Advertisment

ஞாயிறு சிறப்பு சிறுகதை : சிவிங்கம்பூ சேரா

தாயையும் தந்தையையும் இழந்தாலும் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும், மூன்று இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கையில் நடந்ததை, உணர்ச்சி பூர்வமாக விவரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
short story 130518

அரவிந்த் குமார்

Advertisment

ணமகனுக்கு நலங்கு வைக்கும் சடங்கான "தேல் கா ரசம்"-திற்கு வந்த கூட்டத்தை பார்த்தே தன்வீருக்கு வயிறு எரிந்தது. எதற்கெடுத்தாலும் திட்டியபடியே வாசலுக்கு உள்ளேயும், வெளியேயும் நடந்து கொண்டிருந்த தன்வீரை பார்த்து சிரித்தபடியே சிவிங்கம்பூக்களை சேராவாக தொடுத்துக் கொண்டிருந்தாள் தபசும். வேலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த சித்தூர் சொந்தக்காரர்கள் ஆட்டோவில் வந்து இறங்கியபடியே இருந்தனர்.

"எத்தனை ஆடு சொல்லி இருந்த, எத்தனை பேருக்கு விருந்து சொன்ன? இப்படி சரம் சரமா வந்தா ஆச்சா?" என்று சலித்தபடி தலைமுக்காடை இழுத்து சரி செய்தபடி கத்திக் கொண்டிருந்தாள் தன்வீர்.

"வீட்டுக்கு கடைசி கல்யாணம், ஊரு ஒறவெல்லாம் சொல்லமா, திருட்டுக் கல்யாணமா பண்ண சொல்ற" என்று பீடியை ஆழ உறிஞ்சினார் தன்வீரின் கணவர் குச்சுபாய்.

"செலவ உங்க அப்பன் பண்றானா, எங்க அப்பன் பண்றானா, குவைத்-ல ஒக்காந்து ரத்தம் வடிய சம்பாரிச்சத ஆடு அறுத்தே காலி பண்ண சொல்றியா?" என்று இடுப்பில் இரண்டு கைகளை வைத்தபடி ஆங்காரமாக தன்வீர் கேட்க, அப்போதைக்கு பேச்சு வளர்க்க விரும்பாத குச்சுபாய், இலையை சுருட்டி புகையிலையை அடக்கி புதிய பீடி ஒன்றை செய்யும் வேலையில் மும்முரமானார்.

இந்த பேச்சுக்களை காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுக்கு அடுக்காக இதழ்கள் பதிந்து கொத்தாக மலர்ந்து இருந்த சிவிங்கம்பூக்களை ஆசையோடு தடவிய தபசும், சரிகை நூலெடுத்து கையில் முழம் போட்டு அளக்கத் தொடங்கினாள். முதலில் கொத்து சரம், அதன்மேல் சரிகைசுற்று அடுத்து மல்லியும், செம்பங்கியும் சேர்த்து கட்டினாள். அதன் மீது பக்கவாட்டில் பொன்சரிகை சேர்த்து சுற்ற மாலையின் கீழ்பகுதி வடிவத்திற்கு வந்தது.

ரீங்ங்ங் என்ற சத்தத்தோடு கொட்டி வைத்த பூக்கள் மீது பெரிய ஈக்கள் மொய்த்துக் கொண்டிந்தன. நார் ஊறப் போட்டிருந்த பக்கெட்டில் இருந்து கையளவு தண்ணீர் எடுத்து பூக்கள் மீது தெளித்த தபசும், சேராவின் அடுத்த பக்கத்திற்கு பூக்களை அடுக்கினாள்.

அப்போது, பக்கெட்டை காலால் எட்டி உதைத்த தன்வீர், "காலையில இருந்து ஓட்டு வீட்டுக்கு முட்டுக் கொடுத்த மாதிரி ஒரே இடத்தில ஒக்காந்து இருந்தா ஆச்சா, உங்க அக்காவதா ஒண்ணும் இல்லாம எம்புள்ளக்கு சேத்து வுட்டுடீங்க, கூடமாட ஒத்தாசைக்கு ஆள வரச்சொன்னா, கொட்டிக்கிறதுக்கு மட்டும் கூட்டம் கூட்டமா வந்து நிக்குதுங்க உங்க வூட்டு ஜனங்க" என்று பொரிந்து தள்ளினாள் தன்வீர்.

"கொணவட்டம் ரசூல்பாய் பொண்ணுங்களையா சோத்துக்கு செத்தவங்கனு சொல்ற" என்று பொங்கிவந்த கோபத்தை தொண்டைக்குள் இறக்கியபடி கண்ணீர் கோர்க்க தன்வீரை பார்த்தாள் தபசும்.

கிணிங் என்ற சைக்கிள்பெல் சத்தம் வாசலில் கேட்டால் ரசூல்பாய் வந்துவிட்டார் என்று அர்த்தம். கொணவட்டத்தில் ஒற்றைக்காலில் சைக்கிளில் வலம் வரும் ரசூல்பாயின் அப்பளத்திற்கு அவ்வளவு கிராக்கி. கூடவே ரமலான் மாதங்களில் இடியாப்பமும். தலையில் தொப்பி, முழங்கால் அளவுக்கு வெளுத்த ஜிப்பா, ஏத்திக்கட்டிய லுங்கி, தாடி மண்டிய முகத்தில் கொள்ளைச் சிரிப்பு இதுதான் ரசூல். சக்கரை வியாதி ஒருகாலை தின்றுவிட, நம்பிக்கையை இழக்காத ரசூல் கொணவட்டம் முழுவதும் மறுகாலில் சைக்கிள் மிதித்து வியாபாரம் செய்து வந்தார். கௌஹர், தபசும், நுஷ்ரத் என்று முத்து முத்தாய் மூன்று பெண்கள்.

சைக்கிளோடு ரசூலையும் லாரி ஏத்திச் சென்று விட ஒரே நாளில் ஒட்டு மொத்தாய் தெருவுக்கு வந்து நின்றார்கள். அப்பாவுக்கு துணையாக அப்பளம் உருட்டிக் கொண்டிருந்தவர்கள், பின்னர் முழுநேர தொழிலாய் அதனை உருட்டத் துவங்கினர். ஆனால் காலம் அவர்களை உருட்டத் துவங்கியது.

ஆட்டோ ஓட்டும் எதிர் வீடு தன்வீரின் மகன் தான் அப்பாஸ். அப்பளக் கட்டுக்களோடு செல்லும் கௌஹர், ஒரு சில மாதங்களில் வேலூர் கோட்டை மதில் சுவருக்கு பின்புறம் அப்பாசுடன் நிற்க ஆரம்பித்தாள். ஒருநாள் கையும், களவுமாக இவர்களை பிடித்துவிட்ட அப்பாசின் அம்மா தன்வீர், சிப்பாய் கலகத்தை விட பெரிய கலகத்தை அன்று தெருவில் கூட்டி விட்டாள். "அப்பா செத்ததும், எப்படியாவது, எவனையாவது வளைச்சி போட்டு வாழ்க்கைல செட்டில் ஆகிடலாம்னு கணக்கு பாக்குறீங்களாடி" என்று தபசும் வீட்டு வாசலில் நின்று ஆங்காரமாக ஒருநாள் முழுவதும் திட்டி தீர்த்தாள். ஆனால் அப்பாஸ் பிடிவாதமாக நின்று கௌஹரைத்தான் கட்டுவேன் என்று சொல்லிவிட, வேறுவழியின்றி தன் மகன் அப்பாசுக்கு, கௌஹரை கட்டி வைத்தாள் தன்வீர்.

ஆனால் அது நாள் வரை வெளிநாடு செல்ல மறுத்து வந்த அப்பாசை வலுக்கட்டாயமாக, "உன் விருப்பப்படி கௌஹரை கட்டிவைத்தேன் அல்லவா, என் விருப்பப்படி நீ குவைத்துக்கு கொஞ்சநாள் வேலைக்குப் போ, வந்து உனக்குனு ஒரு வீடு கட்டிக்கோ... அப்புறம் ஆட்டோ ஓட்டுவியோ, கப்பல் ஓட்டுவியோ உன் விருப்பம்" என்று தன்வீர் பிடிவாதம் காட்ட, கல்யாணம் முடிந்த கையோடு குவைத்துக்கு விமானம் ஏறினான் அப்பாஸ். வீடுதான் மாறியதே தவிர, வாழ்க்கை மாறவில்லை கௌஹருக்கு. தங்கள் வீட்டில் விடிகாலை 4 மணிக்கு எழுந்து இடியாப்பத்திற்கு மாவு திரட்டி, இடையே அதிகாலை தொழுகையான சுபுஹ் நமாஸ் செய்துவிட்டு மீண்டும் இடியாப்ப வேலைகளுக்குள் இறங்கினால் அது முடிய பிற்பகலாகி விடும். பின்னர் இடியாப்பங்களை வாடிக்கையான ஓட்டல்களுக்கு சென்று கொடுத்து வருவது தபசும் பொறுப்பு. இப்போது இடியாப்பம் வேலை மட்டும்தான் இல்லை. மற்றபடி அதிகாலையில் ஆரம்பித்து நள்ளிரவு வரை கௌஹருக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது. ஏதாவது ஒன்றை தன்வீர் சொல்லிக் கொண்டே இருப்பாள். இதையெல்லாம் அப்பாசிடம் செல்போனில் பேசும்போது சொல்லலாம் என்று நினைப்பாள். பிறகு நேரில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விடுவாள்.

கௌஹர் கட்டிக்கொண்டு போனபிறகு, தபசும், நுஷ்ரத் இருவரும் தனியாக இருக்க நேரிட்டது. எதிர் வீடு என்றாலும் கூட, அடிக்கடி சென்று அக்காவை பார்த்து விட முடியவில்லை. கையில் பணமில்லை, சாப்பாடு செய்யவில்லை போன்ற விஷயங்களை கூட அக்காவை பார்த்து சொல்ல முடியாத அளவுக்கு இடையில் மலைபோல் நின்று கொண்டிருந்தாள் தன்வீர். முதலிரண்டு வாரங்கள் அக்காவை நம்பிக்கொண்டிருந்த தபசும், பிறகு தானே எழுந்து இடியாப்ப வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். உதவிக்கு நுஷ்ரத். முதல்நாள் மாலையே ஊறவைத்த பச்சரியை காயவைத்து மாவாக அரைத்து வைத்து இருப்பாள். அதில் தேவையான அளவு மாவை எடுத்து அவித்து பதமான சூட்டில் உருண்டை பிடித்து அச்சில் வைத்து பிழிந்து, அதற்கென உள்ள சிறிய சிறிய மூங்கில் தட்டுக்களில் இட்டு, வாயகன்ற பெரிய இட்லி பானையில் வேகவைத்து அதன்பின்னர் லாவகமாக பிரித்து பெரிய சில்வர் பாத்திரங்களில் அரை டஜன் ஒரு செட் என்று அடுக்கி வைத்தால் விற்பனைக்குத் தயார். அதனை சைக்கிளில் பின்னால் வைத்து கட்டிக் கொண்டு ஹோட்டல்களுக்கு சென்று விநியோகிப்பதுடன் ஒருநாள் முடிவுக்கு வரும். எல்லாம் முடிந்து படுக்கும்போது முதுகு முழுவதும் பட்,பட்டென்று ஆங்காங்கே நெட்டிமுறியும் ஒலி கேட்பது வாடிக்கையாகி விட்டது.

இவ்வளவு செய்தும் வரக்கூடிய பணம் என்பது இடியாப்பத்திற்கு தேவையான பச்சரிசி வாங்கவும், இரண்டு வேளை சாப்பிடவும் மட்டுமே சரியாக இருந்தது. ஓட்டல்களுக்கு இடியாப்பத்தை கொடுத்துவிட்டு நேராக வீட்டுக்கு வரும் தபசும், வாசலிலேயே பூக்களை கட்டி விற்க துவங்கினாள். தபசும் செய்யும் சரிகை வேலைப்பாடுகள் கொண்ட சேராக்கள் பார்ப்பதற்கே கண்ணை பறிக்கும். கிட்டத்தட்ட ஒரு தவம் போல அந்த பூ மாலையை அவள் உருவாக்குவாள். வேலூர் பேருந்து நிலையத்தில் முருகன் அண்ணாவிடம் தான் பூக்கள் சொல்லி வைத்து வாங்குவாள். நல்ல ரோஸ் நிறத்தில் பூத்து நிற்கும் சிவிங்கம் பூக்கள் தான் அவளது முதல் தேர்வு. கூடவே சீசனுக்கு கிடைக்கும் எல்லா பூக்களையும் தேவைக்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்வாள். சிவிங்கம் பூவின் இதழ்களை மென்றால், உவர்ப்பு தன்மையோடு ஒரு வித்தியாசமான சுவையைத் தரும். அவற்றை மெல்ல, மெல்ல கோர்த்து அடுக்கி ஒரு மாலை கட்ட எப்படியும் 3 மணி நேரம் ஆகும். வழக்கமான பூமாலை அல்ல சேரா என்பது, உச்சந்தலையில் ஆரம்பித்து பாதம் வரை மறையக்கூடிய கல்யாண மாலை அது. பொதுவாக ஆண்கள் தான் சேரா கட்டுவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்களது கைகள் எந்திரம் போல் சுழன்று சுழன்று வேலைபார்க்கும். ஆனால் தபசும் செய்யும் சேரா என்பது சிற்பம் போல நுணுக்கம் மிக்கதாக இருந்தது. இதனால் சேரா கட்டும் ஆர்டர்களும் தபசுத்திற்கு கிடைக்க ஆரம்பித்தது.

இந்த நேரத்தில் தான் தன்வீர் தன் கடைசி தம்பி அன்வருக்கு பெண் பார்த்தாள். அப்பாசும், அன்வரும் கிட்டத்தட்ட ஒத்த வயதினர் தான். தன்வீரின் அம்மாவுக்கு காலந்தாழ்ந்து கடைசியாக பிறந்த பிள்ளை என்பதோடு அவனை பெற்றுவிட்டு அவள் கண்மூட, தம்பியை தன் பிள்ளைபோல் வளர்த்தாள் தன்வீர். இன்னும் சொல்லப்போனால் அப்பாசைக் கூட அடிப்பாள், அன்வரை திட்டக் கூட செய்யமாட்டாள். தன் பேச்சை மீறி அப்பாஸ், கௌஹரைக் கட்டிக் கொண்டு வந்துவிட, அக்கா சொல்லை தட்டாது அவள் சொல்லும் பெண்ணையே கட்டத் தயாரான அன்வருக்காக அவன் கல்யாண வேலைகளை பார்த்து, பார்த்து செய்தாள். சித்தூர் அடுத்த மதனபள்ளியில் உள்ள தன் சொந்தங்களில் பேரழகியான சலீமாவை பேசி முடித்தாள். பெரிய மசூதி பக்கத்துல இருக்க மொய்தீன் மண்டபத்தை ஒப்பந்தம் செய்தாள். யாருமே செய்யாத அளவுக்கு மணப்பெண்ணுக்கு மணமகன் அளிக்கும் சடங்கான மஹர் தொகைக்கு 10 சவரனில் புல்ஹார் என்று சொல்லப்படும் நெஞ்சை முழுவதுமாக மறைக்கும் ஆரத்தை வாங்கினாள். தேர்ந்த இளம் ஆட்டுக்குட்டிகளை தானே சந்தைக்கு சென்று பல்லைப் பார்த்து பிடித்து தேர்வு செய்தாள். பெண் சொந்தக்காரர்களுக்கு ஆட்டின் முன்கால் கறி தான் போடவேண்டுமென்றும், அதற்காக வெட்டும்போதே அதனை தனியாக பிரித்து தனியாக சமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாள்.

ஒருமாதத்திற்கு முன்னதாகவே விடுப்பு எடுத்து வந்துவிடவா என்று கேட்ட அப்பாசிடம் எரிந்து விழுந்தாள். "ஏன், இங்க வந்து பொண்டாட்டிக்கு முதுகு புடிச்சு விடப்போறியா, ஒண்ணும் தேவையில்லை, கல்யாண நெருக்கத்துக்கு வந்தா போதும், ரெண்டு நாள்ல கிளம்பி போற மாதிரி டிக்கெட் போட்டுக்கோ" என்று நறுக்கென்று கூறிவிட்டாள். அம்மாவிடம் எதிர்த்து பேசமுடியாத அப்பாஸ் கல்யாண விவரங்களை செல்போனில் கௌஹரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவளை போனில் பேச முடியாத அளவுக்கு விரட்டி வேலை வாங்கினாள் தன்வீர். கௌஹரின் தங்கைகளை பிடிக்காவிட்டாலும் தபசும் செய்யும் சிவிங்கம்பூ சேராவை பார்த்து வியந்து தான் போனாள். அதனால் அதனை மட்டும் வெளியில் ஆர்டர் கொடுக்காமல் தபசும் தான் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாள்.

கல்யாணத்திற்கு வந்தவர்களையெல்லாம் வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள் தன்வீர். குறிப்பாக சலீமா வீட்டு ஆட்கள் தங்குவதற்காக மாடியின் 2 அறைகளையும் சுத்தம் செய்து தந்தாள். சலீமாவுக்கு ஏசி அறை. அதே சமயம் ரசூல்பாய் சொந்தங்களை பார்த்து மட்டும் முகவாய் கட்டையை திருப்பிக் கொண்டாள். அவர்களால் தேவையற்ற செலவு என்றும், விருந்தில் போட்ட கறியை அவர்கள் மட்டுமே சாப்பிட்டு காலி செய்துவிட்டதாகவும் கூறி அங்கலாய்த்தாள். இதை ஏன் என்று கேட்டதற்குதான் கணவன் என்றும் பாராமல் குச்சுபாயை வெளுத்து விட்டாள். அந்த கோபத்தை மாலை கட்டிக் கொண்டிருந்த தபசுத்திடமும் காட்டினாள். பக்கெட்டை தன்வீர் எட்டி உதைத்ததால், மாலையில் மொய்த்திருந்த ஈக்கள் ஒருகணம் படையாக மேலெழுந்து பின்னர் மீண்டும் மாலைக்குள் அடங்கின. கண்ணில் வழிந்த நீரை, பக்கெட் தண்ணீரோடு கலந்து மறைத்த தபசும், அந்த வழியே சென்ற கௌஹரை பார்த்து சிரித்தாள். சீர் கொடுப்பதற்காக அதிரசம் போட்டு வைத்த பெரிய பெரிய பித்தளை தவலைகளை ஒவ்வொன்றாக இடுப்பில் எடுத்துக் கொண்டு நடையாய் நடந்து கொண்டிருந்த கௌஹரால், தங்கைகளை நினைத்து அழத்தான் முடிந்தது.

விடிந்தால் கல்யாணம். தேல் கா ரசம் என்ற நலங்கு முடிந்த பின்னர் தான் அப்பாசால் வந்து சேர முடிந்தது. சென்னையில் விமானம் தாமதம். பேருந்தில் இடம் கிடைக்காமல் மாறி,மாறி வந்தது என அவன் பயணமே போராட்டமாக இருந்தது. டெம்போ வேனில் சீர்வரிசை பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்த கௌஹர், அப்பாஸ் வந்து நின்றதை பார்த்ததும் வெடித்து அழுதுவிட்டாள். அப்பாசும் கண்கலங்கி, அவளை அணைத்துக் கொண்டான். கௌஹருக்கு அப்போதுதான் கொஞ்சம் நிம்மதியே வந்தது. மாலைக் கட்டிக்கொண்டிருந்த தபசும் கூட அப்படியே போட்டு விட்டு எழுந்து வந்து சலாம் சொல்லி மாமாவை கட்டிக் கொண்டாள். நுஷ்ரத் ஓடிவந்து சேர்ந்து கொண்டாள். இதனை பார்த்த தன்வீர், "வந்ததும் வராததுமா என்ன அங்க ஆட்டம், ஊரே வேடிக்கை பாக்கணுமா நீங்க அடிக்கிற கூத்த, உள்ள வந்துட்டு ஒய்யாரம் பண்ணா, யாரு வேணாம்னு சொன்னா" என்று அதற்கும் திட்டி தீர்த்தாள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சலாம் சொன்ன அப்பாஸ், கல்யாண செலவுக்கான பணத்தை தன்வீரிடம் கொடுக்க அவள் கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.

"கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுப்பா, காலையில் எல்லாத்தையும் பேசிக்கலாம்" என்று அப்பாசை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போனாள். "மாமாகூட பேசு போ, வேலைகளை நாங்க பாத்துக்கிறோம்" என்று அக்காவை விரட்டி விட்டு அவளுடைய வேலைகளை தங்கை நுஷ்ரத்திடம் செய்ய சொன்னாள் தபசும். சிறிது நேரத்தில் கையில் பெரிய பையோடு வந்த கௌஹர், தபசுத்திடம் அதனை கொடுத்து கல்யாணத்திற்கு மாமா வாங்கி வந்ததாகவும், நாளை அதனைதான் போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு சென்றாள். தபசும் மாலையை கட்டி முடித்துவிட்டு படுக்க விடியற்காலை 3 மணியாகி விட்டது. ஆள் ஆளுக்கு கிடைத்த இடத்தில் தூங்கினார்கள். எல்லோருக்கும் அடித்து போட்டதுபோல் ஒரு மயக்கம்.

பெரிய மசூதியின் பாங்கு எல்லோரையும் எழுப்பி விட்டது. அதிகாலை நமாசுக்கான அழைப்பு அது. ஆண்கள் எழுந்து உளு செய்து விட்டு சுபுஹ் தொழுகைக்கு தயாரானார்கள். பெண்கள் கூடத்தின் உள்பகுதியில் திரண்டார்கள். அப்போது திடீரென மொட்டை மாடியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அது சத்தமாகவும், பிறகு சண்டையாகவும் மாறியது. ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் சத்தமாகவும் மாற, எல்லோரும் தபதபவென்று மாடிப்படியேறி ஓடினார்கள். மூச்சு வாங்க மேலேறிய தன்வீர், "என்ன, ஏது" என்று கேட்டு பரபரத்தாள். ஆள் ஆளுக்கு தலையில் அடித்துக் கொண்டு அழ, "யாராது சொல்லித் தொலைங்களேன்" என்று பயத்தின் உச்சியில் பதறினாள் தன்வீர். "சலீமா எங்கனு தெரியல, இங்கதா தூங்கினா, முழிச்சி பார்த்தா காணோம்" என்று சலீமாவின் அம்மா சொல்ல, தலையில் இடி விழுந்தது போல் அப்படியே உட்கார்ந்து விட்டாள் தன்வீர்.

"ஊரைக்கூட்டி, சொந்தபந்தங்களுக்கு சொல்லி, லட்சம் லட்சமாய் செலவு செய்து இப்படி மூக்கறுத்து ஒக்கார வச்சீட்டிங்களே, உன்கிட்ட கேட்டுதானே கல்யாணத்துக்கு தேதி குறிச்சேன். ஏதாச்சும் பிரச்னைனா அன்னிக்கே சொல்லி இருக்கலாமே... இப்படி மூளியாக்கி நாசம் பண்ணிட்டிங்களே" என்று சுவரில் முட்டிக் கொண்டு அழுதாள் தன்வீர். "ஐயோ, அவ இப்படி பண்ணுவானு எனக்கு தெரியாதே... ஏதோ வயசுக் கோளாறு காலேஜ் பசங்க கூட போறா, வர்றானு நெனச்சோம். இப்படி லெட்டர் எழுதி வச்சிட்டு போய்டுவானு எங்களுக்கு தெரியாதே" என்று சலீமாவின் அம்மா சொல்ல பாய்ந்து எழுந்த தன்வீர், "ஊர் மேஞ்ச கழுதைய என் தம்பிக்கு கொடுக்க திட்டம் போட்டியாடி" என்று கொண்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினாள். அவர்கள் நிலைதடுமாறி படிக்கட்டில் உருள, நின்றிருந்த பெண்கள் அலறி ஆளுக்கொரு திசையில் ஓடினர். கீழே ஆண்களும் ஆளுக்கொருவர் திட்டிக்கொள்ள நிலைமை கை மீறி போனது.

ஆத்திரம், அழுகை, திட்டு, அடி, ரத்தம் என்று எல்லாம் முடிந்து ஒவ்வொருவரும் தளர்ந்து அப்படியே தொய்ந்து விழுந்தனர். விஷயம் பெரிய மசூதி ஆட்களுக்கு சென்றது. அவர்கள் வீடுதேடி வந்துவிட்டனர். பிரியாணிக்கு ஆடு அறுத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தனர். தன்வீர் பக்கத்தில் தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தான் அன்வர். சுவரில் ஒரு காலை மடித்தும், உதறியும் நிலையில்லாமல் நின்று கொண்டிருந்தான் அப்பாஸ். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல் பீடியை உறிஞ்ச ஆரம்பித்து விட்டார் குச்சுபாய். சலீமாவின் குடும்பத்தினர் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயார் என்பதுபோல் கையை கட்டிக் கொண்டு விசும்பியபடி நின்று கொண்டிருந்தனர்.

தொண்டையை செருமியபடி பேச்சை துவங்கினார் ஜமாலுதீன் பாய், பெரிய மசூதியின் பாங்கு ஓதுபவர் அவர்தான். "விருப்பம் இல்லாத பொண்ணை கட்டச்சொல்லி குரான்ல சொல்லல. அவள கேக்காம இந்த நிக்காஹ்வை செய்ய நெனச்சதே உங்க தப்பு. ஆள் ஆளுக்கு கொற சொல்லிக்கிறதால ஒண்ணும் ஆகப்போறது இல்ல. கல்யாணம் நின்னு போனதா நீங்க பாக்குறீங்க. யாரை யார் கூட ஜோடி சேக்கணும்னு அல்லாவுக்கு தெரியும்னு நான் நெனக்கிறேன்" என்று சொல்லி இடைவெளி விட்டார்.

"சலீமா வீட்டு ஆளுங்கள திட்றதாலேயோ, அடிக்கிறதாலேயோ நின்னு போன நிக்காஹ் நடந்துடும்னு நெனக்கிறியா. அடுத்து என்ன பண்றதா உத்தேசம்" என்று தன்வீரிடம் கேள்வி எழுப்பினார். "நா எதுவும் சொல்ற நெலமைல இல்ல. என் வவுத்துல பொறந்த புள்ளைக்கும் என்னால பொண்ண பார்த்து கட்டி வைக்க முடியல. நா பெறாத புள்ளைக்கும் பொண்ண பார்த்து கட்டி வைக்க முடியல. இனி நா எதுவும் செய்றதா இல்ல" என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

"குச்சுபாய் நீங்க என்ன சொல்றீங்க" என்று கேட்க அவர் பதில் சொல்லாமல் தலையை இடமும்,வலமுமாக ஆட்டினார்.

"இவங்க தான் நொந்து போய் இருக்காங்க. நீயாச்சும் ஏதாச்சும் சொல்லேன்பா" என்று அப்பாசிடம் பேசினார் ஜமாலுதீன் பாய்.

"எங்ககிட்ட கேக்குறதவிட மாப்பிள்ளை அன்வர் கிட்ட கேளுங்க, அவன்தான் பாதிக்கப்பட்டவன்" என்று சொன்னான் அப்பாஸ்.

இதைக்கேட்டு தலையை உயர்த்திய அன்வர் மூக்கை உறிஞ்சி, "நானோ எங்க அக்காவோ எந்த தப்பும் பண்ணாதப்போ நாங்க எதுக்கு அழணும்" என்றான்.

"எனக்கு கல்யாணம் பண்ணி பாக்க எங்க அக்கா ஆசைப்பட்டா, கொணவட்டத்துல இப்படி ஒரு கல்யாணம் நடந்தது இல்லனு சொல்ற அளவுக்கு ஏற்பாடு செஞ்சா. அவ ஆசைல சலீமா மண்ணள்ளி போட்டாலும்... நா போட விரும்பல. இதே தேதில இன்னிக்கே நா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்றேன். எங்க அக்காவுக்கு அதா நான் தர்ற நிம்மதி" என்றான்.

இதைக்கேட்ட ஜமாலுதீன், "நல்ல முடிவு தான் எடுத்து இருக்க அன்வர்" என்று பாராட்டிவிட்டு தன்வீர் பக்கம் திரும்பி, "என்ன சொல்ற தன்வீர் உங்க சொந்தத்துல யார் இருக்கா... யாரையாச்சும் நீ நெனச்சு இருக்கியா" என்று கேள்வி எழுப்பினார்.

"என் கணக்குதான் தப்பா போய்டுச்சே, இன்னொருமுறை யார் வாழ்க்கையையும் நான் சோதிக்க விரும்பல, நானும் அசிங்கப்பட்டுக்க விரும்பல, அன்வர் என்ன சொல்றானோ, அதுவே நடக்கட்டும்" என்று அமைதியானாள்.

"நீ என்னபா சொல்ற" என்று ஜமாலுதீன் பாய் கேட்க, சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான் அன்வர். ஒட்டுமொத்த வீடே உறைந்தது போல் காணப்பட்டது. மூச்சுவிடும் ஒலி கூட துல்லியமாக கேட்டது.

"நான் தபசும் கட்டிக்க விரும்புறேன். அவகிட்ட ஒருவார்த்தை கேட்டுக்குங்க" என்றான். எல்லோரும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். ஆஹ் என்ற ஒலியும், ஒருவருக்கொருவர் முணுமுணுப்பாக பேசிக்கொள்ளும் ஒலியும் எழும்ப அந்த கூடமே பல்வேறுபட்ட உணர்வுகளால் நிறைந்து வழிந்தது. அப்பாஸ் சுவரில் பட்ட பந்து போல தடாலென்று முன்னால் வந்து நின்றான். அவன் காலடியில் அமர்ந்திருந்த கௌஹர், வாயைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

"தபசும் எங்கே, கூப்பிடுங்க" என்று ஜமாலுதீன் குரல் எழுப்பினார். நிலைப்படியை பிடித்துக்கொண்டு கதவுக்கு பின்னால் நின்றிருந்த தபசும், என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தபடி முன்னால் வந்தாள். "இந்த மாதிரி எல்லாரும் இருக்க ஒரு பொண்ண கூப்பிட்டு, சம்மதமானு கேக்குறது நம்ப பழக்கம் இல்ல. ஆனாலும் இன்னிக்கு நடந்தது ஒரு அசம்பாவிதம். இந்த நொடி இன்னொரு தப்பு நடக்கக்கூடாதுனு நான் நெனக்கிறேன். உனக்கு விருப்பமா, அன்வரை கட்டிக்கிறியா" என்றார்.

கௌஹரை பார்த்தாள், அப்பாசை பார்த்தாள், தன்வீரை பார்த்தாள். என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள் தபசும். அவள் சொல்லப்போகிற பதிலுக்காக அனைவரும் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தனர். தன்வீரை உற்றுப்பார்த்த தபசும், தன்வீரின் முகத்தில் தெரிந்தது எந்தமாதிரியான உணர்ச்சி என்பதை புரிந்து கொள்ள திணறினாள். கண்களை சுழற்றிய தபசும், சமையல்கட்டின் பக்கவாட்டு அறையில் தொங்கவிடப்பட்டிருந்த, அவள் கட்டிய சிவிங்கம்பூ சேராவை பார்த்தாள். குனிந்து கீழுதட்டை பற்களால் மெல்ல கடித்தபடி விசும்பல் ஒலியுடன் ஒப்புதல் என்பது போல் தலையை ஆட்டினாள்.

"வாயைத் திறந்து சொல்லுமா? மனசுல என்ன இருக்குன்னு அப்போதான் தெரியும், தலைய ஆட்டுறத வச்சி எந்த முடிவும் எடுக்க முடியாது" என்று உறுதியான குரலில் ஜமாலுதீன் கூறினார்.

நுஷ்ரத் வந்து தபசும் பின்னால் நின்று பேசு என்பது போல் முதுகில் லேசாக உந்தி தள்ளினாள். "கட்டிக்கிறேன்" என்ற வார்த்தை தபசும் வாயில் இருந்து வந்தது. உடனே நுஷ்ரத், கௌஹர் இருவரும் தபசுமை கட்டிக்கொண்டு அழுதனர்.

"ஆகட்டும், வேலை நடக்கட்டும், கல்யாண வேலையை பாருங்க" என்று சொல்லிவிட்டு ஜமாலுதீன் பாய் எழுந்து வெளியில் நடக்க ஆரம்பித்தார்.

அப்பாஸ் மெதுவாக அம்மா தன்வீர் பக்கம் வந்தமர்ந்து "அம்மா, அம்மா, என்னம்மா அமைதியா இருக்க, நீ எதுவும் சொல்லல" என்று கேட்க ஒன்றும் பேசாமல் எச்சிலைக் கூட்டி விழுங்கி தலையை ஆட்டினாள்.

சலீமா வீட்டினர் ஒவ்வொருவராக எதுவும் சொல்லாமல் வெளியில் செல்ல துவங்கினர். அன்வர் எழுந்து அவன் அறைக்கு சென்றான். குச்சுபாய் வாசலுக்கு சென்று பீடி இழுக்கத் துவங்கினார். பிரியாணி செய்பவர்கள் தன்வீரிடம் வந்து, "முன்கால் கறி எடுத்து தனியா பிரியாணி செய்ய சொன்னீங்க. இப்போ செய்யவா... வேண்டாமா"என்று கேட்டார்கள்.

தன்வீர் அமைதியாக தபசும்மை பார்த்தாள்.

தபசும் தொண்டையை செறுமியபடி "செய்யுங்க" என்று கூறினாள்.

Aravind Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment