Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : நாயக்கர் காலம்

வட சென்னையில் துறைமுகம் பகுதியில் நடந்த கொலைகள், அதன் பின்னணியையும், துரோகம் எவ்வளவு எளிதாக நடக்கிறது என்பதையும் விளக்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஞாயிறு சிறப்பு சிறுகதை : நாயக்கர் காலம்

nayakkar kalam

அரவிந்த் குமார்

Advertisment

ராயபுரத்தின் கல்மண்டபம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலை ஒட்டிய சிறிய சந்தின் கடைசி வீடு அது. வீட்டின் பின்புறம் அடி பம்பின் அருகே தலை துடிதுடிக்க கழுத்தில் இருந்து ரத்தம் வடிய மெல்ல செத்துக் கொண்டிருந்தான் கில்கா.

ஒன்றரை அடி நீளத்தில், உள்ளங்கையளவு அகலத்தில் கைப்பிடியில் ரப்பர் டியூப் சுற்றப்பட்டு அதற்குமேல் சணல்கயிறால் கட்டப்பட்டு இருந்த அந்த கத்தியில் ஆங்காங்கே ரத்தத் திட்டுக்கள். கருஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அந்த ரத்தக்கறைகளையே பார்த்துக் கொண்டிருந்தான் கன்னியப்பன். அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து அதன் மீது விழுந்தது. நெஞ்சு விம்ம பெருமூச்சும் கூட சேர்ந்து கொண்டது. ஓங்கி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான். மூக்கை உறிஞ்சியபடி கோணியின் கிழிசல் எடுத்து ரத்தத்தை துடைக்க ஆரம்பித்தான். கைகளை கட்டியபடி அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தனர் தெத்தியப்பனும், பெத்தாண்டவனும்.

எவ்வளவு நேரம் அப்படி கடந்து சென்றது என்று அவர்களுக்கு தெரியவில்லை. அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் நம்புவதா? வேண்டாமா? என்பதற்கும் விடையில்லை. முழுவதுமாக துடைத்து முடித்த கத்தியை உப்பில் ஊறவைத்த கோணிப்பையில் சுருட்டி அடிபம்பு அருகே குழிதோண்டி புதைத்தான் கன்னியப்பன். அப்போதும் ஒன்றும் பேசாமல் மூவரும் நின்று கொண்டிருந்தனர். கில்காவின் விம்மல் முழுவதுமாக அடங்கியது. அதே அடிபம்பின் அருகில் மற்றொரு குழியில் இறக்கப்பட்டது அவனது உடல்.

ப்போது முன்கதவு தட,தடவென தட்டும் சத்தம் கேட்டது. கூடவே "கன்னியப்பா, கன்னியப்பா" என்று தேசப்பன் அலறும் சத்தமும், கூடவே பலர் ஓடும் சத்தமும் கேட்டது. கத்தி புதைத்த இடத்தையும், கில்கா புதைத்த இடத்தையும் ஒருவர் முகத்தை ஒருவரும் உற்றுப் பார்த்தனர். கன்னியப்பன் மட்டும் வேக,வேகமாக வெளியே சென்று கதவை திறந்தான். "மச்சான், ஐயாவ போட்டாங்கடா, நம்ம நாயக்கர் ஐயாவ போட்டங்கடா, ...த்தா, ....ம்மாள, ....வ்டியா பசங்க, என் கைல கெடச்சானுங்கள நெஞ்ச கீறி ரெண்டா பொளந்துடுவேன்" என்று அரற்றியபடியே கூறிமுடித்தான் தேசப்பன். பின்னால் வந்த நின்று இருவரையும் பார்த்து , "நீங்களா இங்கயா இருக்கீங்க, ஐயோ, நாயக்கர போட்டங்கடா, போட்டங்கடா, நீங்கெல்லா இருந்தும் இப்படி போட வுட்டுட்டீங்களேடா, பாவிகளா" என்று தலையில் மடார் மடார் என்று அடித்துக் கொண்டான். அடித்துக் கொண்ட வேகத்தில் கீழே சரிந்து விழுந்து "எப்பேர்ப்பட்ட மனுசன்டா, எம்ஜிஆர் மாதிரி அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல்டா, அந்த புண்ணியவான கொன்னுட்டானுங்களே, இனி நாதியத்து போவோமே" என்று இடுப்பு லுங்கி கழன்றது தெரியாமல் மண்ணில் புரண்டு அழத் துவங்கினான்.

சுதாரித்துக் கொண்ட கன்னியப்பன், "டே தேசப்பா என்னடா சொல்ற, எப்போ, எங்க, எப்படி" என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினான். "மச்சான் ஹார்பர்ல வச்சி கொஞ்ச நேரம் முன்னாடி போட்டு இருக்கானுங்கடா, அந்த மனுசன் தனியா ஒக்காந்து குசலம் விசாரிக்கிற இடத்துல வச்சி குத்திப்போட்டு இருக்கானுங்கடா, ஊரே அங்கதாண்டா ஓடுது" என்று சொல்லியபடியே தலையை இடமும், வலமுமாக நம்பாதது போல் ஆட்டிக்கொண்டே இருந்தான்.

"அழாத தேசப்பா, டேய் எல்லா வாங்கடா" என்று வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை கன்னியப்பன் ஸ்டார்ட் செய்ய, மூன்று பேரும் ஏறிக்கொண்டனர். வழியெங்கும் மாரில் அடித்துக் கொண்டு கத்தியபடியே வந்தான் தேசப்பன். ராயபுரம் பாலம் ஏறி இறங்கி சென்னை துறைமுகத்தின் முதலாவது கேட் வழியே ஆட்டோ உள்ளே சென்றது. முன்னே பலர் ஓடிக் கொண்டிருந்தனர். வெளியே சிலர் தலைதெறிக்க ஓடிவந்து கொண்டிருந்தனர். போலீஸ் ஜீப் ஒன்று நின்றுகொண்டிருந்தது. ஐந்தாறு போலீசார் கைகளில் லத்திகளை வைத்தபடி ஓடிவந்தவர்களை தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தனர்.

ப்பல் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கருங்கல் தரையின் தூணோரம் விழிகளை திறந்து வெறித்தபடி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் விழுந்து கிடந்தார் கோவிந்தப்ப நாயக்கர். கெண்டைக்கால் ஏறத்தாழ தனியே தொங்கி கொண்டிருந்தது. முன்னந்தலையின் வெட்டு காதை அறுத்து இருந்தது. இடது கையின் மூன்று விரல்களை காணவில்லை. அவர் எப்போதும் விரும்பி அணியும் வெள்ளை நிற வேட்டி, சட்டை முழுவதும் ரத்த சிதறல்கள். ஆரஞ்சு நிற சார்மினார் சிகரெட் டப்பாவும், சீட்டா தீப்பெட்டியும் தூணுக்கு அருகில் கிடந்தன. பாதி பிடித்த நிலையில் சிகரெட் ஒன்றும் அங்கேயே இருந்தது. ஆட்டோவில் இருந்து துள்ளி குதித்து "ஐயோ, நாயக்கரே" என்று தேசப்பன் ஓட, அங்கிருந்த கான்ஸ்டபிள் தள்ளிவிட முயன்றார். கன்னியப்பன், அந்த கான்ஸ்டபிளின் சட்டையை கொத்தாக பிடித்து தள்ளிவிட்டு, எதுவும் பேசாமல் அமைதியாக விழுந்து கிடந்த சடலத்தை பார்த்தான். 65 வயது முதியவர் போலல்லாமல் படகு செய்வதற்கு அறுத்த பலகை போல அகன்று விரிந்து கிடந்தார்.

கோவிந்தப்ப நாயக்கர்....

1964-வது வருஷம் இருக்கும். அதுவரைக்கும் பெரிய கப்பல் எதுவும் சென்னை துறைமுகத்தோட கரைபக்கம் வந்து நிக்காது. கரையில இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி தான் நிக்கும். ஏன்னா, அங்கதா ஆழம் அதிகம். அங்க இருந்து சின்ன சின்ன படகுகளில் சரக்குகளை கரைக்கு கொண்டு வருவாங்க. பாதிப்பேர் சரக்கு பெட்டிகளை நடுவழியிலேயே கயிறுகட்டி கடல்ல தள்ளிட்டு தண்ணில மூழ்கிடுச்சுனு பொய் சொல்லிட்டு ஏமாத்திடுவாங்க. அப்படியே கொண்டு வர்ற சரக்குகளையும் பாதி திருடி, துறைமுகத்துக்கு வெளிலயே கடைபோட்டு சல்லிசான விலைக்கு விப்பாங்க. துறைமுக அதிகாரிகளால அவங்கள தடுக்கவும் முடியாம, புடிக்கவும் முடியாம ஒரே தவிப்பா இருந்த நேரம்.

ஒருநாள் கள்ளத்தனமா சரக்கு பெட்டிய எடுத்து வந்த முதலாளி கிட்ட சுமைகூலியா இருந்த கோவிந்தன், பேசிய கூலிய கேக்க, அதுக்கு அந்தாளு கம்மியா தர, வாக்குவாதம் முத்தி, ஒரே அடி. முதலாளி காலி. அவரோட சட்டைப் பாக்கெட்டில் இருந்த பணக்கட்டுல இருந்து தன்னோட கூலிய மட்டும் எடுத்துக்கிட்டு கோவிந்தன் நடக்க ஆரம்பித்தான். இதைபார்த்த துறைமுக அதிகாரிகள், கோவிந்தனை அழைத்து சரக்குகளை கப்பல்ல இருந்து கரைக்கு கொண்டு வந்து தர்றியா, கூடுதலா பணம் தரனே சொல்ல, அதுவே கோவிந்தனின் தொழிலாக ஆகிப்போனது.

அந்த சமயத்துல தா, லால் பகதூர் சாஸ்திரி, நேரு பேர்ல சென்னை துறைமுகத்துல ஒரு டாக் (DOCK) கட்றார். டாக்-னா கரைக்கு நெருக்கமாவே கப்பல்கள் வந்து நிக்கும். கரையை 15 மீட்டர் வரை ஆழம் பண்ணி அதை நாட்டுக்கு கொடுத்தாங்க. அதுவரைக்கும் கொஞ்சமா இருந்த சரக்கு வியாபாரம் சென்னை துறைமுகத்துல வெளுத்து வாங்க ஆரம்பிச்சது. எந்த நாட்டு கப்பல் வந்தாலும் கேப்டன் மொதல்ல கூப்பிட்றது கோவிந்தப்ப நாயக்கரைத் தான். அவர் பார்த்து சரக்கு எவ்ளோ, எத்தனை பேர் கூலி, எங்க எறக்கணும், எப்படி எறக்கணும்-னு சொல்ற அளவுக்கு ஹார்பர்ல அசைக்க முடியாத ஆளா மாறி நின்னார்.

ராயபுரத்துலயே பொண்ணு எடுத்து கட்டிக்கிட்டார். எம்ஜிஆர் படம்னா உசுரு. ஓடியன்மணி தியேட்டர்ல, எம்ஜிஆர் படத்த முதல்நாள் முதல்காட்சி பாக்குறது கோவிந்தப்ப நாயக்கர் தான். 1967-ம் வருஷம் ஜனவரி மாசம் எம்ஜிஆரை, எம்.ஆர்.ராதா சுட்டுட்டார்னு தகவல் தெரிஞ்சதும் கோவிந்தப்ப நாயக்கர் பண்ண அலப்பறை கொஞ்சம், நஞ்சமல்ல. அன்னிக்கு ஹார்பர்ல ஒரு கப்பல்ல இருந்தும் ஒரு சரக்கும் இறங்கல. அறிவிக்கப்படாத வேலைநிறுத்தத்தை பண்ணார். எண்ணூர்ல இருந்து ராயபுரம் வரைக்கும் ஒரு கடைய தொறக்க விடல, ஓடிய ரிக்ஷாவை எல்லாம் ஒடச்சி தூள் தூளா ஆக்கிட்டார். ஓடைதண்ணி குப்பத்துல, சாராயம் வித்த ஒரு கும்பல கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு துவைக்க அவனுங்க அதுக்குப்பிறகு சாராயம் காய்ச்சுறதையே நிப்பாட்டிடானுங்க. அதுவரைக்கும் எம்ஜிஆர் ரசிகனா இருந்த கோவிந்தப்ப நாயக்கர், வெறியனா மாறினார். அப்போ நடந்த தேர்தல்ல, வடசென்னை முழுக்க எம்ஜிஆருக்காக, திமுக கொடி பிடித்து ஓட்டு வேட்டையாடினார். அந்த தேர்தல்ல திமுக ஜெயிச்சத விடவும், திரும்பவும் எம்ஜிஆர் நடிக்க வந்ததுதான் கோவிந்தப்ப நாயக்கருக்கு நிம்மதி.

1972-ல் எம்ஜிஆர திமுக விட்டு விலக்கிய நேரம். எல்லோரும் எதிர்பார்த்தாங்க, கோவிந்தப்ப நாயக்கர், அதிமுகவில போய் சேர்வார்னு, ஆனா அவர் போகல. நான் எம்ஜிஆர் படங்களுக்கு தான் ரசிகன். எனக்கென்னமோ திமுக கட்சிதாம்பா புடிச்சி இருக்குனு சொல்லிட்டார். எல்லோருக்கும் ஆச்சர்யம்னா, அப்படியொரு ஆச்சர்யம். ஆனா கட்சி எதிர்ப்பையும் மீறி வடசென்னைல எல்லா தியேட்டர்லயும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ஓட்டிக் காட்டினார். அதனாலயே கட்சிக்குள்ள ஓரம்கட்டப்பட்டார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தோட தாக்கத்தால ஜப்பானுக்கு போக முடியலனா கூட, அதுபோலவே மூஞ்சி இருக்கிற சிங்கப்பூர்காரனை பார்த்துட்டு வரேனு சிங்கப்பூர் போனார். ஏன்னா, அப்போதெல்லாம் அப்போது சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி பயணிகள் கப்பல் சேவை இருந்தது. சென்னை துறைமுகத்தின் அறிவிக்கப்படாத அதிகாரியா இருந்த கோவிந்தப்ப நாயக்கர், ரெண்டு முறை கப்பல்ல சிங்கப்பூர் போயிட்டு வந்தார்.

அப்படி போயிட்டு வரும்போதெல்லாம் புதுப்புது எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கிட்டு வருவார். பலநாட்டு கப்பல்களின் கேப்டன்களும் கோவிந்தப்ப நாயக்கருக்காகவே பல பொருட்களை அவருக்கு எடுத்துட்டு வருவாங்க. ஆனா ஒருநாளும் சாராயமோ, பிராந்தியோ, விஸ்கியோ தொட்டு பார்த்தது இல்லை. என்னவோ சிங்கப்பூர் போயிட்டு வந்த பிறகு சிகரெட் பழக்கம் மட்டும் வந்து அவர்கிட்ட ஒட்டிக்கிச்சு. அதுவும் சார்மினார் படம்போட்ட சிகரெட் தான் அவருக்கு எப்போதும் பிடிக்கும். ஆனா யார் எதிரிலும் அவர் புடிக்க மாட்டார். இரவு 9 மணிவாக்கில் துறைமுகத்துக்குள்ள இருக்கிற, கப்பல் கட்டுதளத்துல இருக்கிற சின்ன தூண் மேல ஒக்காந்துகிட்டு கடல பார்த்துக்கிட்டு சிகரெட் புடிக்கிறது அவர் ஸ்டைல். மறுநாள் நடக்கப்போற பஞ்சாயத்துக்கு என்ன முடிவு சொல்லணும்னு அந்த சமயத்துல தான் அவர் யோசிப்பார்.

1974-ல் சென்னை துறைமுகத்துல நேரு டாக்-வுடன் பாரதி பெயரில் மற்றொரு டாக் உருவாக்கப்பட்டது. அளவில் பெரிய கண்டெய்னர்கள் வருகை அதிகரித்தது. கண்ணில் பார்த்தே கண்டெய்னர் அளவுகளை கணித்து எவ்வளவு இறக்க முடியும் என்பதை கூறிவிடுவார். ஒரு மனுஷன் நின்ன இடத்தில் இருந்து இருபடி அடி நடந்தா எவ்ளோ நீள அகலம் வருமோ, அதுதான் கண்டெய்னர் பெட்டி அளவு என்று அவர் அனுபவ ரீதியில் கூறியதே, அதன்பிறகு பெட்டிகள் வைக்கப்படுவதற்கான அளவாக பின்பற்றப்பட துவங்கியது.

இப்படித்தான், ரத்தன் பஜாரில் பெரிய அலுமினிய வியாபாரம் பார்த்து வந்த குஷால்தாஸ் என்பவருக்கு சிங்கப்பூருக்கு ஒரு கப்பல் விட வேண்டும் என்று ஆசை தோன்றியது. இதைக்கேள்விபட்ட கோவிந்தப்ப நாயக்கர் நேரே குஷால்தாசை பார்த்து, "பாருங்க இப்போலாம் அமெரிக்கா தான் எல்லாருக்கும் புடிக்க ஆரம்பிக்குது. இந்த சமயத்துல சிங்கப்பூருக்கு கப்பல் விட்டா நட்டம் தான்" என்று கூறினார். எங்கே ஹார்பர்ல அவருக்கு இருக்குற முக்கியத்துவம் போய்டும்னு கோவிந்தப்ப நாயக்கர் வேணும்னு திசை திருப்புறார்னு நெனச்ச குஷால்தாஸ் கப்பல வாங்க 1984-ல் அடியோடு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கான பயணிகள் கப்பல் சேவை நின்னு போச்சு. அப்போ நொடிச்சுப் போன குஷால் தாஸ் குடும்பம் இன்னும் தலையெடுக்கல.

இந்த சமயத்துல ஒருநாள் கூட இருந்த இளவட்ட பயல்கள் எல்லாம் அடிக்கடி ரெண்டு மூணுநாள் காணாமல் போவதும், அப்புறம் வரதுமா இருந்தத பார்த்த கோவிந்தப்ப நாயக்கர், "என்னங்கடா எங்கடா போறீங்க, வரீங்க என்ன நடக்குது" என்று அதட்டல் விட்டார். அப்போதுதான் கோவிந்தப்ப நாயக்கரிடம் வேலைக்கு சேர ஆரம்பித்து இருந்த கில்கா என்பவன் சொன்னான், "அண்ணே, எல்லோரும் திருவான்மியூர் போயிட்டு வர்றாங்கண்ணே நைட்ல" என்று போட்டு உடைத்தான். அப்புறம் கோவிந்தப்ப நாயக்கர் விசாரிக்கும் போதுதான், திருவான்மியூர்ல ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த கவுரிசங்கர் என்ற ஆளு, பொண்ணுங்கள வச்சு தொழில் பண்றான்னு தெரிஞ்சுது. அன்னிக்கு ராத்திரியே கப்பல் கட்ற இடத்துக்கு அருகில் சிகரெட்டை விருட் விருட்டென்று பிடித்தபடி எல்லாரையும் வரவழைத்து வெளுவெளு என்று வெளுத்து விட்டார். இதற்கு உச்சமாக மறுநாள் அந்த கவுரிசங்கரை கூப்பிட்டு "தம்பி, இப்படிலா பண்ணக்கூடாது, வளர்ற புள்ளங்களை சீரழிக்காத" என்று எச்சரித்தார். "கத்திய தூக்கின ரவுடிக்கு கத்தியால தான் சாவு, ஆனா பொறுக்கிக்கு லோல் அடிச்சு லொங்கு அடிச்சு போலீசு அடிச்சு தான் சாவு" என்று கூறினார்.

ஒன்றிரண்டு முறை அல்ல, 5-க்கும் மேற்பட்ட முறை கோவிந்தப்ப நாயக்கரை கொல்ல முயற்சிகள் நடந்தது. சரக்குகளை ஏற்றி இறக்கும் மொத்த குத்தகையும் கிட்டத்தட்ட 30 வருஷமா கோவிந்தப்ப நாயக்கரை விட்டு போகல. சௌகார்பேட்டைல ஆபிச போட்டு எவ்ளோ போராடி பார்த்த பாம்பேகாரனுங்க, கோவிந்தப்ப நாயக்கர் இருக்குற வரை நம்ம கை மேல வராதுனு தெரிஞ்சு, அவர போட்டுப் பார்க்க முயற்சி செஞ்சாங்க. ஆனா, எப்போதும் கூட 10 பேர் இருக்குற கோவிந்தப்ப நாயக்கரை நெருங்குறது அவ்ளோ சுலபமா இல்ல. அவரும் இப்போ கார்லா வர்றது, போறது. முன்னாடி ரெண்டு காரு, பின்னாடி ரெண்டு காரு. ஆனாலும் ஹார்பர்க்கு உள்ள, அவர் எப்போதும் ஒத்தையில் சுற்றுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தார்.

கோவிந்தப்ப நாயக்கரோட தம்பி நடத்திய லாரி டிரான்ஸ்போர்ட்ல கிளினர் வேலை பார்த்த கில்கா, மணலில நடந்த ஒரு சண்டையில டிரைவர கத்தியால குத்தி கொன்னுபோட, அந்த பஞ்சாயத்து கோவிந்தப்ப நாயக்கர் கிட்ட வந்தது. டிரைவர் மேல தப்புனு தெரிஞ்ச அவர், கில்கா மீண்டும் மணலிக்கு போனா, சரிவராதுனு தன்கூடவே வச்சுகிட்டார். அவன் அவர் கூடவே இருந்தாலும் தன் பேரில் நாலு லாரி வாங்கி ஓட்ட வேண்டும் என்ற அடங்காத ஆசையில் இருந்தான். அப்போதா கொருக்குப்பேட்டையில வந்து செட்டிலான விருதுநகரைச் சேர்ந்த அண்ணன் தம்பிங்க ரெண்டு பேர், ஹார்பர்ல லோடு ஏத்துற சான்ஸ் இருக்கானு பார்க்க வந்தாங்க. அவங்க கிட்ட, 50-க்கும் மேல லாரி இருந்துச்சு. ஆனா, எல்லாமே பெட்ரோல் லோடு அடிக்கிற லாரிங்க. நிலக்கரியை ஹார்பர்ல இருந்து கொண்டு போற காண்டிராக்ட் கெடச்சா நல்லா இருக்கும்னு கோவிந்தப்ப நாயக்கரை பார்க்க, தன் மருமகனுக்கு அந்த காண்டிராக்ட் கிடைக்கும்படி செஞ்சிட்டார். இதனால அவங்க இவர் மேல கறுவிக்கிட்டு இருந்தாங்க.

அடுத்தடுத்து அவரோட சிஷ்யப்பிள்ளைகள் ரெண்டு பேர் போலீஸ்ல என்கவுண்டர் செய்யப்பட வாழ்க்கையில் முதல்முறையா அமைதியா ஆனார் கோவிந்தப்ப நாயக்கர். அதுவரை ஏலத்தில் கலந்துகொள்ளாத வடமாநில கம்பெனிகள் எல்லாம், மெல்ல மெல்ல ஹார்பர்ல மூக்கை நுழைச்சாங்க. கூட இருந்தவர்கள் எல்லாருக்கும் ஏதோ ஒன்று செய்துவிட்ட திருப்தியில் கோவிந்தப்ப நாயக்கரும் தன் மருமகன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான் என்ற சிந்தனைக்கு வந்து நிற்க ஆரம்பித்தார். ஆனால் எதிரில் கடைசியாக நின்று கொண்டிருந்தான் கில்கா. மருமகனிடம் செய்யச் சொல்வதாக வாக்களித்தார் கோவிந்தப்ப நாயக்கர். ரெண்டு கொலை வழக்கு வேறு கில்காவை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. மறுபுறம் கோவிந்தப்ப நாயக்கரின் மருமகனும் அலைக்கழித்துக் கொண்டிருந்தான்.

ஹார்பர்ருக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் கத்தியை எடுத்து வர கோவிந்தப்ப நாயக்கருக்கும், அவர் கூட்டாளிகளையும் தவிர யாருக்கும் அனுமதி கிடையாது. சட்டப்பூர்வமாக ஆயுதங்கள் புழங்க தடைவிதிக்கப்பட்ட இடம்தான் ஹார்பர். ஆனால் அங்கு சட்டத்தை எழுதுவது கோவிந்தப்ப நாயக்கர்தான். அதேபோல அன்றும் சிகரெட் பிடித்தபடி, மெதுவாக வாயில் சினிமா பாட்டை முணுமுணுத்தபடி தனக்கு பிடித்தமான கடற்கரை கப்பல் கட்டும் கருங்கல் தூண் அருகே நின்றார். "நான் ஆட்டோக்காரன், ஆட்டோக்காரன், நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்" என்று பாடிய கோவிந்தப்ப நாயக்கர், அருகில் நின்று கொண்டிருந்த கில்காவை பார்த்து "அப்போ எம்ஜிஆர் ரிக்ஷாக்காரங்களை குறிவைச்சு பாடினாரு, நடிச்சாரு. ஏன்னா அவங்க தான், எல்லா மட்ட ஆட்கள் கூட பழகுற அடிமட்ட ஆட்கள். அவங்க மூலமாக எல்லோரையும் போய் சேர்ந்துடலாம். அந்த ரூட்ட ரஜினி நல்லா புடிச்சுட்டார்ல. பாரேன் ஒருநாள் ரஜினி, எம்ஜிஆரைப் போல அரசியலுக்கு வருவான்" என்று மீண்டும் பாட்டை பலமாக பாடினார்.

அப்போது கண்டெய்னர்க்கு பக்கத்துல இருந்து ரெண்டு பேரு மெதுவா கோவிந்தப்ப நாயக்கர பார்த்து வந்தாங்க. பாக்க வடமாநில ஆளுங்க மாதிரி இருந்தாங்க. யாருப்பா என்ன வேணும் என்று கேட்டார். வந்தவங்க சட்டென்று கில்காவை பாய்ந்து அடிக்கப் பாய, பதிலுக்கு கில்காவும் அடிக்க கோவிந்தப்ப நாயக்கர் ஒருவனை இடுப்பில் எட்டி உதைத்தார். அவன் இடுப்பை பிடித்தபடி நாயக்கரை காலை வாரிவிட கையில் இருந்த சிகரெட் சற்று தள்ளி விழுந்தது. கோவிந்தப்ப நாயக்கர் கீழே விழுவதை பார்த்த கில்கா, கோபம் அடைந்து சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து பாய ஆரம்பித்தான். வந்தவன் லாவகமாக கில்காவை தடுக்கி விழச் செய்து அந்த கத்தியை எடுத்து கோவிந்தப்ப நாயக்கரின் கழுத்தில் ஒரே வெட்டு. விலுக்கென்று ரத்தம் பீறிட்டு வர, இடது கையால் கழுத்தை பிடித்தபடி தூணோரம் சாய, மீண்டும் அதே இடத்தில் மற்றொரு வெட்டு. கையில் இருந்த மூன்று விரல்கள் எகிறிப் போய் விழ, தோள் எலும்பு வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது. பலமாக இன்னொருமுறை வெட்டவும், தலை கீழே சரியவும் காதோரம் கத்தி பட்டு ணங் என்று சத்தம் கேட்டது. இந்த கால் தான இந்த இடத்தை ஆட்டிப் படைச்சது என்று கெண்டைக்காலில் ஒரே வெட்டு. சில நொடிகளுக்குள் எல்லாம் முடிந்து விட்டது. சத்தமே இல்லை. அலைகள் அமைதியாக கருங்கல் சுவரில் மோதின. சில சரக்கு கப்பல்கள் தூரத்தில் நின்று கொண்டிருந்தன.

அந்த இருவரும் பொறுமையாக கத்தியை கில்காவிடம் கொடுத்துவிட்டு வந்தவழியே கண்டெய்னர்களின் சந்துகளுக்குள் புகுந்து மறைந்தனர். கில்காவும் முதல் கேட் வழியாக இல்லாமல் பாலத்தின் அடியில் காத்துக் கொண்டிருந்த கன்னியப்பன் ஆட்டோவில் ஏறி கொருக்குப்பேட்டைக்கு வண்டியை விடச் சொன்னான். சிறிது நேரத்தில் தென்காசி அல்வாவோடு பெரிய பை ஒன்றை கையில் பிடித்தபடி கில்கா மீண்டும் ஆட்டோவுக்குள் ஏற, வண்டி அங்காள பரமேஸ்வரி கோயில் நோக்கி பறந்தது. சந்தில் திரும்பிய நொடி, கன்னியப்பன் ஆட்டோவை நிறுத்தி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கில்காவின் கழுத்தில் ஒரே போடு போட்டான். கில்காவுக்கு கண்கள் சொருக ஆரம்பித்தது. வண்டி மெதுவாக கன்னியப்பன் வீடு அருகே நின்றது. தெத்தியப்பனும், பெத்தாண்டவனும் கில்காவை லாவகமாக பிடித்த பின்புறம் கொண்டு சென்றனர்.

காலையில் இதே இடத்தில் வைத்து கில்கா கூறிய வார்த்தைகள் கன்னியப்பனின் காதுக்குள் ஒலிக்க ஆரம்பித்தன. "மச்சான், இனியும் காத்திட்டு இருக்க முடியாதுடா, நாம பொழைக்க யாரோ ஒருத்தர பலிகொடுத்து தாண்டா ஆகணும்., அந்த ஒருத்தர் யார் என்பதுல தாண்டா நம்ம எதிர்காலம் இருக்கு..."

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment