Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியருக்கும் கதையின் நாயகி செளதாமினிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Manju wariar - aravind kumar

அரவிந்த் குமார்

Advertisment

உங்களுக்கு மஞ்சு வாரியரைத் தெரியுமா? மலையாள திரைப்பட நடிகை மஞ்சு வாரியர் தானே, தெரியும் என்று சொல்வீர்கள். ஆனால் நான் சொல்வது அந்த மஞ்சு வாரியரை அல்ல, கிட்டத்தட்ட இந்த மஞ்சு வாரியரின் கதையும் அதுபோலத் தான் இருக்கும்.

அந்த மஞ்சு வாரியர் பிறந்த அதே 1978-ம் ஆண்டு, அதே நாகர்கோவிலில் பிறந்தவர் தான் இந்த மஞ்சு வாரியர். பிறக்கும் போது அவளுக்கு இந்த பெயர் வைக்கவில்லை, வைத்தது என்னவோ சௌதாமினி தான், செல்லமாக சௌதா. அப்புறம் எப்படி மஞ்சு வாரியர் என்ற பெயர் வந்தது என்று கேள்வி எழக்கூடும். அதை சொல்வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் இருக்கிறது. அதற்குள் சௌதாவின் சின்ன வயது விஷயங்களை கொஞ்சம் பார்த்து விடலாம்.

ஒற்றுமை என்னவென்றால் அந்த மஞ்சு வாரியர் படித்த நாகர்கோயில் சிஎஸ்ஐ மெட்ரிகுலேஷன் தான் சௌதாமினியும் படித்தது. இரட்டை ஜடை பின்னல் போட்டு, அதில் ரிப்பன் கட்டி, ஷு மாட்டி, அலுமினிய புத்தக பெட்டியை எடுத்துக் கொண்டு கன்னத்தில் குழி விழ, குதித்து குதித்து நடக்கும் அந்த சின்ன சௌதாமினியை பார்த்தவர்கள் இன்றும் அதனை நினைவில் கொள்வார்கள். படிப்பில் படுசுட்டி. பிரமீளா டீச்சருடன் எப்போதும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் அந்த சௌதாமினியை காலநோக்கியில் உற்றுபார்க்கும் போது, பின்னால் அவள் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போகுமோ, அதற்காகத் தான் இப்போதே பேசிகொள்கிறாளோ என்று தோன்றுகிறது.

சௌதாமினி 5-ம் வகுப்பு படிக்கும்வரை தான் அவர்களது குடும்பம் நாகர்கோயிலில் இருந்தது. அதற்கு பிறகு அவளது அப்பாவுக்கு திருவட்டாறு பக்கத்தில் திருநந்திக்கரை என்ற இடத்தில் ஒரு ரப்பர் தோட்டத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலைகிடைக்க குடும்பம் இடம் பெயர்ந்தது. பெரிய லாரி ஒன்றில் எல்லா பொருட்களும் ஏற்றப்பட்டு பின்னால் வர, காரில் அவர்களது குடும்பத்தினர் முன்னால் சென்று கொண்டிருந்தனர். கார் கண்ணாடியை இறக்கி விட்டு, கையை வெளியில் தொங்கவிட்டபடி முட்டைக் கண்களை உருட்டிக் கொண்டு ஒவ்வொரு இடத்தையும் ஆச்சர்யம் தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌதாமினி. ஆசாரிப்பள்ளம், தக்கலை, திருவட்டாறு என்று ஒவ்வொரு இடத்தை தாண்டும்போதும் நாகர்கோயிலை இழக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாமல் தனக்கான சொர்க்கத்தை அடையப் போகிறோம் என்ற பேரார்வம் தான் சௌதாமினியின் முகத்தில் தென்பட்டது.

ஆம், திருநந்திக்கரையில், நந்தீஸ்வரர் கோயிலுக்கு கூப்பிடும் தொலைவிலேயே அவர்களது வீடு. அதுவும் பேச்சிப்பாறை அணையின் ஓர் கிளை ஓடும் சிற்றாறு பட்டணங்கால் வாய்க்கால் இவர்களது வீட்டின் வாசலிலேயே இருந்தது. தலைநிமிர்ந்து பார்த்தால் வானமே தெரியாத அளவுக்கு அவ்வளவு மரங்கள் நிறைந்த பசுமை போர்த்திய காடாக இருந்தது. அவர்கள் வீட்டைச் சுற்றி பலா, இலவு, அயனி என்று எந்த பக்கம் திரும்பினாலும் மரங்கள். போதாக்குறைக்கு சௌதாமினியின் அம்மா, பழமரங்களையும், பூச்செடிகளையும் சகட்டுமேனிக்கு நட்டு வைக்க, அவை சிறிது காலத்திலேயே பூத்துக் குலுங்கி பொலிந்து நின்றன. அதிலும் குறிப்பாக அந்த பகுதியில் எங்கும் காணப்படாத நிஷாகந்தி மலர், சௌதாமினியின் வீட்டில் மட்டும் தான் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் நிஷாகந்தி பூக்கும் காலத்தில் இரவில் விழித்திருந்து மொட்டவிழும் முதல்நொடிக்காக காத்திருப்பாள் சௌதாமினி. யாரிடமும் சொல்லாத தன் ஆழ்மன ரகசிய ஏக்கங்கள் போல, கனவுகள் போல மிகவும் ரகசியமாக இரவில் பூக்கும் நிஷாகந்தி தான் சௌதாமினியின் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தது.

பக்கத்தில் பெரிய பள்ளிக்கூடங்கள் இல்லாததால் அரசுப்பள்ளியிலேயே சேர்க்கப்பட்டாள் சௌதாமினி. படிப்பில் எந்த அளவு கெட்டிக்காரியோ, அதே அளவு சேட்டை செய்வதிலும் முதலிடத்தில் இருந்தாள். மாலைநேரங்களில் நேதாஜி நூலகத்தில் சௌதாமினியின் அப்பாவை சந்திக்கும் வாத்தியார் மாதவன் நாயர், அவளது வால்தனங்களை சொல்லி குறைபட்டுக் கொள்வார். கூடவே ரசிக்கவும் செய்வார். பள்ளி முடிந்ததும் திருநந்தீஸ்வரர் கோயில் பின்னால் உள்ள குகைக்கோயில் தான் சௌதாமினியின் வாசஸ்தலம். அப்படியே பாறைகளை தொற்றி மலைமீது ஏறி, அங்குள்ள சிறிய சுனையில் படுத்தபடி ஆகாயத்தை உற்று நோக்கிக் கொண்டிருப்பாள். ஒரு பெண்பிள்ளைகூட சௌதாமினியுடன் விளையாட வரமாட்டார்கள். ஆண் பிள்ளைகள் சுற்றி நிற்க, நடுவே மகாராணி போல ஆணைகள் இட்டபடி ஒரே அதகளம் தான்.

அன்று சிவாலய ஓட்டத்திற்காய் சீக்கிரமே படுக்கையில் இருந்த எழுந்த சௌதாமினி, வாசலுக்கு வந்து நின்று சுழித்து சுழித்து ஓடும் வாய்க்காலையே பார்த்துக் கொண்டிருந்தாள். பேச்சிப்பாறை அணை நிறைந்து வழிந்ததால் திறந்து விடப்பட்ட தண்ணீர் கொப்பளித்து வந்து கொண்டிருந்தது. பின்னால் வந்து நின்ற அவளது அம்மாவும் ஓடுகின்ற நீரைப் பார்த்து, "மோளே ஆத்திலே நல்ல ஒழுக்கு கேட்டியோ, படியெண்ட நில்லு, சாட வேண்டாம்" என்றாள். அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த சௌதாமினி வேகமாக தாவி, அந்தரத்தில் ஒருகணம் வானவில் போல வளைந்து சடக்கென்று மீன்கொத்தி போல நீருக்குள் பாய்ந்தாள். இதைப்பார்த்து பயந்து போன சௌதாமினியின் அம்மா வீலென்று அலற, தண்ணீருக்குள் இருந்து தவளை போல் தலையை நீட்டி, வாயில் இருந்து நீரை குழாயைப் போல் பீய்ச்சி அடித்து சிரித்தபடி கரையேறினாள் சௌதாமினி. அவள் முதுகில் அம்மா ஓங்கி ஓர் அறைவிட முயல, அதனை லாவகமாக உடல் வளைத்து தப்பித்து பழிப்பு காட்டி சிரித்தபடி வீட்டிற்குள் ஓடினாள்.

சிறிது நேரத்தில் எல்லோரும் மகாதேவர் ஆலயத்திற்கு வந்துசேர, அங்கிருந்த கல்மண்டபத்தில் திருவனந்தபுரத்தின் நாட்டியக்குழு ஒன்று குச்சிப்புடி நடனம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். பார்வையின் வீச்சு, உடலின் நளினம், விரல்களின் அபிநயம் இவற்றை உற்றுப்பார்த்த சௌதாமினி அந்தநொடியே முடிவெடுத்தாள் குச்சிப்புடி நடனம் கற்றுக்கொள்வதென்று. செல்ல மகளின் சொல்லை தட்டாத அப்பாவும் உள்ளுர் வாத்தியார் ஒருவரிடம் சேர்த்துவிட்டார். அதுவரை யாரும் பார்த்திராத சௌதாமினியை மெல்ல, மெல்ல பார்க்கத் துவங்கினார்கள். நடனத்தில் தன்னையை கரைத்துக் கொள்ள துவங்கி, வெளியில் பார்ப்பதே அரிது என்ற நிலைக்கு வந்து சேர்ந்தாள். பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதலாவது மாணவியாக வர, பன்னிரெண்டாம் வகுப்பிலேயும் அது தொடர்ந்தது.

தன்னுடைய 16-வது வயதில் ஒரு மகாசிவராத்திரியன்று திருநந்தீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சௌதாமினியின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அந்தநாளை இன்றும் கூட நினைவில் கொள்கிறார்கள் பலர். காரணம், அப்படியொரு அழகு, நடனம், இசை, சூழல் எல்லாம் ஒன்றிணைந்த தருணம் வெகுசிலருக்கே வாழ்நாளில் வாய்க்கக் கூடும்.

மேடையின் திரையில் நூற்றுக்கணக்கான அகல்விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தது. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு நட்சத்திரங்கள் பின்னணியில் வலம் வரும் நிலவு போல காட்சி அளித்தாள் . துர்கஸ்துதியோடு துவங்கி, விரிவான ஆலாபனைக்குள் சிவனை துதிக்கும் அந்த பாடலில் அவள் தன்னை மறந்து சுழன்று, சுழன்று ஆடினாள். மயில்கழுத்து நிற ஜாக்கெட்டும், கத்திரிப்பூ நிறத்தில் புடவையும் அணிந்து, யானையின் முகபடாம் போல ஜொலிக்கும் நெத்திச்சுட்டி என அவள் பார்ப்பவர்களை கண்சொக்க வைத்தாள். புடவை கொசுவத்தின் விசிறி மடிப்பை இடது கையால் சற்று தூக்கி பிடித்தபடி வலது கால் கட்டை விரலால் இடதுகால் கட்டை விரலை பற்றிக் கொண்டு அவள் கொடுத்த அடவு, அட, அட.. அதைப் பார்த்தவர்கள் தங்கள் கண்களையே மறந்து போனார்கள். ஏதோ வானுலக தேவதை ஒருத்தி பெண்ணுடல் எடுத்து ஆடுவதாக நினைத்து மயங்கி போனார்கள்.

சௌதாமினி இவ்வளவு பெரிய பேரழகியா என்று அன்றுதான் எல்லோருக்கும் தெரிந்தது. கவிழ்த்து வைத்த ஏழு போன்ற மூக்கும், உருண்டை விழிகளும், குழிவிழும் கன்னமும், சதைப்பற்றான தோளும் என திருநந்திக்கரையின் தேவதையாக கல்லூரியின் புதுமுக வகுப்பில் அடியெடுத்து வைத்தாள். அங்குதான் அவள் ரகுவை சந்தித்தது. அது 1995-ம் வருடம். அப்போதுதான் சாஷ்யம் திரைப்படம் மூலமாக மலையாய திரைப்பட உலகில் மஞ்சு வாரியர் அடியெடுத்து வைத்தது. அடுத்தடுத்து சல்லாபம், தூவல் கொட்டாரம் என மலையாளத்தில் வெகுவேகமாக முன்னேறும் நடிகையாக மாறினார் மஞ்சு வாரியர். எங்கும் மஞ்சு வாரியரைப் பற்றித்தான் பேச்சு.

கல்லூரியில் சௌதாமினியை முதன்முதலில் மஞ்சு வாரியர் என்று அழைத்தது ரகு தான். "அசப்பில் அப்படியே உரித்து வைத்தாற்போல் மஞ்சு மாதிரியே இருக்கியே, இனி நான் உன்னை மஞ்சுனு தான் கூப்பிடுவேன்" என்று உரிமையுடன் கூறினான். என்னவோ எல்லாரும் பேசி வைத்துக் கொண்டது போல் அவளை மஞ்சு, மஞ்சு என்றே கூப்பிட ஆரம்பித்தார்கள். கல்லூரி ஆண்டு விழா ஏற்பாடுகளின் பொறுப்பு இவளுடையது. மற்ற கல்லூரிகளில் இருந்து வந்து கலந்து கொண்டவர்கள் கூட, இவளை மஞ்சு என்று அழைக்க இவளது சொந்தபெயரான சௌதாமினி என்பதே பலருக்கும் மறந்து விட்டது. திருநந்திக்கரை கிராமத்தில் கூட, இவளுக்கு அப்போதெல்லாம் மஞ்சு என்ற பெயர் நிலைத்து விட்டது.

சினிமாவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த திலீப்பும், மஞ்சு வாரியரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வர ஆரம்பித்தது அக்காலகட்டத்தில். அதேசமயம், கல்லூரியின் ஆய்வகத்திலும், நூலகத்திலும் அடிக்கடி ரகுவும், மஞ்சுவும் தனியாக சேர்ந்து சேர்ந்து பேசிக்கொள்கிறார்கள் என்றும், காதலிப்பதாகவும் கல்லூரி முழுவதும் பேச்சு அடிபட்டது. ரகுவ காதலிக்கிறியாடி, சொல்லுடி என்று தோழிகள் கேட்டபோது, ஆமென்றும் சொல்லவில்லை, இல்லையென்றும் சொல்லவில்லை மஞ்சு. இதுபோதாதா? காதலை உறுதி செய்ய.

அது என்னவோ ரகு என்ன சொன்னாலும் தலையாட்ட தோன்றும் மஞ்சுவுக்கு. அதுவும் வட்டக்கோட்டை பக்கத்தில் உள்ள ஆளரவமற்ற கடல்பகுதியில் பச்சைநிற அலைகள் விசிறி, விசிறி அடிக்க அவள் கைப்பிடித்து அவன் பேசிய வார்த்தைகள், அலையின் சத்தத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது. முதலாமாண்டில் ஆரம்பித்த நட்பு இறுதியாண்டில் காதலில் வந்து முடிந்தது. அதற்குள் ரகு கல்லூரி முடிந்து சென்று விட்டாலும், நாள்தோறும் இவர்களது சந்திப்பு மட்டும் முடியவில்லை. பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம் என்று எங்கெல்லாம் போகமுடியுமோ, அங்கெல்லாம் இவர்களை பார்க்க முடிந்தது. இவ்வளவு பேரழகியான மஞ்சு காதல் வசப்பட்டால் அவள் நடவடிக்கைகள் காட்டி கொடுத்து விடாதா என்ன? அதுவும் பெற்ற தாய்க்கு தெரியாதா?

தனியாக சிரிப்பதும், காலந்தாழ்த்தி வீட்டுக்கு வரும்போதே சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. "எங்க போய்ட்டு வர்ற மஞ்சு என்று அம்மா கேட்க, ஒண்ணும் இல்லம்மா" என்று மஞ்சு வாயில் சொன்னாலும் அவள் கண்களில் ஒளிந்திருந்த அந்த கள்ளச்சிரிப்பை அம்மா கண்டுபிடித்து விட்டாள். அவளும் இளமையை தாண்டி வந்தவள் தானே. அப்படி, இப்படி என்று விசாரித்ததில் ரகுவும், மஞ்சுவும் காதலிப்பதை ஒருசில நாட்களிலேயே கண்டுபிடித்து விட்டாள் அம்மா.

அந்த வருடம் நிஷாகந்தி மலர்ந்த இரவில் பூவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த மஞ்சுவிடம், "அந்த பையன் என்னவோ கிறிஸ்தவ நாடாராம், நமக்கு அதெல்லாம் சரிப்படாது" என்று பட்டென்று போட்டு உடைத்தாள் அம்மா. பூவை குனிந்து உற்றுப் பார்த்து அதன் மணத்தை நுகர்ந்து கொண்டிருந்த மஞ்சுவுக்கு நெஞ்சு ஒருகணம் நின்று துடிக்க ஆரம்பித்தது. கொய்ங், ரீங், ட்ரீர் என்று பூச்சிகளின் கலவையான ஒலிகள் கேட்க, அம்மாவிடம், அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள். அம்மாவும் தென்னை மரத்தின் மீது சாய்ந்தபடி மார்பில் கைகளை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். தனித்த இருளில் ஒளிர்ந்த நிஷாகந்தி மலரை பார்த்தவண்ணம் இருந்தாள் மஞ்சு. இந்த இரவோடு இப்பூவின் ஆயுள் முடிந்தது. இந்த இரவோடு நமது காதலும் முடிந்து விட்டதா என்ன? என்ற குழப்பத்தோடு அம்மாவை பார்த்தாள்.

"நான் எல்லாத்தையும் விசாரிச்சிட்டேன் மஞ்சு. அந்த பையன் நல்லவன் தான். நல்ல குடும்பம் தான். நல்ல வேலையிலும் இருக்கான்.... ஆனா, அவங்க வேற ஆளுங்க, நாம வேற ஆளுங்க.. கண்டிப்பா இது ஒத்து வராது. அப்பா இதுக்கு ஒருநாளும் சம்மதிக்க மாட்டார். நம்ம ஒறவுல நாளபின்ன ஒருத்தரும் இங்க எட்டிக்கூட பார்க்க மாட்டாங்க. இது எதையும் யோசிக்கலயா நீ" என்றாள்.

"அம்மா, ரகு ரொம்ப நல்லவன்மா, எனக்கு புடிச்சிருக்கு" என்று ஈனஸ்வரத்தில் பேச்சை துவக்கினாள்.

"நானும்தானே சொல்றேன். அந்த பையன் நல்லவன்னு, கெட்டவனு சொன்னேனா?"

"உன்னோட எல்லா விஷயத்துக்கும் ஒப்புக்கிட்டதால, காதலிக்கிறதையும் ஒத்துப்போம்னு நெனச்சியா மஞ்சு?"

"ஒருவேளை ஒத்துக்கிட்டு இருக்கலாம். ஆனா ரகுவை ஏத்துக்க முடியாது.. இந்த நெனப்ப இத்தோட விட்டுடு" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டாள்.

விடிய, விடிய நிஷாகந்தி மலரின் அருகிலேயே அமர்ந்திருந்தாள் மஞ்சு. அவள் கண்ணெதிரிலேயே அந்த பூ வாடத் துவங்கியது.

மறுநாள் திருவனந்தபுரம் யமுனா தியேட்டரில் மஞ்சு வாரியர் நடித்த பவித்ரம் படத்தைப் பார்த்துக் கொண்டு ரகுவிடம் வீட்டில் நடந்ததை சொன்னாள் மஞ்சு. "என் வாழ்க்கையில இன்னொரு பொண்ண நெனச்சிக் கூட பார்க்க முடியாது மஞ்சு. நான் கல்யாணம் பண்ணா அது உன்னத்தான். வேற என்ன சொல்றதுனு தெரியல" என்று கலங்கியபடி கூறினான்.

நேரடியாக கேட்கவில்லையே தவிர அப்பாவின் நடவடிக்கைகளில் காதல் விஷயம் தெரிந்தது போலவும் இருந்தது. தெரியாதது போலவும் இருந்தது. திடீரென்று நாகர்கோயில் பார்வதிபுரத்தில் இருந்து பெண் பார்க்க வந்தார்கள். கிருஷ்ணன் குட்டி, சுருள் சுருளான முடியும், இடுங்கிய கண்களும், அடர்த்தியான மீசையும் என்னவோ ஒன்றுக்கொன்று பொருந்தா கலவைகளின் உருவமாக தெரிந்தான். சார்ட்டட் அக்கவுண்டன்ட் என்று சொன்னார்கள். அதன்பிறகு வீட்டை விட்டு வெளியே செல்வதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒன்றிரண்டு முறை பைக்கில் ரகு வீட்டை சுற்றி வட்டமிட்டதை பார்க்க முடிந்தது. ஆனால் மஞ்சுவால் தகவல் தெரிவிக்க முடியவில்லை.

நடிகர் திலீப், நடிகை மஞ்சுவாரியரின் காதல் கல்யாணத்தில் முடிந்த அதே தேதியில் தான், ரகு - மஞ்சுவின் காதல் முடிவுக்கு வந்து கிருஷ்ணன் குட்டியோடு மஞ்சுவுக்கு திருமணம் நடந்தது. எந்த நாகர்கோயிலை விட்டு சந்தோஷமாக பிரிந்து திருநந்திக்கரை வந்தாளோ, அதே நாகர்கோயிலுக்கு திருமணத்திற்கு பின் வாழப்போனாள் மஞ்சு.

திருமணமாகி முழுதாக ஒருவருடம் முடிந்திருந்தது. கிருஷ்ணன் குட்டியின் பெற்றோர் எர்ணாகுளம் பக்கத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்தார்கள். எனவே மஞ்சுவும், கிருஷ்ணன் குட்டியும் மட்டும் தான். நல்ல வேலை, கைநிறைய சம்பளம், வாய் நிறைய குடி, இதுதான் கிருஷ்ணன் குட்டி. முதலிரவன்றே மெலிதான மதுவாடை அடித்தது. மறுநாள் காலை எழுந்து வாய் கொப்பளித்ததும், ஒரு மடக்கு பிராந்தியை எடுத்து குடித்தான். கண்களை இறுக்கிக்கொண்டு தலையை குலுக்கி, "இதுவானு அசல் சரக்கு, நேத்து அடிச்சது பாரின் சரக்காக்கும், நமக்கு ஒத்துக்கிடல" என்று சிரித்தான். பார்வதிபுரத்திற்கு வந்ததில் இருந்து நித்தம் நித்தம் மதுகுப்பியோடே குடித்தனம் நடத்த ஆரம்பித்தான். குடித்து விட்டால் மஞ்சுவை ஆட சொல்லி நிர்பந்தம் செய்வான். "என்னவோ பெரிய ஆட்டக்காரினு சொன்னாங்க, நீ என்னடான்னா கால் ஒடஞ்ச சீக்காளி மாதிரி, இழுத்து இழுத்து நடக்குற" என்று சண்டை இழுத்தான்.

ஒருநாள் குளித்து முடித்து பூஜையறையில் கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தாள் மஞ்சு. " யாரைப் பார்க்க இப்படி ரதியாட்டம் ரெடியாகி நிக்குற, நான போன பின்ன யாரையாச்சும் வரசொல்லி இருக்கியா?" என்று சொல்லி கன்னத்தில் பளாரென்று அறைந்தான். பிறந்ததில் இருந்து யாரும் மஞ்சுவை திட்டியது கூட கிடையாது, முதல்முறையாக அடி. கண்களில் பூச்சி பறக்க உதட்டோரம் ரத்தம் கசிய தலைசுற்றி விழுந்தாள். அதன்பின்னர் இது வாடிக்கையாகி போனது. சாப்பாடு சரியில்லை, புடவை சரியில்லை, கரண்ட் போய்விட்டது இப்படி எல்லாவற்றுக்கும் அடி விழ, அது பழகிபோனது.

இரண்டுமுறை பார்வதிபுரம் வந்துபோன மஞ்சுவின் அம்மா, இங்கு வாழ்க்கை சரியில்லை என்பதை புரிந்துகொண்டாள். மஞ்சு வாய்விட்டு ஒரு வார்த்தை சொல்லவில்லை. மஞ்சுவின் அம்மாவாலும் வாய்விட்டு ஒருவார்த்தை கேட்கமுடியவில்லை. மனப்புழுக்கத்தோடே வீடு வந்து சேர்ந்தாள். ஒருமுறை நாகர்கோயிலுக்கு வேலைவிஷயமாக வந்த மஞ்சுவின் அப்பா, இரவில் பேருந்தை தவறவிட்டதால் மஞ்சுவின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் ஊருக்கு செல்லலாம் என்ற யோசனையோடு வந்தார். இரவு பன்னிரெண்டு மணியளவில் மகளின் வீட்டு கதவை தட்ட, முழுபோதையில் கதவை திறந்த கிருஷ்ணன் குட்டி, மஞ்சுவின் அப்பா மாதவன் நாயரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தள்ளாடினான். "நான் இருக்கிறப்போவே, ஆம்பளைங்கள வரச்சொல்றியாடி" என்று அவர் எதிரிலேயே மஞ்சுவை போட்டு எட்டி, எட்டி உதைத்தான்.

அன்று போனவர்தான். மறுநாள் அவர் உயிரிழந்த தகவல் தான் மஞ்சுவுக்கு கிடைத்தது. ஒன்றுமே அறியாதவன் போல் சடலத்துக்கு மாலையணிவித்து விட்டு திருநந்தீஸ்வரர் குகைக் கோயில் அருகே குடிக்க போனவன் இரவு முழுவதும் வரவேயில்லை. 2 வருடங்கள் கழித்து அப்பாவின் மரணத்தின் போதுதான் மீண்டும் ரகுவை பார்த்தாள் மஞ்சு. இன்னும் சொல்லப்போனால் சொந்தங்கள் சுற்றி நின்றாலும், இறுதிச்சடங்கின் எல்லா வேலைகளையும் யாரும் சொல்லாமலேயே முன்நின்று செய்தான் ரகு. மஞ்சுவின் அம்மாவும் ஏன் என்று ஒரு கேள்வி கேட்கவில்லை. சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பி கால்கழுவிய ஈரத்தோடே உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெற, எஞ்சியது மஞ்சு, அவள் அம்மா, ரகு அப்புறம் போதையில் கிருஷ்ணன் குட்டி.

அம்மாவை உரிமையோடு பார்வதிபுரத்திற்கு வந்துவிடு என்று சொல்லவும் முடியவில்லை. தனியாக திருநந்திக்கரையில் எப்படி விட்டு செல்வது என்றும் புரியவில்லை. முடிவெடுக்க முடியாமல் திணறினாள் மஞ்சு. ஆனால் இதுபற்றி எந்த கவலையும் கொள்ளாமல் காரை ஸ்டார்ட் செய்துவிட்டு "இன்னும் ரெடியாகலையா? எனக்கு ஆயிரம் வேலையிருக்கு. இங்கேயே டேரா போட்டு ஒக்கார முடியாது" என்று கத்தினான் கிருஷ்ணன் குட்டி.

"அம்மாவுக்கு ஒத்தாசையா நான் இருக்கேன். நீ கிளம்பு, ஏதாச்சும்னா போன் பண்ணு" என்று ரகுதான் தேற்றி அனுப்பினான். வீடு வந்து சேர்ந்ததில் இருந்து ரகுவின் பெயரை சொல்லி, சொல்லி மஞ்சுவுக்கு அடி கிடைத்தது. இவ்வளவு நாள் அடிவாங்கும் போதெல்லாம் காரணம் தெரியாமல் அடிவாங்கிய மஞ்சுவுக்கு, ரகுவின் பெயரால் விழுந்த அடியால் வலி தெரியவில்லை.

ஒருவருடம் கழித்து மஞ்சுவின் அப்பா வேலை பார்த்த இடத்தில் கிடைத்த செட்டில்மெண்ட் பணத்தில் திருநந்திக்கரையில் ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினாள் மஞ்சுவின் அம்மா. அதற்கு மஞ்சுவின் கையெழுத்தைப் பெறவேண்டி இருக்கவே, ரகுவின் துணையோடு பார்வதிபுரத்திற்கு வந்தார்கள். மஞ்சுவின் வீட்டின் நடுஹாலில் இடதுபுற இருக்கையில் ரகு, மஞ்சுவின் அம்மா. நடுநாயகமாக கிருஷ்ணன் குட்டி, எதிர்புறம் மஞ்சு. "இவன மனசுல நெனச்சிக்கிட்டுதான் என்கிட்ட டெய்லி படுக்குறியாடி" என்று மஞ்சுவின் அம்மா எதிரிலேயே கிருஷ்ணன் குட்டி கத்த, மூன்று பேருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள். தலையில் கையை வைத்துக் கொண்டு "மகாதேவா, என்ன இது சோதனை. இதையெல்லாம் நான் கேக்கணுமா" என்று மஞ்சுவின் அம்மா அலறினார். அம்மாவை தேற்றுவதற்காக, "இதுதான் உனக்கு மரியாதை இனி ஒருவார்த்தை பேசுன, அவ்ளோதான்" என்று கிருஷ்ணன் குட்டியை பார்த்து சீறினாள் மஞ்சு. இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் குட்டி, மஞ்சுவின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான். தடுக்கப் பாய்ந்த மஞ்சுவின் அம்மாவை தள்ளிவிட, அதுவரை பொறுமைகாத்து வந்த ரகு, கிருஷ்ணன் குட்டியின் சட்டையை கொத்தாக பிடித்து செவிட்டில் ஓர் அறைவிட்டான். மூக்கில் ரத்தம் வழிய நாற்காலியில் மடாரென்று விழுந்தான் கிருஷ்ணன் குட்டி.

அன்றிரவு முதல்முறையாக ரகுவுக்கு மஞ்சு போன் செய்தாள். "அம்மா எப்படி இருக்காங்க, அழுதாங்களா? சாப்டாங்களா? கூட யாராச்சும் இருக்காங்களா?" என்று கேவிக் கேவி அழுதாள்.

"மஞ்சு, எங்க சாரதா அத்தைய உங்க அம்மாகூட துணைக்கு இருக்க சொல்லி இருக்கேன். நானும் உங்க வீட்ல தான் இருக்கேன். நீ கவலைப்படாத? உங்கம்மாவை நான் பார்த்துக்குறேன்" என்று சொல்ல, இருவரும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் போனில் அமைதியாக இருந்தனர். "ஐ லவ் யூ ரகு, ஐ மிஸ் யூ சோ மச்" என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள் மஞ்சு. நிஷாகந்தி பூத்த அந்த இரவில் விடிய விடிய பூவுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தான் ரகு. அதிகாலையில் எழுந்து வெளியே வந்த மஞ்சுவின் அம்மா, நிஷாகந்தி மலரின் அருகில் அமர்ந்திருந்த ரகுவை பார்த்து கண்கலங்கியபடி உள்ளே சென்றாள்.

சீரான இடைவெளியில் ரகுவும், மஞ்சுவும் பேசிகொள்ள ஆரம்பித்தார்கள்.

"ஏன் ரகு கல்யாணம் பண்ணிக்காம இருக்க" என்று ஒருநாள் கேட்டாள் மஞ்சு.

"அன்று சொன்னதுதான் மஞ்சு, என் வாழ்க்கைல இன்னொரு பொண்ணுக்கு இடமில்லை, என்னால உன்னை மறக்க முடியல, எங்க வீட்ல கூட கல்யாணம் பண்ணிக்க, பண்ணிக்கனு சொல்லி சொல்லி ஓஞ்சிட்டாங்க, நான் என்ன பண்ணட்டும்... திருவட்டாறு ஆதிகேசவர் கோயில் மண்டபத்துல என் கையை புடிச்சிக்கிட்டு என் நெஞ்சுல சாஞ்ச, அதுக்குப்பிறகு என் நெஞ்சுல இன்னொருத்துக்கு இடமில்லை மஞ்சு.... " மஞ்சு, மஞ்சு என்று சொல்லி போனிலேயே அழ ஆரம்பித்தான்.

தோட்டத்தில் விளைந்த பலாப்பழத்தை மஞ்சுவிடம் எப்படியாவது சேர்த்துவிட சொல்லி ரகுவிடம் மஞ்சுவின் அம்மா ஒருநாள் கேட்க, அதனை எடுத்துக் கொண்டு வந்த ரகு, பார்வதிபுரத்தில் இரண்டு நாள் காத்திருந்தான். கிருஷ்ணன் குட்டி இல்லாத நேரம் பார்த்து மஞ்சுவின் வீட்டிற்கு சென்று பலாப்பழத்தை கொடுக்க, அவனை கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள் மஞ்சு. "என்னால இங்க வாழ முடியல ரகு, உன்ன மறக்கவும் முடியல" என்று சொல்லி சொல்லி மாய்ந்து போனாள். மஞ்சுவை பார்த்ததையும், பலாப்பழத்தை கொடுத்ததையும் சொன்ன ரகுவின் முகத்தை உற்றுப் பார்த்தாள் மஞ்சுவின் அம்மா. "வேற என்னப்பா சொன்னா?" என்று கேட்க, "ஒண்ணும் இல்லம்மா" என்று சொல்லிவிட்டு ஓ வென அழுதான்.

"நான் தப்பு பண்ணிட்டேன் ரகு, இப்படியெல்லாம் ஆகும்னு எனக்கு தெரியாதுப்பா. வேணும்னு நான் உங்கள பிரிக்கல" என்று சொல்லி அவளும் அழ வாசலில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது திருநந்திக்கரை ஓடை.

கல்யாணம் முடிந்து முழுதாக ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தது. டெய்சி என்ற ஆங்கிலோ இந்திய பெண் ஒருத்தியை முதலில் வீட்டிற்கு அழைத்து வந்த கிருஷ்ணன் குட்டி, அவளுடன் விடிய விடிய மதுபோதையில் மிதந்தான். முதலில் மாதத்திற்கு ஒருமுறையும், பிறகு வாரத்திற்கு ஒருமுறையும், சமீபகாலமாக நாள்தோறும் டெய்சியுடன் மதுஅருந்துவது கிருஷ்ணன் குட்டிக்கு வாடிக்கையாகி விட்டது. அன்றும் அப்படித்தான், ஹாலில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் குட்டி டெய்சியிடம், " யூ னோ மஞ்சு இஸ் எ எக்சலண்ட் டான்சர், ஷி இஸ் எ தேவதாசி ஆப் தேர் டெம்பிள்". "ஏய் மஞ்சு வந்து ஆடுடி" என்று கத்தினான். தள்ளாடியபடியே எழுந்து சென்று பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த சலங்கையை எடுத்து வந்து மஞ்சுவின் முகத்தில் வீசினான். "கட்டிக்கிட்டு வந்து ஆடி காமிடி, கண்டவனுக்கு ஆடி காமிச்சி இருப்பல... எனக்கும் கொஞ்சம் காட்டுடி" என்று கெக்கேபிக்கே என சிரித்தான்.

சலங்கையை கையை எடுத்து பார்த்த மஞ்சு, அதனை மடித்து அதற்கான பெட்டியில் வைத்தாள். போனை எடுத்து "ரகு கொஞ்சம் வீட்டுக்கு வர்றியா" என்றாள். வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ரகுவுக்கு மஞ்சுவின் அழைப்பும், அவளது குரலும் வயிற்றில் பயத்தை உண்டாக்கியது. உடனே, மஞ்சுவின் அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, அவர்களும் பயந்து "உடனே போய் பாரு ரகு... என்னனு தெரியலயே" என்று பதறினார்கள். பைக்கை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பார்வதிபுரத்தை நோக்கி பாய்ந்தான் ரகு.

"என்னடி என் எதிர்லேயே ரகுவுக்கு போன் போட்டு வரச்சொல்ற... அவ்ளோ திமிர் ஆகிடுச்சா... கொன்னு போட்டுறுவேன்" என்று மஞ்சுவை அடிக்க கையை ஓங்கினான்.

"ரகு வரட்டும். அவன் எதிரில் அடி. அப்போ பார்க்கலாம்" என்று ஆடாமல் அசையாமல் உறுதியாக கூறினாள் மஞ்சு.

ஒன்றும் சொல்லாமல் டேபிளில் இருந்த மதுபாட்டிலை அப்படியே எடுத்த மொத்தமாக வாயில் கவிழ்த்தான்.

தனது அறைக்கு சென்ற மஞ்சு, சூட்கேசை எடுத்து தனக்கு தேவையான பொருட்களை எடுத்து அடுக்கினாள். பூஜையறைக்கு சென்று மடித்து வைத்த சலங்கையை எடுத்து அதனையும் சூட்கேசில் வைத்துக் கொண்டாள். கிச்சனுக்கு சென்று கேஸ் ஸ்டவ்வை அணைத்தாள். பீரோவைத் திறந்து வங்கி கணக்கு புத்தகம், மின்சார கணக்கு கட்டண அட்டை இப்படி எல்லாவற்றையும் எடுத்து வந்து கிருஷ்ணன் குட்டியின் எதிரில் வைத்தாள். அமைதியாக சோபாவில் அமர்ந்தாள். ஒருமணி நேரம் கடந்திருக்கும். தடாலென்று இரும்பு கிரில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. கூடவே காலிங்பெல் ஒலியும் கேட்டது. கதவை திறந்த மஞ்சு, ரகு மூச்சு வாங்க நிற்பதை பார்த்தாள்.

பின்னர் திரும்பி கிருஷ்ணன் குட்டி அருகில் வந்து தன் கழுத்தில் இருந்த தாலியை கழற்றி டேபிளில் வைத்துவிட்டு, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். பிறகு சூட்கேசை எடுத்துக் கொண்டு போகலமாக ரகு என்றாள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்கு கூட அவனுக்கு மூளை வேலைசெய்யவில்லை. மஞ்சுவின் கையில் இருந்த சூட்கேசை வாங்கிக்கொண்டு அவள் கையை பிடித்து வெளியே அழைத்து சென்றான். பைக்கின் முன்னால் சூட்கேசை வைத்துக்கொள்ள, மஞ்சு பின்னால் அமர்ந்து கொள்ள வண்டி, திருநந்திக்கரை நோக்கி திரும்பியது.

மறுநாள் எல்லா நாளிதழ்களிலும் மஞ்சு தான் தலைப்பு செய்தி. ஆம், நடிகர் திலீப் - நடிகை மஞ்சு வாரியர் விவாகரத்து பற்றித் தான் எல்லா மலையாள, தமிழ் நாளிதழ்களில் கொட்டை எழுத்துக்களில் போடப்பட்டிருந்தது.

வீடு வந்த சேர்ந்த மஞ்சுவையும், ரகுவையும் பார்த்த மஞ்சுவின் அம்மா ஒன்றும் பேசாமல் மகளை கட்டி அணைத்துக் கொண்டாள். அன்றிரவு அம்மாவும், மகளும் எதுவும் பேசாமல் வாசலில் ஓடுகின்ற திருநந்திக்கரை வாய்க்காலையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். மறுநாள் காலை வீட்டிற்கு வந்த ரகுவிடம், ’’நான் திருநந்திக்கரை கோயில் திருவிழாவில் ஆடவேண்டும் என்றும், விழா கமிட்டி ஆட்களிடம் பேசு’’ என்று கூறினாள். திருநந்திக்கரை கிராமத்தில் செல்லமகள் அல்லவா இந்த மஞ்சு, ஒருவரும் மறுவார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டனர். அன்று மாலையே வீட்டில் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தாள் மஞ்சு.

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மகாசிவராத்திரியன்று திருநந்தீஸ்வரர் கோயில் மண்டபத்தில் முழு ஆடையலங்காரங்களுடன் நின்றாள். மஞ்சள் புடவையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும், அதற்கு தகுந்தாற்போல் குஞ்சலம் வைத்து கட்டப்பட்ட ஜடையும், காலில் மினுங்கிய புது சலங்கையும் கோயிலுக்கே புது அழகை கூட்டியது. இரு கைகளையும் கூப்பி, அரைநிலையில் அமர்ந்தபடி புருவத்தை உயர்த்தி மஞ்சு, அவையை வணங்கியபோது கூடியிருந்த கூட்டம் ஹோவென்று கத்தியது. ஆடி முடித்துவிட்டு வீடு திரும்பிய இரவு, "நீ ரகுவை கட்டிக்கிறியா? அவனுக்கு விருப்பம் இருக்கா? நான் வேணா கேட்கவா?" என்று மஞ்சுவிடம் கேள்வி எழுப்பினாள் அம்மா. மறுநாள் விடிந்ததும், கிருஷ்ணன் குட்டிக்கு விவாகரத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பினாள் மஞ்சு. சில மாதங்களுக்குப் பிறகு அதுவும் கைக்கு வந்து சேர்ந்தது.

மறுவார்த்தை பேசாமல் ரகுவின் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புதல் தந்தனர். மிக எளிமையாக அதே திருநந்திக்கரை கோயிலில் நடைபெற்றது ரகு - மஞ்சு திருமணம்.

விவாகரத்திற்கு பிறகு நடிகை மஞ்சு வாரியர் நடித்து வெளிவந்த "ஹவ் ஓல்டு ஆர் யூ?" என்ற திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது.

இதோ திருவனந்தபுரம் யமுனா தியேட்டரில் மஞ்சு வாரியர் நடித்த "ஹவ் ஓல்டு ஆர் யூ?" என்ற படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் ரகுவும், மஞ்சுவும்.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment