்கிற சூழ்நிலை என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் தலித்துகள் ஒரு குழப்பமான அடையாள சிக்கலில் இருக்கிறார்களா? ஒருபுறம், திராவிடம் ஒன்று இல்லை என்று கூறி தமிழ்த்தேசியம் என்று முன்வைக்கப்படுகிறது. இதனால், இதனால், ஆதி திராவிடர் என்ற பெயர் அரசியல் ரீதியாக பொருளற்றதாக மாறிக்கொண்டிருக்கிறதா? பட்டியல் இனத்திலும் அருந்ததியர், தேவேந்திரர், பறையர் என்ற தனி அடையாளங்களுடன் செயல்படுகின்றனரே இதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஸ்டாலின் ராஜாங்கம்: எனக்கு என்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே ஒரு பார்வை உண்டு. ஒரு பட்டியலில் இருக்ககூடிய ஒரு சமூகம், அது பறையரோ, பள்ளரோ, அருந்ததியரோ, அவர்களுடைய சமூக மேம்பாட்டிற்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பதை நான் எதிர்மறையாகப் பார்த்ததில்லை. அதுவும் தலித் அரசியல்தான் என்று நான் நினைத்து வந்திருக்கிறேன். இப்போது ஒரு குழு அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறபோது, அவர்கள் அந்த பாதிக்கப்படக்கூடிய பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள், அந்த குழுவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள், அதனால் அந்த பிரச்னையில் அவர்கள் தீவிரமாக ஈடுபடுவது, அக்கறை காட்டுவது இயல்பானது, அது சரியானதும்கூட என் பார்வையில். எனவே, ஒரு சாதி, அவர்கள் சாதிக்கு மட்டுமே ஆதரவாக வேலை செய்வது எதிர்மறையாக சொல்வது, உட்சாதி அரசியல் என்று சொல்வது இன்றைக்கு தமிழ்நாட்டில் உருவாகியிருக்ககூடிய பெரும்பான்மைவாத அரசியல் பேசுபவர்கள் தலித்துகளும் சாதி வெறியர்கள்தான் என்று காட்டுவதற்கு உண்டாக்கியிருக்கக்கூடிய ஒரு தந்திரமான சொல்லாடல் அது. அப்படி தலித்துகளையும் சாதியவாதி என்று காட்டிவிட்டால் இவர்கள் செய்துகொண்டிருக்கிற சாதியவாதங்களில் இருந்து அந்த குற்றவுணர்வுகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு கண்டுபிடித்திருக்கிற வார்த்தை அது. ஏனென்றால், உட்சாதி அரசியல் என்பதை நான் ஆதரிக்கமாடேன். ஏனென்றால், ஒருவர் ஒரு சாதி பிரச்னையைப் பற்றி பேசிக்கொண்டே பிற உட்சாதி என்று இவர்கள் சொல்வது பிற சாதிதான். அவர்கள் பிற சாதிகளுடன், பிற சாதி அமைப்புகளுடன், செயல்பாடுகளுடன்     இணக்கமாக இருக்க முடியும், இருக்கலாம். அப்படி ஒரு ஒருங்கிணைப்புக்குழு இருக்க முடியும். அது இன்றைக்கு இல்லாமல் போயிருக்கிற காரணங்கள் நிறைய இருக்கிறது. 

1990-களின் ஆரம்பத்தில் சாதி ஒழிப்பு ஐக்கிய முன்னணி என்று ஒரு அமைப்பு இருந்தது. அதைப் பற்றி தமிழ்நாட்டில் இன்றைக்கு யாருமே பேசமாட்டார்கள், அதில் வி.சி.க முக்கியமான ஒரு பங்கு வகித்தது. அவர்கள் பிரபாகரனை நாங்கள் கண்டுபிடிச்சி அவரில் இருந்து நாங்கள் எப்படி உருவானோம் என்று சொல்கிறார்களே ஒழிய, அவர்கள் சாதி ஒழிப்பு ஐக்கிய முன்னணி அவர்கள் வேலை பார்த்ததை அவர்கள் வரலாற்றில் சொல்வதே கிடையாது. அதெல்லாம், வேறவேற சமூகங்களைப் பிரதிபலிக்கக்கூடிய அமைப்புகள் சாதி ஒழிப்பு ஐக்கிய முன்னணியில்  இருந்தன. பள்ளர்களை, அருந்ததியர்களை, பறையர்களை பிரதிபலிக்கக்கூடிய அமைப்புகள் எல்லாம் அதில் இருந்தது. ஆனால், எப்படி இருக்க முடிந்தது என்றால் அவர்கள், அவர்களை பிரதிபலித்தாலும்கூட ஒரு பொதுநோக்கத்தின் அடிப்படையில் நாம் இணைந்து செயல்பட முடியும் என்ற ஒரு சூழ்நிலை அன்றைக்கு இருந்தது. எனவே, இது இன்றைக்கு முற்றிலும் எதிர்மறையாகப் போனதற்கு காரணம், தலித்துகள் மட்டுமல்ல  தலித் அரசியல் இப்படி இருக்க வேண்டும் என்று வெளியில் இருக்க வேண்டும் என்று விரும்பினார்களே அவர்களுடைய சூழ்ச்சியும் தந்திரங்களும் இதில் இருக்கின்றன என்று நான் சொல்வேன். இதில் தலித்துகள் காரணமே இல்லை என்று விமர்சனம் இல்லாமல் அவர்களை ஒதுக்க வேண்டியது இல்லை. அதே நேரத்தில் அவர்கள் மட்டும்தான் காரணம், அவர்கள் என்றாலே இப்படிதான் காரணம் என்று, இங்கு இருக்கக்கூடிய மொத்த அரசியல் சூழ்நிலையுடன் இந்த பிரச்னையை இணைத்துப் பார்க்க வேண்டும். இங்கு இருக்கக்கூடிய தலித் சாதிகள் எதுவும் ஒரே சாதி கிடையாது. உட்சாதியும் கிடையாது. அவை அனைத்தும் தனித்தனி சாதிகள், அவைகள் ஒரு பொது நோக்கத்தின் அடிப்படையில், ஒரு பொதுப் பண்பின் அடிப்படையில் ஆங்கிலேயர்களால், ஒரு பட்டியலுக்குள் கொண்டுவரப்பட்டது. அவைகளுக்குள் வேறுபாடுகளும் இருக்கிறது, ஒற்றுமைகளும் இருக்கிறது. அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய ஒற்றுமை அரசியல் ரீதியான ஒற்றுமைதான். பண்பாட்டு ரீதியான, மற்ற ரீதியான ஒற்றுமைகள் இருந்ததில்லை. அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதை அவர்கள் ஏற்கெனவே, ஒன்றாக இருந்துவிட்டு இப்போது அவர்கள் இவர்களை ஒடுக்குகிறார்கள் என்று பார்க்கவேண்டியதில்லை. ஏற்கெனவே வேறவாகத்தான் இருந்தார்கள், இதுக்குள்ள அவர்கள் ஒரே பட்டியலுக்குள் கொண்டுவந்த பிறகு, ஏன் ஐக்கியம் உருவாகவில்லை என்றுதான் நாம் விவாதிக்க வேண்டுமே ஒழிய, இவர்கள் ஏற்கெனவே ஒன்றாக இருந்து அதிலிருந்து பிரிந்து அதில் அவர்கள் இவர்களை ஒடுக்கிறார்கள் என்கிற மாதிரி இந்த சொல்லாடலை மாற்றுவது நியாயமில்லை. அப்படித்தான் இங்கே புரிந்துகொள்ளப்படுகிறது.

அப்புறம், இவர்களுக்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகள் என்பது பட்டியலில் இருக்ககூடிய சாதிகளின் முரண்பாடு என்பது ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய சாதியினர் தீண்டப்படாத சாதியினர் மீது செலுத்தக்கூடிய வன்முறைக்கு இணையானது அல்ல. இவர்களுக்கு இடையே முரண்பாடு இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஒற்றுமை இருக்கிறது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், இவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய முரண்பாடுகள் என்பது ஒரு ஆதிக்க சாதிக்கும் ஒரு தீண்டப்படாத சாதிக்கும் இருக்கக்கூடிய முரண்பாடு போலானது அல்ல என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இன்றைக்கு என்ன ஆகிவிட்டது என்றால், ஒரு நிரந்தரப் பிரிவு போல மாற்றப்பட்டுவிட்டது.

நான் ஆரம்பத்தில் தலித் பிரிவில் இருக்கிற எல்லா விஷயத்தைப் பற்றியும் எழுதியவன்தான். இன்றைக்கு அவர்கள் சில விஷயத்தை ஒவ்வொரு சாதியும் சொல்கிறபோது, அதை நான் மதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறார்கள் என்றால், எங்கள் பிரச்னையை நாங்கள் எங்கள் கோணத்திலிருந்து எழுதுகிறோம். நீங்கள் இதை ஒரு பொதுப் பிரச்னையாக மாற்றுகிறீர்கள். ஒவ்வொருத்தருக்கும் இருக்கக்கூடிய தனித்துவமான அம்சங்களைத் தவறவிடுகிறீர்கள். அப்படி என்று சொல்கிறபோது நான் அதை கவனிக்க விரும்புகிறேன், அதை நான் எதிர்மறையாகப் பார்க்க விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், நான் அதிலிருந்து  கற்றுக்கொள்ளக்கூட இன்னும் விரும்புகிறேன். அவரவர் சாதியைப் பற்றி பேச விரும்புவது என்பது அப்படிதான் நடக்க வேண்டும். நடக்கட்டும். இதைதான், இவர்கள் இதைப் பற்றி எழுதுவதில்லை என்பதாக மாற்றிவிடுகிறார்கள். 

ஒவ்வொரு சமூகத்திலும் இன்றைக்கு அரசியல் குழுக்கள் உருவாகிவிட்டது. எழுத்தாளர்கள் உருவாகிவிட்டார்கள், வரலாறு பற்றி தேடுபவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அந்த வரலாற்றில் உண்மை இருக்கலாம், பொய் இருக்கலாம் அதெல்லாம் இரண்டாவது. ஆனால், அதற்கென்று ஒன்று கட்டமைக்க விரும்புகிறார்கள், அதற்கென ஒரு நியாயம் செய்ய விரும்புகிறார்கள். தாங்கள் உருவானதற்கான நியாயம் உருவாக வேண்டும் என்றால், தாங்கள் எப்படி இதிலிருந்து வேறானவர்கள் என்பதை அவர்கள் அழுத்தமாக சொல்லத்தான் செய்வார்கள். அப்படி அழுத்தமாக சொல்வதை எதிர்மறையாகப் பார்க்கவேண்டியதில்லை. இதுதான் என்னுடைய நிலைப்பாடு. 

இப்படி நிலைமை இருக்கும்போது, இந்த திராவிடர் - தமிழர் என்பது தேவையில்லாத ஆணி என்பதே என்னுடைய கருத்து. அதில் விவாதிக்கிறதுக்கு ஒன்றுமில்லை. அதில் எனக்கு கருத்து இருக்கிறது என்பது வேறு. ஆனால், என் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு அந்த பைனரியைக் கொண்டுவந்து (எதிர்நிலை) பொருத்திப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. அது தேவையில்லாத விவாதங்களுக்கு கூட்டிச் செல்லும். இது இவர்களுடைய பிரச்னைகளே கிடையாது. ஏனென்றால், என்னுடைய கருத்து என்னவென்றால், திராவிடர் - தமிழர் என்ற போக்கு என்னவாக எடுத்திருக்கிறது என்றால், அடிப்படையில் இவர்கள் திராவிடர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் என்னைப் பொருத்த அளவில் அது தமிழ்நாட்டைப் பிரதிபலிக்கக்கூடியதுதான். அது பெரியாராக இருக்கட்டு, யாராக இருக்கட்டும் அவர்கள் தமிழ்நாட்டைப் பிரதிபலித்தவர்கள். ஒரு  கருத்தளவில் 4 மொழிகளைப் பேசுபவர்களைக் குறிப்பிடுவதற்காக பயன்படுத்தினாலும்கூட, நடைமுறையில் செயல்பாட்டளவில் அது தமிழ்ப்பகுதியை மட்டுமே குறிக்கக்கூடியதாக இருந்தது என்பதுதான் உண்மை. அதை அவர்களும் புரிந்துகொண்டிருந்தார்கள், இவர்களும் புரிந்துகொண்டிருந்தார்கள். 

இப்போது திராவிடத்துக்கும் தமிழருக்கும் என்ன பிரச்னை என்று நான் நினைக்கிறேன் என்றால், அதில் திராவிடத்தை எதிர்க்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், அதில் தமிழ்மொழியைப் பேசாத பிறரை நீக்குவது ரொம்ப முக்கியமான ஒன்றாக இன்றைக்கு மாறியிருக்கிறது ஒன்று. திராவிடம் பேசுபவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தமிழ் மொழி பேசாதவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் பிராமணர் அல்லாதவர்களாக இருந்தால் அவர்களை திராவிடர்களாகக் கருத வேண்டும் என்று நினைக்கிறது. எனக்கு இதில் இரண்டிலுமே பிரச்னை இருக்கிறது. தமிழர் என்ற வாதம் பிறமொழி பேசாதவனை ஆதிக்க சாதியாகக் காட்டுகிறது. திராவிடம் தமிழ்மொழியை சேர்ந்தவனையும் ஆதிக்க சாதியாகக் காட்டுகிறது.

எனவே, இதில் எனக்கு பிரச்னை எங்கே இருக்கிறது என்றால் இது இரண்டிலுமே ஒரு ஆதிக்க அரசியல், ஆதிக்க சாதி அரசியல் என்பதுதான் இருக்கிறது. இது இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. தமிழ் அடையாளம் என்பது தமிழர் அல்லாதவர்களை நீக்கிவிட்டு வைத்தால் அது தமிழ் ஆதிக்க சாதிகளுடைய கருத்தாக இருக்கிறது. திராவிடம் தமிழ்மொழி பேசாத மற்றவர்களையும் சேர்த்துக்கொண்ட ஆதிக்க சாதிகளின் ஒரு கருத்தாகத்தான் இருக்கிறது. இவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம்தான் நடக்கிறது என்னுடைய கருத்து. திராவிடம் - தமிழ் அப்படி என்கிற கண்ணாமூச்சி விளையாட்டு இவர்களுக்கு இடையே பிற பிரச்னைகளில் இருந்து விலகி நிற்பதற்கு இவர்களுக்குள் ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்றால், இவர்கள் இரண்டு பேரும் தலித் பிரச்னைகளை அணுகுவதில் ஒரே மாதிரியாக நடந்துகொள்ளக்கூடியவர்கள்தான். தலித் பிரச்னை வருகிறபோது, இவர்கள் தமிழன் என்ற அடையாளத்தை எடுத்து தனக்கு முகமூடியாகப் பயன்படுத்திகொள்கிறார்கள், அவர்கள் திராவிடன் என்ற அடையாளத்தை எடுத்து முகமூடியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் இரண்டு தரப்பிலும் சமூக பிரச்னைகளை, சாதிப் பிரச்னைகளை அணுகுவதில் அலசுவதிலோ உள்ளார்ந்த அக்கறையோ, அல்லது உடனடியான விஷயமோ அல்லது அதில் மாறிவருகிற போக்கை கணக்கிலெடுத்துக்கொள்கிற விஷயமோ இல்லை. இந்த விவாதம் என்பது என்னைப்பொருத்த அளவில் நாம் ஒரு மாநிலமாக இருக்கிறோமா, தேசமாக இருக்கிறோமோ என்பதைப் பற்றிய விவாதம் என்பது வேறு. இந்த அடையாள அரசியலில் போய் சிக்கிக்கொண்டு இவனுடைய (தலித்) பிரச்னை ரொம்ப சிக்கலாக மாறிக்கொண்டு இருக்கிறது. திருமாவளவன்தான் எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டு அரசியலில் தலித் அரசியலில், இந்த தமிழன் - திராவிடன் என்ற அரசியல் விளையாட்டுக்குள் உள்ளே போனவர் என்று நான் நினைக்கிறேன். அவர் அளவுக்கு செல்வாக்கு பெற்ற எந்த தலித் தலைவரும் இந்த திராவிடன் - தமிழன் என்ற விளையாட்டுகுள் போனதில்லை. அதற்குமுன், இது அம்பேத்கரிய இயக்கங்களுடைய பிரச்னையாக எப்போதும் இருந்தது கிடையாது. எனவே அவர் ஏன் இந்த விளையாட்டுக்குள் போனார் என்பது குறித்து என்னுடைய கருத்து என்னவென்றால், அவர் எப்போதுமே தேர்தல் அரசியல் சார்ந்து தன்னை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஒரு மொழி அடையாள அரசியல் உதவும் என்று நம்பக்கூடிய ஒர் சிந்தனைமுறையில் இருந்து வந்தவர் அவர்.

நம்மை தமிழனாக சொல்லிக்கொள்வதன் மூலமாக நம்மை சாதி அடையாளத்தில் பார்ப்பதிலிருந்து விலக்கி வைத்துக்கொள்ள முடியும் என்று நம்பக்கூடிய ஒரு சிந்தனைப் பள்ளி இங்கே இருக்கிறது. பெருஞ்சித்திரனார் போன்ற மரபு இருக்கிறது. கொஞ்சம் இடதுசாரி மரபுகள் இருந்தது. அதிலிருந்து வந்ததனால், அவர் என்ன பண்ணார் என்றால், இந்த சாதி பிரச்னைகளி இருந்து தாண்டுவதற்கும், பிற சாதிகளை தேர்தல் சார்ந்து எட்டுவதற்கும் இந்த தமிழ் அடையாளம், மொழி அடையாளம் உதவும் என்கிறபோதுதான், அவர் இந்த தமிழன் என்கிற கேபினுக்குள் ரொம்ப நுழைந்துவிட்டார். அதனால், தலித் அரசியல் மீது இந்த தமிழன், திராவிடன் என்பது ரொம்ப படிந்துபோய்விட்டது. ரொம்ப விவாதத்துக்கு வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: இப்படி தலித்துகள் மட்டுமில்லை தூய்மைவாத தமிழ்த் தேசியத்தால், பல நூற்றாண்டுகளாக தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழ் பேசும், தமிழர்களாக உணரும் பிறமொழி மாநிலங்களின் பூர்வத்தைச் சேர்ந்தவர்கள் எந்த மாதிரியான நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்? அதே போல தலித் சாதிகளுக்குள்ளும் இந்த நெருக்கடியை உணர்வார்கள் இல்லையா?

ஸ்டாலின் ராஜாங்கம்: கண்டிப்பாக இது நெருக்கடிதான். அதாவது சமூகத்தில் பிரதான முரண்பாடோ அல்லது ஒற்றுமையோ, மொழி அடிப்படையில் அமைகிறதா, சாதி அடிப்படையில் அமைகிறதா என்றால் என்னுடைய கருத்து சாதி அடிப்படையில்தான் அமைகிறது. என்னுடைய கருத்து புதிய கருத்தும் அல்ல, இது பற்றி 80-களின் இறுதியிலும் 90-களின் ஆரம்பத்திலும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. அறிஞர் குணா இந்த இனவாத தமிழ்த்தேசிய கண்ணோட்டத்தில் இந்த பார்வையை அவர் முன்வைக்கத் தொடங்கியபோது, அவரை மறுத்து நிறைய நூல்கள் இங்கே வெளியாயின. அல்லது கருணா மணோகரன் போன்றவர்கள் இந்த விஷயத்தை முன்வைத்து பேசினார்கள். இன்றைக்கு என்ன பிரச்னை வந்துவிட்டது என்றால், இனவாத தமிழ்த்தேசியத்தை எதிர்க்க வேண்டும் என்றால், அவர்கள் திராவிட அரசியலை ஆதரிக்கிறவர்களாக மாறிவிடுகிறார்கள், அல்லது திராவிட அரசியலை ஆதரிக்க வேண்டும் என்றால் அவர்கள் தமிழ் அடையாளத்தை ரொம்ப எதிர்மறையாகப் பார்க்கிறவர்களாக ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்போது ஒன்றை எதிர்க்க வேண்டும் என்றால் இன்னொன்றை கண்டிப்பாக ஆதரித்துதான் ஆக வேண்டும் என்ற ஒரு இரட்டை எதிர்நிலைகளுக்குள் இந்த பிரச்னை சிக்கிக்கொண்டு விட்டது. இதில் நிச்சயமாக ஒடுக்கப்பட்ட மக்களுடைய பார்வை இந்த இரண்டாகவும் இருக்க முடியாது, இந்த இரண்டுக்குள்ளும் இருந்தும் யோசிக்க முடியாது, யோசிக்கவும் கூடாது என்பதுதான் என்னுடைய பார்வை. இதற்கு வெளியில் ஒரு மாற்றான பார்வையை உருவாக்க வேண்டும் அல்லது மூன்றாவது பார்வை ஒன்றை உருவாக்க வேண்டும். இங்கே அப்படி ஒன்று நடக்கவில்லை. 

இப்போது இங்கே தமிழ்த் தேசிய வாதம் இனவாதமாக மாறிவிட்டது, அதில் பிரச்னை இருக்கிறது அதில் பிரச்னை இருக்கிறது என்று சொல்பவர்கள் திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். திராவிட இயக்கம் கருத்தியல் அளவிலோ அல்லது செயல்பாட்டு அளவிலோ என்னவாக இல்லை என்றால் தலித்துகளுக்கு ஆதரவாக இல்லை, அல்லது அதனுடைய உள்ளார்ந்த அக்கறையாக அது இல்லை. அப்போது அது என்னவாகிவிடுகிறது என்றால், இவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக இவர்களுடைய இந்த பூச்சாண்டி தனத்தை ஆதரிக்கிற மாதிரி ஆகிவிடுகிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தலித் அமைப்புகள், தேர்தலில் ஈடுபடுகிற அமைப்பும் சரி, தேர்தலில் ஈடுபடாத அமைப்பும் சரி நிறைய பண்ணக்கூடிய வேலைகள் என்னவாகிவிடுகிறது என்றால் இந்த பைனரிகளுக்குள் ஒன்றை தேர்வு செய்வதாக ஆகிவிடுகிறது.  

நான் இன்னொன்றும் சொல்கிறேன், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது எந்த தலித் அமைப்புகளாவது இந்த மொழி சார்ந்த சினாரியோவில் சிக்கிக்கொண்டு தவிக்குதா பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால், அது இங்கேதான் நடந்தது. இது 90-களுக்குப் பின்னால் உருவான தலித் அரசியல் இயக்கங்களில் நடந்த பிரச்னை இது. 

அவர்கள் அம்பேத்கரிய அரசியலில் இருந்து உருவாகவில்லை, ஏனென்றால், அவர்கள் கொஞ்சம் இடதுசாரி அரசியலில் இருந்து தாக்கம் பெற்றிருக்கிறார்கள், கொஞ்சம் தமிழ்த்தேசியம் அரசியலில் இருந்து தாக்கம் பெற்றிருக்கிறார்கள். அதனால், இவற்றைக் கலந்து மக்கள் பாதிக்கப்படக்கூடிய அன்றாட மக்கள் பிரச்னை ஒன்று இருக்கிறது, இது மூன்றும் கலந்து உருவானவர்கள் இவர்கள். 

இவை ஒரு விரிவான வாசிப்பு அல்லது விரிவான விவாதங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் அல்ல. அவை அன்றாட பிரச்னைகளுக்கு எதிர்வினையாக உருவான அமைப்புகள். அப்படி எதிர்வினையாக உருவான அமைப்புகளுக்கு தலைமை ஏற்றவர்களுக்கு கொஞ்சம் இடதுசாரி கருத்தியலும் கொஞ்சம் தமித்தேசிய முகமும் இருந்தது. அதை தன்னெழுச்சியாக உருவான இந்த அமைப்புகளுடைய கருத்தியலாக மாற்றிவிட்டார்கள். இந்த அமைப்புகள் இன்றைக்கு அந்த சிக்மாவில் சிக்கிக்கொண்டுவிட்டது. அதனால், இதுதான் இன்றைக்கு பிரச்னை. மூன்றாவது பார்வை இருக்க வேண்டும்.

என்னைக் கேட்டால், நீங்கள் என்ன என்று கேட்டால், தமிழனா என்றால் நான் தமிழன் அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என்னுடைய மொழி தமிழ், தமிழுக்குள் அவ்வளவு விஷயங்கள், ஒரு பண்பாடாகவும் வரலாறாகவும் இருக்கிறது. ஆனால், ஒரு சமூகத்தில் மொழியாக மட்டுமே வரையறுப்பதில் நிறைய பிரச்னை இருக்கிறது. அது சமூகத்தில் ரொம்ப பின்னாடி உருவான நிலை. எனவே, நீங்கள் தமிழனா திராவிடனா என்றால், திராவிடன் என்பதை தலித் முன்னோடிகள் எப்படி முன்னெடுத்தார்கள், திராவிடன் என்பது வெள்ளைக்காரன் வடிவமைக்கிறான். மிஷனரிகளும் ஆங்கில அறிவாளிகளும் இணைந்து அவர்களுடைய வரலாற்றியல் மொழியியல் கண்ணோட்டத்தில் இருந்து உருவாக்கிய ஒரு அடையாளம் திராவிடம். அதற்கு பின்னாடி வருகிறவர்கள் அந்த அடையாளத்தில் நாம் இயங்குகிறபோது, அரசாங்கத்தினுடைய அணுசரணையைப் பெற முடியும், அவரக்ளுக்கு நெருக்கமாக இருக்க முடியும் என்ற முறையில், அந்த திராவிடம் என்கிற கருத்தை எடுத்துக்கொள்கிறார்கள். அதை ஒரு பெயராக அடையாளமாக வைத்துக்கொள்கிறார்கள். 

அதில் நான்கு மொழிகளை உள்ளடக்கியதா, ஒரு மொழியை உள்ளடக்கியதா, அப்படி என்கிற பெரிய பிரச்னை அவர்களுக்கு இல்லை. ஏனென்றால், அவர்களுடைய முதன்மையான் பிரச்னை, அடிப்படையான பிரச்னை மொழி பிரச்னை இல்லை. அன்றைக்கு பாதிக்கப்படக்கூடிய ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகள், அதற்காக வாதிடுவது, அதற்கான வேலைகள் செய்து அதற்கு பெயர் வேண்டும். அந்த கோணத்தில் இருந்து அவர்கள் ஒன்றை வைக்கிறார்கள். அப்படியே இருந்தாலும்கூட தமிழன் என்ற அடையாளத்துக்கு அவர்கள் என்னவாக வைக்கவில்லை என்றால், அயோத்திதாசர் தமிழன் என்ற அடையாளத்தை வைத்தார் என்றால் அது மொழி அடையாளமா என்றால் அது கிடையாது. அவரைப் பொருத்தவரையில் அது மொழி அடையாளம் கிடையாது. அது ஒரு கல்சுரல் (பண்பாட்டு) அடையாளம். கல்சர் என்றால் மொழி இல்லை என்கிறீர்களா, அவர் ஒன்று சொல்கிறார், பௌத்தத்தினுடைய மெய்யியலுக்கும் தமிழ்மொழின் அமைப்பொழுங்குக்கும் ஒரு தொடர்பு இருகிறது. பௌத்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் தமிழ் மொழியின் அமைப்பை புரிந்துகொள்ள வேண்டும். அல்லது தமிழ் மொழியின் அமைப்பொழுங்கைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் பௌத்த மெய்யியலைப்  புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இப்போது இந்த இடத்தில் நான் ஒன்றை கேட்கிறேன்.

20 நூற்றாண்டு வரலாறு எப்படி எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பௌத்தம் தமிழுக்கு அந்நியமானது என்று ஒரு வரலாறு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அயோத்திதாசர் என்ன சொல்கிறார் என்று போய் பார்த்தால், தமிழை வெறும் ஒரு மொழியாக சுறுக்க முடியாது. அது ஒரு மெய்யியலுடன் தொடர்புடையது. அதுதான் இன்றைக்கு பிரச்னை.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒன்றை கேட்கிறார்கள், தமிழர்  சிந்தனை மரபு என்ற ஒன்று இருந்ததா என்று கேட்கிறார்கள், தமிழர்கள் சிந்தித்தார்கள், அதிலென்ன. ஆனால், ஒருவர் இந்த மொழி பேசியதால் இந்த சிந்தனைதான் இருந்தது என்று சொல்ல முடியுமா? அப்படி கிடையாது. ஒருவனுடைய சிந்தனையைத் தீர்மானிப்பது மொழி அல்ல. ஒரு மெய்யியல்தான். இப்போது நீங்கள் காந்தியவாதியாக இருக்கிறீர்கள், ஆனால் தமிழனாக இருக்கிறீர்கள், நீங்கள் சிந்திப்பதற்கான தூண்டுகோல், சிந்திக்கிற முறை காந்தியத்தில் இருந்து பெறப்பட்டதா, தமிழனால் இருப்பதால் பெறப்பட்டதா? நீங்கள் ஒரு மார்க்சிஸ்ட்டாக இருக்கிறீர்கள், நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கிற மார்க்சிஸ்ட், நீங்கள் மார்க்சியத்தைப் படித்து, மார்க்சியத்திலிருந்துதான் சிந்திக்கிறீர்கள். ஆனால், 100 வருடங்களுக்குப் பிறகு, மார்க்சியத்தை சிந்திப்பவரை தமிழ் சிந்தனை மரபு என்று சொன்னால் நியாயமா? 

ஆனால், ஒரு மொழி சார்ந்து சிந்திப்பவர் என்றால் அந்த மொழியின் பண்புகள் இருக்கக்கூடுமே ஒழிய, அந்த மொழியின் மரபை பேசக்கூடியவர் என்பதால் அவருக்கு என்று ஒரு மரபு இருந்தது அது ஒரு சிந்தனை மரபு, அது தமிழர் மரபு என்று சொல்வதே ஒரு பிரச்னை. 

இங்கு இருந்தது மொழியியல் சார்ந்த பின்புலம் கிடையாது. இங்கு இருந்தது மெய்யியல் சார்ந்தது, அந்த மெய்யியல் சார்ந்த சடங்குகள், நம்பிக்கைகள், கதைகள் அதெல்லாம் சேர்ந்துதான் இங்கே ஒன்று இருக்கிறது. எனவே, நீங்கள் திரும்பத்திரும்ப ஒரு பைனரிக்குள் சிக்கிக்கொள்கிறீர்கள். இதனால், நமக்கு திரும்பத்திரும்ப ஒரே சிக்கல் வருகிறது. எனவே என்னைக் கேட்டால், அயோத்திதாசரும், அம்பேத்கரும் சொன்ன பௌத்தம் என்பது ஒரு மதரீதியான நிலைப்பாடாக பலருக்கு தெரியும். ஆனால், யோசித்துப் பார்த்தால், அது பௌத்தமாக இல்லாவிட்டாலும்கூட ஒரு மெய்யியல் நோக்காக அது இருக்கிறது. ஒரு மெய்யியல் கண்ணோட்டத்தில் இந்த சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவி பண்ணுகிறது. சமத்துவம் என்ற ஒன்றை நாம் அதிலிருந்து கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். பௌத்தம் சமத்துவத்தைக் கொடுத்ததா இல்லையா என்பது விவாதம் வேறு. ஆனால், அவர்கள் சமத்துவத்தை ஒரு மொழியியலில் கண்டுபிடிக்காமல் மெய்யியலில் கண்டுபிடிக்கிறார்கள். ஏன் அங்கே போக வேண்டும். இதுதான் விவாதமாக இருக்க வேண்டும். ஆனால், இதைத்தான் இன்றைய தலித் அரசியல் குழி தோண்டி புதைத்துவிட்டது.  இந்த மூன்றாவது பார்வைதான் இருக்க வேண்டும் என்று நான் சொல்வேன்.  

கேள்வி: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக தமிழ்த்தேசிய அரசியல் பேசப்படுகிறது. 25-30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்த்தேசிய அரசியல் எப்படி இருந்தது? இன்றைக்கு எப்படி இருக்கிறது?

ஸ்டாலின் ராஜாங்கம்: 25 ஆண்டுகளுக்கு முன்னாடி இங்கே இருந்த பிரச்னை என்னவென்றால், கிட்டத்தட்ட இடதுசாரி கண்ணோட்டம் கொண்ட தமிழ்த்தேசிய அரசியல் இங்கே இருந்தது. இடதுசாரி இயக்கத்தில் இருந்து ஜோசப் ஸ்டாலின் தேசிய இயக்கத்துக்கு அவர் வகித்த வரையறையிலிருந்து தேசிய இனம் என்பதைப் புரிந்துகொண்டு அதிலிருந்து உருவானதுதான் அந்த தமிழ்த் தேசிய அமைப்புகள் எல்லாம். அவைகளுக்கு தங்களுடைய தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அதன் வழியாக ஒரு விடுதலையை சாத்தியப்படுத்த வேண்டும் என்ற ஒரு பார்வை இருந்தது. ஆனால், அதனிடம் இருந்த பெரிய குறைபாடு என்னவென்றால், அவைகள் பெரும்பாலும் ஒரு இடதுசாரி பின்புலத்தில் இருந்து வந்ததனால், அது என்ன பண்ணவில்லை என்றால், உள்ளூர் அம்சங்களை நெருக்கமாகப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனவோ என்று எனக்கு அன்மைக்காலமாகத் தோன்றுகிறது. அது ரொம்ப பொலிட்டிகலா சமூகத்தையும் மனிதர்களையும் புரிந்துகொண்டு பொலிட்டிகலா ஆர்கனைஸ் பண்ண முடியும், பொலிட்டிகலான ஒரு தீர்வை எட்டிவிட முடியும் என்றுதான் அவைகள் எண்ணின. தமிழர்களுக்கு என்று ஒரு இசை,  தமிழர்களுக்கு என்று ஒரு அடையாளம் என்பதைப் பற்றி அது யோசித்தது, ஒழிய, ஆனால், அது ஒவ்வொரு பகுதிக்கும் இருந்த தனித்துவமான விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அந்த மாதிரி ஒன்றை அது புரிந்துகொண்டதா என்பதைப் பற்றி இல்லை. இது வந்து அரசியல் ரீதியாக மிகச் சரியாகவும் பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் சிலவற்றைப் புரிந்துகொள்வதில் கொஞ்சம் சிக்கல்களும் அவைகளிடம் இருந்தன. ஆனால், அவைகளுடைய நோக்கம், உள்நோக்கம் அல்ல, அவைகள் தாங்கள் எண்ணிய விஷயத்துக்கு உண்மையாக இருந்து தொடர்ந்து போராடின, பெரிய இழப்புகளைச் சந்தித்தன. 

இன்றைக்கு இருக்கிற அமைப்பு என்னவென்றால், இரண்டு செல்வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. ஒன்று பெங்களூரு குணாவுடைய ஒரு தமிழ்த்தேசிய கண்ணோட்டத்தில் இருந்து தாக்கம் பெற்ற அமைப்புகள். இரண்டாவது ஈழப் பிரச்னை. ஈழப் பிரச்னைக்கு பின்னாடி உருவான பிரச்னைகள். இவை இரண்டும் சேர்ந்து இன்றைக்கு என்னவாக ஆகிவிட்டன என்றால், ஒரு இனவாத தமிழ்த்தேசியம் என்பதுதான் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. 

இவைகளுக்கு இங்கிருக்கிற சமூகப் பிரச்னைகளை அடையாளம் காண்பதில், புரிந்துகொள்வதில், அவைகள் முனைப்பு பெறுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கு இருக்கிற அமைப்புகள், பிரச்னைகளை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை உருவாக்க முடியும் என்று நம்பக்கூடிய அமைப்புகளாகத்தான் இந்த தமிழ்த்தேசிய அமைப்புகள் இருக்கின்றன. சாதிகளுக்கு இடையே முரண்பாடு வந்தால், அந்த முரண்பாடு ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்து அவற்றை சரி செய்வதன் மூலமாக அதைத் தீர்க்கலாம் என்பதை நம்புவதாக இல்லாமல் சாதியை சொல்லாதே, பெயரை சொல்லாதே, அல்லது அதை கைவிடு,  அல்லது முரண்பாடுகளை சொல்லாதே என்று சொல்வதன் மூலமாக சாதிகளுக்கு இடையிலே ஒரு பெருமையை உருவாக்க முடியும். அவைகளுக்குள் ஒரு ஒற்றுமையை உருவாக்க முடியும் என்று நம்பக்கூடிய இயக்கங்களாகத்தான் இவைகள் இருக்கின்றன. இது செயற்கையானது என்னுடைய பார்வையில், இப்படி ஒன்று சாத்தியமில்லை.

ஆனால், இந்த அமைப்புகளிடம் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பாசிட்டிவ் விஷயம் என்னவென்றால், இடதுசாரி அமைப்புகளிடம் இருந்ததைவிட கொஞ்சம் கல்சுரலா, உள்ளூர் அளவில் வரலாற்று ரீதியான விஷயங்களை கொஞ்சம் நெருக்கமாக புரிந்துகொள்கிறது, அவற்றை அவை கையிலெடுக்க விரும்புகின்றன. அப்போது, கல்சுரலா சரியா இருக்கு, ஆனால், அது பொலிட்டிகலா ரொம்ப பிற்போக்குத்தனமான வாதங்களை வைக்கக்கூடிய இன்றைய இனவாத தமித்தேசியம் என்பது இருக்கிறது.  தமித்தேசியம் என்ற ஒன்று வரவேண்டுமா என்றால் அதில் எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், தமித்தேசியம் என்று ஒன்று வர வேண்டுமானால், அவர்கள் எப்படி பொலிட்டிகலா சரியாக சிந்திக்கிறார்களோ அதே மாதிரி கல்சுரலாகவும் இருக்க வேண்டும். கல்சுரலான விஷயத்தை சிந்திக்கும்போது, பொலிட்டிகலாகவும் சரியாக இருக்க வேண்டும். ஒன்றைவிட்டு ஒன்றை பண்ண முடியாது. இங்கு இருக்கிற பிரச்னை என்ன என்றால், கல்சுரலை நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, கலாச்சாரம் சாதியுடன் தொடர்புடையதாக இருக்கிறது. அப்போது அதை எங்கே நீக்குவது, எங்கே நீக்காமல் இருப்பது, அதை எப்படி மறுவிளக்கம் கொடுத்து எப்படி கையிலெடுப்பது என்பது குறித்து ஒரு ஆழமான பார்வையும் தெளிவும் இவர்களிடம் இல்லை. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய தமிழ்த்தேசியத்திடம் நடந்திருக்கிற முக்கியமான மாற்றம் என்று நான் நினைக்கிறேன். ஆனால், இது ஒரு மையமான விவாதமாக சமூகத்தில் இருக்கிறதைவிட, மற்ற விஷயங்களும் சமூகத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

Dalit

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: