அரவிந்த் குமார்
சங்கர் விஷயத்தை சொன்னதில் இருந்து அதனை நம்பவும் முடியாமல், நம்பாலும் இருக்க முடியாமல் கலைத்துப் போட்ட மாதிரி எண்ணங்கள் மனதை குழம்ப செய்தது. கையில் கிடைத்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு நடந்தே குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றேன். சென்னை கடற்கரைக்கு டிக்கெட் ஒன்றை எடுத்து, அருகில் இருந்த கடையில் இரண்டு வாட்டர் பாக்கெட்டை வாங்கி ஒரே மடக்கில் காலி செய்த பின்னரும் தொண்டையில் ஏதோ அடைத்த மாதிரியே இருந்தது. காலை 7 மணிக்கே வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்தது. தூரத்தில் புள்ளியாய் தெரிந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிரமாண்டமாய் தடதடத்து வந்து நின்ற ரயிலில் ஏறி ஜன்னலோர இருக்கையில் சாய்ந்தேன்.
சாமந்தி அத்தை இறந்துட்டாங்க. சங்கர் சொன்ன வார்த்தைகள் காதில் கொய்யென்று சத்தத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. எப்பேர்பட்ட களையான முகம். கருப்பில் இப்படியொரு வனப்பு இருக்குமா? நள்ளிரவில் டார்ச் அடித்த மாதிரி அப்படியொரு சிரிப்பு. கன்னக்குழி வேறு. நீண்டு தொங்கும் முடி, புட்டத்தை தாண்டி ஆடும். திடீரென ஒருநாள் நதியா கட்டிங் என்று அத்தை அதனை வெட்டிக் கொண்டு வந்த நின்று போது, ஒட்டுமொத்த குவார்ட்டர்சே ஆடிப்போய்விட்டது.
அத்தைக்கு நதியாவென்றால் உயிர். நதியா பொட்டு, நதியா கம்மல், நதியா ரப்பர் பேண்ட், நதியா வளையல் என்று ஒரு கருப்பு நதியாவாகவே வளைய வந்தாள். புதுவண்ணாரப்பேட்டைக்கு பூண்டி தங்கம்மாள் தெரு ஒரு அடையாளம் என்றால், பூண்டி தங்கம்மாள் தெருவுக்கு சாமந்தி தான் சொத்து. வீடு என்னவோ, யூ ப்ளாக் 524 தான், ஆனால் எந்த வீட்டிலும் நுழைந்து வெளிவரும் உரிமை அவளுக்கு. காலையில் ஒரு வீட்டில் சாப்பிட்டு, மதியம் ஒரு வீட்டில் தூங்கி எழுந்து, மாலையில் யார் வீட்டிலோ பாட்டு பாடியபடி பூக்கட்டிக் கொண்டிருப்பாள்.
வெள்ளிக்கிழமையானால் திருவொற்றியூர் தண்டுமாரியம்மன் கோவிலில் முதல் பொங்கல் வைப்பது சாமந்தி அத்தை தான். அவ்வளவு சிரிப்பும், கும்மாளமும் அன்றைய தினம் மடித்து வைத்த புதுத்துணியாய் அமைதியாய் மாறிவிடும். சிவப்பு தாவணியும், மஞ்சள் பாவாடையுமாய் சன்னதம் குறையாத மாரியாத்தாளாய் பொங்கல் வைத்து நூற்றியெட்டு அடிபிரதட்சணம் செய்வாள்.
சேமியா ஐஸ் தின்றபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நான் கேட்டதுண்டு, எதுக்கு அத்தை வெள்ளிக்கிழமையானா, இப்படி பண்றனு?. என்னை வாரி அணைத்து நெஞ்சோடு சேர்த்து தலையில் முத்தமிட்டு, உன்னைப் போல குண்டு பாப்பா வேணும்னு சொல்வாங்க. அத்தை இப்படி முத்தம் கொடுப்பதற்காகவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதே கேள்வியை தவறாமல் கேட்பேன். சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு வீடு திரும்புவோம். தங்கம் தியேட்டரை தாண்டும்போது மாவெல்லத் துண்டு, தமிழ்நாடு தியேட்டரைத் தாண்டுபோது சீம்பால் ஏடு, சமயங்களில் அத்தை மடியில் படுத்தபடி தூக்கமும். இந்த உரிமை எனக்கு மட்டுமே. இதற்காகவே புதுவண்ணாரப்பேட்டை இளைஞர்களுக்கு நான்தான் தூது போ செல்லக்கிளி. அத்தையிடம் கொடுக்கச் சொல்லி, நூற்றுக்கணக்கில் கடிதங்கள், பூ வேலைப்பாடு செய்த கர்ச்சீப்கள், ரிப்பன், வளையல், புது ரப்பர் செருப்பு இப்படி வகைவகையாய் என் மூலமாய் கொடுக்கப்படும். அவை அத்தனையும் மறுநாள் தெருவில் ஏதோ ஒரு சிறுமி அணிந்தபடி ஓடுவதை பார்த்து இருக்கிறேன்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்து 56C பேருந்தில் ஏறி, லட்சுமி கோயில் ஸ்டாப் கேட்டு வாங்கி மீண்டும் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன்.
நாங்க அத்தை வீட்டுக்கு பக்கத்துல இருந்தோம். ரத்த சொந்தம்லா கிடையாது. பக்கத்து வீட்ல இருக்குறவங்கள, உறவுமுறை வைத்து கூப்பிடும் சாதாரண பழக்கத்தில் ஆரம்பித்தது. ஆனால் சொந்தபந்தங்கள் கைவிட்டு நாங்க அனாதையாய் நின்றபோது, ஆதரவாய் வந்து நின்ற ஒரே குடும்பம் சாமந்தி அத்தையின் குடும்பம்தான். அதுக்கு காரணம் சாமந்தி அத்தை தான். என்னை தூக்கி கொஞ்சி, குளிப்பாட்டி, பால்வாடிக்கு கூப்பிட்டு போய் விட்றது, கூப்பிட்டு வர்றது எல்லாமே அத்தைதான். அம்மா கையால் சாப்பிட்ட ஞாபகங்களை விட, அத்தை கையால் சாப்பிட்டதுதான் அதிகம்.
யூ ப்ளாக்-ல மொத்தம் 40 வீடு. 525-ம் நம்பர் வீட்டுக்கு கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் இருந்து ஒரு குடும்பம் வந்து குடியேறியது. மொழி தெரியாதவங்க என்பதால வழக்கம் போல, சாமந்தி அத்தை தான் ஆல் இன் ஆல். அந்த வீட்டுக்கு வந்த புனிதா அக்காவும், சாமந்தி அத்தையும் ஜோடி போட்டுக்கிட்டு கந்தக்கோட்டம் கோயில், கற்பகாம்பாள் கோயில்னு சுத்துவாங்க. அப்போ ஒருநாள் எங்க பாட்டி இறந்துட்டாங்கனு தகவல் வர, எங்கம்மா என்னையும், அண்ணாவையும் கூட்டிக்கிட்டு எங்க சொந்த ஊருக்கு வந்துட்டாங்க. ஒரு மாசம் கழிச்சு திரும்ப ஊருக்கு போறேன். சாமந்தி அத்தைய பாக்குறேன். ஆளே மாறிப் போயிருந்தாங்க.
அத்தை சிரித்தால் பக்கத்து ப்ளாக் வரைக்கும் கேக்கும். ஆனா, இப்போ க்ளுக்-னு மெல்லிசா ஒரு சிரிப்பு. ஆம்பளையா இருந்தாக் கூட நெஞ்ச நிமித்தி தா பேசுவாங்க. இப்ப என்னடான்னா, இருக்குற இடம் தெரியல. படிக்கட்ட தாவி தாவி தா ஏறுவாங்க. கோயில்ல அடிபிரதட்சணம் பண்ற மாதிரி நடந்துக்கிட்டு இருந்தாங்க. என்னை கூட்டிக்கிட்டு கோயிலுக்கு போறாங்க, ரிக்ஷாவில் திரும்ப வர்றோம். எனக்கு ஒண்ணுமே வாங்கி தரல. சரியா பேசவும் இல்லை. எனக்கு அழுகைனா அப்படி ஒரு அழுகை. ஆளி புடிக்க கடலோரம் போன சங்கர் கூட சேர்ந்து நானும் முதல்முறையா காசிமேட்டுக்கு போனேன். அங்க அவன்கிட்ட சொல்லி அழ ஆரம்பிச்சேன்.
என்னோட அழுகைய பார்த்த சங்கர் சிரிச்சுகிட்டே, டேய் நீ முக்கியமா? மஞ்சுநாதா முக்கியமா? குண்டு பயலே, இனி உன்னை தூக்கி கொஞ்ச மாட்டாடா உங்க அத்தைனு சொன்னான். எனக்கு ஒண்ணுமே புரியல. திரும்பி வந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு புனிதா அக்காவோட தம்பி, ஷிமோகாவில் இருந்து வந்து இருந்ததா சொன்னாங்க, பேரு மஞ்சுநாத். ஆள பார்த்தா ஆறடி உயரம், நாலடி அகலத்துக்கு நல்ல கட்டுமரம் மாதிரி இருந்தாங்க. என்னைக் கூப்பிட்டு ஏதோ சொன்னார், அவர் பேசியது எனக்கு புரியல, அவர் மாரெல்லாம் கொசகொசனு முடி, கை நல்ல சொரசொரப்பா இருந்தது. எனக்கு ஒரே அருவெறுப்பு. யார் இந்த ஆளு, ஏன் இப்படி இருக்கான், என்கிட்ட என்ன சொல்றான்னு தெரியாம, அழுதுகிட்டே ஓடிவந்துட்டேன்.
கொஞ்சநாள் கழிச்சி, அகஸ்தியா தியேட்டர்ல, ஏதோ ஒரு இந்திப்படம் நல்லா இருக்குனு எங்க அப்பா எல்லாரையும் கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும்னா, ப்ளாக்-அ பொருத்தவரை பெரும்பாலும் எல்லா குடும்பமும் சேர்ந்து தான். பொம்பளைங்களுக்கு ரிக்க்ஷா வைச்சுக்கிட்டு, ஆம்பிளைங்க எல்லாரும் நடந்து போவாங்க. நடக்குற தொலைவு இல்ல, ஆனா நைட்ல விக்குற குல்பி ஐஸ் சப்பிக்கிட்டே பேசிக்கிட்டு போனா தூரமே தெரியாது. வழக்கம்போல ரிக்க்ஷாவில் சாமந்தி அத்தைக் கூட நான்தான். ஆனா அத்தை ஒக்காந்த ரிக்க்ஷா மட்டும் ரொம்ப மெதுவா போச்சு. ரிக்க்ஷா பக்கத்துலயே மஞ்சுநாத் நடந்து வந்துகிட்டு இருந்தார். என் கன்னத்த தட்டிகிட்டு, தலையை கோதி விட்டுக்கிட்டு நடந்தார். எனக்கு புடிக்கல, ரிக்க்ஷால இருந்து இறங்கி ஓடிப்போய் சங்கர் கூட சேர்ந்துகிட்டேன். ஆனாலும் அந்த ரிக்க்ஷாவ விட்டு மஞ்சுநாத் நகரவே இல்லை. சாமந்தி அத்தையும், புனிதா அக்காகிட்ட பேசிகிட்டே மஞ்சுநாத்த பார்த்துக்கிட்டே வராங்க.
நாங்க போன அந்த படம் மைனே ப்யார் கியா. கவுண்டர்ல, டிக்கெட்டோட சேர்த்து ரெண்டு புறா ஒட்டி இருக்குற மாதிரி சின்ன ப்ளாஸ்டிக் பொம்மை கொடுத்தாங்க. படத்துல ஒரு புறா பறக்குற மாதிரி தா சீன் வந்துச்சு. எதுக்கு இன்னொரு புறானு, படம் முடிஞ்சு திரும்பி வரும்போது யோசிச்சுக்கிட்டே இருந்தேன். மஞ்சுநாத் தன் கையில் இருந்த புறா பொம்மைக்கு முத்தம் கொடுத்தார். நான் சடாரென்று சாமந்தி அத்தைய திரும்பி பார்த்தேன். அத்தையும் புறா பொம்மைக்கு முத்தம் கொடுத்தாங்க. எனக்கு கோவம், கோவமா வந்தது. என் கையில இருந்த புறா பொம்மையை சாக்கடையில வேகமா வீசி எறிஞ்சேன்.
சாமந்தி அத்தை ரொம்ப நல்லா தைப்பாங்க. அளவே எடுக்காம அட்டகாசமா ஜாக்கெட் தைப்பா சாமந்தினு ஏரியாவே பேசும். நாகூரார் தோட்டம், கீரைத் தோட்டம்னு வெளில இருந்து எல்லாம் அத்தை கையில் வந்து தைச்சுக்கிட்டு போவாங்க. தியேட்டருக்கு போய்ட்டு வந்த மறுநாள் அத்தை ஒரு துணியில் ரெண்டு புறா படத்தை அழகா எம்பிராய்டரிங் செஞ்சுகிட்டு இருந்தாங்க. ஒரு புறா மேல சிவப்பு நிறத்துல எம்-னு, இன்னொரு புறா மேல கருப்பு நிறத்துல எஸ்-னு இருந்துச்சி. எனக்கு இதுக்கும் கோவம் கோவமா வந்துச்சு. ஏன் கோவம்-னு புரியல. ஆனா அத்தை பண்றது எனக்கு புடிக்கலனு மட்டும் நல்லா தெரிஞ்சுது. அத்தைக்கிட்ட சொல்லாம்னு பார்த்தேன். அத்தையோட முகத்துல அப்படி ஒரு பரவசம். முகமெல்லாம் குளிர்ந்து, கண்ணெல்லாம் கலங்கி, ஆனா சிரிச்சிட்டு இருந்தாங்க. என்னால எதுவும் சொல்ல முடியல.
லட்சுமி கோயில் ஸ்டாப்ல இறங்கும் போதே சங்கர் நின்னுக்கிட்டு இருந்தான். பார்த்ததும் எப்படி இருக்க குமாரு, வேலை நல்லா போதா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? என்று கேட்டான். கொஞ்சம் சதை போட்டு குண்டாக தெரிந்தான் சங்கர். படிப்பு ஏறல, மெக்கானிக் வேலை பாக்க ஆரம்பிச்சு, இப்போ சொந்தமா ஒரு ஷெட். சால்ட் குவார்ட்ஸ் லெப்ட் திரும்பினா மொத கடை அவனோடது. நல்லா இருக்காங்க சங்கர் என்று பேசியபடியே ரெண்டு பேரும் டீக்கடைக்குள் நுழைந்து ஆளுக்கு ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தோம்.
"ஏற்கனவே எதிர்பார்த்ததுதா, யாருக்கும் பெரிசா தெரியல, இன்னும் சொல்லப் போனால் அது நிம்மதியா போய் சேர்ந்ததுனு தான் எல்லாரும் பேசிக்கிறாங்க" என்று கூறியபடியே புகையை ஆழ இழுத்து விட்டான் சங்கர். "ஆனா, உன்னை நினைச்சு தான் நான் ரொம்ப கவலைப்பட்டேன்." என்று தோளைத்தட்டிய சங்கரை இலக்கில்லாமல் பார்த்தேன்.
இதே வார்த்தைகள் தான் அன்று சாமந்தி அத்தையும் சொன்னாங்க. ஆடி மாசம் முழுவதும் மாரியம்மனுக்கு விரதம் இருந்தாங்க அத்தை. வழக்கத்தை விட ரொம்ப உக்கிரமா எந்நேரமும் கோவில்ல உட்கார்ந்து கொண்டு பொங்கல் வைப்பதும், வேப்பிலை நேர்த்திக்கடன் செலுத்துவதும் என்று நடமாடும் மாரியம்மனாகவே மாறிட்டாங்க. எந்த முறையும் இல்லாத அளவுக்கு அந்த ஆடிக்கு தீ மிதிக்கவும் செஞ்சாங்க. மஞ்சள் புடவை கட்டிக்கிட்டு, தலையில பால்குடம் எடுத்துக்கிட்டு அத்தை தெருவெல்லாம் சுத்தி வந்து, எல்லார் வீட்டு வாசல்லயும் அத்தை கால்ல மஞ்சள் தண்ணிய ஊத்தி கன்னத்துல போட்டுக்கிட்டு என்னவோ சாமிய பாக்குற மாதிரி பார்த்தாங்க. அத்தை என்ன தொட்டே ரொம்ப நாள் ஆச்சுனு சட்டுனு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு குடம் தண்ணி எடுத்து அத்தை காலில் கொட்டி, பாதத்தை என் தலையில் தொட்டு வணங்கினேன். அத்தை உற்று பார்த்து விட்டு வேகவேகமா தீ மீது ஓடினாள். எனக்கு உடம்பெல்லாம் நெருப்பள்ளி கொட்டியது மாதிரி இருந்தது.
தீ மிதிச்ச மறுநாள் அத்தை என்னை கூட்டிக்கொண்டு தேசம்மா கோவிலுக்கு போனாங்க. வழக்கமா அங்க போக மாட்டாங்க. சாமி கும்பிட்ட பிறகு, என் தலையை கோதிவிட்டு "நல்லா படிக்கணும்னா, உங்க அம்மாவை நெனச்சுப் பாரு, எவ்ளோ கஷ்டபட்றாங்க, உங்க அப்பா பண்றது சரியில்ல, நீயும் உங்க அண்ணணும்தா உங்க அம்மாவ கரை சேர்க்கணும்" என்று கூறிவிட்டு "ஒழுங்கா படிப்பியா" என்று உள்ளங்கையை நீட்டி சத்தியம் கேட்டாங்க. மஞ்சளும், குங்குமமும் கலந்து சாமந்தி பூவின் இதழ்கள் ஒன்றிரண்டு ஒட்டிக்கொண்டு இருந்தது. "நல்லா படிப்பேன் அத்தை" என்று நானும் சத்தியம் செய்தேன். "உன்னை நினைச்சு தான் நான் ரொம்ப கவலைப்பட்டேன்" என்று சொல்லி ரொம்பநாள் கழித்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். "நீ வீட்டுக்குப் போ, நான் எங்கே என்று கேட்டால் தெரியாது என்று சொல்லிவிடு" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று சாலையை தாண்டி சென்று விட்டார்கள்.
இரவில் குல்பி ஐஸ்காரன் வந்து போன பிறகும் சாமந்தி அத்தை வீடு திரும்பவில்லை. பூண்டி தங்கம்மாள் தெருவே அல்லோலகலப்பட்டது. சாமந்தி அத்தையின் அம்மா, கபாலி பாட்டி என்னிடம், "நீதாண்டா அவ கூட கடைசியா இருந்த, எங்க போனா, என்ன சொன்னிட்டு போனா" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்கள். "நல்லா படினு சொன்னாங்க, சொல்லிட்டு போய்ட்டாங்க" என்று நான் சொன்னதும் என் முதுகில் அம்மா மடாரென்று ஒரு அடி. "அப்பவே வந்து சொல்லக் கூடாதா சனியனே, ஊரெல்லாம் சுத்திட்டு, தின்னுட்டு சாவகாசமா சொல்ற, புத்திகெட்டவனே" என்று ஏகத்துக்கும் திட்டியபடி சரமாரியாக வெளுத்து வாங்கினார்கள். "10 வயசு புள்ளைக்கு என்ன தெரியும், அதை போய் அடிக்கிற" என்று கூட்டத்தில் யாரோ என்னை காப்பாற்றினார்கள். நான் விசும்பியபடி அடி பம்பு அருகே போய் அமர்ந்து கொண்டேன். இரவு முழுவதும் ரிக்க்ஷாக்கள் வருவதும், போவதுமாய் இருந்தது. நான் அப்படியே தூங்கி விட்டேன். கனவில் சாமந்திஅத்தையின் சிரித்த முகம்.
சிகரெட்டை முடித்துவிட்டு நானும், சங்கரும் பூண்டி தங்கம்மாள் தெருவில் நுழைந்த குவார்ட்டர்சின் வாசலில் வந்து நின்றோம். பழைய குவார்ட்டர்சை இடித்துவிட்டு புதிதாய் கட்டி இருக்கிறார்கள். தெரியாதவர்கள் வீட்டிற்குள் நுழைந்தது போல் இருந்தது. குவார்ட்டர்ஸ் வாசலிலேயே கண்ணாடி பெட்டிக்குள் அத்தையின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது. தாடை இறுகி, முகம் சுருங்கி, ஏறுநெத்தியாய் முடி உள்வாங்கி, சற்று வதங்கி யாரோபோல் இருந்தது. நான் கண்ணாடி பெட்டியில் முகம் வைத்து அத்தையை உற்று பார்த்தேன். கண் கலங்கி, முகமே தெரியாமல் சாமந்தி பூக்கள் நிரம்பிய மாலைதான் மங்கலாக தெரிந்தது.
மூன்றாவது மாடியில் இருந்து கீழே நின்று கொண்டிருந்த எனக்கு வடையை அத்தை தூக்கிப் போட, நடுவழியிலேயே காக்கா ஒன்று கொத்திக் கொண்டு போனது. அப்போது அத்தை சிரித்தார்கள் பார் ஒரு சிரிப்பு, அப்பா அப்படி ஒரு சிரிப்பு. இதோ இப்போதும் என் காதுக்குள் அந்த சத்தம். அத்தை, அத்தை, அத்தை....கண்ணாடி பெட்டியை பிடித்தபடி விழுவது வரை ஞாபகம் இருந்தது.
கோவிலில் இருந்து கிளம்பிய அத்தையை சிலமாதங்கள் கழித்து ஷிமோகாவில் இருந்து கூட்டி வந்தார்கள். அன்றுதான் நாங்கள் வீட்டை காலி செய்து கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். அப்பாவுக்கு வேலை பிரச்னை, அம்மாவுக்கு அப்பா பிரச்னை, ரெண்டு பேருக்கும் நாங்க பிரச்னை என்று அக்காலகட்டத்தில் தொட்டது எல்லாமே சிக்கலாகிக் கொண்டிருந்தது. எல்லாப் பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது, ஆட்டோவில் இருந்து சாமந்தி அத்தையும், மஞ்சுநாதாவும் இறங்கினார்கள். அத்தையிடம் சிரிப்பு இல்லை. துள்ளல் இல்லை. மஞ்சுநாதா வேகவேகமாக மாடி ஏறி சென்றுவிட்டார். அடி பம்பு அருகே நின்று கொண்டிருந்த எல்லா பெண்களும் ஓடிவந்து அத்தையை சூழ்ந்து கொண்டார்கள். "என்னடி இப்படி பண்ணிட்ட, நீயா இப்படி பண்ண? எப்படிடி பண்ண மனசு வந்தது?" என்று ஏதோதோ கேள்விகள். அனைத்திற்கும் அமைதியாக நின்று கொண்டிருந்தார் அத்தை.
என் அருகே வந்து நின்ற அத்தை, என் முதுகை தடவிக்கொடுத்து "வலிச்சுதா" என்று கேட்டார்கள். எனக்கு பொசுக்கென்று கண்ணில் இருந்து தண்ணீர் கொட்டியது. என்னை அப்படியே அணைத்துக் கொண்டு "சொன்னத மறக்காத" என்று கூறிவிட்டு தளர்ந்த நடையோடு மாடி ஏறிப் போனார்கள்.
"குமார், குமார்" என்று சங்கரின் குரல் கேட்டு கண் விழித்தேன். கையில் தண்ணீர் பாட்டிலோடு சங்கர். முகமெல்லாம் ஈரமாக, சட்டையெல்லாம் தொப்பலாக நனைந்து இருந்தது. "என்னடா மச்சான், மயங்கி விழுந்துட்ட, இந்தா தண்ணிய குடி" என்ற பாட்டிலை நீட்டினான். வாங்கி குடித்து விட்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி கண்ணாடி பெட்டிக்குள் இருந்த அத்தையை பார்த்தேன்.
பரிவேட்டை திருவிழாவின் போது, க்ரௌன் தியேட்டர் அருகே இருந்த போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் நான், சாமந்தி அத்தை, அண்ணன், அம்மா எல்லோரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்த போட்டோ இப்போது கூட வீட்டில் இருக்கு. வாய்கொள்ளா சிரிப்பும், இரட்டை ஜடை பின்னலும், என் தோளில் கையை போட்டபடி நின்று கொண்டிருந்தாள் சாமந்தி அத்தை. என்னால் பெட்டிக்குள் இருக்கும் அத்தையை பார்க்க முடியவில்லை. கால்கள் பின்ன எழுந்து கூட்டத்திற்கு வெளியே சென்று சங்கர் பக்கத்தில் நின்று கொண்டேன்.
"....த்தா, வண்டி எடுத்துட்டு வரசொல்லி எவ்ளோ நேரம் ஆச்சு, புடுங்கி கிட்டு இருந்தியா, ...த்தா கழுத்தை நெரிச்சுக் கொன்னுடுவேன், சாயந்திரத்திற்குள்ள பாடிய எடுக்க வேணா, ....ம்மாள செவிளு திரும்பிடும் சீக்கிரம் வாடா ....த்தா" என்று மஞ்சுநாதா மாமா போனில் யாரையோ திட்டிக் கொண்டிருந்தார்.
சொந்த ஊருக்கு சென்றபிறகு இரண்டு முறை அத்தையை வந்து பார்த்து இருப்பேன். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற போது ஒன்று, கல்லூரியில் சேர்ந்தபோது இரண்டாவதாக. இரண்டு முறையும் அத்தை என்னை அணைக்கவில்லை. சிரிக்கவில்லை. பேசக்கூட இல்லை. வாசல்வரை வந்து நின்று திரும்பி பார்த்தபோது, அத்தை அழுது கொண்டிருந்தது மட்டும் பார்த்தேன். அதன்பிறகு அத்தையை பார்க்கவே இல்லை. ஆனால், சங்கரிடம் பேசும் போதெல்லாம் அத்தை தான். அவனும் தகவல்களுடன் தான் பேசுவான். நிறைய தகவல்கள்.
கருப்பு நிற ஆம்னி கார் ஒன்றில் அத்தையின் உடல் ஏற்றப்பட்டது. காரின் மீது ஏராளமான மாலைகள். பெண்களின் குலவை உச்சத்தை எட்ட, கார் புறப்பட்டது. மஞ்சுநாதா மாமா காரின் அந்தபக்கம், நான் இந்தபக்கம், நடுவில் அத்தை. பூக்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட்டபடியே நடந்து கொண்டிருந்தேன். பூண்டி தங்கம்மாள் தெரு முடிந்து கடற்கரை சாலை வளைவில் திரும்பி பார்த்தபோது, வழியெங்கும் சாமந்தி இறைந்து கிடந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.