Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : ஏய் அடிமை பாலகனே...

தினம் தினம் நாம் சந்திக்கும் சாதாரண மக்களின் நிலையை அருமையாக விவரித்திருக்கிறார், அரவிந்த் குமார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aravind kumar - short story

publive-image

Advertisment

அரவிந்த் குமார்

இன்று இரவு தான் அமாவாசை. அதற்குள்ளாகவே அங்கம்மா வீட்டில் ஆட்கள் நடமாட்டமும், பரபரப்பும் ஏகத்துக்கும் காணப்பட்டது. ஒவ்வொரு அமாவாசைக்கும் அங்கம்மா வீட்டில் இரவு 12 மணிக்கு குறி கேட்பார்கள். எங்கள் தெருவில் உள்ள பெரும்பாலானோர் அன்று அவர்கள் வீட்டில் தான் ஆஜராவார்கள். விடிய விடிய பூஜையும், குறி சொல்பவரின் கூக்குரலும், மஞ்சள் குங்கும் கற்பூரம் எலுமிச்சை பழம் ஆகியவற்றின் நெடியும் ஓர் அலைபோல் எழுந்து அந்த இடத்தையே சூழ்ந்து கொள்ளும்.

"தேசிங்கு, தேசிங்கு" என்று அங்கம்மா அழைக்க மூச்சிரைக்க ஓடிவந்த நின்ற சிறுவனிடம், "டேய் ஓடிப்போய் ஆசாரி வீட்டுல வாழை மரம் சொல்லி வச்சிருந்தேன், எப்போ கொடுத்து வுட்றாங்கனு கேட்டுட்டு வர்றியா" என்றாள். "சரிக்கா" என்று ஓட்டம் பிடித்தான்.

மறுபுறம் திரும்பி "கவுரி என்னடி எலுமிச்சம்பழம் வாங்கிட்டு வந்து நிக்குற, புள்ளி விழாத பழமா பார்த்து எடுத்துட்டு வர சொன்னேன்ல, என்னடி இது காய்ஞ்சு போய் ஒருபக்கம் நொசநொசனு இருக்கு" என்று கோணி மூட்டையில் இருந்த எலுமிச்சை பழங்களை உருட்டியபடியே கேட்டாள் அங்கம்மா.

தென்னை மரத்தடியில் கருங்கல், செங்கல்லை பரப்பிப் போட்டு ஒருமாதிரி கல்தரை போன்று மாற்றப்பட்டிருந்த இடத்தில் பாத்திரங்களை குவித்து துலக்கிக் கொண்டிருந்த மகள் கவுரி, "யம்மோவ் நூறு பழத்துக்கு மேல இருக்கும் அதுல ஒண்ணு ரெண்டு புள்ளி விழுந்தா என்னாமா இப்போ?" எனறாள். "தட்டு நெறய சோறு இருந்தாலும் ரெண்டு கல்லையும் சேர்த்து தின்னேன் பார்ப்போம்" என்றாள் அங்கம்மா. "அந்த கல்ல எடுத்து தூரப்போட்டு சாப்பிடுவேன்" என்று உதட்டுக்குள் முணுமுணுத்தாள் கவுரி. "என்னடி வாய்க்குள்ளேயே பேசிக்கிற, என்கிட்ட சொல்லு" என்று ஓர் அதட்டல் போட்டாள். "ஒண்ணுமில்லமா" என்று சொல்லியபடியே பக்கத்தில் சின்ன பாத்திரத்தில் வைத்திருந்த புளி மற்றும் சபீனாவில் தேங்காய் நாரை முக்கியெடுத்து பித்தளை குடங்களை வரட் வரட் என்று தேய்க்க ஆரம்பித்தாள்.

அங்கம்மா வீட்டில் கிணறு இல்லை. பக்கத்தில் உள்ள புஷ்பா வீட்டில் தான் பெரிய கிணறு இருந்தது. யார் வேண்டுமானாலும் வந்து அவர்கள் கிணற்றில் நீரிறைத்து செல்லலாம். ஒன்றும் சொல்லமாட்டார்கள். அங்கு மந்திரத்தை முணுமுணுத்தபடியே கிணற்றில் வாளியைப் போட்டு குடம் குடமாக சேந்திக் கொண்டிருந்தார் குணாளன். அங்கம்மாவின் கணவர். கவுரியிடம் இருந்து நகர்ந்து அவரிடம் சென்ற அங்கம்மா, "நாலு டிரம் ரொப்ப இவ்ளோ நேரமா" என்றாள். அவருக்கு மந்திரம் தெரியுமா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் எந்நேரமும் வாயில் கூழாங்கல்லை போட்டு உருட்டுவது போல ஏதாவது உச்சரித்தபடியே இருப்பார். ஒருமுறை அவர் நீர் இறைக்கும்போது அருகில் நின்று கொண்டிருந்த தேசிங்கு உற்றுக் கேட்டபோது "அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே, அமைதியில்லா வாழ்வு தந்தேன் எங்கு சென்றாளோ" என்ற பாடலை மந்திரம் போல் உதட்டுக்குள் உருட்டிக் கொண்டிருந்தார். "மாமா, இது சினிமா பாட்டுதானே" என்று தேசிங்கு கேட்டதற்கு இடுப்பில் வேட்டியில் மடித்து வைத்திருந்த ஒரு ரூபாய் தாளை அப்படியே மொத்தமாக கொடுத்தார்.

"தோ இறைச்சிட்டேம்மா, செடிக்கு தண்ணி ஊத்திட்டு ட்ரம்-க்கு ஊத்தலாம்னு இருந்தேன், அதான்" என்று சொல்லிக்கொண்டே கிணற்றுக்குள் தொபுக்கடீர் என்று வாளியை போட்டு இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றி கயிற்றை இழுக்க க்ரீச், க்ரீச் என்ற ஒலியுடன் இரும்பு கொக்கியில் சத்தம் வர வாளி மேலே வந்தது. "சீக்கிரமாக ரொப்பிட்டு வந்து சேருங்க, இன்னும் ஆயிரம் வேலகெடக்கு" என்று சொல்லியபடியே வீட்டின் சுற்றுச்சுவர் அருகில் சென்று எட்டிப் பார்த்தாள். அங்கம்மாவின் வீடு இருந்தது ஆவடியின் ஜே.பி.எஸ்டேட் என்று இடத்தில். ஆலமர பேருந்து நிலையத்தில் இறங்கி சாலையை கடந்தால் ஓம்சக்தி ஆலயம். அதனையொட்டிய வீடு தான் அங்கம்மாவுடையது. சுற்றுச்சுவரில் தலையை உயர்த்திப் பார்த்தால் கோயிலின் வளாகமும், மூலவர் சன்னதியும் நன்றாக தெரியும், அப்படியே பேருந்து நிலையமும். இதனால் கோயில் பூசாரியிடம் இங்கிருந்தே தகவல்களை சொல்லிவிடுவாள், எல்லா கதைகளையும் கேட்டிடுவாள்.

ஓம்சக்தி கோயிலில் அங்கம்மா தலைமையில் தான் செவ்வாடை பக்தர்கள் ஒன்று சேர்வார்கள். அங்கிருந்து அப்படியே நடைபயணமாய் மேல்வருத்தூர் செல்லும் பழக்கத்தை ஆவடியில் துவக்கி வைத்தது அங்கம்மா தான். பங்காரு அடிகளாரின் பக்தையாக மாறியிருந்த அங்கம்மா, ஒவ்வொரு அமாவாசைக்கும் குறி கேட்பதையும் துவக்கி இருந்தாள். இதற்காக ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு ஊரில் இருந்து குறி சொல்பவர்களை அழைத்து வருவாள். இந்தமுறை விழுப்புரம் பக்கத்தில் பிடாகம் என்ற ஊரில் இருந்து நாகராஜி என்பவர் வருவதாக சொன்னார்கள். அவரைத் தான் எதிர்பார்த்து நொடிக்கொருதரம் சுற்றுச்சுவரில் தலையை வைத்து ஆலமர பேருந்து நிலையத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். காலையிலேயே ஆள் வந்துவிடும் என்று சொல்லி இருந்தார்கள். மதியத்தைத் தாண்டி விட்டதால் சற்று பதற்றம் ஒட்டிக் கொண்டது அங்கம்மாவிடம்.

கோயில் தூணில் சாய்ந்து முதுகை சொறிந்து கொண்டிருந்த பூசாரி, "என்ன அங்கம்மா சாதா அமாவாசைக்கே அமர்க்களப்படுத்துவ, இந்தமுறை தை அமாவாசை வேற, என்ன ஸ்பெஷல்" என்றார். "வந்து பாருங்க ஆச்சர்யப்பட்டு போவீங்க, அப்படி ரெடி பண்றேன்" என்றாள். அப்போது தூரத்தில் வெள்ளை அரைக்கை சட்டையும், பச்சை நிறத்தில் வேட்டியும், தோளில் சிறிய மஞ்சள் பையும் அணிந்தபடி ஒருவர் நடந்து வருவது தெரிந்தது. "குறி சொல்றவர் வந்துட்டார்னு நெனக்கிறேன்" என்று அங்கம்மா சொல்ல, பூசாரியும் எழுந்து நின்று சாலையைப் பார்த்தார். அருகில் வரவர அந்த நபரை தெளிவாக பார்க்க முடிந்தது. நெற்றியில் ஒருரூபாய் அகலத்திற்கு நல்ல பெரிய குங்கும பொட்டு, எண்ணெய் வைத்து படிய வாரிய தலையின் பின்புறம் தூக்கிக் கட்டிய கொண்டை. வாயில் வெற்றிலைக் கறை. நடை ஒரு தினுசாக இருந்தது. கால்களை பின்னி பின்னி, இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து வந்த அந்நபர் கோயில் வாசலில் ஒரு கும்பிடு போட்டு பூசாரியிடம் "அங்கம்மா வீடு எது" என்று இழுத்து ராகமாக கேட்டார். "இதோ இந்த வீடு தான்" என்று வீட்டை நோக்கி கைகாட்டியதோடு, "அதோ அவங்க தான் அங்கம்மா" என்றார்.

கோயிலைத் தாண்டி அங்கம்மாவை நோக்கி வந்த அந்த நபர், "வணக்கம்மா நான் நாகராஜி, எல்லாரும் ராஜினு கூப்பிடுவாங்க, குறிசொல்ல கூப்பிட்டு இருந்தியாமே" என்று கூறியபடியே இரண்டு கைகளையும் ஒன்றுசேர குவித்து ஒருபக்கமாக வணக்கம் வைத்தார். சட்டென்று என்ன செய்வது என அங்கம்மாவுக்கு தெரியவில்லை. "வாங்க, வாங்க" என்று கூறியபடியே இரும்பு கிரில் கேட்டை திறந்தாள். உள்ளே வந்த நாகராஜி, கழுத்தை மெதுவாக நாலாபுறமும் சுழற்றி வீட்டையும், சுற்றியுள்ள இடத்தையும் பார்த்தார். நேராக வேப்ப மரத்தடிக்கு சென்று அங்கு தோசைக்கல் அளவுக்கு மஞ்சள் தடவி அதன் நடுவே குங்குமத்தில் கண்கள் வரையப்பட்டிருந்த அம்மன் சன்னதியை குனிந்து வணங்கி அங்கேயே சப்பணமிட்டு அமர்ந்தார். அடித்தொண்டையில் இருந்து வெண்கல குரலில் பேசித்தான் அங்கம்மாவுக்கு பழக்கம். ஆனால் நாகராஜிடம், "உள்ள வாங்க ஏன் வெளில உக்காந்துட்டீங்க" என்று சன்னமான குரலில் கேட்டாள். "பரவாயில்ல, என்னோட இடம் என்னானு எனக்கு தெரியும், குடிக்க தண்ணி கொண்டா" என்று சட்டென்று ஒருமைக்கு மாறினார்.

உள்ளே சென்ற அங்கம்மா, பித்தளை அண்டாவின் மூடியை திறந்து சொம்பில் நீரள்ளி கொண்டு வந்தாள். அதனை இடது கையால் வாங்கிய நாகராஜி, வலது உள்ளங்கையில் சிறிதளவு நீரை ஊற்றி தன்னை சுற்றி தரையில் நான்கு முறை தெளித்துக் கொண்டபின்னர் அண்ணாந்து மடக் மடக் என்று சத்தம்வர மொத்த சொம்பையும் காலி செய்தார். "நான் இங்கேயே இருந்துக்குறேன், நீ உன் வேலையப் பாரு, வெயிலு உறப்பா இருக்கு, கொஞ்சம் கண்ணசர்றேன்" என்று சொல்லிவிட்டு கொண்டு வந்திருந்த பையை தலைக்கு வைத்துக் கொண்டு கால்நீட்டி படுத்து கண்களை மூடிக் கொண்டார் நாகராஜி.

கையை பிசைந்தபடி வீட்டிற்கு உள்ளே வந்த அங்கம்மா முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. அந்தநேரம் பார்த்து துலக்கிய பாத்திரங்களை உள்ளே கொண்டு வந்த கவுரி இரண்டு தட்டுகளை கீழே போட்டாள். ண்ண்ணங்ங் என்ற சத்தத்துடன் அவை கீழே விழ, "சனியனே பார்த்து கொண்டு வரத் தெரியாது எனக்குனு வந்து பொறந்து இருக்கு பாரு, என்னைய போலவே" என்று கத்தினாள். "நான் என்ன பண்ணட்டும்மா" என்று கமறிய குரலில் கூறிய கவுரி இடுப்பில் இருந்த அன்னக்கூடையை வைத்துவிட்டு தட்டுக்களை எடுத்து அதில் சொருகினாள். "எல்லாரும் வருவாளுங்களே, என்னன்ன பேசுவாளுங்களோ, மொதல்ல வருவாளுங்களா" என்று தனக்குள்ளாகவே புலம்பிக் கொண்டாள் அங்கம்மா. அப்போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த புஷ்பா, "என்ன அங்கம்மா ஆள் வந்துட்டாங்க போல, மரத்தடியில் பார்த்தேன்" என்றாள். "ம்ம்ம்" என்று தலையை மட்டும் அசைத்தாள் அங்கம்மா. "ஆளப் பார்த்தா ஒருமாதிரி இருக்கே, இவரா - இவளா" என்று கிண்டல் தொனி ஒலிக்க கேட்டாள் புஷ்பா. "நானே கடுப்புல இருக்கேன் புஷ்பா, நீ வேற கோபத்த கௌறாதே" என்றாள். க்ளுக் என்ற சிரிப்புடன் ஜன்னலில் இருந்து தலை மறைந்தது.

சாயங்காலம் வரை வேப்ப மரத்தடியிலேயே படுத்து தூங்கிய நாகராஜி எழுந்து அமர்ந்து நெட்டி முறித்தார். சத்தம் கேட்டு தலைநிமிர்ந்து காது விடைக்க மூக்கு சுருங்க லேசாக பற்கள் தெரிய ‘ர்ர்ர்ர்’ என்ற உறுமலுடன் அங்கம்மா வளர்த்த நாய் மெதுவாக அருகில் வந்தது. அதனைப் பார்த்து லேசாக சிரித்து உதடுகளை குவித்து தவ் தவ் தவ் என்று நாகராஜி அழைக்க வாலைக் குழைத்து காதுகள் தழைய குதித்து குதித்து அவர் மடியில் வந்து அமர்ந்து கொண்டது. அதன் முதுகை நாகராஜி தடவிக் கொடுத்ததோடு முடிகளை விலக்கி உண்ணிகளை பொறுக்க ஆரம்பித்தார். நாக்கை தொங்க விட்டபடி ஹ்ஹ்ஹ்க்க் என்று வாகாக உடம்பை காண்பித்தது நாய்.

அப்போது கேட்டை திறந்து கொண்டு உள்ளே வந்த நாலைந்து பெண்கள், "ஏண்டி இங்க பாரேன், வழக்கமா வர்ற நாம வந்தாலே பல்லைக் காமிச்சி குலைக்கும். இப்போ என்னடானா மடியில் படுத்து புரளுதே" என்று ஆச்சர்யப்பட்டனர். அவர்களை நிமிர்ந்து பார்த்த நாகராஜி, "அங்கம்மா தோஸ்தா நீங்களா" என்று இழுவை குரலில் கேட்டார். ஒவ்வொருத்தியும் புருவத்தை உயர்த்தியும், கண்களை விரித்தும் "ஆமா" என்று சொல்லியபடியே விரைவாக அகன்று அங்கம்மாவை பார்க்க உள்ளே சென்றனர். நாகராஜி எழுந்து மாமர அடியில் நீலநிற பெரிய ட்ரம்மில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் முகம் அலம்பினார். பையில் கொண்டு வந்திருந்த டவலில் முகத்தை ஒற்றி எடுத்தார். உள்ளங்கையில் விபூதியை கொட்டி இரண்டு சொட்டு நீர்விட்டு குழைத்து மூன்று விரல்களால் தடவி நெற்றியில் இடமிருந்து வலமாக பட்டை போட்டார். பிறகு சிறிய சிமிழில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து மோதிர விரலில் தொட்டு நல்ல பதமாக விபூதியின் நடுவே வட்டம் போட்டார். இரண்டு கைகளையும் குவித்து தலைகுனிந்து வேப்பமர சாமியை கும்பிட்டார்.

ஹார நூபுர கிரீட குண்டல விபூஷிதாவய சோபினீம்

காரணேச வர மௌலி கோடி பரி கல்ப்யமான பத பீடிகாம்

காலகால பணி பாசபாண தனு ரங்குசா மருண மேகலாம்

பாலபூதிலக லோசனாம் மனஸி மனஸி பாவயாமி பரதேவதாம்

என்று ஓங்கி ஒலித்த மந்திர உச்சாடனம் கேட்டு வீட்டிற்குள் பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் இடித்தபடி வெளியே வந்து நாகராஜியை வேடிக்கைப் பார்த்தனர்.

மங்கள ரூபிணி மதியணி சூலினிமன்மத பாணியளே!

சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!

கங்கண பாணியன் கரிமுகங் கண்டநல்கற்பகக் காமினியே!

ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி

என்று ராகத்தோடு பாடி நிமிர்ந்த நாகராஜியை வியந்து பார்த்தாள் அங்கம்மா. பேசும்போது தெரிந்த குழைவும், நளினமும் பாடும்போது இல்லை. வேறுயாரோ, வேறு உலகத்தில் வந்து உடலுக்குள் புகுந்து கொண்டதுபோல் இருந்தது அந்த குரல். இப்போது திரும்பி பார்ப்பது நாகராஜி, பாடியது யாரோ என்று தோன்றியது அங்கம்மாவுக்கு. யாரையும் சட்டை செய்யாமல், "நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன் அங்கம்மா" என்று உரிமையோடு பெயரைச் சொல்லி இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து சென்றார் நாகராஜி. பெண்கள் மத்தியில் குசுகுசுவென்று பேச்சு சத்தம். "என்னா குரலு, என்னா பாட்டு, பாத்தா ஆம்பளயாவும் இல்ல, பொம்பளயாவும் இல்ல. ஆனா பாட்டு மட்டும் சாமியே வந்து பாட்ற மாதிரி இருக்குல்ல" என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டு சென்றனர்.

இரவு 11 ஆகிவிட்டது. கோயிலுக்கு போவதாக சொல்லிவிட்டு போன நாகராஜி வீடு திரும்பவில்லை. அதற்குள்ளாக குறி கேட்பதற்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்கம்மா வீட்டில் குழும துவங்கி விட்டனர். வீட்டின் நடுக்கூடத்தில் சுவரோரம் பெரிய திரை ஒன்று போடப்பட்டிருந்தது. அதுதான் அங்கம்மா வீட்டு பூஜையறை. அதில் இல்லாத சுவாமி படங்களே இல்லை எனலாம். எல்லா படத்திற்கும் மஞ்சள் குங்குமம் தடவி, பூ போட்டு, வாழையிலையில் படையல் தயார் செய்து, சாணியில் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு தனியாக பூவும், பொட்டும் வைத்து கற்பூரக் கட்டிகள் குமித்து வைத்து ஊதுபத்தி புகை கமழ அந்த அறையே ஏதோ ஒரு தொன்மத்தில் வாழ்வது போல் இருந்தது. குறிகேட்க விரும்புபவர்கள் ஒவ்வொருவராக வந்து நெல்பரப்பி வைத்திருந்த பெரிய தாம்பாள தட்டில் தங்கள் கையில் இருந்த ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் போன்றவற்றை போட்டுவிட்டு காத்திருந்தனர். ஒன்றிரண்டு சிறுவர், சிறுமிகள் கூட கூட்டத்தில் நின்றிருந்தனர். கைகளை பிசைந்தபடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள் அங்கம்மா. "யோவ் எங்கயாச்சும் போய் தேடிப் பாரேன்யா? எங்க போனானு தெரியல" என்று கணவர் குணாளனை பார்த்து மிரட்டல் தொனியில் சொன்னாள்.

"எங்கனு போய் தேடச்சொல்ற இந்த நேரத்து" என்று அவர் சொல்லும்போதே நாய் குலைக்கும் சத்தமும், தடக்கென்று இரும்பு கேட் திறக்கும் சத்தமும் கேட்டது. பின்னி பின்னி நடந்து வந்த நாகராஜி நேராக தண்ணீர் தொட்டி அருகே சென்று சொம்பு நிறைய நீர்சேந்தி இரண்டு கால்களையும் பின்னால் நனையும்படி கழுவினார். நான்கு சொட்டு நீரை தலையில் தெளித்துக் கொண்டார். தோளில் தொங்கிய துண்டை இடுப்பில் இறுக்கிக் கட்டிக் கொண்டார். "எல்லா வந்தாச்சா" என்று கேட்டபடி நேராக வீட்டின் நடுக்கூடத்திற்கு வந்து அங்கு போடப்பட்டிருந்த மனைக்கட்டையில் அமர்ந்தார். கண்களை மூடி மெதுவாக ஏதோ சில மந்திரங்களை உச்சரித்தார். பின்னார் தாம்பாளத் தட்டில் பெரிய கட்டி கற்பூரம் ஒன்றை ஏற்றி அம்மன் படத்திற்கு முன்பாக காட்டினார். அது நின்று எரிய ஆரம்பித்தது. அறை முழுவதும் அத்தனை பேரும் மூச்சடக்கி நாகராஜியையே பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு கைகளையும் யோகாசனம் செய்வது போல் தொடை மீது போட்டு எரியும் கற்பூரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் நாகராஜி.

கிட்டத்தட்ட அவ்வளவு பெரிய கற்பூரக்கட்டி அடங்கும்வரை அந்த அறையில் எந்த பேச்சுக்குரலும் இல்லை. கற்பூரம் அணையப்போவது தெரிந்து குனிந்து இன்னொரு பெரிய கற்பூரக் கட்டியை எடுத்து எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தில் சேர்த்தாள் அங்கம்மா. திடீரென ஈஈஈஈஈய்ய்ய்ய்ய் என்று வீறிட்டார் நாகராஜி. அவர் முகத்தருகே குனிந்திருந்த அங்கம்மா திடுக்கிட்டு பின்னால் விழுந்தாள். தலையை குலுக்கியபடி மீண்டும் ஒருமுறை வீறிட்டார் நாகராஜி. இதில் அவரது கொண்டை கலைந்து தோளின் இரண்டு பக்கமும் இடுப்பளவுக்கு முடி வந்து விழுந்தது. முகத்தையும் பாதி மறைத்தது. அமர்ந்த நிலையில் உடலை வட்டமாக முன்னும் பின்னும் சுற்றிய நாகராஜி, நாக்கை வெளியில் நீட்டி நன்றாக கடித்தார். கண்கள் மேல்நோக்கி சொக்கியிருந்தன. கீழுதட்டை மடித்துக் கடிப்பதும், பற்களை நறநறவென்று கடிப்பதும் என ஏதோதோ செய்து கொண்டிருந்தார். நாகராஜியின் நடவடிக்கைகள் பார்த்து நின்றிருந்தவர்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், கையெடுத்து கும்பிடுவதுமாய் இருந்தனர்.

எழுந்து நின்ற அங்கம்மா, "அம்மா தாயே எங்கள காப்பாத்தும்மா. நல்ல வாக்கா சொல்லும்மா. உன்னை தாம்மா நாங்க நம்பியிருக்கோம்" என்று கும்பிட்டாள். "மனசுல நிம்மதியே இல்ல ஆத்தா. எங்க பிரச்னைக்கு ஒரு வழிகாட்டும்மா" என்று கூறினாள். சடக்கென்று எழுந்த நாகராஜி, தலையை உயர்த்தி முடியை பின்னால் தள்ளினார். வியர்வையில் அவர் முகத்தில் இருந்த விபூதியும், குங்குமமும், சந்தனமும் கலந்து வழிந்து பார்ப்பதற்கே ரத்தக் களறியாக காட்சியளித்தது. திங்கு திங்கு என்று குதித்த அங்குமிங்கும் ஓடினார் நாகராஜி. அவர் கால்பட்டு தாம்பாளத்தில் இருந்த நெல்மணிகள் சிதறின. எல்லார் தலைமுடியிலும் நெல் போய் விழுந்தது. அதுவரை அடுக்கி வைக்கப்பட்டு சீராக இருந்த பூஜையறை அவரது ஆட்டத்தில் விநோத வடிவம் கொண்டது. ம்ம்ம்ம் என்ற ஒலியுடன் தன்னைத் தானே ஒரு சுற்று சுற்றிய நாகராஜி, அங்கம்மாவின் தலைமுடியை கொத்தாக பிடித்தார். அங்கம்மா வெலவெலத்துப் போனாள். பிடி அவ்வளவு பலமாக இருந்தது. மயிர்க்கால்கள் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்துபோல் இருந்தது. வலியில் ஹாஹா என்று கத்தினாள்.

"ஏய் அடிமை பாலகனே, ஏய் அடிமை பாலகனே" என்று கத்திக்கொண்டே அங்கம்மாவின் தலையைப் பிடித்து இழுத்து அங்கும் இங்கும் சுற்றினார். நாகராஜின் கை சென்ற திசையில் அங்கம்மாவின் தலைசென்றது. "ஏய் அடிமை பாலகனே யார்கிட்ட என்ன கேக்குற, பண்றதையெல்லாம் நீ பண்ணிட்டு, ஆத்தாக்கிட்ட வந்து அமைதியா நின்னா ஆச்சா? அடிமை பாலகனே" என்று கூறி மூச்சிரைத்தார். கண்கள் விரிய நாக்கை துருத்தி கடித்தார். வாயோரம் குங்குமம் பட்டு ரத்தம் போல் தெரிந்தது. கண்களை உயர்த்தி நிமிர்ந்து பார்த்த அங்கம்மா அரண்டு போனாள். நாகராஜின் ஆவேச குரலும் அந்த அறையை அவர் அல்லோகலப்படுத்தியதையும் பார்த்து பதறிப்போன சிறுவர்கள் வீட்டிற்கு வெளியே ஓட்டம் பிடித்தனர். இத்தனை ஆண்டுகளாக குறிகேட்டு வந்த அங்கம்மா இப்படியொரு நிலைக்கு ஆளானதேயில்லை. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஐந்து விரல்களையும் முடிக்குள் விட்டு கொத்தாக பிடித்துக் கொண்டிருந்ததால் விடுவிக்கவும் முடியவில்லை. அவரை தள்ளிவிடவும் முடியவில்லை. நேரம் ஆக, ஆக நாகராஜின் ஆவேசம் கூடிக்கொண்டே போனது.

கெடச்ச வாழ்க்கைய வாழுடி, வாழ வுடுடி, அடிமை பாலகனே. அதைவுட்டுட்டு ஆலாப் பறக்காத அடிமைப் பாலகனே என்று கூறி தலையை பின்னுக்குள் தள்ளி அங்கம்மாவை கிட்டத்தட்ட வீசி எறிந்தார் நாகராஜி. சுவற்றில் மோதி கீழே விழுந்தாள் அங்கம்மா. தலையை குனிந்து முடிகள் தொங்க சில நொடிகள் காற்றில் ஆடிய நாகராஜி, அப்படியே சரிந்து விழுந்தார். எல்லோரும் கன்னத்தில் போட்டுக் கொண்டு "சாமி மலையேறிடுச்சு, இன்னிக்கு இவ்ளோதான் ப்ராப்தம் போல, வாங்க போலாம்" என்று கூறியபடி கலைந்து சென்றனர். சுவரோரம் விழுந்து கிடந்த அங்கம்மாவின் காதில் "அடிமை பாலகனே" என்ற குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment