Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : தேசம்மா

சென்னையின் பூர்வ குடி மக்களான மீனவ மக்களின் வாழ்க்கை, அவர்களின் காதல், பழக்க வழக்கம் என இதுவரை பதிவு செய்யப்பட்டாத பார்வையில் உருவான கதைதான் தேசம்மா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhesamma

அரவிந்த் குமார்

Advertisment

"ஓய்.. யார்றா அது"

இடுப்பளவு தண்ணீரில் அடைப்பு வலையை அணைஞ்சபடி நின்னுகிட்டிருந்த குள்ளப்ப செட்டி குரல் கொடுக்க..

"நாந்தாங்க பிச்சை" என்று கரையோர இருட்டில் தாழை புதருக்கு பின்னால் இருந்து குரல் வந்தது.

"வில்லியனா.. உனக்கு என்னடா இங்க வேல"

"தோலுரிச்ச நண்டு கெடக்கானு பாக்க வந்தேனுங்க"

"சரியா போச்சு.. அம்மாசைக்கு தேட வேண்டியத இன்னிக்சுகு தேடி வந்தா எப்படிடா கெடைக்கும். வில்லியன் வேலைய பாருடா, பரிய எடுத்து இடுப்பில கட்டிக்கிட்டா நீ பரவன் ஆயிடுவியா? போடா போ, ஏரில கால வச்சா அவ்ளோதா பஞ்சாயத்துல நாடுபாக்க நிக்க வச்சுடுவேன்" என்று கூறியபடி வலையில் துள்ளிய கானாங்கத்திகளை பரியில் அள்ளிபோட்டபடி கரையேறினார் குள்ளப்ப செட்டி.

வலையை கரையில் உலர்த்திவிட்டு ஒரு கையில் பரியையும், மறுகையில் சிக்கத்தையும் பிடித்தபடி வேகவேகமாக பனை மரங்கள் உயர்ந்து நின்ற பாதையில் மேடேறினார்.

இஞ்சையம்மன் கோவிலில் இன்று கன்னிசாமிக்கு படையல். ஊரே அமிலோகதிமிலோகப்ட்டது. வடக்க நெல்லூரில் இருந்தும், தெக்க திருவத்துர்ல இருந்தும் வந்த மொத்த ஜனத்தால பழைய சீவரம் ஏரி கிராமமே பிதுங்கியது போல் காணப்பட்டது.

காலையிலேயே சுடுமண் குதிரை சுடுவதற்கு பூசாரி தயாராகி கொண்டிருந்தார். நல்ல இளைஞ்ச மண்ணா பாத்து கையால் அளைந்து கொண்டிருந்தார். இடுப்பில் கந்தலை சுற்றியபடி சின்ன பசங்க ஆர்வத்தோட எட்டிப்பார்த்து, மண்ணை கையால் தொட முயன்றனர்.

"ஏய் கையா எடுங்கடா, நாலு கை பட்டா குதிரை தல நிக்காதுடா.. ஓடுங்கடா" என்று பூசாரி குரல் கொடுக்க.

வலை கண்ட மீனாய், சிறுவர்கள் தெறித்து ஓடினர்.

தன் பங்குக்கு சிறுவர்களை விரட்டிய குள்ளப்ப செட்டி, கல் வீட்டுக்கு முன்னால் நின்று குரல் எடுத்தான்.

"பஞ்சாயத்தாரே, பஞ்சாயத்தாரே"

"என்ன குள்ளப்பா, காலையிலயே வாசல்ல, சந்தைக்குக் கூட போகாம புடிச்ச மீனோட வந்து நிக்குற" என்று படியிறங்கினார் அலைச்சல் செட்டி.

"இந்த வில்லியனுங்கள ஒரு வார்த்த சொல்லி வைக்கணும்... அவனுங்க வலை புடிக்க ஆசைப்பட்றானுங்க, நண்டு தேறி கரையில சுத்துறானுங்க, வுட்டா, நாளைக்கே கட்டுமரம் அணைஞ்சு கடலுக்கு போவானுங்களோ... அத பாத்த்துகிட்டு நாம சிக்கத்தை தலையில கவுத்துக்கணுமா?" என்று மூச்சிரைத்தார்.

"அவங்க ஏண்டா இங்க வர்றாங்க... ஏரிக்கு அந்த பக்கம் தாழைக்காட்டுக்குள்ள சுத்தப் போறானுங்க. யார் யாரு, எங்க இருக்கணுமோ, அங்க தா இருக்கணும், குளவி வேடனும், சொறி மீனும் ஒண்ணாகுமா.. ஆகாது, போடா நா பார்த்துக்கிறேன்" என்றார் அலைச்சல் செட்டி.

என்னமோ பண்ணுங்க என்று அணத்தியபடி அருகில் இருந்த பனையோலை குடிசைக்குள் நுழைந்தார் குள்ளப்ப செட்டி.

"என்னப்பா, வாட்டமா வந்து இருக்கீங்க" என்றபடி வந்தாள் காட்டாயி.

"அயிலா எதுவும் இன்னிக்கு சிக்கலயா என்றபடி பரியை ஆராய்ந்தாள். நல்லாதானே பாடு இருக்கு. பிறகு எதுக்கு கன்ன எலும்ப தாண்டி கோவம், தெரியுது"

"அது ஒண்ணும் இல்லமா, வர வர தண்ணில யாரு கால வைக்கிறதுனு ஒரு வரமொற இல்லாம போச்சு. இந்த வில்லியனுங்க பட்டினவனா ஆக ஆசைப்பட்றானுங்க"

"யாரு வந்தா என்னப்பா, இவ்ளோ பெரிய கடல்ல, அவங்க மரமேறி நம்ம பங்க எடுத்துட போறாங்களா என்ன?"

"வெவரம் தெரியாம பேசாத... ஆனானப்பட்ட சிவனே தேடி வந்த பொண்ணு எடுத்த குலம் நம்மளது. பார்வதின்னாக்கா யாருனு கேட்ட... நம்ம பர்வதராஜ குலம்... இன்னின்னாருதா இதஇத செய்யணும்னு ஒரு இது இருக்கு" என்றபடி இலை சுருட்டை கையில் அரக்கி வாயில் அதக்கியபடி முதுகை வாகாக தரைக்கு கொடுத்து கண் சொக்க ஆரம்பித்தார்.

வழக்கமாக கேட்கும் கதை என்பதால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் பரியில் இருந்த மீன்களை அள்ளி கூடையில் போட்டு சந்தைக்கு கிளம்பினாள் காட்டாயி.

வெயில் ஏற ஆரம்பித்து இருந்தது. குதிரை சுடுவதற்கு கட்டப்பட்ட சூளையில் இருந்து புகைமூட்டம் எழுந்தது. இன்னும் கொஞ்ச நேரத்துல சுட ஆரம்பிச்சுடுவாங்க என்று நினைத்தபடி சந்தையில் கால் பதித்தாள்.

இது நெய்த்தோலி பருவம் என்பதால், சந்தையில் தண்ணீர் சிந்தாத கூடைகளில் நெய்த்தோலி நிரம்பியிருந்தது. வெயில் தெரியாமல் இருக்க முந்தானையால் தலை மறைத்து ஒரு கையால் பனையோலை விசிறியால் ஈக்களை விரட்டியபடி கடமா, மத்தி, சூரை மீன்களை விற்றுக் கொண்டிருந்த பெண்கள் வரிசையில் போய் அமர்ந்தாள் காட்டாயி.

"வாடி, எதுக்கு இம்மா நேரம், உங்க அப்பன் கடலுக்கு போனானா, கடலுக்கு அப்பால போனானா" என்று ஈறுதெரிய சிரித்தாள் அஞ்சல.

"அதுக்கு என்ன ஊர் விஷயத்த தூக்கி தலையில போட்டுகிட்டு, வெறும் கூடைய தூக்கி எந்தலைல வைக்குது" என்று பதிலுக்கு சிரிப்பை உதிர்த்த காட்டாயி, கானாங்கத்தி என்று கத்த துவங்கினாள். கால் பிரித்து நின்ற நிலையில் அம்மி அளவுக்கு இருந்த நண்டுகளை இரண்டு கைகளில் ஏந்தி கத்திக் கொண்டிருந்தனர் ஒருபுறம், வாங்க வந்த வைரவன் செட்டிச்சியிடம், செவுள் பிரித்து மீன்களை காண்பித்தாள் அஞ்சல.

உச்சியில் கவண் பொருத்தப்பட்ட நீண்ட மூங்கிலை ஏந்தியபடி சந்தைக்குள் கால்பதித்தான் பிச்சை. நாள்பட்ட கருங்காலி மரத்தின் வழுவழுப்பைப் போன்று மின்னியது வியர்வை சொட்டிய அவனது உடல். கண்களால் சந்தையை அளந்தபடி கானாங்கெத்தியில் நிலைகுத்தினான். பிறகு விறுவிறுவென்று சந்தையை தாண்டி தோணிரேவை நோக்கி சென்றான்.

செல்லமாக தரையை தட்டியபடி வந்து சென்ற அலைகளுக்கு மேல் காற்றுக்கு தோதாக ஆடிக்கொண்டிருந்தன கட்டு மரங்கள். செய்து முடிக்கப்பட்ட கட்டுமரங்கள், அரைகுறையாக கட்டப்பட்ட தோணிகள், பலகைகளாக அறுக்கப்பட்ட வாகை மரம், கருவை மரம் போன்றவை கரையெங்கும் காணப்பட்டது. திருவிழா என்பதால் தோணிரேவு பகுதியில் வேலையாட்கள் என யாருமில்லை. எப்போதும் காணப்படும் சுருட்டு பாய் கூட கண்ணில் தென்படவில்லை.

ஒதுங்கி இருந்த கட்டுமரம் ஒன்றின் அமர முனையில் போய் அமர்ந்த பிச்சை, இருட்டில் தெரியும் பூனையின் கண்களாய் மின்னி மின்னி மறையும் கடற்பரப்பை பார்த்தபடி இருந்தான். தன்னை மறந்து அயர்ந்த அவன் முகத்தில் நிழலின் குளுமை பட கண் திறந்தான். தெத்துப்பல் தெரிய விழிசுருக்கி சிரித்தபடி நின்றாள் காட்டாயி.

"எங்கப்பனுக்கு முன்னாடி வர்றாத, அவர் கண்ல படாதனு சொன்னா கேக்குறியா? காலையிலேயே அவர் உன்னை பார்த்துட்டு பஞ்சாயத்த கூட்டப்ப பாத்தாரு" என்று சொல்லியபடி கால்களை தண்ணீரில் தொங்கவிட்டபடி கட்டுமரத்தில் அமர்ந்தாள்.

"உன்னை பார்க்குறதா இருந்தா நான் நேரா சந்தைக்கு வர மாட்டேனா, கருக்கல்ல கரைக்கு எதுக்கு போகணும். உங்க அப்பன் கண்ணுல ஏன் படணும். நெஜம்மாவே எனக்கு கட்டுமரத்துல ஏறி கடலுக்கு போக ஆசையா இருக்கு. ஆனா உங்க ஆளுங்க என்னைய சேத்துக்கிட மாட்டாங்க" என்றான்.

"யாருக்கு என்ன இருக்கோ, அதை வெச்சு பொழைச்சுக்க வேண்டியதுதான். இல்லாததுக்கு எதுக்கு ஆசைப்படணும்" என்று அவன் எண்ணெய் காணாத தலையின் சிக்கெடுத்தபடி கூறினாள் காட்டாயி.

"ஏன் நான் வலைபோட்டா சிக்காதா எதுவும்? என்று கோவமாக பிச்சை கேள்வி எழுப்ப "இப்ப எதுக்கு இந்த பேச்சு" என்ற அவன் காய்ப்பேறிய விரல்களுக்கு நயமாக சுளுக்கெடுத்தாள்.

"உனக்கு என்ன இப்ப கடலுக்கு போகணும் அவ்ளோ தானே, நான சொல்லித் தர்றேன், நான் கூட்டிப் போறேன்" என்று கட்டு மரத்தில் சாய்ந்தாள்.

கிருஷ்ணாபட்னத்துக்கு போனப்போ அவன் அப்பன் வாங்கி வந்த கட்டம் போட்ட புடவை கட்டுமரத்தை பாய்மரமாக மாற்றி இருந்தது.

சுருட்டு பாயின் கனத்த இருமல் கேட்டு வாரி சுருட்டியபடி எழுந்தனர் இருவரும். கண்களில் பயம் கப்பிய ரெண்டு பேரையும் பார்த்த பெரிசு, "உங்க அப்பனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? இப்படி பண்ணலாமா நீ?" என்று அதட்டல் போட்டார்.

"இல்ல நைனா" என்று சொல்ல வாயெடுத்த காட்டாயியின் பேச்சை புறந்தள்ளி "ஏண்டா உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி செய்வ" என்று பிச்சையின் கன்னத்தில் அறைவிட்டார். "உங்கள இப்படியே வுட்டா சரியா வராது. இரு இரு என்ன பண்றேனு" என்று சொல்லிவிட்டு கால்களை அகட்டி வைத்து கோவிலை நோக்கி நடந்தார்.

"ஐயோ, தாத்தா எங்க அப்பன் கிட்ட போய் சொல்வானே" என்று பயந்த காட்டாயி, தலையில் கையை வைத்தபடி கட்டுமரத்தில் அமர்ந்தாள். செய்வதறியாது திகைத்த பிச்சையும், மூங்கிலை இறுக்கமாக பற்றியபடி நின்றான்.

"வர்றது வரட்டும், எங்க அப்பன் கிட்ட நா பேசிக்கிறேன். நீ கவலப்படாத" என்று பிச்சையை தேற்றிய காட்டாயி, கொண்டையை இழுத்து முடைந்தபடி "நான் வீட்டுக்கு போறேன், என்னனு நாளைக்கு சொல்றேனு" சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவள் வீடு போய் சேர்வதற்குள்ளாகவே இஞ்சையம்மன் கோவில் வாசலில் அப்பன்காரன் கோவமாக நடந்து வருவதை பார்த்தாள். கூடவே பஞ்சாயத்துக்காரங்க, நாலஞ்சு பேரு.

அருகில் வந்த குள்ளப்ப செட்டி காட்டாயின் கன்னத்தில் பொளேறென்று ஒன்று போட்டார். கண்களில் பூச்சி பறக்க தலைசுற்றி கீழே விழப்பார்த்த காட்டாயியை தாங்கி பிடித்த வைரவன் செட்டிச்சி "என்ன ஏதுனு விசாரிக்காம இப்படி அடிச்சா என்ன அர்த்தம்" என்று கோவமாக கேட்டாள்.

"வில்லியனுங்க கடல்ல கால் வைக்கக் கூடாதுனு சொல்லிக்கிட்டு இருக்கேன், என் வூட்டுல கைய வைச்சா எப்படி?"

"கன்னிசாமி படையலுக்கு பொங்க வைக்கணும். நீ இப்படி பண்ணலாமா, உங்க அப்பன நெனச்சு பார்த்தியா. ஊர் கட்டுமானம்னு ஒண்ணு இருக்கு என்பதை மறந்துட்டியா" என்று மூச்சிரைத்தார் அலைச்சல் செட்டி.

அடி விழுந்த சத்தமும், கூச்சலும் கேட்டு கூட்டம் வேறு கூடிவிட்டது. "இவள எதுக்கு அடிக்கணும், ஊருக்குள்ள அவன் எப்படி வரலாம். அவன உப்புக்கண்டம் போடுங்க" என்று கூட்டத்தில் இருந்த குரல் வந்தது. ஆள் ஆளுக்கு சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

ஊர் திருநாள் இல்லையென்றால் பழைய சீவரம் கிராமத்தில் கதையே வேறு. முன்பெல்லாம் தாழைக்காடு தாண்டி வந்ததற்கே தண்டம் வசூலித்த வரலாறு அதற்கு உண்டு. "இப்படி பரவன் வீட்டு பெண்ணோடு கட்டுமரத்தில் கண்டவனை கண்டம் துண்டமாக ஆக்கி கடலுக்கு போடவேண்டும்" என்று வலைப்பின்னல் ஊசியோடு வந்த பெரிசு ஒன்று தன்பங்குக்கு பழையகதை பேசியது.

"மனசுக்கு புடிச்சவன் கூட பேசுறதும், பழகுறதும் என்னங்க தப்பு, நான் அந்தாள தா கட்டுவேன்" என்ற காட்டாயியின் குரல் கேட்டு அனைவரின் தொண்டையும் அடைத்து போனது. கண்ணீர் ஒருபக்கம் வழிந்த நிலையில், மூக்கை சிந்தியபடி தன் பிடியில் உறுதியாக இருந்தாள் காட்டாயி. "மூளியா நிக்கிற காரவீட்டு ராமாயி வீட்டுக்கு யார், யார், என்னென்னிக்கு போனாங்கனு இந்த ஊருக்கே தெரியுமே... அன்னிக்கு எங்க போச்சு, உங்க சாதியும், சனமும்" என்று காட்டாயி இன்னும் ஒருபடி மேலே போய் பேச, ஆம்பளைங்க மத்தியில சலசலப்பு.

"பொட்டச்சிய பேச விட்டு எதுக்குடா வேடிக்கை பாக்குறீங்க, இவள உசுப்பேத்தி விட்டுட்டு ஓடிப் போய் ஒளிஞ்சுகிட்டான்ல, அவன இழுத்துட்டு வாங்கடா" என்று ஆவேசமாக கூறினார் பஞ்சாயத்துக்காரர். இதற்காகவே காத்திருந்த நாலுபேர் ஓடி பிச்சையை இழுத்து வந்தனர்.

அதற்குள் ஒட்டுமொத்த ஊரும் கூடி விட, இஞ்சையம்மன் கோவில் வாசலிலேயே பஞ்சாயத்து ஆரம்பித்தது. "சின்ன பட்டினவன் குடும்பத்திலேயே பொண்ணு எடுக்க மாட்டாங்க பெரிய பட்டினவங்க. அப்படி இருக்கும் போது பட்டினவன் பொண்ண வில்லியன் நினைச்சு பாக்குறது ரொம்ப தப்பு. அவனதான் கட்டுவேனு சொல்றது அதவிட தப்பு. அப்படி பண்ணா உங்க அப்பனோ, உங்க வகையறாவோ கட்டுமரம் ஏற முடியாது சொல்லிட்டேன்" என்று வேகவேகமா கூறிமுடித்தார் அலைச்சல் செட்டி.

"எனக்கு அவர புடிச்சு இருக்குங்க, இன்னொருத்தன கட்ட மனசு ஒப்பலங்க" என்று கையை கட்டியபடி இறுக்கமாக கூறினாள் காட்டாயி.

நடக்கப் போவது என்ன என்று தெரியாமல் தலையை குனிந்தபடி இருந்தான் பிச்சை.

"ஐயோ என் மானம் போச்சே... இப்படி நாடு பாக்க நிக்க வைச்சுட்டாளே" என்று அரற்றியபடி மண்ணில் புரண்டு அழுதார் குள்ளப்ப செட்டி.

"நாங்க இவ்வளவு சொல்லியும், உன்ன நீ மாத்திக்கலனா, நீ இங்க இருக்க கூடாது. உன்னை கிராமத்துக்குள்ள வுட முடியாது, அவன் கூடவே ஏரியை தாண்டி தாழக்காட்டுக்கு போய்டணும். உங்க அப்பன் கட்டு மரம் ஏறக்கூடாது. இஞ்சையம்மனுக்கு கன்னிசாமி படையல் வைக்கக் கூடாது" என்று சொல்லிவிட்டு வெத்தலையை உள்ளங்கையில் வைத்து கும்பிட்டு கோவில் வாசலில் வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் சென்றார் அலைச்சல்.

கூட்டம் கலைய ஆரம்பித்தது. மயக்கத்தில் இருந்த குள்ளப்ப செட்டியை நான்கு பேர் தூக்க முயற்சித்தார்கள். அப்பனை ஆதூரத்துடன் பார்த்தபடி பிச்சையை கையில் பிடித்துக் கொண்டு தாழங்குப்பம் நோக்கி நடந்தாள் காட்டாயி.

தற்குள் வில்லிய குப்பத்தில் விஷயம் எட்டியிருந்தது. இவர்கள் இருவரும் சென்று சேர்ந்த போது, அங்கும் ஒரு கூட்டம் கூடியிருந்தது.

"நம்ம சாதியில இல்லாத பொண்ணாடா. என்ன காரியம் பண்ணிட்ட... நாளபின்ன நாம அங்க போக முடியுமா... வர்ற முடியுமா... இப்படி பண்ணிட்டியேடா" என்று அவர்களின் தலைக்கட்டுகள் சொல்ல ஆரம்பித்தனர்.

"என்ன நம்பி வந்துட்டா, இவள வச்சி நா காப்பாத்திப்பேன்" என்ற பிச்சையின் உறுமலைக் கேட்டு "என்னவோ, பண்ணுப்பா, நல்லபடியா இருந்தா சரி" என்று அவரவர்கள் கலைந்து சென்றனர்.

கரைக்கு காவலாகவும், கடலுக்கு தோழனாகவும் இருக்கும் அலையாத்தி மரத்தடியில் இருந்தது அவனது குடிசை. உள்ளே வந்த அமர்ந்த இருவரும் சற்று நேரம் பேசாமல் மௌனம் காத்தனர்.

"என்னால ஊருக்குள்ள உனக்கு மானக்கேடா போச்சா? என்ன மன்னிச்சிடு" என்று கண்கலங்கினான் பிச்சை.

"என்னயா பேசுற, மறைஞ்சு மறைஞ்சு பார்த்தப்போ இல்லாத தைரியம் ஊரே சுத்தி நிக்கும்போது வந்துதே, இதுல என்ன மானக்கெடு கண்ட... நாம ஒண்ணியும் தப்பு பண்ணல, அவன் பெரியவன், இவன் பெரியவன்-னு பேசுற ஆளுங்கதாயா வெக்கப்படணும்.

என்ன, எங்க அப்பனுக்கு தா நாதியில்லாம போச்சு, அந்தாளுக்கு கருவாடு இல்லாம கஞ்சி எறங்காது. சதா கத்திக்கிட்டே திரிஞ்சாலும், பொழுதடைஞ்சா என் பேரே மூச்சுக்கொருதரம் கூப்டுகிட்டே இருக்கும்" என்று லேசாக கண்கலங்கினாள் காட்டாயி.

வயசான காலத்துல எங்கப்பனுக்கே இவ்ளோ இருந்தா, அவர் பெத்த பொண்ணு எனக்கு எவ்ளோ இருக்கும் என்று தன்னைத் தானே தேற்றியபடி "கவலப்படாதயா, நாளல இருந்து நாம தொழிலுக்கு போவோம். கடலுக்கு போனாதா பாடா என்ன? ஏரில மூழ்கியோட நா சொல்லித்தர்றேன்" என்று அவனை ஆறுதல் படுத்தினாள் காட்டாயி. ஒன்றும் சொல்லாமல் கண்கலங்கியபடி அவள் தோளில் சாய்ந்தான் பிச்சை. கால் ஒடிந்த விலங்கென காலம் மெதுவாக நகர்ந்தது.

முதன்முதலில் டச்சு சர்ச்சுக்கு எதிரில் ’பனங் கள்’ விற்றுக் கொண்டிருந்தபோது பிச்சையை பார்த்தது. அவன் உசரத்துக்கு அந்த பானை, பொருந்தாத தோற்றதோடு இருந்தது. கூடவே, மண்டி மண்டியாய் நார். கூடை முடைய நார் வாங்க ஆரம்பித்த பேச்சு, கட்டுமரம், தாழைக்காடு என்று வளர ஆரம்பித்ததை நினைத்துக் கொண்டாள் காட்டாயி.

மௌனத்தை செருமல் சத்தம் மூலம் கலைத்த பிச்சை பேச ஆரம்பித்தான். "என்னிக்கு நானே கடலுக்கு போய் மீன் பிடிக்கிறேனோ அன்னிக்கு ஆரம்பிக்கட்டும் நம்ம வாழ்க்கை. கட்டுமரம் ஏறத்தெரியாதவன் புள்ளையா என் புள்ள நாளைக்கு நாலுபேருகிட்ட பேச்சு வாங்கக் கூடாது."

சிறிது அமைதிக்குப் பின், "பஞ்சாயத்துல பேசுன பேச்சும், நீ வாங்குன அடியும் இன்னும் என் கண்ண விட்டு மறையல. அவங்களையும் குத்தஞ்சொல்லல. ஆனா, நா கடலேறாம செத்தா அது உனக்கு அசிங்கம்-னு நெனக்கிறேன்" என்றான் பிச்சை.

காய்ப்பேறிய கைகளை மீண்டும் உறுதியாக பற்றினாள் காட்டாயி. கனவுகளும், கவலைகளும் கலந்தபடி கடந்தது இரவு.

ழுந்ததும் ஏரிக்கு சென்ற காட்டாயி, பயன்படுத்தாமல் ஒதுங்கி இருந்த கட்டு மரம் ஒன்றினை இழுத்து வந்தாள். நைந்து இருந்த கயிறுகளை மாற்றி இழுத்துக் கட்டினாள். அவள் என்ன செய்கிறாள் என கன்னத்தில் கைவைத்தபடி கரையில் குத்துக்காலிட்டு பார்த்துக் கொண்டிருந்தான் பிச்சை.

"தோ பாருய்யா, காலைல இருந்த மதியானம் வரை ஏரி தண்ணி கடலுக்கும், மதியானத்துல இருந்து சாயங்காலம் வரை கடல் தண்ணி ஏரிக்கும் வந்து போகும். பன மரம் அளவு தண்ணி ஏறி இறங்கும். ஏரி தண்ணி கடலுக்கு போகும் போது ஏரியோட அடிக்கு போறது சுளுவு. மூச்சை இழுத்துப் புடிச்சுகிட்டு தண்ணிக்குள்ள இறங்கி தரைய தொடணும். கையால தடவிக்கிட்டே போனா, வளை தட்டும். அதுக்குள்ள கைய வுடு. நண்டு தட்டும். கொடுக்க மடக்கி மேல எடுத்துக்கிட்டு வரணும். அவ்ளோதா. ஏரி தண்ணி மாறதுக்குள்ள எவ்ளோ எடுக்க முடியுமோ அவ்ளோ எடுத்துடணும்."

அவனை கட்டுமரத்தில் ஏற்றி ஏரியின் நடுப்பகுதிக்கு சென்றாள் காட்டாயி. அவள் கோல் போடுவதை பார்த்து வியந்து போனான் பிச்சை. தானும் ஆசைப்பட்டு நீண்ட மூங்கில் கோலை நீருக்குள் துழாவ அது அவனை விட்டு விலகி சென்றது. இதை பார்த்த காட்டாயி வாய் விட்டு சிரித்தாள்.

"யோவ், கைய புடிச்ச எடத்துலயே புடிக்க கூடாதுய்யா, தண்ணிக்குள்ள வுட்டுட்டு கைய மேல மேல நகத்தி கொண்டு போகணும். அப்போ தா தண்ணிக்குள்ள கழி போகும்" என்று சூட்சுமம் சொன்னாள்.

இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு மறுமுனையை கணவன் கையில் கொடுத்து "நான் எப்படி போய்ட்டு வரேனு பாருய்யா" என்று சொல்லிவிட்டு நீருக்குள் சரக்கென்று குதித்தாள். கண்முன்னே நீருள் மறைந்த காட்டாயியை ஆச்சர்யத்துடன் பார்த்த பிச்சை, கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு நின்றான். யாருமற்ற ஏரியில் ஒற்றை ஆளாக கட்டுமரத்தில் நின்ற போது, ஒருகணம் பெருமையும், மறுகணம் பயமும் பிடித்துக் கொண்டது.

பூநாரை ஒன்று வலமிருந்து இடமாக பறந்து சென்ற கணத்தில் நீருக்கு மேல் காட்டாயியின் தலை தெரிந்தது. ஒரு கையில் கொழுத்த நண்டு. இறுக்கி கட்டிய மேலாடை உடம்போடு ஒட்டி இருக்க மூச்சிரைத்தபடி கட்டு மரத்தில் ஏறினாள். கொண்டு வந்திருந்த பரியினுள் நண்டை கயிறு கட்டி போட்டாள்.

"இப்போ நீ போய்ட்டு வா" என்றாள்.

கயிற்றை மாற்றி தான் கட்டிக் கொண்டு காட்டாயியை பார்த்து சிரித்தபடி நீரினுள் பாய்ந்தான் பிச்சை. கடற்கோழிகள் கொத்து கொத்தாக மேய்ந்து கொண்டிருந்த நீருக்குள் விழி சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தாள் காட்டாயி.

நேரம் கடப்பதை அறிந்த காட்டாயி, கயிற்றை இழுத்தாள். அது வர மறுத்தது. என்னவோ தவறாக இருப்பதாக நினைத்த காட்டாயி, பலம் கொண்ட மட்டும் கயிற்றை மேலே இழுக்க முயற்சித்தாள். அவளால் முடியவில்லை.

உடனே கயிற்றை கட்டுமரத்தோடு சேர்த்து கட்டிவிட்டு நீரில் குதித்தாள். அடிப்பகுதிக்கு சென்றபோது, அங்கு வளை ஒன்றில் கை சிக்கியபடி போராடிக் கொண்டிருந்தான் பிச்சை. அவன் மூச்சு திணற ஆரம்பித்த விட்டிருந்தான். அவளும் பிச்சையின் கையை பிடித்து சேர்த்து இழுத்தாள். வரவில்லை.

திடீரென அவன் இடுப்பில் கட்டியிருந்த கயிறு அவனை மேல்நோக்கி இழுக்க ஆரம்பித்தது. விழி சொருக ஆரம்பித்த பிச்சையை பார்த்து பயந்த காட்டாயிக்கும் மூச்சு திணறியது.

வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல திடீரென பிச்சையின் உடம்பு வேகமாக மேல்நோக்கி செல்ல ஆரம்பித்தது. வளை உடைந்து வெளிவந்த பனங்கொத்தைப் போன்ற பெரிய நண்டு ஒன்று பிச்சையின் மணிக்கட்டை பிடித்து இருந்ததை பார்த்தாள் காட்டாயி.

கடல் நீரோட்டம் ஏரிக்குள் சுழற்றிக் கொண்டு வருவதை உணர்ந்தாள். மயக்க நிலையில் காலை தரையில் உந்த அவள் உடல் மேலே செல்ல ஆரம்பித்தது.

நீருக்கு மேலே தலையை தூக்கிய அவள், கட்டுமரத்தை தேடினாள், அது எங்கோ ஒரு தொலைவில் சென்று கொண்டிருந்தது. உயிரின் சக்தி அனைத்தையும் திரட்டி அந்த திசையை நோக்கி நீச்சலடித்தாள்.

ஏரியின் நீர்மட்டம் உயர உயர நீரின் வேகமும் அதிகரித்தது. கால்களின் கடைசி விசையையும் பயன்படுத்தி கட்டுமரத்தை அடைந்த காட்டாயி கயிற்றை மட்டுமே பார்த்தாள். பரபரவென அதில் ஏறி நீருக்குள் நீண்டிருந்த கயிற்றை இழுக்க ஆரம்பித்தாள். அது எடை கொண்டிருந்தது. அப்போதே அவளுக்கு புரிந்து விட்டது.

கயிறு மேலே வந்தபோது முழி பிதுங்கி வாய்பிளந்து கிடந்தான் பிச்சை. அப்போதும் அவனது வலது கை அந்த நண்டை பிடித்தபடி இருந்தது. ஒருகணம் திகைத்து பின் வாய்வெடித்து கத்திய காட்டாயியின் குரல் அந்த ஏரி எங்கும் எதிரொலித்தது. அலை ததும்பும் ஏரியின் நடுவே கட்டுமரத்தின் மீது உயிரற்ற கணவனின் உடலை மடியில் ஏந்தியபடி உறைந்து நின்றாள்.

"ஐயோ, முழுசா விவரம் தெரியாத உன்ன கொன்னுட்டேனே... நா ஒரு பாவி. உன்னை நான் காப்பத்துறேனு நேத்து தானே வாக்கு தந்தேன். இப்படி நானே உன்னை தண்ணில பலி கொடுத்துட்டேனே" என்று அரற்றினாள். "கடலுக்கு போய் ஏதாச்சும் புடிச்ச பிறகு தா நம்ம வாழ்க்கை ஆரம்பிக்கும்னு சொன்னியோ, இதோ புடிச்சிட்டியே, ஆனா என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சே" என்ற அவள் உடைந்து அழுதாள். கொஞ்ச நேரம் கேவிய காட்டாயி, பின்னர் ஏதோ உறுதி எடுத்தவளாய், பிச்சையின் உடலோடு தன்னையும் சேர்த்து கயிற்றால் கட்ட ஆரம்பித்தாள்.

இதற்குள் காட்டாயியின் அலறல் சத்தம் கேட்டு வேகவேகமாக ஏரியின் நடுப்பகுதிக்கு வந்த ஒருசிலர், நிலைமையை புரிந்து கொண்டு பாய்ந்து வந்து காட்டாயியை பிடித்தனர். திமிறிய அவளை கழியால் மண்டையில் அடித்து மயக்கமடைய செய்து கட்டுமரத்தை கரைநோக்கி செலுத்தினர்.

ரை வந்து சேர்ந்ததும், ஊர்நோக்கி ஒருவன் ஓட, அடுத்த நொடியில் கடற்கரையே மயான ஓலமாக மாறியது.

"அப்பவே சொன்னேனே கேட்டியா, இப்படி மூளியா வந்து நிக்கிறியே" என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுதார் குள்ளப்ப செட்டி. காட்டாயியின் கூட்டாளிகள் எல்லாம் முந்தானையில் மூக்கை சிந்தியபடி தலையில் அடித்துக் கொண்டு அழுதனர். பிச்சையின் சொந்தங்களுக்கு தகவல் கொடுக்க ஒருசிலர் மரமேறி தாழங்குப்பம் நோக்கி சென்றனர்.

"பறக்குறதுக்கு முன்னாடியே றெக்க உடையணும்னு உன் பொண்ணு தலையில எழுதி இருக்கு என்ன பண்றது குள்ளப்பா, மனச தேத்திக்கோ" என்று அவரை ஆற்றுப்படுத்தினார் அலைச்சல் செட்டி.

கூச்சலும், குழப்பமுமாக பிச்சையின் சொந்தபந்தங்கள் கரைக்கு வந்து சேர்ந்தனர். "ஐயோ மகராசா, கடலுக்கு போறேன், கடலுக்கு போறேனு சொல்லிக்கிட்டே இருப்பியே. இப்படி கடலுக்குள்ளேயே போயிட்டியே" என்று ஓங்கி குரலெத்து அழுதனர்.

"சரி, அழுதுகிட்டே இருந்தா என்ன ஆறது. அவனோட உடம்ப அவங்க ஆளுங்ககிட்ட கொடுத்துட்டு இவளையும் அனுப்பி வுடுங்க" என்றார் அலைச்சல் செட்டி.

"என்ன சொல்றீங்க, நேத்து கையை புடிச்சிக்கிட்டு தெம்பா போனவ, இன்னிக்கு உசுர பறிகொடுத்திட்டு வந்து நிக்கிறா. இப்படி பேசுறீங்க" என்று பொம்பளைங்க குரல் கொடுத்தனர்.

"இனி அவ எங்க வூட்டு பொண்ணு நாங்க பாத்துக்குறோம்" என்று தாழங்குப்பம் வாசிகளும் மூச்சிரைத்தனர்.

பிச்சையின் உடலை இறுகபற்றியபடி கண்கள் வெறிக்க அமர்ந்திருந்தாள் காட்டாயி. அவளையே உற்றுநோக்கியபடி கண்கலங்கினார் குள்ளப்பன்.

"தண்ணில வேத்தாளு போக கூடாதுனு சொல்லிக்கிட்டு இருந்தா கேட்டீங்களா... போனதால என்ன ஆச்சுனு பாத்தீங்களா... அதனால தா சொல்றேன், இவள கொண்டு போயி அங்கேயே விட்டுடுங்க" என்று உறுதியாக கூறினார் அலைச்சல். இதையடுத்து ஆளாளுக்கு பேச ஆரம்பித்தார்கள். காட்டாயியை பிச்சையின் உடலோடு தாழங்குப்பத்திற்கு அனுப்பி விட வேண்டும் என்று ஒருசிலரும், பிச்சையை மட்டும் கொடுத்து விட்டு காட்டாயியை தங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒருசிலரும் பேச பேச அந்த இடமே குழப்பக்காடாகியது.

திடீரென ஓங்கி பேச ஆரம்பித்த காட்டாயியின் குரல் கேட்டு அனைவரின் பேச்சொலிகளும் அமுங்கின.

"இந்த ஊரு வர்றதுக்கு முன்னாடியே இந்த கடலு இருந்தது. நாளைக்கி இந்த ஊரு இல்லாம போனாலும் இந்த கடலு இருக்கும். யாரு கால வைக்கிறானு இந்த கடலுக்கு தெரியாது. யாரு கால வைக்கணும்னு நீங்க போட்ற கட்டுமானமும் இந்த கடலுக்கு தெரியாது. என் புருஷன் கால்பட்டு புடிக்காம போனதால தா அவன இந்த கடலு பலி வாங்குச்சுன்னு நீங்க எல்லாம் நினைக்கிறீங்க. அது உண்மைனா, இந்த தண்ணிலயே பொறந்து வளர்ந்த என்னை பலிகொடுத்து அந்த பாவத்த கழுவுறேன். ஆனா அதுக்கு அப்புறம் இந்த தண்ணில நீங்க எடுத்து வைக்குற ஒவ்வொரு அடியிலயும் ரத்தமா நா ஒட்டிக்கிட்டு இருப்பேன். அப்போ என்ன பண்ணி அதை நீங்க கழுவுவீங்க" என்று சொல்லியபடி அருகில் இருந்த பரியில் சுருண்டு கிடந்த கொழுத்த நண்டின் நீண்ட கொடுக்கை ஒடித்து சட்டென தன் நெஞ்சுக்குழிக்குள் வேகமாக சொருகினாள்.

உடலுக்குள் சிறைபட்டுக் கிடந்த ரத்தம் விடுதலை கிடைத்த வேகத்தில் சீறிப்பாய்ந்தது. பிறகு என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாமல் கரையெங்கும் உறைந்து போனது.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உயிரை மாய்த்துக் கொண்ட காட்டாயியின் செயலைப் பார்த்து ரத்தத்தோடு ரத்தமாக உறைந்தது அந்த கும்பல்.

இந்த கடல் தேசத்த ஒண்ணும் பண்ணிடாத தேசம்மா என்று வேரோடு வெட்டப்பட்ட பனைமரமாக காட்டாயியின் காலடியில் வீழ்ந்தார் அலைச்சல் செட்டி. குரலே வராமல் தொண்டையில் என்னன்னவோ சப்தங்கள் ஒலிக்க மகளுருகே வந்து மண்டியிட்டார் குள்ளப்பன். கூடியிருந்த பெண்கள் எல்லாம் ஒப்பாரி வைத்தபடி அழுது புரண்டனர். இஞ்சையம்மன் கோவில் அருகே நடுகல் ஒன்று நடப்பட காட்டாயி தேசம்மா ஆனாள்.

ஆசிரியர் அரவிந்த் குமார் ஊடகவியாளர்

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment